Saturday, November 2

சாரணன் சிற்றம்பலம் கந்தமூர்த்தி

0

அறிமுகம்

ஈழத்திரு நாட்டில் குரு பரம்பரைக்கெல்லாம் மூலமுதல்வராக விளங்குபவர் கடையிற் சுவாமிகள். ஈழத்துச்சித்தராகிய சுவாமியின் வரவு பாலயோகிகளும், ஞானிகளும் உருவாகக் காரணமாயிருந்தது. கடையிற் சுவாமிகளது சிஸ்யர்களில் என்றும் எங்கும்; சின்னச்சுவாமியும் நன்னிச்சுவாமியும் உடனிருந்தவர்களாவர். உருவத்தால் இவர்கள் மூவராயினும் உள்ளத்தால் ஒருவராக வாழ்ந்தனர். இவர்களில் சின்னச்சாமியினுடைய சமாதி நாவலர் வீதியிலுள்ள கடையிற்சுவாமி அன்னசத்திரத்தில் அமைந்துள்ளது. இவர்களில் சின்னச்சுவாமியின் பேரன் சிற்றம்பலம் தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக ஸ்கந்தமூர்த்தி அவர்கள் 1927-01-09ஆம் நாள் பிறந்தவர்.

தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் சோனியதெரு மெதடிஸ் தமிக்கலவன் பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பயின்றார். பாடசாலைக் காலத்தில் ஆற்றலும் துடிப்புமுடைய இவர் சமூக சேவைகளில் ஈடுபடுவதனை விருப்பமுடன் செய்து வந்தார். இதன் காரணமாக மத்திய கல்லூரியில் சாரணர் இயக்கத்தில் 1944ஆம் ஆண்டு இணைந்து கொண்டது முதல் சாரணர் சேவைக்காக அயராது அர்ப்பணித்து சாரணிய அமைப்பை யாழ்ப்பாணத்தில் பெறுமதியுடைய அமைப்பாக மாற்றினார்;. 1949ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட இவர் சாரணிய அமைப்பை திறமையாக செயற்படுத்தக்கூடியதாக இருந்தது. 1951, 1952ஆம் ஆண்டுகளில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி மாணவனாக இணைந்தார். அங்கு அவர் திரிசாரணர் தலைவராக செயற்பட்டார்.

1953ஆம் ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி சென் பீற்றர் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து கொண்டார். இக்கல்லூரியில் கற்பித்தகாலங்களில் குருளைச் சாரண பொறுப்பாசிரியராக பணியாற்றினார். இக்காலத்தில் மீரிகம பயிற்சிப் பாசறையில் நடைபெற்ற குருளைச்சாரண தருசின்னத்திற்கான பயிற்சி பெற்று சாரணர் குழாமின் தகுதி வாய்ந்த அனுபவமிக்க சாரணராக முகிழ்த்தெழுந்தார். 1994ஆம் ஆண்டு சாரணர் சேவையின் பொன் விழாவினை நிறைவு செய்த வடமாகாண சாரண ஆணையாளர் அமரர் சிற்றம்பலம் கந்தமூர்த்தி அவர்கள் ஆசிரியராகவும், சிறுவர் நன்னடத்தை பாதுகாவலர் அதிகாரியாகவும், குடும்ப நீதி மன்ற ஆலோசகராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சாரணனாக சிற்றம்பலம் கந்தமூர்த்தி அவர்கள்.

‘சேவைக்கோர் மூர்த்தி’ என அன்பாக யாழ்ப்பாண மக்களால் அழைக்கப்பட்ட இவர் சாரணர் இயக்கத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும் விருட்சமாக்கிய பெருமைக்குரியவர் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட சாரண ஆணையாளரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான அமரர் சிற்றம்பலம் கந்தமூர்த்தி அவர்கள் என்றால் அது மிகையாகாது. நாடகம், கலை, இலக்கியம், சமூகசேவை, கவித்துவம் எனப் பன்முக ஆளுமையுடைய இவர் சிறந்த தலைமைத்தவத்தின் அடையாளமாய் திகழ்ந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சாரணர் அணியில் 1944ஆம் ஆண்டு இணைந்து கொண்டார். அன்று முதல் தனது ஆயட்காலம் வரை சாரணியத்திற்காக தன்னை அர்ப்பணித்து பல மாணவ சமூகத்தினை நல்வழிப்படுத்திய ஆசான்.

