ஊரின் மகிமையும் தல வரலாறும்
யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குக் கிழக்கேயும் தென்மராட்சிப் பிரதேசத்தின் மேற்கு எல்லையில் கண்டி வீதியின் எல்லையின் அருகே உவர்மண்ணும் செம்மண்ணும் செறிந்து நன்செய் பயிர்களும் புன்செய் பயிர்களும் செழித்து வளங்கொழிக்கும் மருதநிலப் பிரதேசமான கைதடி என்னும் அழகிய கிராமத்தில் மிகப்பழமையான கோயிலாக கைதடி வீரகத்திப்பிள்ளயார் ஆலயம் விளங்குகின்றது.
கி.பி.17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ள பகுதியானது அடர்ந்த பற்றைகள், வளர்ந்த மரங்கள், தாழைகள் செறிந்த இடத்தில் மாடு மேய்ப்பதும் விறகு வெட்டுவதும் குழை அறுப்பதும் என அயலில் வாழ்ந்த குடிமக்களின் வழக்கமாக இருந்தது. இவ்வாறு மூதாட்டி ஒருவர் இப்பிரதேசத்தில் ஒருநாள் குழை அறுத்தார். அப்போது கொக்கியில் கட்டியிருந்த கத்தியானது கட்டுத் தளர்ந்து களன்று நிலத்தில் வீழ்ந்தது. இதனால் திகைப்புற்ற மூதாட்டி மற்றொரு புறத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனை அழைத்து பற்றைகளை நீக்கி கீழே விழுந்த தனது கொக்கியை எடுத்துத்தருமாறு கோரியதற்கமைவாக சிறுவன் தனது கையிலிருந்த கத்தியால் பற்றையை வெட்டியபொழுது ‘கணார்’ என்ற சத்தம் கேட்டது. அத்துடன் அவனது கையும் வெட்டுப்பட்டு கத்தியும் உடைந்துவிட்டது. இதன் காரணமாக அப்பற்றையை மேலும் வெட்டிப் பார்த்தனர். அங்கு பிள்ளையார் சிலை ஒன்று தென்பட்டது. இச்சிலையில் தழும்பு ஒன்றும் இருந்தது. இதனைத்தொடர்ந்து அக்காணியின் உரிமையாளரான வேலப்ப முதலியாரிடம் சென்று முறையிட்டனர். முதலியாரும் ஏனையோரும் அவ்விடம் சென்று பார்வையிட்டபோது தென்பட்ட பிள்ளையார் சிலையைப்பார்த்து புளகாங்கிதமடைந்த முதலியார் அவ்விடத்தில் விநாயகருக்கு கொட்டில் அமைத்து வழிபாடாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இவ்வாறு அமைக்கப்பட்ட சிறிய கோயிலே காலப்பிரமாணத்தில் முன்னோக்கி விரிவடைந்து இன்று மூன்று வீதிகளைக்கொண்ட பெரிய கோயிலாகக் காட்சி தருகின்றது. ஆரம்பத்தில் கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் சிலை தம்பமரத்தில் வைத்து வழிபடப்பட்டு வருகின்றது.
குழைவெட்டிய பொழுது பிள்ளையாரின் அருளால் சிறுவனின் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கைதறி என்னும் பெயர் இவ்வூருக்கு உருவாகியது. காலப்போக்கில் இப்பெயர் மருவி கைதடி என அழைக்கப்படலாயிற்று. இவ்வாறே கைதறி வீரகத்தி விநாயகர் ஆலயம் தற்பொழுது கைதடி வீரகத்தி விநாயகர் ஆலயம் என அழைக்கப்பட்டடு வருகின்றது.
காலப்போக்கில் இவ்வாலயத்திற்கான நித்திய, நைமித்திய பூசைகள் நடத்தப்பெறுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. முதன்முதலாக 1889ஆம் அண்டு வருடாந்த மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. சித்திரைப் பூரணை தினமன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்து நாள் திருவிழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு பத்தாம் நாள் தேர்த்திருவிழாவும் அதேநாளில் மாலை தீர்த்தோற்சவமும் நடபெற்று வந்தது. பின்னர் பன்னிரண்டு நாள் கொண்ட திருவிழாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மிகச்சிறந்த தெய்வீகச் சூழலில் அமைந்துள்ள இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம், சித்தர்களின் வருகை, அவர்களின் சமாதி என்பன இவ்வாலயத்தில் அமைந்திருப்பதும் ஆலயச்சூழலில் ஓங்கி வளர்ந்திருக்கும் ஆல், அரசு. மா, பலா, தெங்கு. பனை, மருது ஆகிய மரங்களும் நன்னீர் ஊற்றுத்தீர்த்தக்கிணறும் வாய்க்கப்பெற்ற திருத்தலமாகும்.
