தென்னாசிய நாடொன்றில் கட்டப்பட்டு காற்றின் துணையுடன் இயங்கும் கப்பலொன்று ஐரோப்பா கடந்து Atlantic கடல்வழியே அமெரிக்காவரை பயணம் சென்றது உலக வரலாற்றில் ஒரே ஒருமுறைதான் நடந்துள்ளது. இச் சாதனைப் பயணத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐந்து கடலோடிகள் முழுமையாக பங்கேற்றிருந்தனர்.
89அடி நீளமும் 19அடி அகலமும் கொண்ட அன்னபூரணி 1930இல் வல்வெட்டித்துறை மேற்குத்தெருவாடியில் சுந்தர மேஸ்திரியாரால் கட்டப்பட்டது. உள்ளூர் வேப்பமரத்தினால் கட்டப்பட்ட இக்கப்பல் 1936 இன் இறுதியில் பிரபல கடலோடியான திரு.William Albert Robinson என்பவரால் கொள்வனவு செய்யப்பட்டு அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக்கடலில் பயணம் செய்தபோது ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250மைல்கள் பின்புறமாக பெய்ரூத்வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரம் மைல்களையும் பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 01 ஓகஸ்ட் 1938 இல் Massachusetts மாநிலத்திலுள்ள Glocester துறைமுகத்தில் நிறைவுபெற்றது.
அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 November 1938 இல் தென் Pacific சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்று நாள்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100 மைல் வேகத்தில் வீசியகாற்றையு ம் 40 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமரக் கட்டுமானமும் அதன் செய்வினைத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 February 1939 இல் Pacific சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலக சாதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்னபூரணியின் முழுமையான பெயர் அன்னபூரணி அம்மாள் என்பதாகும். Robinson ஆல் கொள்வனவு செய்யப்பட்ட பின் Florence C.Robinson என கப்பலின் பெயர் மாற்றப்பட்டது.
இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம், பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் வல்வெட்டித்துறையின் அழிக்கமுடியாத பெருமையாகும்.
http://noolaham.org/wiki/index.php?title=வல்வெட்டித்துறையிலிருந்து_அமெரிக்கா வரை_கப்பலோட்டிய_தமிழர்கள்.