அறிமுகம் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் மாதகல் என்னும் நெய்தல் நிலம் வரலாற்றுப் பெருமை மிக்கது. யாழ்ப்பாண வைபவமாலை என்னும் வரலாற்று நூலை எமக்களித்த மயில்வாகனப்புலவர் பிறந்து வாழ்ந்த இடம். நுணசை முருகன் கோயில், பாணாவெட்டி அம்மன் ஆலயம், புனித செபஸ்தியார் ஆலயம் ஏன்னும் வகையிலான ஆன்மிக மையங்களையும் கொண்டமைந்து கல்விகேண்மைகளால் சிறப்பு வாய்ந்த மண்ணில் கத்தோலிக்கப்பாரம்பரியக் கலைக்குடும்பத்தில் கலைமணி அண்ணாவியார் கைஸ்பார் சூசைப்பிள்ளை அவர்களுக்கும் தாயார் திரேசம்மா அவர்களுக்கும் 1948-02-27ஆம் நாள்; அகஸ்ரின் தவப்புதல்வனாகப் பிறந்தார். தந்தையார் அண்ணாவி சூசைப்பிள்ளை அவர்கள் இசைநாடகத்திலும், ஆர்மோனியம் இசைப் பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவரின் வழி வந்த அகஸ்ரின் சிறுவயது முதலே நாடகத்திலும் இசை வாத்தியங்களை இசைப்பதிலும் ஆர்வம்காட்டி மரபுவழிக் கலைஞராக விளங்கினார். நாட்டுக்கூத்து, சிந்து நடைக்கூத்து ஆகியவற்றில் நடிகராகவும் வாத்திய இசைக் கலைஞராகவும் மேற்கிளம்பினார். நாட்டுக் கூத்து மேடைகளில் ஆர்மோனிய வாத்தியத்தை வாசித்து தன்னிசையால் மக்களை வியப்பிலாழ்த்திய இவர் இசை நாடகம், சமூகநாடகம், சரித்திரநாடகம், நாட்டுக்கூத்துக்களை எழுதி நெறியாள்கை செய்து பல இடங்கிளில் அரங்கேற்றம் செய்தவர். யாழ்ப்பாணத்து பெரும் அண்ணாவிமார்களது கூத்துத் தயாரிப்புகளில் ஆர்மோனிய வித்துவானாக தனது பங்களிப்பினை வழங்கியவர்.
கலைஞனாக அகஸ்ரின்
தனது கிராமத்தில் ‘வளர்மதி கலாலயம்’ என்ற நாடக மன்றத்தினை நிறுவி 40 வருடங்களுக்கு மேலாக இளைய தலைமுறையினரை நாடகத்திலும், நடிப்பிலும், வாத்தியங்கள் இசைப்பதிலும்; பயிற்றுவித்து அரங்கேற்றி கலைவழியாக இளம்தலைமுறையினரை நல்வழிப்படுத்தினார். தனது கலாலயத்தால் ‘சப்தனாஸ்’ என்ற பெயரில் இசைக்குழு ஒன்றினை ஆரம்பித்து பல இளம் கலைஞர்களின் பாடல் பாடும் திறமைகளை வெளிக்கொண்டு வந்தார். இதுமட்டுமல்லாது பல பாடசாலைகள், பொது நிறுவனங்கள், கலாமன்றங்கள் ஆகியவற்றின் வேண்டு கோளை ஏற்று வில்லுப்பாட்டு, நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களை எழுதிப் பயிற்றி அவற்றுக்கு இசையமைத்து, நெறியாளுகை செய்து மாவட்ட, மாகாண தமிழ்த்தினப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிபெற வைத்த வரலாறுடைய வர். தனது வளர்மதி கலாலய ‘நாடகக்குழு’ மூலம் பல நாடகங்கள், நாட்டுக் கூத்துக்கள் போன்றவற்றைப் பயிற்றுவித்து அரங்கேற்றினார். யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றம் மற்றும் இளவாலைத் திருமறைக் கலாமன்றம் என்பன இணைந்து நடத்திய நாடகப் போட்டிகளில் மாயவலை என்ற நாடகத்தினை எழுதி இசையமைத்து நெறிப்படுத்தி முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டார்.