மாவட்ட ஆணையாளர் கந்தமூர்த்தி

1944ஆம் ஆண்டு சாரண இயக்கத்தில் இணைந்து திரிசாரண தலைவராய், குருளைச்சாரண ஆசிரியராய், 1955இல் சாரண ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் 1956ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இரண்டாவது சாரணர் ஜம்போறிக்கு இலங்கைப் பிரதிநிதிகளாகச் சென்ற சாரணர் குழுவின் நலன்புரி சேவை உத்தியோகத்தராக கடமையாற்றிய அனுபவத்தினூடாக சாரணர் செயற்பாடுகளில் பல்வேறு ஆளுமைகளைப் பெற்றுக்கொண்டார். அதன்பயனாக 1961இல் குழுச்சாரண ஆசிரியராய், 1963இல் மாவட்ட சாரண ஆசிரியராக படிப்படியாக உயர்ந்து 1966இல் யாழ்ப்பாண மாவட்ட சாரண சங்கத்தின் பொன் விழா வேளையில் உதவி மாவட்ட ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 1976ஆம் ஆண்டு நடைபெற்ற வைரவிழாவின் போது யாழ்ப்பாண மாவட்ட சாரணர் சங்க மாவட்ட ஆணையாளராக மேன்மை தங்கிய ஜனாதிபதி அமரர் வில்லியம் கோப்லாவ அவர்களால் நியமிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் வடமானில சாரணர் வளர்ச்சிக்காக அயராது உழைத்து பல்வேறு திட்டங்களையும் தயாரித்து செயற்படுத்தினார்.

சாரணியத்தில் தருசின்னப் பயிற்சியுடன், உதவிப்பயிற்றுனர் தலைவர் (யுடுவு) பயிற்சியினையும் பெற்று யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய மாவட்டங்களில் சாரணர் தலைவர்களுக்குப் பயிற்சி அளித்து அதிகளவிலான சாரணர் தலைவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவர். 1968, 1969 காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பீதுறு பாசறையில் நடைபெற்ற சாரணர்களுக்கான தருசின்னப் பயிற்சியின் உதவிப் பயிற்றுனர் தலைவராக கடமையாற்றி பாசறைப்பதியின் பாராட்டைப் பெற்றவர்.

தன்னுடைய மாவட்ட ஆணையாளர் பதவிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட சாரணர் குழுக்களின் எண்ணிக்கையை 108ஆக அதிகரித்தார். அப்போதைய பாடசாலை அதிபர்களது கூட்டங்களில் வட்டாரக் கல்வி அதிகாரிகளினதும் அதிபர்களதும் ஒத்துழைப்புடன் கூட்டங்களில் சாரணர் இயக்கத்தின் முக்கியத்துவத்தினை எடுத்தியம்பி பல பாடசாலைகளிலும் சாரணிய இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு வழிகோலினார். குறிப்பாக ஊர்காவற்றுறை தொகுதியிலுள்ள பாடசாலைகளில் சாரணர் குழுக்கள் அதிகளவில் ஆரம்பிக்கட்டமை வரலாற்றுப் பதிவாக இன்றும் இருக்கின்றது. இத்தகை முயற்சியுடன் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த மில்க்வைற் தொழிலதிபர் கலாநிதி க.கனகராசா அவர்களது ஒத்துழைப்புடனும் வடமாநில சாரணாளர் சங்கச் செயலாளராகவிருந்த திரு மா.புவனேந்திரன் அவர்களது உதவியுடனும் 1977, 1978, 1979, 1980 காலங்களில் மரம்நாட்டும் வைபவங்களை பல இடங்களில் சிறப்பாக செயற்படுத்தி மரம்வளக்கப்படுவதன் முக்கியத்துவத்தினை சாரண மாணவர்களுக்கூடாக நேசிக்க வைத்தார்.

இவருடைய சாரணர் செயற்பாடுகளில் இன்னுமொரு பாதையா அமைந்ததுதான் அரசினர் சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலைகளில் (ஊநசவiஉகநைன ளுஉhழழட) சாரணியம் கட்டாயமாக்கப்பட்ட வரலாறு ஆகும். வழி தவறிச் சென்ற பால்யக் குற்றவாளிகளை சாரணர் இயக்கத்தில் இணைத்து அவர்களுக்கு சாரணிய பயிற்சி வழங்கப்படுவதன் மூலம் நற்பிரஜைகளாக்க முடியும் என்ற எண்ணக்கருவை செயலாற்றினார். இதன் பயனாக சகல சான்று பெற்ற பாடசாலைகளிலும் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்ட்டதுடன் 1966ஆம் ஆண்டு மே மாதம் 6,7ஆம் திகதிகளில் கடவத்தை வூட்போட் பாடசாலையில் சான்று பெற்ற பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற சாரணர் போட்டிகளில் அச்சுவேலி, பேர்ன்காம் பாடசாலை முதலாம் இடத்தைப் பெற்று கலாநிதி ஜாக்பார்சனிடமிருந்து வெற்றிக்கேடயத்தைப் பெற்றுக்கொண்டமை சாதனைக்குரிய விடயமாகும். பேர்ண்ஹாம் சீர்திருத்தப் பாடசாலையில் முதன்முறையாக நான்கு இராணிச் சாரணர்களை உருவாக்கி உலக சாதனையை நிலைநாட்டியவர். 1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி இந்நால்வரையும் கொழும்பிள்ள இராணி மாளிகைக்கு அழைத்துச் சென்று மேன்மை தங்கிய ஜனாதிபதியிடமிருந்து இராணிச் சாரணர்; பதக்கத்தை பெறச் செய்தார். இவருடைய இத்தகைய அர்ப்பணிப்பாண சேவையைப் பாராட்டி விருது வழங்கி பாராட்டப்பெற்றார். இலங்கை பிரதம சாரணரான ஜனாதிபதி அவர்களிடமிருந்து உயர் திறமைப் பதக்கம் உட்பட பல விருதுகளைப் பெற்ற பெருமை அமரர் சி.கந்தமூர்த்தி அவர்களுக்கேயுரியது.

