Monday, October 13

வயலின் கலைஞர் சுருதிவேந்தன் அம்பலவாணர் ஜெயராமன்

0

அறிமுகம்
யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த வயலின் இசைக் கலைஞர் ஜெயராமன் அவர்கள் பாரம்பரியக் கலைக் குடும்பத் தில் பிறந்தவர். மிருதங்க வித்துவான் நாச்சிமார் கோயிலடி அம்பலவாணர் அவர்களின் கலைத்தொடர்ச்சி யாய் அவதரித்தவர். அரைநூற்றாண்டு காலம் இசையால் ஈழத்தின் வடபுலத்தை ஆண்ட சுருதிலயவேந்தனாக வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் திகழ்ந்துள்ளார். இலங்கை இந்திய கலைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பக்கவாத்தியக் கலைஞர். சுமார் ஆயிரம் இசைப்பங்களிப்பின் சொந்தம் கொண்டாடும் இசைப்பிரம்மன்.

நூலகராக அரச துறையில் பணியாற்றிய போதிலும் ஈழத்து வயலின் இசையில் நீங்காதிடத்தைப் பெற்றவர். ஈழத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்கின்ற கலைஞர்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவர். பிரம்மஸ்ரீ சர்வேஸ்வரசர்மா அவர்களை முதற்குருவாகக் கொண்டு தனது ஒன்பதாவது வயதில் வயலினைக் கற்க ஆரம்பித்து பன்னிரண்டாவது வயதில் தனிக்கச்சேரி நடத்தி அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். குருவினது வழிகாட்டுதலுடன் அவரிடம் நுட்பங்களைக் கற்றது மட்டுமல்லாது தனது சொந்த முயற்சியினாலும் தேடல்களினாலும் தொடர் பயிற்சியினாலும் வயிலின் இசைமேதையாக மேற்கிளம் பினார். ஈழத்து கலைஞர் குழாத்தின் ஊக்கியாகவும் அனைத்து கலைநிகழ்வுகள் மட்டுமன்றி எல்லாவிதமான அரங்கேற்றங்களுக்கும் பின்னணிக் கலைஞராக இருந்து அரங்குகளை மெருகேற்றிய ஈழத்து வயலின் இசைக் கலைஞராவார்.

யாழ்ப்பாணம் நகரிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள hநச்சிமார்கோயிலடியைச்சூழ வாழ்ந்து வருகின்ற விஸ்வப்பிரம்ம குலத்தவர் எனச் சிறப்பிக்கப்படுகின்ற பொற்றொழிலாளர் குலத்தில் 1959.08.29ஆம் நாள் மிருதங்க வித்துவான் அம்பலவாணருக்கும் காமாட்சியம்மா என்பவருக்கும் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். சிறுவயது முதல் வயலின் இசையில் ஆர்வமும் நாட்டமும் ஏற்பட மிருதங்க வித்துவானாகிய தந்தையார் வழிகாட்டினார். துந்தையாரின் இசைஞானத்தால் இவருக்கும் இயற்கையிலேயே இசைஞானம் உருவாகியது. தந்தையாரின் இசைஞானத்தால் தானும் ஏதாவதொரு இசைக்கருவி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு இவர் வயலின் இசைக்கருவியை தேர்ந்தெடுத்தார். இவருடன் மூன்று ஆண்சகோதரர்களும் இரண்டு பெண்சகோதரர்களும் உடன்பிற்தோராவார். இவர்கனைவரும் கலைத்துறையில் பிரகாசித்து வருவதுடன் தந்தையாரின் கலைத்தொடர்ச்சியின் வேர்களாகவும் திகழ்கின்றனர்.

கல்விப்பாரம்பரியம்
தனது ஆரம்பக்கல்வியை யாழ் கலட்டி மெதடிஷ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்றார். இடை நிலைக் கல்வியை இன்றைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகத் திகழும் அன்றைய யாழ்ப்பாண பரமேஸ்வ ராக் கல்லூரியிலும் உயர்தர வகுப்பு கணிதப்பிரிவினை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் கற்றார். 1983ஆம் ஆம் ஆண்டு நூலகராக யாழ் மாநகர சபையில் நியமனம் கிடைத்தது. யுhழ்ப்பாண மாநகர சபையின் பொது நூலகத்திலும், உப நூலகங்களிலும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.

குடும்பவாழ்வில் இணைவு
ஜெயராமன் அவர்கள் தனது இருபத்தைந்தாவது வயதில் கொக்குவில் பூநாறி மரத்தடியைச் சேர்ந்த செல்வரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் புதல்வியான கமலேஸ்வரி என்னும் மங்கையை கரம்பற்றி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதன் பயனாக மூன்று பிள்ளைச் செல்வங்களைப் பெற்றார். பிள்ளை கள் அனைவரையும் கல்வியில் உயர வைத்தது மட்டுமல்லாது தொழில் வாண்மையிலும் உயர வைத்து ஒரு தந்தையின் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.

