அறிமுகம் ஆயிரம் சபாஸ்களை அள்ளிக் கொண்ட ஒப்பற்ற முதுபெரும் கலைஞனாகவும், ஆயிரம் பிறை கண்ட தேய்மானமில்லாத அதீத மனோதர்ம இசை வள்ளலாகவும,; வாயெல்லாம் இசையாக, வாழ்வெல்லாம் வரமாக கோயிலெல்லாம் பண்ணாக கோடி புண்ணியம் சேர்த்த அற்புதக் கலைஞன். இசைமணி, கலாபூஷணம், காணாம்ருதபூஷணம், கலைஞானகேசரியாய் ஞானப்பழத்தைப் பிழிந்த வேந்தன் கொல்லங்கலட்டி வல்லிபுரம் செல்லத்துரை என்றால் மிகையில்லை.
“ஞானப் பழத்தை பிழிந்து’ என்ற பாடலுடன் பலருக்கும் அறிமுகமான இசைமணி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் மாருதப்புரவீகவல்லி என்னும் இளவரசியின் குதிரைமுகம் நீங்கிய மாவையம்பதி; தெல்லியூரின் கொல்லங்கலட்டி என்னும் வனப்பு வாய்ந்த கிராமத்தில் வல்லிபுரம் இலட்சுமி தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வனாய் 1935-05-27ஆம் நாள் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று சாதாரண தரம் சித்தியடைந்த மகாஜனன் ஆவார்.
சிறுவயதிலிருந்தே இசையில் மனதைப் பறிகொடுத்த இவர் பலருடைய இசைக் கச்சேரிகளை கேட்டு கூர்ந்து கவனித்துப் பாடிப்பழகி தன்னை ஓர் இயல்இசை வாரிதியாக உருவாக்கினார். இவர் கலைப்பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து உருவானவர். பாட்டனார் அவர்கள் வாழபீமன் நாடகத்தில் வீமனாக நடித்துப் புகழ் பெற்றவர். தாயாரின் தகப்பனார் இராம நாடகத்தில் இலட்சுமணனாக பாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்றவர். இத்தகைய கலைப்பாரம்பரியம் இசைமணி அவர்களுக்கு இயல்பாகவே கலைத்துறையில் ஈடுபாட்டினை வளர்த்ததெனலாம். தாய்வழிப்பேரனாலும் தந்தைவழிப் பேரனாலும் ஆசீர்வதிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டவர்.
1979-12-05ஆம் நாள் திருமணம் என்னும் இல்லற பந்தத்தில் இணைந்து கொண்டார். அச்சுவேலியைச் சேர்ந்த சாம்பசிவம் சின்னம்மா தம்பதியரின் சிரேஸ்ட புத்திரியான புவனேஸ்வரி என்னும் பெயருடையாளை மணந்து அச்சுவேலியில் வாழ்ந்து வந்தார்.
இசையுலகில் இசைமணி செல்லத்துரை அவர்கள்.
பாடசாலைக் காலங்களில் நடைபெறுகின்ற கலைப்போட்டிகளில் தவறாது பங்கு கொள்ளும் இசைமணி அவர்கள் ஒளவையார் திரைப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடி நடித்த “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்னும் தனிப்பாடல் கொண்ட இசைத் தட்டைக் கேட்டு தனது கேள்வி ஞானத்தினாலும் லயித்து அப்பாடலை ஐந்தரைக் கட்டை சுருதியில் பாடிப் பழகி இசை நுணுக்கங்கள், சங்கதி நுணுக்கங்கள் வழுவாது இல்லங்களுக்களுக்கிடையிலான இசைப்போட்டியில் பாடினார். இப்போட்டியின் நடுவர் பணிக்காக வருகை தந்திருந்த மாவையம்பதி நாதஸ்வர மேதை உருத்திராபதி அவர்கள் இசைமணி அவர்களை இசை பயில்வதற்காக தன்னிடம் வருமாறு அழைத்தார். அதற்கு செவிசாய்த்த இசைமணி அவர்கள் உருத்திராபதி அவர்களை தனது ஆரம்ப குருவாக ஏற்று இசைப் பயிற்சிகளை மேற்கொண்டதுடன் அவரது புதல்விகளான திருமதி இ.சிங்கராஜா, திருமதி த.குமாரசுந்தரம் ஆகியோரிடம் இசை பயின்று வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரமான ஆறந்தரப் பரீட்iசியில் சித்தியெய்தி மேற்படிப்பை தன்குருவின் ஆசியோடு ஆரம்பித்தார்.
