அறிமுகம். வலிகாமம் மேற்கு நெல்லியான் கிராமத்தில் வாழ்ந்த திரு சுப்பையா வள்ளியம்மை தம்பதியரின் ஏகபுத்திரனாக 1939-10-16ஆம் நாள் பிறந்தார். இவருடைய பேரனாரான கணபதிப்பி;ள்ளை என்பவருடைய நாமத் தினையே இவருக்கு சூட்டினர். சிறுவயது முதல் தமது குலதெய்வமான பொன்னாலை வரதராஜப் பெருமாள் சந்நிதியில் தனது பெரிய தந்தையாருடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையினையும் பஜனையினையும் செய்;து வந்தார். பொன் னாலை வரகவி என அழைக்கப்படுகின்ற பே.க.கிருஸ்ணபிள்ளை அவர்களது தம்பியாரான சுப்பையா அவர்களது புத்திரனாக அவதரித்தவர். பே.க.கிருஸ்ண பிள்ளை அவர்களினால் 1945-1955வரையான காலப்பகுதிகளில் பல இடங்களிலும் அரங்கேற்றி வந்த ‘கிருஸ்ணலீலா’ என்னும் நாடகத்தினை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய திருவிழாவில் அரங்கேற்றிய போது சிறுவனாக இருந்த கணபதிப்பிள்ளை அவர்களை பாலகிருஸ்ணனாகவும், ஹம்சனாகவும் நடிக்க வைத்து மேடைப் பயிற்சியையும், இசை பாடுந்திறனையும் ஏற்படுத்தி தனது பதினைந்தாவது வயதில் மிகச்சிறந்த கலைஞானமுள்ளவராக மேற்கிளம் பினார். பேரனாரின் நாடகங்களில் நடிகனாகவும், இசைஞனாகவும் உருவெடுத்த கணபதிப்பிள்ளை அவர்கள் தனது சொந்த உழைப்பினாலும் விடா முயற்சியினா லும் இசை உலகில் தனக்கென்றெரு தனியிடத்தை ஏற்படுத்தியவர். அனைவரும் தலைவணங்கும் ஆசானாக இசை ஆசிரியராகவும் சங்கீத ஆசிரிய ஆலோசகராக பதவி உயர்வு பெற்று உதவிக்கல்வி அதிகாரியாகவும் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும்; கல்விப் பணியாற்றி இசையுலகில் என்றும் நீங்காதிடத்தி னைப் பெற்ற மகா கலைஞனாகத் திகழ்கின்றார்.
கல்விப்பாரம்பரியம்
ஆரம்பக்கல்வியை 1944-1949 காலப்பகுதியில் பொன்னாலை வரதராஜப’ பெருமாள் வித்தியாலயத்தில் தரம் ஐந்து வரை கற்று 1949ஆம் ஆண்டு சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் தரம் ஆறு வரை கற்று 1951 – 1958 வரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் வரை கற்று சித்தியடைந்தார். இசையில் இயற்கையாக நாட்டமுடையவராக இருந்தமை யால் பாடசாலைக் காலங்களில் பல போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிகளைப் பெற்றவர். ஆரம்ப இசைக்கல்வியை தனிப்பட்ட முறையில் பெரிய தந்தையாரின் வழிகாட்டலில் மூளாய் வலங்கைமான் திரு ஆறுமுகம் அவர்களிடமும் இணுவில் திரு எஸ்.வி.மாசிலாமணி,வட்டுக்கோட்டை திரு வ.இரத்தினசிங்கம், வடலியடைப்பு திரு சிங்கார வேலு ஆகியோரிடமும், பாடசாலை இசை ஆசிரியர்களான சங்கீதபூஷணம் மீசாலை திரு வேலாயுதபிள்ளை, சங்கீதபூஷணம் கொக்குவில் திரு செ.இரத்தினசபாபதி ஆகியோரிடமும் கற்றார். கற்ற இசைப்பயிற்சி மூலம் வட இலங்கை சங்கீத சபையின் மூன்றாந்தரப் பரீட்சையில் சித்தியடைந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து தனது இசைப் பயணத்தினை தொடர்ந்தார்.