இசைக்கலைஞனாக ஜெயராமன்
தனது ஒன்பதாவது வயதில் வயலின் இசைமீது நாட்டம்கொண்டு பிரம்மஸ்ரீ சர்வேஸ்வரசர்மா அவர்களை முதற்குருவாக ஏற்று வயலின் கற்க ஆரம்பித்தார். பன்னிரண்டாவது வயதில் தனது குல தெய்வமாகிய வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய(நாச்சிமார் கோயில்)முன்றலில் வயலின் தனிக்கச்சேரி அரங்கேற்றத் தினை 1971ஆம் ஆண்டு நிகழ்த்தினார். அம்பாளின் திருவருளோடு தந்தையாரின் ஆசியுடன் கலை வாழ்வு ஆரம்பமாகியது. முதலாவது தனிக்கச்சேரிக்குத் தந்தையார் அணிசெய் கலைஞராக விளங்கினார். மகனின் அரங்கேற்றத்திற்கு தந்தையாரின் மிருதங்க இசை அணிசெய்த பாக்கியம் பெற்றவரானார். தனது குரு விட்டுச்சென்ற கலைப்பணியை இடைநிறுத்தாது தன் வாழ்நாள் வரை இசைக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.

கல்பிதம், மனோதர்மம் இரண்டிலும் நனிசொட்டிய வள்ளலாக மிளிர்ந்தார். இராகம், தாளம், பல்லவி இவரது சொத்தாகும். அமரர்களான சங்கீத சாகித்திய சுருதி லய கர விரலோன்களான இராதாக்கிருஸ்ணன், குமாரசாமி, பிச்சையப்பா, சண்முகானந்தம், சர்வேஸ்வர சர்மா, வெங்கடேஸ்வர சர்மா, கேசவமூர்த்தி ஆகிய வித்துவான்களது ஆசீர்வாதத்தையும் வசீகர வாசிப்பையும் பேறாகக் கொண்டவர். மாறாத வார்த்தை நிரம்பப்பெற்றதனால் இசையாளர்களை தம்வசமாக்கித் தர்மத்தினைப் பேணி சமூக மட்டத்தில் ஒரு ஜாம்பவானாகத் திகழ்ந்தவர்.

பல வருடங்களுக்கு மேலாக யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் நடனம், வாய்ப்பாட்டு இசை ஆகிய துறைகளின் ஆற்றுகைச் செயற்பாடுகளில் வயலின் அணிசெய் கலைஞராக மிளிர்ந்தவர். வட இலங்கை சங்கீத சபை இறுதிப் பரீட்சைகளில் வெளியேறும் மாணவர்கள் பலருக்கும் அணி செய் கலைஞராகப் பங்குகொண்டு இசைத்துறையில் பல மாணவர்கள் உருவாகுவதற்கான பின்புலமாக திகழ்ந்தவர். தாயகத்தின் பல மன்றங்கள், கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் தனது இசைப் பங்களிப்பினை வழங்கியவர்.