யாழ்ப்பாணம் கடையிற் சுவாமி, செல்லப்பாச்சுவாமி, யோகர் சுவாமி, நயினாதீவுச் சுவாமி, மார்க்கண்டு சுவாமி, இலண்டன் சுவாமி ஆகியோரின் வருகையும் ஆலயத்தின் மேற்கு வீதியில் மார்க்கண்டு சுவாமிகள் சிறுகுடில் அமைத்து ஆச்சிரம வாழ்வு வாழ்ந்ததும் இவ்வாலயம் பெற்ற சிறப்புமிகு கொடைகளாகும்.
இவ்வாலயத்தின் புனருத்தாரண வேலைகளுக்காக பாலஸ்தானம் செய்யப்பட்டு வருடாந்த மஹோற்சவம் இடைநிறுத்தப்பட்டு முதலாவது புனருத்தாரன மஹாகும்பாபிஷேகம் 1916ஆம் ஆண்டு ஆனி மாதம் 16ஆம் திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகோற்சவப்பெருவிழா நடைபெற்றது. கொடியேற்றத் திருவிழாவினை கைதடி கிழக்கைச் சேர்ந்த சடையர் தாமோதரம் அவர்கள் செய்வதற்கு இணங்கி அவரது சந்ததியினரே தொடர்ந்து செய்து வருகின்றனர். தேர்த்திருவிழாவிற்கான உபயத்தினை ஏற்றுக்கொண்ட மண்டலநாயகம் முத்துக்குமாரசுவாமி முதலியார் மணியகாரன் அவர்கள் ஏற்று அத்திருவிழாவிற் கான புதிய சித்திரத்தேரை அவரே செய்வித்துதவியதுடன் அவருக்குப் பின்னர் அவரது சந்ததியினரே தொடர்ந்து செய்து வருகின்றனர். அவ்வாறே கைதடி வடக்கைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் தீர்த்த மடமும் தீர்;த்தக்கிணறும் அமைத்துக்கொடுத்து தீர்த்தோற்சவத்தினையும் உபயமாக செய்து அவரின் சந்ததியினர் தொடர்ந்து வருகின்றனர்.
1943 ஆனி மாதம், 1958 ஜூன் மாதம் ஆகிய இரு ஆண்டுகளிலும் 1978 வைகாசி 6இலிலும் பின்னர் 2016இலிலும் இவ்வாலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தகைய செயற்பாடுகளின் தொடராக 1974ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்று வேலைகளின்பொருட்டு திருப்பணிச் சபையொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆலய மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு இவ்வாலயத்தின் பரம்பரை முகாமை அங்கத்தவர்கள் உள்ளிட்ட மஹோற்சவ உபயகாரர்கள், திருப்பணிச் சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரிலிருந்து உறுப்பினர்களத் தெரிவுசெய்து 25 உறுப்பினர்களைக் கொண்ட ஆலய பரிபாலன சபை 1976ஆம் ஆண்டு சித்திரை மாதம் 5ஆம் திகதி உருவாக்கப்பட்டது.
நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை
ஆலயத்தின் அசைவுள்ள. அசைவற்ற சொத்துக்கள் யாவற்றுக்கும் இராமலிங்கம் சிதம்பரநாதன் பொறுப்பானவர் என்ற வகையாலும் பரம்பரை அங்கத்தவராக இருப்பதனாலும் அவரை தலைவராகக் கொண்டு பதினைந்து உறுப்பினர்களடங்கிய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஒன்று 1982-10-09ஆம் நாள் உருவாக்கப்பட்டது.
கோயில் நிர்வாகத்தினை நம்பிக்கைப் பொறுப்பாளர் பரிபாலன சபை பொறுப்பேற்றதன் பின்னர் அம்பாள் சந்நிதிக்குரிய மூலமூர்த்தி, பிள்ளையார் உற்சவ மூர்த்தி, நவக்கிரக கருங்கல் விக்கிரகங்கள் என்பன பரிபாலிக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு புனருத்தாவபன மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1993இல் இந்தியாவிலிருந்து தருவித்த சிவன் உற்சவ மூர்த்திக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.