வாய்ப்பாட்டினை மன்னார்குடி திரு எஸ்.இராஜகோபாலபிள்ளை, மைலம் திரு எம்.பி.வஜ்ரவேல் முதலியார், திருப்பாம்புரம் திரு ரீ.என்.சிவசுப்பிரமணியபிள்ளை, திரு ரீ.கே.ரங்கசாமி, திரு எஸ்.வேணுகோபால ஐயர், இசையரசு திரு எம்.எம். தண்டபாணிதேசிகர் ஆகியோரிடமும் துணைப்பாடங்களான வயலினை கும்பகோணம் திரு சம்பந்தபிள்ளை அவர்களிடமும், மிருதங்கத்தினை தஞ்சாவூர் திரு ராமதாஸ்ராவ் என்பவரிடமும், மிருதங்கச்சொற்கட்டுப் பயிற்சியை திரு சி.வி.வீராசாமிப்பிள்ளை என்பவரிடமும் பாடம் பயிலும் வாய்ப்பினைப் பெற்று முதற்தரச்சித்தியுடன் கூடியதாக தங்கப்பதக்கம் பெற்று ‘சங்கீதபூஷண’மாக 1963ஆம் ஆண்டு நாடு திரும்பினார்.
தனது இசைத்திறனின் மேம்பாட்டிற்காக திரு எம்.ஏ.கல்யாணகிருஸ்ணபாகவதர், திரு என்.சண்முகரத்தினம்,திரு கே.ஆர்.நடராஜா, திரு எஸ்.பாலசிங்கம், திரு ப.பரமசாமி போன்ற சங்கீத வித்துவான்களின் நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தன்னைப் புடம்போட்டுக்கொண்டவர்.
தாயகம் திரும்பி கணபதிப்பிள்ளை அவர்கள் தனது இசை அரங்கேற்றத்தினை 1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது குலதெய்வமான பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய சிறப்பு அரங்கில் வயலின் திரு ஏ.சோமஸ்கந்தசர்மா, மிருதங்கம் திரு ஏ.சந்தானகிருஸ்ணன், கெஞ்சிரா திரு கே.கணேசன், தம்புரா திரு வி.உருத் திரன் ஆகியோரது அணிசெய் இசையோடு நிறைவேற்றினார்.
தொழில்
1966-09-07ஆம் நாளன்று தனது ஆசிரிய நியமனத்தினை யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்தார். தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் பணியாற்றினார். 1968ஆம் ஆண்டின் பின்னர் காரைநகர் இந்துக்கல்லூரி, காரைநகர் யாழ்ற்றன் கல்லூரிகளில் பணியாற்றிய காலத்தில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சிக்காக 1974-04-24ஆம் நாள் இணைந்து முழுமையான பயிற்சியின் பின்னர் 1975-12-31ஆம் நாள் பலாலி ஆசிரியர் கலாசாலயிலிருந்;து வெளியேறி 1976 முதல் 1977 வரை குருநாகல் இந்து தமிழ் மகாவித்தியாலயத்தில் பணியாற்றினார். 1977-05-01 முதல் சங்கீத ஆசிரிய ஆலோசகராக பதவி உயர்வு பெற்று உதவிக்கல்வி அதிகாரியாகவும் பின்னர் பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றி 1999-10-15ஆம் நாள் அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
திருமணவாழ்வில் இணைந்தமை
1969-04-02ஆம் நாள் பொன்னாலையைச்சேர்ந்த திரு திருமதி கார்த்திகேசு சின்னம்மா தமபதிகளின் மகளான சந்திரபூபதி என்னும் மங்கையை கரம் பற்றினார். தம்பதியினர் இருவரும் தம்வாழ்வினை இசைக்காகவே அர்ப்பணித்தனர்.