வழங்கப்பட்ட விருதுகளும் பாராட்டுக்களும்.
1- 1974ஆம் ஆண்டு இளம் கலைஞர் மன்றம் நடத்திய வயலினிசைப்போட்டியில்             முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம் பரிசு பெற்றார்.
2- 2011ஆம் ஆண்டு நாச்சிமார் கோயில் நிர்வாக சபையினர் ‘சுருதிவேந்தன்’                      என்னும் பட்டத்தை வழங்கினார்கள்.
3- 2012ஆம் ஆண்டு பாரம்பரிய சுதேச வித்துவான்கள் ஊக்குவிப்புச் சங்கத்தால்            ‘வயலின்திலகம்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
4- 2014ஆம் ஆண்டு இளம்கலைஞர் மன்ற அனுசரனையுடன் ‘இசைஞானசுரபி’                என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
5- 2014ஆம் ஆண்டு நல்லூர் கந்தன் பெருந்திருவிழாவினை முன்னிட்டு நல்லூர்     சைவமகா சபை தெய்வீகத்தொடர் இசைப்பேருரையின் முப்பது வருடப்              பூர்த்தியினை முன்னிட்டு நல்லை ஆதின குருமகா சந்நிதானத்தின்அருளாசியுடன் ‘சுபஸ்வரஞானபூஷணம’; என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
6- 2021ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் ‘கலாபூஷணம்’ விருது               வழங்கி கௌரவித்தது.
‘சுருதிவேந்தன்’ என்ற விருதானது வயலின் இசையில் ஜெயராமன் அவர்களுக்கு மகுடம் சூட்டியது போன்று அவருடன் நிலை பெற்றுள்ளது. இசையப்புவேளையில் மெட்டுக்கள் இசைக்கப்படும் பொழுது மிக வேகமாக இசைக் குறிப்புகளை பதிவு செய்யும் அசாத்திய திறமை இவரிடம் பொதிந்திருக்கின்றது. வயலின் இசைக்கச்சேரி, வயலின் இசை ஒலிப்பதிவு, பாடல் ஒலிப்பதிவு என்பவற்றின்போது ஜெயராமன் அவர்கள் தனது சிந்தனையை வேறு எங்கும் செலுத்தாது நிறைவேற்றும் பண்புடையவர். கர்நாடக இசைக் கச்சேரிகளில் தனித்துவமாய் திகழ்ந்தவர். இவற்றிற்கு அப்பால் மெல்லிசைப்பாடல்கள், ஆலயங்களின் பக்திப் பாடல்கள், தாயக விடுதலைக் கீதங்கள் என அனைத்திற்கும் தனது வயலின் இசையை வழங்கி ஒப்பற்பற்ற இசையாளனாகத் திகழ்ந்தவர்.

யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய வாய்ப்பாட்டு, மிருதங்க, நடன, அரங்கேற்றங்களை தனது வாசிப்புத் திறமை யால் வசீகரித்த வயலின் பேராசான். இசையுலகிலே இவரது தந்தையார் மிருதங்க இசையால் எப்படி யாழ்ப் பாணத்தை கட்டிப்போட்டாரோ அதே போன்று அவரது மகனான ஜெயராமன் அவர்கள் வயலின் வாத்திய வாசிப்பில் வானுயர உச்சம் தொட்டவர்.

பயணித்த கலைஞர்கள்
இசையுலகில் ஈழத்து இசைவாணர் கண்ணன் மற்றும் அவரது புத்திரன் சத்யன் ஆகியோருடன் நீண்ட காலம் என்பதனை விட தன் வாழ்நாள் வரை வயலினோடு பயணித்த ஒருவர். அதுமட்டுமன்றி ஈழத்தின் பல்வேறு துறைசார்ந்த கலைஞர்களோடு இசைப்பயணத்தில் ஒன்றித்துப் பயணித்தவர். குறிப்பாக ஈழத்தில் புகழ் பெற்ற ராஜன்ஸ் இசைக்குழுவினர், அருனா இசைக்குழுவினர் ஆகியோரின் இசைக்குழுவின் வெற்றிக்கு ஜெயராமன் அவர்களது பங்களிப்பும் இன்றியமையாதிருந்ததொன்றாகும். மேலும் ஈழத்து ஆடற்கலை வல்லான் கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களது ஆடற்கலை அளிக்கைகளில் ஜெயராமன் அவர்களது வயலின் இசையானது தனித்து நின்று ஒலித்து ஆடற்கலை அளிக்கைக்கு உயிர்கொடுத்தது என அந்நாளில் பேசப்பட்டது.

அமரர் திலகநாயகம்போல் அவர்களது குரலிசை அரங்க அளிக்கை, இசைவாணர் கண்ணன் அவர்களது படைப்புகள், குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது நாடகத் தயாரிப்புகள், ஏ.சீ.தார்சீசியஸ், க.பாலேந்திரா, க.சிதம்பரநாதன், சி.ஜெயசங்கர், இராதாக்கிருஸ்ணன் போன்ற நாடக நெறியாளர்களது நாடகத் தயாரிப்புகள், இசை, நடன, மிருதங்க அரங்கேற்றங்கள் என ஈழத்தின் அத்தனை கலை முயற்சிகளிலும் ஜெயராமன் அவர்களது இசைப்பங்களிப்பினை பிரித்துப் பார்க்க முடியாது.

2024-04-07ஆம் நாள் காலையில் ஒலிப்பதிவும் மாலை நிகழ்வு இலங்கைவேந்தன் மண்டபத்திலும் நடைபெற்ற வேளை அணிசெய் கலைஞராக வயிலின் இசைப்பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருந்தவேளை ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கலைநிகழ்வின் இடைநடுவே தனது வீட்டிற்கு ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். மறுநாள் அதாவது 2024-04-08ஆம் நாள் யாரும் எதிர்பார்த்திருக்காத வேளையில் துயரச்செய்தியை எமக்களித்து இசையுலகை விட்டு நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!