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் இவரது தேவாரப் பண்ணிசைகளில் மூழ்கிய ஆசிரியர் குழாம் இவர் இந்தியா சென்று இசைபயின்று வந்தால் இலங்கையில் பல இசைக் கலைஞர்களை உருவாக்கி பாடசாலைகளில் இசைக்கலையைப் போதிப்பதற்கு வழி பிறக்கும் என எண்ணினர். அதுவும் விரைவாக நடந்தேறியது. பெற்றோரின் ஆசியோடு 1959, 1960 காலப்பகுதியில் இந்தியா சென்று தென் இந்திய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பயில்வை ஆரம்பிப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வில் இவரது கேள்விஞானமும், சுருதிலய ஞானமும். அட்சர சுத்தமான ஸ்வரஞானம். பிசிறல் இல்லாத சங்கதிக ளும் ‘இசைமணி’ என்னும் ஒருவருட சிறப்புக்கற்கைக்காக தெரிவு செய்யப்பட் டார். தமிழ், தெலுங்கு உருப்படிகளில் அதீத தேர்ச்சி பெற்ற இவர் ரீ.கே.ரங்காச்சாரி யார், எம்.எம்.தண்டபாணிதேசிகர், ரீ.என்.சிவசுப்பிரமணியபிள்ளை, எஸ்.வேணு கோபாலஐயர், எம்.பி.வஜ்ரவேல்ஐயர், எஸ்.இராயகோபாலபிள்ளை, எம்.ஏ.கல்யாண கிருஸ்ணபாகவதர், மகாராஜபுரம் சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை. ராமதாஸ்ராவ், சீ.வி.வீருசாமிப்பிள்ளை. ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் இசை பயிலும் அரிய வாய்ப்பினைப் பெற்றார். பேராசிரியர் எம்.எம்.தண்டபாணி தேசிகர், பேராசிரியர் ரங்காச்சாரியார் ஆகியோரின் மனங்கவர் மாணவனாகத் இந்தியாவில் திகழ்ந்தார். 1961ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்பரீட்சையில் அடானா, பேகட, ஸகானா, நாட்டைக்குறிஞ்சி, ஸாவேரி, பைரவி, ஆனந்தபைரவி, இராகங்களை அநாயாசமாக பாடியதனைக் கண்டு மெய்சிலிர்த்த பரீட்சகர் முடிகொண்டான் வெங்கட்ரமண ஐயர் இசைமணி அவர்களை வெகுவாகப் பாராட்டினார். அடதாளவர்ணம், சௌக்ககால உருப்படி, பேகட இராகம், உருப்படி, நிரவல், கற்பனாஸ்திரம் விஸ்தாரமாகப் பாடி நாட்டைக்குறிஞ்சி இராகத்தில் அமைந்த இராகம், தாளம், பல்லவியை திரிகாலப்படுத்தி இராகமாலிகா கற்பானாஸ்வரங்கள் பாடி அனுலோம பிரதிலோம சம்பிரதாயங்களை விளக்கம் செய்து நிறைவில் பதம் ஜாவளி, தில்லானா, சுருட்டி ராக மங்களம் ஆகியன பரீட்சைக்கு உன்னதமாக அமைந்ததனால் இமைணி இறுதிப் பரீட்சையில் முதலாம் பிரிவில் தேர்ச்சி பெற்றார். 