இசைப்பணியில் கணபதிப்பிள்ளை அவர்கள்
பொன்னாலை வரதராஜப் பெருமாளின் திருவருளோடு இசைமேதையவர்களது இசைப்பயணமானது எதுவித தங்கு தடைகளுமின்றிப் பயணித்துக் கொண்டிருந்தது. கலை மன்றங்கள், கல்வி நிறுவனங்கள் ஆசிரியரின் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்குப் போட்டி போட்டு நின்றன. முயற்சி திருவினையாக்கும் என்பதற் கிணங்க கணபதிப்பிள்ளை அவர்களது தொடர் முயற்சியின் பயனாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தின் வாய்ப்பாட்டிசைக் கலையில் விசேட தரக் கலைஞனாகவும், திருமுறைப் பண்ணிசையில் ‘ஏ’ பிரிவுக் கலைஞனாகவும் தரமமர்த்தி பல இசைநிகழ்ச்சி களைத் தயாரிப்பதற்கும் வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கியது. பல்வேறு இசையரங்குகளில் தரமான இசைக் கச்சேரிகளைச் செய்து முன்னணிக் கலை ஞனாகத் திகழ்ந்ததுடன் யாழ்ப்பாணம் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், வட்டுக்கோட்டை கலாநிலையம், கோப்பாய் ரசிக கலா மன்றம் ஆகியவற்றில் இசைபோதிக்கும் இசை ஆசிரியராகத் திகழ்ந்தார்.
வட இலங்கை சங்கீத சபையின் நிர்வாக சபையில் உப தலைவராகவும் சபையின் பரீட்சைளின் பிரதம பரீட்சகராகவும், ஆசிரியர் தராதரமான ஆறாந்தரம் தோற்றுகின்ற பரீட்சார்த்திகளின் ‘கலாவித்தகர்’ பட்டத்திற் கான பிரதம பரீட்சகராகவும் சங்கீத சபையின் தரம் ஒன்று தொடக்கம் ஆறு வரையிலான பாடத்திட்டத்தின் மீளாய்வுக் குழுவின் பிரதம உறுப்பினராகவும் செயற்பட்டவர்.
யாழ் பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்களுக்கான உள்வாரி வெளிவாரி செய்முறைப்பரீட்சகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தாயகத்தினுள்ளே நடைபெறுகின்ற நடனம் மற்றும் மிருதங்க அரங்கேற்றங்களின் பிரதான பாடகராக மிளிர்ந்ததுடன் கோலாலம்பூர், சிங்கப்பூர், லண்டன் போன்ற நாடுகளில் நடைபெற்ற இநைகிழ்வுகளில் கலைஞனாக தனது திறனை நிலைநாட்டியது மட்டுமல்லாது பல நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து இசைத்துறைக்குப் பெருமை சேர்த்தவர்.
ஆரம்ப அழகியலுக்கான சிறுவர் பாடல்கள், பொன்னாலையக் கீதம்-பாகம்1, சகலகலாவல்லி மாலை, அருளமுதம் பக்திக் கீர்;த்தனைகள், தவத்திரு யோகர் சுவாமிகளின் திருத்தாண்டகப் பாடல்கள் ஆகியவற்றினை இறுவட்டாக வெளியீடு செய்து இசை கற்போரிற்கு பெரும்பங்காற்றியுள்ளார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்.
‘கலைஞரை கலைஞரே போற்றுவர்’ என்பது போல கணபதிப்பிள்ளை அவர்களது கலைச்சேவையின்ப பாராட்டி பல்வேறு நிறுவனங்களும் கலை மன்றங்களும் மதிப்பளத்து நின்றன. இத்தகைய விருதுகளும் பாராட்டுக் களும் கலைஞருக்கு வழங்கப்பட்டாலும் அவ்விருதுகள் இக் கலைஞரால் மேன்மையுற்றது என்பது தான் நிதர்சனமாகும்.