1968ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த பொதுநல அமைப்பு நாடுகளின் பிரதம சாரணர் சேர் சாள்ஸ்பிற்ஸ்றோய்மக்ளின் அவர்கள் யாழ்ப்பாணத் தில் நடைபெற்ற கொறப்பொறி நிகழ்வில் அமரர் கந்தமூர்த்தி அவர்களுக்கு நீண்ட கால சாரணர் சேவைக்குரிய சேவைப் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார்.

முன்னாள் வெளிக்கரும ஆணையாளராக கடமையாற்றிய அமரர் கே.ஜெயரட்ணம் அவர்களது வேண்டுகோளுக்கமைவாக 1960ஆம் ஆண்டு இலங்கை சாரணாளர் சங்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டு 1972ஆம் ஆண்டு வரை பன்னிரண்டு ஆண்டுகள் செயற்பட்டார்.

சாரணர்களது தீப்பாசறை நிகழ்வுகளில் தமிழில் பாடுவதற்கான சாரணர் கீதங்கள் நீண்ட காலமாக இருக்கவில்லையென்ற பெரும்குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கு முற்பட்ட கந்தமூர்த்தி அவர்கள் தமிழில் சாரணர் பாடல்களை இயற்றியும், தொகுத்தும், நாட்டுப்பாடல்கள், சிஙகள, ஆங்கில பாடல்களை தமிழில் சேர்த்தும் 1965ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நடைபெற்ற யாழ் மாவட்ட சாரணர் வருடாந்த விழாவில் முன்னாள் மாவட்ட ஆணையாளர் அமரர் கே.ஜி.அரசரட்ணம் அவர்களால்  “யாழ் மாவட்ட சாரணர் கீதங்கள்” என்னும் பாடல் நூல் வெளியிட்டு வைக்கப்பட அதன் முதற் பிரதியை முன்னாள் பிரதிப்பிரதம சாரண ஆணையாளர் கேற்முதலியார் ஏ.எல்.தசநாயக்கா அவர்கள் பெற்று சிறப்பித்தார். சாரணர்களுக்கான பாசறைத்தீ நிகழ்வினை நடத்துவதில் வல்லவராக திகழ்ந்தார். இதன் காரணமாக வடபகுதி பாசறைத்தீ நிகழ்ச்சித் தலைவராக விளங்கினார். பாசறைத்தலைவர்களுக்கான பயிற்சிகளை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் திறமையான முறையில் நடத்தியவர். மாவட்ட ஆணையாளராக கடமையாற்றிய காலத்தில் சாரணர்களுக்கான ஜம்போறியினை அனுராதபுர மாவட்டத்தில் நடத்துவதற்கு சாரணர் தலைமை அலுவலகம் திட்டமிட்டிருந்தது. இவ் ஜம்போறியினை யாழ்ப்பாணத்தில் நடத்துமாறு கோரிக்கையினை மாவட்ட சாரண ஆணையாளரான சி.கந்தமூர்த்தி அவர்கள் முன்வைத்தார். இக்கோரிக்கையினை புறந்தள்ளிய தலைமை அலுவலகம் திட்டமிட்படியே அனுராதபுரத்தில் நடத்தியது. இவ் ஜம்போறியில் கலந்து கொள்ளாது புறக்கணித்து வேறு ஒருவரை தலைமைதாங்குவதற்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு அதிக தமிழ்ப்பற்றும் மண் பற்றும் கொண்ட கந்தமூர்த்தி அவர்களது வரலாற்றுப் பதிவில் முக்கியமான விடயங்களாக காணப்படுகின்றன.

இலங்கை சாரணர் வரலாற்றில் தொடர்ச்சியாக ஐம்பது ஆண்டுகள் சாரணர் சேவையில் ஈடுபட்ட ஒரு சிலரில் அமரர் சிற்றம்பலம் கந்தமூர்த்தி அவர்களும் ஒருவராவார்.

சாரணர் சேவையில் சிறப்பான முறையில் செயற்பட்டு எம் சமூகத்தினை நல்வழியில் பயணிக்க வழிகாட்டியாய் இருந்த பெருந்தகை 2007-05-16ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

இத்தொகுப்பிற்காக உதவிய கந்தமூர்த்தி அவர்களுடைய புதல்வன் சாரணன் கலாறாஜி அவர்களுக்கு யாழ்ப்பாணப்பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடத்தின் மனமார்ந்த நன்றி.

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!