1961ஆம் ஆண்டு இசைமணி என்னும் பட்டத்தினைப் பெற்று தாயகம் மீண்டு வந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் தனது இசை அரங்கேற்றத்தினை நடத்தினார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பிரதம சிவாச்சாரியார் து.துரைச்சாமிக்குருக்கள், ஈழத்தில் புகழ்பூத்த நாதஸ்வர, தவில் வித்துவான்கள், யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த பாடகர்கள், பின்னணி இசைக்கலைஞர்கள், இரசிகப் பெருமக்கள்; முன்னிலையில் மிகப்பெரும் வித்துவான்களான பிரம்மஸ்ரீ சோமஸ்கந்த சர்மா வயிலின் இசைக்க, ஏ.எஸ்.இராமநாதன் மிருதங்கம் வாhசிக்க, நாச்சிமார் கோயில் கணேஸ் கடத்தினையும், தவில் மேதை தெட்சனாமூர்த்தி கெஞ்சிராவினையும், மல்லாகம் ராஜூ முகர்சிங்கினையும், சகோதரி சறோஜா தம்புராவினையும் இசைக்க இசைமணி அவர்களது இசை அரங்கேற்றம் சிறப்பக நடந்தேறியது.
கர்நாடக சங்கீதத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகிய பஞ்சரத்தினம் அனைத்தையும் உரிய பொருள் நயத்தோடு மிகவும் லாவகமாகப் படவல்லவராக விளங்கியவர். நாட்டை. கொள்ளை, ஆரபி, ஸ்ரீராகம, வராளி ஆகிய பஞ்ச ரத்தினங்களை கற்றுக்கொடுப்பதில் வித்துவான்கள் சிரமங்களை எதிர்கொள் வார்கள்;. ஆனால் இசைமணி அவர்கள் வராளி இராக “கனகனருசி” என்னும் பஞ்சரத்தினத்தை முழுமையாகவும் மிகச் சிறப்பாகவும் இலங்கையில் கற்றுக்கொடுத்த வித்துவான் ஆவார்.
கே.பி.சுந்தராம்பாள் அவர்களால் பாடப்பட்ட ‘ஞானப் பழத்தைப் பிழிந்து” என்ற பாடலை அதே இராகத்தில், அதே ரசனையோடு, அதே பாவத்தொடு இராகங்கள் பிசகாமல் இசைமணி அவர்கள் பாடினார். புகழின் உச்சிக்குச் சென்றார். இவருடன் வயலின் வித்துவான்களான உ.இராதாக்கிருஸ்னன், சர்வேஸ்வரசரமா, சோமஸ்கந்தசர்மா, வெங்கடேஸ்வரசர்மா, விநாயகமூர்த்தி. சுpத்திவிநாயகம், சண்முகானந்தம், பிச்சையப்பா, குமாரசாமி, தனதேவி சுப்பையா, ஞானாம்பிகை பத்மசிகாமணி, பாக்கியலட்சுமி நடராசா, கேசவன் ஜெயராமன் ஆகியவர்களும் இவரது அரங்கினைச் சிறப்பித்த லய வாத்தியக் கலைஞர்களான ஏ.எஸ்.இராம நாதன், வி.அம்பலவாணர், ப.சின்னராசா, ஐ.சிவபாதம், எம்.என்.செல்லத்துரை, கணேசசர்மா, மகேந்திரன், சிதம்பரநாதன், சங்கரசிவம், வரதராஜசர்மா, சோமஸ்கந்தசர்மா, கண்ணதாசன், துரைராஜா, சண்முகம்பிள்ளை, இரத்தினம், பாக்கியநாதன், ஜெயசுந்தரம், பாலச்சந்திரசர்மா, முருகையா, தபோதநாயகம், ராசு ஜம்புநாதன், வேணிலான் ஆகியவர்களும் இசைமணி அவர்களுக்குப் பக்கபலமாக நின்று பெருமை சேர்த்தார்கள்.