1936ஆம் ஆண்டு பொன்னாலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானம் வழங்கியது ‘பண்ணிசைச் செம்மல்’
1964ஆம் ஆண்டு கோப்பாய் ரசிக மன்றம் வழங்கியது ‘கலைவாரிதி’
1982ஆம் ஆண்டு அருட்கவி சீ.விநாசித்தம்பி வழங்கியது ‘இசைக்கலைவேந்தன்’
1983ஆம் ஆண்டு இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கியது ‘கலைஞானகேசரி’
1983ஆம் ஆண்டு கம்பன் கழக இசையரங்கில் செல்வி நாகம்மா கதிர்காமர் வழங்கியது ‘ஸ்வரபதகேசரி’
1999ஆம் ஆண்டு மணிவிழா நிகழ்வில் பிரம்மஸ்ரீ த.ந.வீரமணி ஐயரால் வழங்கியது ‘சுரலயகானமணி’
2000ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கியது ‘கலாபூஷணம்’
2010ஆம் ஆண்டு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியது ‘ஆளுநர்விருது’
2012ஆம் ஆண்டு இலங்கை கௌரவ சனாதிபதி வழங்கியது ‘திரு D.S.மணிபாகவதர்’ விருது
2013ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீத சபை வழங்கியது ‘கலைப்பிரவாகம்’
2014ஆம் ஆண்டு தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானம் வழங்கியது ‘சிவத்தமிழ் விருது’
2014ஆம் ஆண்டு அகில இலங்கை கம்பன் கழகம் வழங்கியது ‘விபுலாநந்தர் விருது’
2014ஆம் ஆண்டு சுழிபுரம் பிரதேச சபை கௌரவித்தது.
2016ஆம் ஆண்டு யாழ் மாவட்ட கலாசாரப் பேரவை வழங்கியது ‘யாழ்முத்து’
1957 இல் புண்ணிய நாச்சியார் திருமுறைப் போட்டியில் தங்கப்பதக்கம் பரிசு பெற்றார்.
1961 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மகிராணி சேது பார்வதிபாய்நினைவுத் தங்கப் பதக்கம் பெற்றார்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் 1987இல் வெள்ளிவிழா நிகழ்வும், 1999 இல் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் மணிவிழா நிகழ்வும், 2014இல் நல்லூர் இளங்கலைஞர் கலா மன்றத்தில் பவளவிழாவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கலைஞனின் இசைச்சிறப்பு
கலப்பு இன்றிய சுத்தமான சங்கீத்தை இரசிகர்;களுக்கு விருந்தாக வழங்கியவர். சுருதி, லயம், சங்கதி சுத்தமாகப் பாடுவதில் வல்லவர்.வரகவியின் வழியில் வந்த இவரது இசையில் தமிழின் சுவை இழையோடியிருக்கும். அழகிய தமிழ் உச்சரிப்பும், சொற்தெழிவும், பொருள் விளங்கப் பதம் பிரித்துப் பாடும் திறனும் இவருக்கே உரியது. அனைத்து மாணவர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் கற்பிக்கும் திறனும் பொறுமையும் வாய்க்கப்பெற்றவர்.
யாழ்ப்பாணத்தின் இசைப்பொக்கிஷமாக வாழ்ந்து யாழ்ப்பாண மண்ணின் இசையாளர்கள் பலரை உருவாக்கி இசையுலகில் மகத்தான சாதனைகள் பல புரிந்த கலாபூஷணம் ச.கணபதிப்பிள்ளை அவர்கள் ‘சுத்த சங்கீதமே சுகம் தரும்
சுருதி லய பாவம் நிறைந்து விளங்கும்
சுத்த சங்கீதமே சுகம் தரும்’ என்ற செய்தியை திஸ்ரதிரிபுடை தாளத்தில் சுத்த தன்யாசி இராகத்தில் ஒரு மாத்திரை தள்ளி எடுப்பு கண்ட நடையில் இப் பல்லவியை இசையாளர்களுக்கான மகுட வாசகமாக விட்டுச் சென்றிருக்கின்றார்.
தன் வாழ்நாளை இசைக்காக அர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்த சங்கீதபூஷணம் சுப்பையா கணபதிப்பிள்ளை அவர்கள் தனது 82வது வயதில் 2021-03-17ஆம் நாள் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் காலடியில் தனது இறுதி மூச்சை அர்ப்பணித்து இறைபதம் எய்தினார்.