அறிமுகம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண நகரின் தென்மேற்குப் பகுதியில் கடலோடு அண்மித்த கிராமமாகக் காணப்படும் நாவாய்த்துறை என அழைக்கப்பட்ட தற்போதைய நாவாந்துறை ஒரு காலத்தில் சிறிய நாவாய்ப் படகுகள் கட்டப்படுவதற்கான துறைமுகமாக இருந்த இடமாகும். போர்த்துக்கேயர்கள் ஊர்காவற்றுறைப் பகுதியில் தமது பெரிய கப்பல்களைத் தரித்துவிட்டு சிறிய நாவாய்கள் மூலமாக யாழ்ப்பாண நகருக்கு வருவதற்கான துறைமுகமாக நாவாந்துறையைப் பயன்படுத்தினர். இக்காலத்தில் சுதேசிகள் படிப்படியாகத் தங்கிப் பின்னர் தமக்கென பெரிய ஆலயங்களையும் அமைத்து குடியேற்றங்களாக மாற்றினர் என்பதும் நாவாய்த்துறை என்பது நாவாந்துறை என மருவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. வடக்கு, தெற்குப் பகுதிகளாக காணப்படும் இப்பிரதேசம் தொட்டுணர முடியாத மரபுரிமைகளின் பாதுகாவலராக – நாட்டுக்கூத்துக் கலையின் உயிர்த்துவமுடைய கலையாக பேணுகின்ற கிராமங்களில் ஒன்றாக நாவாந்துறை விளங்குகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மோடி நாட்டுக்கூத்தானது கத்தோலிக்க மரபுக் கூத்தாக பல்வேறு மாற்றங்களை உள்வாங்கி வடிவம் பெற்றபின் அதன் தொடர்ச்சியையும் மரபையும் இன்றும் பேணுகின்ற இடமாக நாவாந்துறை காணப்படுகின்றது.
மரியாம்பிள்ளைப் புலவர், சூசைப்பிள்ளைப் புலவர், கிறிஸ்தோப்பர் புலவர், எஸ்தாக்கிப்புலவர் என்போரும் சூசையக்கரசு, சந்தியா இளையதம்பி, மனுவல் நீக்கிலாப்பிள்ளை, மனுவல் ஆசீர்வாதம் எனப் பல அண்ணாவிமார்களும் தோன்றி மரபுவழிக் கலைக்கு உயிர் கொடுத்த மண்ணில் – பெருமைக்குரிய கூத்துப் பரம்பரையிலே தோன்றியவர் தான் அண்ணாவியார் டானியல் பெலிக்கான்.;
பாட்டும் கூத்தும், கலையும் என எந்நேரமும் மணம் வீசிக்கொண்டிருக்கும் நாவாந்துறைக் கிராமத்தில் மடுத்தீஸ் செபஸ்தியாம்பிள்ளை மேரி தம்பதியரின் புதல்வனாக கூத்தாளன் டானியல் பெலிக்கான் அவர்கள் ஆம் நாள் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை ….. வித்தியாலயத்தில் கற்றார். பாடசாலைக் காலங்களில் உச்சஸ்தாயியில் பாடக்கூடிய கம்பீரக்குரலாக ராக, தாள, பாவ லயம் பிசகாது பாடும் வல்லமையுடையவராக விளங்கினார். குறிப்பாக டீ.ஆர்.மகாலிங்கம் அவர்கள் பாடிய ‘எங்கள் திராவிடப் பொன்நாடே’, ‘செந்தமிழ் தேன் மொழியாள்’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’ போன்ற பாடல்களை பாடுவதிலும் எம்.கே.தியாகராசபாகவதர், திருச்சி லோகநாதன் ஆகியோரது பாடல்களையும் மேடைகளில் பாடி இரசிகர் கூட்டத்தினை மெய்மறக்கச் செய்த இவர் தனது இள வயதிலேயே பாட்டிலும், கூத்திலும் நாட்டமுடையவராக காணப்பட்டார். பெலிக்கான் அவர்களின் இத்தகைய கலை ஆர்வமானது அவரை ஈழத்தின் மிகப்பெரிய கூத்தாளனாக முகிழ்த்தெழ வைத்தது. மிகச் சிறந்த நெறியாளனாக, அண்ணாவியாராக கூத்துலகில் வாழ்ந்தார்.