மாவையம்பதியில் முருகனின் ஆசியோடு தொடங்க இசை வாழ்வு கொழம்பு மாநகரம் வரை ஒலித்தது. பன்னாலை, விழிசிட்டி. கருகம்பானை. கீரிமலை. தெல்லிப்பளை, அளவெட்டி, இணுவில், கோண்டாவில், மானிப்பாய், பொன்னாலை, நல்லூர், யாழ்ப்பாணம், நயினாதீவு போன்ற யாழ்ப்பாணத்தின் பட்டிதொட்டி களெல்லாம் இசையால் அலங்கரித்து மலையகம், கிழக்கு மாகாணம் என நாடு பூராவும் வலம் வந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைமணி பட்டப்படிப்பை மேற்கொண்ட காலத்தில் திரு இராசையா, எம்.எம்.தண்டபாணிதேசிகர், பேராசிரியர் ரீ.கே.ரங்காச்சாரியார், திருப்பாம்புரம் திரு என்.சிவசுப்பிரமணியபிள்ளை, மன்னார்குடி இராஜகோபாலபிள்ளை, ஆகிய இசை விற்பன்னர்களிடம் இசை உருப்படிகளை சிறப்பாகக் கற்றுக்கொண்டார். தேவார பண்ணிசையின் பண்வகைகளை ஓதுவார் சுப்பிரமணியஐயரிடம் கற்றுத்தேறினார்.
இசைத்துறை ஆசிரியராக 1971ஆம் ஆண்டு நியமனம் பெற்று தனது முதலாவது ஆசிரியப்பணியினை கண்டி தலாத்து ஓயா மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்தார். பின்னர் இந்து உயர்தர வித்தியாலயத்திலும், கலைமகள் வித்தியாலயத்திலும் கற்பித்து அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலயத்தில் கற்பித்து ஓய்வு பெற்றவர். யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும் யாழ்ப்பாணப் பல்ககை;கழக இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றித்தன் குரலாலும் இசை ஆளுமையாலும் பல மாணவர்களை ஆற்றலுடையோராய் வளர்த்தெடுத்தார்.
பெற்ற விருதுகள்.
இசைமணி அவர்கள் கலையாற்றலைப்போற்றி பல்வேறு நிறுவனங்களும், இசைச் சமூகத்தினரும் பாராட்டியதுமட்டுமன்றி உயரிய கௌரவங்களையம் வழங்கினர். குறிப்பாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள திணைக்களம் ஆளுநர் விருதினையும், கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும் வழங்கி நாட்டின் கலைஞர்களுக்கான உயர் கௌரவத்தினை ஏற்படுத்தியது. அதேபோல வலிகாமம் வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை கலைச்சுடர் என்ற விருதினை வழங்கியது. இவற்றினை விட திருவாசகமணி, ஞானப்பழவேந்தன், கலைஞானகேசரி, கானாம்ருதபூஷணம், தேவாரத்திருமுறை ஓதுவார்மணி, தேனிசைவாரிதி, பஞ்சரத்தினகலாஞானி என பல்வேறு விருதுகளும் பட்டங்களும் பாராட்டுக்களும் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டவர்.
பல்வேறு இசைப்புலமையாளர்களை உருவாக்கி இசையுலகில் தனக்கென்றதான தோர் இடத்தினை வகித்து எம்நெஞ்சங்களிலெல்லாம் குடிகொண்டிருக்கும் இசைமணி அவர்கள் 2020-04-21ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
நன்றி: இசைஆரம். இசையாசிரியர் அமரர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டது.
இசைமணி அவர்களின் தரவுகளை வழிப்படுத்தியவர் ஆசிரியை ஜெயக்குமாரி அவர்கள்.