காங்கேசன்துறை சீமெந்த தொழிற்சாலை நாடக மன்றத்தின் கலைஞர்களான மாதனை மகாலிங்கம், அல்வாய் கலைஞர் நாடக மன்றத்தின் கலைஞர் விவேகானந்தன் ஆகியோருடன் இணைந்து ‘நக்கீர்’ என்னும் இசைநாடகத்தினை உருவாக்கி 100ற்றும்மேற்பட்ட தடவை அரங்கேற்றம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
தொழில்விருத்தியும் ஆன்மிக நாட்டமும்
மாதகல் பிரதேசம் மிகச் சிறந்த ஆன்மிக வளமுடைய இந்து மற்றும் கத்தோலிக்க வழிபாட்டிடங்கள் நிறைந்து காணப்படும் பிரதேசமாக விளங்கி வருகின்றது. இத்துணை சிறப்புடைய பிரதேசத்தில் பிறந்த கலைஞர் அகஸ்ரின் அவர்கள் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியிருக்கின்றார். குறிப்பாக தனது பங்கின் புனித செபஸ்தியார் ஆலயத்தின் வளர்ச்சிக்காக தலைமையேற்று பல உதவித்திட்டங் களை நடைமுறைப்படுத்தி ஆலய நிர்வாகத்தை சிறந்து வழிநடத்தினார். பங்கில் இடம்பெறும் கலை நிகழ்வுகள், ஒளிவிழா நிகழ்வுகள், ஆலயத் திருவிழாக் காலங்களில் இடம்பெறும் நிகழ்வகள் என்பவற்றில் பல நிகழ்வுகளை ஒழுங் கமைத்து அரங்கேற்றியவர். புனித செபஸ்தியாரின் பெயரில் பல பாடல்களை எழுதி இசையமைத்துப்பாடி இறுவட்டாக வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி மாதகல் சித்தி விநாயகர் இந்து இளைஞர் சங்கம், புனித தோமையார் நாட்டுக்கூத்துக் கலாமன்றம் ஆகிய மன்றங்களுடன் இணைந்து தனது கிராமத்தில் பல கலை நிகழ்வுகளை அரங்கேற்றியதன் வழியாக பல திறமைமிக்க கலைஞர்களை உருவாக்கினார். இத்தகைய பண்புகள் கலைஞர் அகஸ்ரின் அவர்களை சிறந்த ஆன்மிகவாதியாக குறிகாட்டி நிற்கின்றது. போராட்ட காலங்களில் தனது கலைப்பயணத்தினூடாக கொள்கை விளக்க நாடகங்களை பலவற்றை அரங்கேற்றியவர் என்பதோடு கலை பண்பாட்டுக்கழகத்துடன் நெருங்கி தொடர்பினைப் பேணி வாழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்களின் மத்தியில் உழைப்பால் வாழ்வில் உயர்ந்தார். விவசாயம், வியாபாரம், பேருந்து நடத்துனர் என பல துறைகளிலும் தொழில் பார்த்து இறுதியில் ‘தங்கா ரவல்ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி பல பேருசந்துகள், வாகனங்களை தன்வசப்படுத்தினார். முhதகல் – யாழ்ப்பாணம் 787 வழித்தடத்தில் தனியார் பேருந்துச் சேவைச் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் பல வருடங்கள் பணியாற்றி நிர்வாகத்தையும் சங்கத்தையும் சிறப்பான முறையில் வழிநடத்தி உள்ளார்.
வழங்கப்பட்ட கௌரவங்களும் விருதுகளும்
வலிகாமம் மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப்பேரவை கலைஞாயிறு விருதினையும், யாழ்மாவட்ட கலை,கலாசாரப் பேரவை யாழ்முத்து விருதினையும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கலைஞானகேசரி விருதினையும், 2020ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும் வழங்கி பாராட்டப்பெற்ற இக்கலைஞர் 2020-12-10ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.