பிலோமினம்மா என்னும் மங்கையைத் திருமணம் செய்து இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட இவர் எட்டுப் பிள்ளைச் செல்வங்களைப் பெற்று மகிழ்ந்தார். டானியல் அன்ரனி, டானியல் பீலிக்ஸ், டானியல் சௌந்திரன், டானியல் புஸ்பராh, டானியல் உதயன், டானியல் ஜீவா, திருமதி ஜெபநேசன் மஞ்சுளா, திருமதி சகாயநாதன் வலன்ரினா ஆகிய எண்மரையும்; கல்வி மற்றும் கலையுலகில் மிளிரச் செய்து வாழ்வில் ஏற்றமுடையவர்களாக வாழவைத்தார். இவருடைய மூத்த புதல்வனான டானியல் அன்ரனி ஈழத்தின் அற்புதமான படைப்பிலக்கிய கர்த்தா, ஊடகவியலாளர், மிகச் சிறந்த பேச்சாளன், சமர் சஞ்சிகையின் ஆசிரியர,; சிறந்த உதைபந்தாட்ட வீரர் எனப் பலபரிமாணங்களைக் கொண்ட ஆளுமையாளனாக விளங்கி தந்தையின் கலைத்துறையில் மிளிராது விட்டாலும் கூத்தின் ஆதரவாளனாக, இரசிகனாக இருந்ததோடு ஈழத்துச் சிறுகதை, நாவல் இலக்கியத்துறையில் தன்னை ஈடுபடுத்தி தந்தையின் பெயரை நிலைநிறுத்தியுள்ளார்.
ஏனைய பிள்ளைச் செல்வங்கள் ஒவ்வொருவரும் கலை ஆர்வலர்களாகவும், உதைபந்தாட்டத்துறையில் வல்லுனர்களாகவும் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கூத்தாளனாக டானியல் பெலிக்கான் அவர்களின் பயணம்.
பெலிக்கான் அவர்கள் வசித்து வந்த நாவாந்துறைக் கிராமத்திற்கு அருகில் சங்கரதாஸ் சுவாமிகள் வழிவந்த பார்சிவழி அரங்கின் தொடர்ச்சியும் இன்றைய மனோகரா திரையரங்கில் முன்னர் அமைந்திருந்த புத்துவாட்டியார் சோமசுந்தரம்; மடுவமும், கொட்டடிக் கறுத்தார் மடுவமும் டானியல் பெலிக்கான் அவர்களை இசை நாடகத்தின் பால் ஈர்த்திருக்கலாம். இவர் தனது ஒன்பதாவது வயதில் ‘ஏழுபிள்ளை நல்லதங்காள்’ என்னும் இசை நாடகத்தில் ஏழுபிள்ளை நல்லதங்காளின் மகளாக நடித்து கலையுலகப் பிரவேசத்தினை ஆரம்பித்தார். ஆனால் இசை நாடகப்பாரம்பரியத்தினைத் தொடரும் பாக்கியம் இவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக்காமற் போயிருக்கலாம். இவற்றின் காரணமாக சிறிதேனும் மனச்சோர் வடையாத பெலிக்கான் அவர்களது தொடர் முயற்சியால் 23வது வயதில் செபஸ்தியார் வரலாறு கூறும் ‘வீரத்தளபதி’ என்ற முழு இரவுக் கூத்தில் இளவரசன் பாத்திரமேற்று நடித்தார். இதிலிருந்து இவருடைய அரங்கச் செயற்பாட்டின் தொடர்ச்சி ஆரம்பிக்கின்றது. இதன் தொடர்ச்சியில் பெலிக்கான் அவர்கள் தனது கிராமத்தில் அரங்கேற்றப்பட்ட கூத்துக்களில் பங்கேற்று சிறந்த ஆற்றல்மிகு நடிகரெனப் பெயரெடுத்தார். இவருடைய இவ்வளர்ச்சியில் புலவர்களான சூசைப்பிள்ளை, கலைக்கவி எஸ்தாக்கி ஆகியோர் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். இவ்வழிகாட்டலில் இவர் நடித்த ‘செபஸ்தியார்’, ‘அலசு’ ஆகிய இரு கூத்துக்களும் இவரை கிராமத்தில் சிறந்த நடிகனாக வெளிக்கொணர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் ‘நவரச நாட்டுக் கூத்துக் கலாமன்றம்’ தென்மோடிக் கூத்துக்களை அரங்கேற்றி கூத்துலகின் பொற்காலமாக திகழ்ந்திருந்த காலத்தில் அம் மன்றத்தின் ஸ்தாபகரான பூந்தான் ஜோசேப்பு அவர்களின் அறிமுகமும் தொடர்பும் இவருக்குக் கிடைக்கின்றது. பிரதேச ரீதியாக கூத்துக்கலையில் சிறப்புடன் திகழ்ந்த கலைஞர்களை ஒன்றிணைத்து நவரச நாட்டுக்கூத்துக் கலாமன்றத்தினூடாக தென்மோடிக் கூத்துக்களை அரங்கேற்றியவர் பூந்தான் ஜோசேப். இத்தகைய கூத்துக்களில் ஈழத்தின் ஆளுமையுள்ள பல அண்ணாவிமார்கள் நடித்தார்கள். பூந்தான் ஜோசேப்பின் மூலம் பெலிக்கான் அண்ணாவியாருக்குக் கிடைத்த கூத்தாளுமை மிக்க அண்ணாவிமார்களது தொடர்பும் டானியல் பெலிக்கான் அவர்களை பின்னாளில் மிகச் சிறந்த கூத்தாளனாக முகிழ்த்தெழச் செய்தது.
