தொல்புரம் கிராமத்தின் கலைப்பிதாமகர் எனக் குறிப்பிடக்கூடியவரான அமரர் செல்லையா அவர்கள் முருகேசு லட்சுமிப்பிள்ளை தம்பதியர்க்கு இரண்டாவது புதல்வனாக 1904-08-01ஆம் நாள் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்த அவர் சிறந்த சிற்பக் கலைஞராகத் திகழ்ந்தார். தனது இளமைக் காலத்திலே பறங்கித் தெருவில் ஒரு ஆசிரியரிடம் ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். பின் பல மேடைகளில் இசை நாடகம், நாட்டுக்கூத்துக்களுக்கு கால்பெட்டி என அழைக்கப்படுகின்ற ஆர்மோனியத்தை வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். அதே கால கட்டத்தில் இரண்டு ஆர்மோனியத்தைப் போட்டு போட்டா போட்டி என அறிவிப்பார்கள். இவ்வாறு போட்டா போட்டி போட்டவர்களில் ஆர்மோனியம் வேணுகோபால் (வேணு) ஒருவராக இருந்தார்.
அமரர் முருகேசு செல்லையா அவர்கள் தொல்புரம் கிராமத்தினூடாக அளப்பரிய கலைப்பணியை இம்மண்ணிற்கு ஆற்றிய சாதனைகளுக்கு மேலாக தொல்புரம் கிராமத்திற்கு பல கட்டமைப்புகளை உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தார்.
1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் யாழ்ப்பாண வருகைக்குப் பின்னர் அவரின் கிராம சுயராச்சிய திட்டத்தினால் கவரப்பட்டு பலர் தத்தமது கிராமங்களில் சமூகசேவை மன்றங்களை உருவாக்கி சேவையாற்றினர். அதே வரிசையில் முருகேசு செல்லைய அவர்களும் தொல்புரம் சமூகசேவா சங்கம், அந்தியகால சேவா சங்கம்எனப் பல அமைப்புகளை உருவாக்கி சமூக பொருளாதார கலைத்துறையில் முன்னின்று உழைத்தார். அதோடு கிராமத்தின் தேவை கருதி இன்னும் சிலரையும் சேர்த்து ஒரு காணியைக் கொள்வனவு செய்து கிராம உபயோகத்திற்காக வழங்கினார்.
மேலும் தென்னிந்திய திரைப்பட, நாடக கலைஞர்கள் பலரது நட்புக் காரணமாக அவர்களை அழைத்து வந்து பல நாடகங்களை யாழ்ப்பாண மாவட்டம் எங்கும் நடத்தினார். குறிப்பாக அக்கால திரைப்பட நடிகரான ரீ.எஸ்.துரைராஜாவின் நாடகக் குழுவை அழைத்து வந்து யாழ்ப்பாணம் வெள்ளாந்தெருவில் அமைந்திருந்த அவரது வீட்டில் குடியிருத்தி மாதக் கணக்கில் நாடகங்களை நடத்துவித்தார். இதன் வளர்ச்சியினால் நாடக மேடைக்கான தளபாடங்கள், ஒளி வழங்கும் சாதனங்கள், சீன்ஸ், உடுப்பு மற்றுமத் மேக்கப் எனச் சகல சாதனங்களையும் கொள்வனவு செய்து நிறுவன முறையில் செயற்பட்டார். ஆதற்கும் மேலாக யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலாக ஒலிபெருக்கிச் சாதனத்தை அறிமுகம் செய்த பெருமையும் இவரையே சாரும். இதனால் சீன்கராச் செல்லையா என்ற பெயரில் பிரபல்யம் ஆனார். இந்த நாள்களில் பல உள்நாட்டு இசை நாடகக் கலைஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
செல்லையா அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். ஆவர்களில் முத்தவரான தங்கவேல் அவர்கள் வில்லிசைக்கலைஞர் சின்னமணி அவர்களுடன் இணைந்து கலைவாணர் வில்லிசைக் குழுவொன்றை உருவாக்கி பல தசாப்தங்களாக விற்கடம் வாசிக்கவும் நகைச்சுவை செய்தும் கலைப்பணியோடு ஒன்றியிருந்தார். இரண்டாவது புதல்வனான உதயச்சந்திரன் இசைநாடகக் கலைஞராகவும், திரைப்பட நடிகராகவும் கலை வளர்த்து வருவதுடன் மிகச் சிறந்த நடிகனாகவும் திகழ்வதனூடாக செல்லையா அவர்களது கலைத்தொடர்கின்றமை கவனிக்கத்தக்கது. 1947 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் லோட்டஸ் மோட்டார் கராஜ் என்னும் ஸ்தாபனத்தை உருவாக்கி பெயர் குறிப்பிடக்கூடியளவிற்கு புகழின் உச்சியில் இருந்து 1986-09-09ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
