Friday, July 18

மாவை சேனாதிராசா, நாஉ

0

அறிமுகம்

மாவை சேனாதிராசா 27 அக்டோபர் என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா இலங்கைத் தமிழ் அரசியல தலைமையும்;, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். மாவை சேனாதிராசாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் சோமசுந்தரம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது கல்விப் பயணத்தை தெல்லிப்பளை வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1977 ஆம் ஆண்டு  மாவை சேனாதிராஜா அவர்கள் தமது உறவு முறையான மாவிட்டபுரம் பவானி என்னும் மங்கையைத் திருமணம் செய்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

மாவை சேனாதிராஜா அரசியலில் கடந்து வந்த பாதை….!

அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா என தன் பெயரின் முன்னால் அடைமொழியாக இணைத்துக்கொண்டார். இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

1969 முதல் 1983 வரையான காலப் பகுதியில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். இத்தகைய அனுபவமும் போராட்ட வாழ்வும் தமிழர் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சக்தியை அவருக்கு மேலும் அதிகரித்தது. இஅதன் வழிப்பேறாக மாவை அவர்கள் தமிழர் விடுதலைப்போராட்டத்தின் முக்கிய மைல் கல்லானார். 1972 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

நீண்ட காலமாக நாட்டில் நடைபெற்ற யுத்தச்சூழல் அரசியல் நீரோட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு சந்தர்ப்பங்களை உருவாக்கவில்லை. ஆயுதப் போராட்டம் மேலோங்கி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி வீரகளமாடிய நேரத்தில் அரசியல் கருத்துக்களால் போராட்டச்சூழலுக்கு வலுச்சேர்த்துக் கொண்டிருந்தவர்.

கால ஓட்டத்தில் அரசியல் நீரோட்ட மாற்றத்தில் அதாவது 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.என்.டி.எல்.எவ்., ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டபோதும் அதில் இவர்கள் தெரிவாகவில்லை.

அதன் பின்னர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13இல் கொழும்பில் அகால மரணமடைந்தமைதயிட்டு அவரின் இடத்துக்கு மாவை சேனாதிராஜா அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

1994 தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி மூலமாகத் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவர் தெரிவாகவில்லை.

1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் மரணமடைந்த நிலையில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார். 2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என நிறுவிய பின்னர் 2001 தேர்தலில் யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் விடுதலைப்புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றக் குழு கூட்ட எடுத்தபோது – ஆனந்தசங்கரி அதை ஏற்கமுடியாது என முட்டுக்கட்டை போட்ட போது – மாவை விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அதன்பின்னர் 2004, 2010, 2015, தேர்தல்களில் மீண்டும் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004 தொடக்கம் 2014 வரையும் பதவி வகித்தார். பின்னர் வவுனியாவில் 2014வில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2024 பொதுத்தேர்தலின் போது கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகினார். கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28 இல் வவுனியாவில் இடம்பெற்றபோது அந்தக் கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவரபதவி சி.வி.கே. சிவஞானத்துக்கு வழங்கப்பட்டது. மாவை அவர்களுக்கு அரசியல் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் கடந்த 2014 செப்டம்பர்07 தொடக்கம் 2024, டிசம்பர் 28 வரையும் ஏறக்குறைய 10 வருடங்கள் தலைவராகவும், அதற்கு முன்னர் 2004 தொடக்கம் 2014 வரை 10 வருடங்கள் பொதுச்செயலாளராகவும் அவர் பதவியில் இருந்துள்ளார். மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார சமூக விடுதலைக்காகவும் அவர் துணிந்து குரல் கொடுத்துள்ளார்.

1989 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ) – 2,820 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.

2000 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ ) – 10,965 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.

2001 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (தவிகூ) – 33,831 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.

2004 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் – (ததேகூ) – 38,783 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.

2010 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,501 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.

2015 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (ததேகூ) – 58,782 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.

2020 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,358 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.

ஈழத்தமிழரது அரசியல் வழிகாட்டியாகவும், விடுதலைப் போராட்டத்தின் மூச்சாகவும் வாழ்ந்து ஈழத்தமிழரின் தவிர்க்க முடியாத அரசியல் பிரதிநிதியாக தூய அரசியலின் வழிகாட்டியாக வாழ்ந்து 2025-01-29ஆம் நாள் அரசியல் வாழ்விலிருந்து நீங்கி நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!