நடித்த கூத்துக்கள்
அண்ணாவியாரவர்கள் பல கூத்துக்களில் நடித்திருந்தபோதிலும் எமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களினடிப்படையில் பின்வரும் கூத்துக்களில் நடித்துள்ளமையை குறிப்பிடமுடியும்.
ஏழுபிள்ளை நல்லதங்காள் – ஒன்பது வயதில் நடித்த முதலாவது கூத்து.
சங்கிலியன்.
கண்டி அரசன்.
பண்டாரவன்னியன்.
கருங்குயில் குன்றத்துக் கொலை.
ஞானசௌந்தரி.
கிளியோபட்ரா.
எஸ்த்தாக்கியார்.
இக்கூத்துக்களில் எஸ்த்தாக்கியார் கூத்தில் ஸ்திரிபார்ட் என அழைக்கப்படும் பெண்பாத்திரத்தினை ஏற்று நடித்தார். எஸ்தாக்கியாரின் மனைவி என்னும் ஸ்திரிபார்ட் பாத்திரத்தினை ஏற்று நடித்ததுடன் நாவாந்துறைக் கூத்துப்பாரம்பரியத்தினை ஈழத்தின் பல பாகங்களிலும் அறியச் செய்தவர்.
அண்ணாவியாராக பெலிக்கான் அவர்கள்.
கூத்துக்களில் சபையோர் எனக்குறிப்பிடப்படும் விடயதானத்தில் ஏடுபார்ப்பவனாக, தாளக்காரனாக, பிற்பாட்டுக்காரனாக, ஆடல்கள் பாடல்களை சொல்லிக்கொடுக்கக்கூடியவராக, அண்ணாவியாருக்கு உதவியாளனாக, நடிகனாக, நடிப்பில் மக்களால் பாராட்டப்பட்டவனாக முதிர்ச்சி பெற்றுக் கூத்தின் பல்வேறு அமிசங்களையும் சிறுவயதிலிருந்தே அனுபவமாகப் பெற்று கூத்தின் ‘அண்ணாவி’ என தன்னை வளர்த்துக் கொண்டவர். இத்தகைய அனுபவங்களைப்பெற்ற அண்ணாவியாரவர்கள் பின்னாளில் தான் ஆரம்பத்தில் நடித்த கூத்துக்களை நெறியாளுகை செய்து அரங்கேற்றினார். இப்படிப்படியான முன்னேற்றத்தில் உயர்ந்த அண்ணாவியார் பெலிக்கான் நெறியாளுகை செய்து புகழ்பெற்ற கூத்துக்களாக
செபஸ்தியார்.
வேதசாட்சிகள்.
விஜயமனோகரன்.
ஜெனோவா.
மத்தேசு மவுறம்மா.
சங்கிலியன்.
ஞானசௌந்தரி.
கருங்குயில் குன்றத்துக் கொலை.
சஞ்சுவான்.
நல்லதங்காள்.
புனிதவதி.
வீரத்தளபதி.
கண்டி அரசன்.
தோமஸ் அருளப்பர்.
ஊசோன் பாலந்தை.
கிளியோபாட்ரா.
இம்மானுவேல் ஆகிய கூத்துக்களை மிகத்தரமாக அண்ணாவியம் செய்து அரங்கேற்றியவர். இதில் பெருமைகொள்ளவேண்டிய விடயமென்னவெனில் தனது கிராமத்தில் வந்துதித்த புலவர்களான மரியாம்பிள்ளைப் புலவர் எழுதிய ‘ஊசோன் பாலந்தை’, சூசைப்பிள்ளைப் புலவர் எழுதிய ‘இம்மானுவேல்’, கிறிஸ்தோப்பிள்ளைப் புலவர் எழுதிய ‘தோமஸ் அருளப்பர’, எஸ்த்தாக்கி ஆசிரியர் எழுதிய ‘வீரத்தளபதி’, ‘எஸ்தாக்கியார்’, ‘ஞானசௌந்தரி’ போன்ற கூத்துக்களை அண்ணாவியம் செய்து இப்புலவர்களின் திருநாமம் என்றும் நிலைக்கும் வகையில் பணி செய்த போற்றுதற்குரியவர். இவருடைய நெறியாக்கப் பணி என்பது வெறுமனே கூத்தின் மூத்த கலைஞர்களுடன் நின்று விடாது இளம் சமூகத்தினர்மீதும் கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்பிள்ளைகளை தனியாக வைத்து ஞானசௌந்தரி, ஜெனோவா ஆகிய இரு கூத்துக்களையும் அண்ணாவியம் செய்து பெண் கலைஞர்களை உருவாக்கினார். அதுமட்டுமன்றி மூத்த அண்ணாவிமார்களுடன் இணைந்து அவர்களது நெறியாளுகையின் கீழ் நடித்ததுடன் துணை அண்ணாவியாராகவும் பெருமை பாராது கலைப்பணியாற்றிய நாவாந்துறை மண் பெற்றெடுத்த கூத்தாளன் டானியல் பெலிக்கான் அவர்கள் தன் கலைத்தொடர்ச்சியை இவ்வுலகில் நிலைநிறுத்திச் சென்றுள்ளார் என்பது வெள்ளிடைமலை.
