யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சமீபமாக அமையப்பெற்றுள்ள இந்நிலையம் மாவிட்டபுரத்தினை பிறப் பிடமாகவும் கொழும்புத்துறையில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வந்த தவத்திரு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட சமய நிறுவனமே சிவதொண்டன் நிலையமாகும். சம காலத்தில் சிவதொண்டன் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. யோகர்சுவாமிகளைத் தொடர்ந்து செல்லத்துரை சுவாமிகளால் நடத்தப்பட்ட இந்நிலையமும் பத்திரிகையும் அவரின் சீடர்களினால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம் மண்டபத்தில் ஆன்மீக எழுச்சியை மையமாகக் கொண்ட தோத்திர வழிபாடுகள், புரானபடனங்கள், தியான வழிபாடுகள் என்பன தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இவற்றிற்குத் துணைசெய்யும் வகையில் ஆன்மீக நூலகமும் அமையப்பெற்றுள்ளது.