வழங்கிய கௌரவங்கள்.
கலைஞன் வாழும்போதே போற்றப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல கலை நிறுவனங்களும் அரச திணைக்களங்களும் கலை அமைப்புகளும் அவருடைய கலைப்பணியினைப் போற்றும் வகையில் பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் வழங்கி பெருமைப்படுத்தியதுண்டு.
1-எஸ்தாக்கியர் நாட்டுக்கூத்தில் பெண்பாத்திரமேற்று நடித்தமைக்காக ‘நாட்டுக்கூத்து மாமேதை’ என்ற பட்டத்தினை அமரத்துவமடைந்த வணக்கத்திற்குரிய முன்னாள் ஆண்டகை தியோகுப்பிள்ளை அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
2- யாழ்ப்பாணம் யுயுயு மூவிஸ் நிறுவனத்தினால் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
3-யாழ்;ப்பாணம் பிரதேச கலாசாரப் பேரவை ‘யாழ்ரத்னா’ என்னும் விருதினை வழங்கி கௌரவத்தது.
4-வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ‘ஆளுநர் விருது” வழங்கி கௌரவித்தமையும், கலாசார அலுவல்கள் திணைக்களம் ‘கலாபூஷணம்’ விருது வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதுடன் ‘கலைஒளி’ விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டவர்.
தந்தையின் வழியில் பிள்ளைகளான அமரர் அன்ரனி, திரு ஜீவா, திரு சௌந்திரன் அகியவர்கள் படைப்பிலக்கியத்துறையிலும் கலைத்துறையிலும் ஆர்வமும் ஆளுமையும் கொண்டவர்களாக கலைத்தொடர்ச்சிப் பயணத்தில் ஈடுபட்டிருப்பது டானியல் பெலிக்கான் அவர்களது கலை என்றும் வாழ்ந்து கொண்டிருப்பதனை சான்று பகரும் சாட்சிகளாக உயர்கின்றது. டானில் அன்ரனி சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கதொரு பணியினையாற்றியவர். ஈழத்தின் மிக்சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக மேற்கிளம்பினார்.
அண்ணாவியாரது சகோதரன் கலைஞர் திலகம் மைக்கல்தாஸ் அவர்களும் அண்ணாவியாரும் இணைந்து பல கூத்துக்களில் நடித்தும் பாடியும் அண்ணாவியம் செய்தும் கூத்தின் அறுபடாக் கலைத்தொடர்ச்சியின் மூலவேர்களாக திகழ்ந்துள்ளனர்.
நவீன கலைக்கோட்பாடுகள் கலை நியமங்களை அறிந்திராமலே கூத்துலகின் மூலவேராக கலை கலைக்காகவே என்னும் கோட்பாட்டினை வாழ்நாளில் பின்பற்றியவராக வாழ்ந்த அண்ணாவியார் பெலிக்கானது கலைப்பணிகள் என்றும் கிராமத்தவர்களாலும், அவரது ரசிகர்களாலும், கலை உலகாலும் எளிதில் மறந்து விடமுடியாது. சக மனிதர்களை மதித்து தான் என்ற அகங்கரம் அற்றவராக மூத்த கலைஞர்களோடு இணைந்து அரங்காற்றுப் பணி செய்த அண்ணாவியார் டானியல் பெலிக்கான் அவர்களது கூத்தாளுமை என்றும் ஏற்றிப்போற்றத்தக்கதாகும். கூத்தாளமையின் உச்சம்தொட்ட இக்கலைஞன் 2017-05-05 ஆம் நாள் கலையுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார்.
நன்றி : திருமதி மேர்சிசுயந்தினி மனோகரன், பொதுச்செயலாளர்-யாழ்பபாணப் பெட்டகம் நிழலுருக்கலைக்கூடம்.
கூத்தாளன் – அமரர் டானியல் பெலிக்கான் அவர்களின் ஓராண்டு நினைவு மலர் 2018-05-05.