Thursday, July 25

கருமத்திருதி வைத்திய கலாநிதி லயன் வைத்திலிங்கம் தியாகராசா

0

அறிமுகம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வளம் நிறை பூமிகளில் வலிகாமம் கிழக்குப் பிரதேசமும் ஒன்றாகும். வடக்கே வல்லையையும் தெற்கே நல்லூரையும், கிழக்கே தென்மராட்சியையும் மேற்கே வலிகாமம் தென்மேற்கினையும் எல்லைகளாகக் கொண்டு விளங்கும் செம்மண்பூமி. பாரம்பரிய விவசாய பூமியாக  – கொடைவள்ளல்களும் தர்மவான்களும் சிந்தனைச் சிற்பிகளும் வாழ்ந்த பூமியாகத் திகழ்கின்றது. இத்துணை சிறப்பு வாய்ந்த வலிகாமம் கிழக்கு என்னும் பிரதேசத்தில் கோப்பாய் என்ற கிராமத்தில் வந்துதித்தவர்தான் எங்கள் கருமத்திருதி சர்வதேச லயன்ஸ் கழகங்களின் நூற்றாண்டு ஆளுநர் வைத்திலிங்கம் தியாகராசா அவர்கள்.

வைத்தியராக தொழிலை ஆரம்பித்த இவர் கோப்பாய் லயன்ஸ் கழகத்தில் சாதாரண உறுப்பினராக இணைந்து மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் கொள்கைக்கமைவாககடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டார் என்ற உயரிய சிந்தனைச் சீண்டலின் பெறுபேறாய் தன் மகத்தான சேவைகளின் வழி உயர்பதவிகளை அடைந்தவர். கலைகளையும் கலைஞர் களையும் எம் சமூகத்தையும் நேசித்துக் கொண்டிருக்கும் இவர் இன்றும் பொதுச்சேவையே தனது மூச்சாய்க் கொண்டு வாழும் மாண்புறு சேவையாள னாம் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் தியாகராசா அவர்களின் ஆளுமைத்திறனை பதிவிடுவதில் பெருமையடைகின்றோம்.

வலிகாமம் கிழக்கு இருபாலை, கோப்பாய் என்னும் கிராமத்தில் சுப்பர் வைத்திலிங்கம் வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனாய் 1946-04-14ஆம் நாள் பிறந்தவர். இருபாலை கோப்பாய் என்ற கிராமத்தில் பிறந்திருந்தாலும் அவர் தந்தையாருடன் கொழும்பில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்ததனால் தனது ஆரம்பக் கல்வியினை தெமட்ட கொடை சென்.மத்திய கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியினை பொரளை யில் அமைந்துள்ள வெஸ்லிக் கல்லூரியிலும் கற்றுக்கொண்டிருந்தவேளை 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பாதுகாப்புத்தேடி யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்தார். இக்காலத்தில் தனது உயர் கல்வியினை யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கற்று வைத்தியத்துறையில் கல்வி கற்பதற்காக கொழும்பு மருத்துவபீடத்திற்குத் தெரிவானார். கொழும்பு மருத்துவ பீடத்தில் கற்று வைத்தியராக வெளியேறியதிலிருந்து தனது வைத்திய முறையினை கைவிடாது சேவையாற்றி வருகின்றார்.

வைத்தியராக தொழிலை ஆரம்பித்த கருமத்திருதி அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலம் தனது சேவையினை வழங்கினார். 1967 தொடக்கம் 1976 வரை பூண்டுலோயா அரசினர் பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திலும், 1976 தொடக்கம் 1983 வரை மத்தேரட்ட ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை வைத்தியசாலையிலும் கடமையாற்றினார்.

1972-11-23ஆம் நாளில் இல்லறம் என்னும் நல்லறத்தில் இணைந்து கொண்;டார். மலேசியாவில் நீதிமன்றச் செயலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த குமாரசாமி இராசம்மா தம்பதியரின் புத்திரியான இரஞ்சிதமலர் என்னும் மங்கையை கரம்பற்றினார். இதன் பயனாக மூன்று பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களை பண்பாட்டில் மிகுந்த உணர்வுடையோராய்கல்வியில் சிறந்து விளங்கி தொழில்வாண்மையாளர் களாக வளர்த்தெடுத்து வாழ்க்கையில் உயர வைத்து ஒரு தந்தையின் கடமையை இனிதே நிறைவேற்றி பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்கின்றார்.

சமூகசேவையின் திருப்புமுனையாக                                                  வைத்திய கலாநிதி வை.தியாகராசா அவர்கள்.

கொழும்பில் கல்வி கற்ற காலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இவர் யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் வைத்தியராக கடமையாற்றிய காலத்தில் அதாவது 1983இல் ஏற்றப்பட்ட இனக்கலவரத்தில் உயிர் தப்பி தொழிலிழந்து யாழ்ப் பாணம் வருகை தந்தார். இவ்வாறான சம்பவங்களில் நேரடியாகத் தாக்கப்பட்டார். இதனால் பெரும் துன்பங்களைச் சந்தித்தார். பாதிப்பினால் துன்பப்பட்ட மக்களை சந்தித்தார். இதன் பயனாக மனதாபிமானமிக்க சமூகசேவையிலும் மக்களுக்குத் தொண்டாற்றும் பணியிலும் ஈடுபடும் மனநிலை உருவானது. இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களை நேரில் பார்த்தவராகவும் அதனால் பாரியள வில் பாதிக்கப்பட்டவராகவும் வைத்திய கலாநிதி அவர்கள் விளங்குகின்றார். இதன் தாக்கமும் துயரமும் பாதிப்புகளும் அதிகளவில் மக்களை எதிர்கொண்டதனால் அத்தகைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கல்விக்கும் நலிவுற்ற மக்களுக்கும் சேவையாற்றும் மனோதிடத்தினை தன்னுள் உருவாக்கி மாபெரும் சமூக சேவையாளனாக முகிழ்த்தெழுந்தார். இக்காலத்தில் தான் தனியார் வைத்தியசாலையாக தனது வைத்தியத் தொழிலை ஆரம்பித்தார். 1967ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வைத்தியராக பணியாற்றி வருவதடன் நோயாளிகளின் கைராசி வைத்தியர் எனப் பெயரும் பெற்றவர்.

சமுக சேவையின் ஆரம்பமாக கோப்பாய் பிரிவில் செயற்பட்டு வந்த லயன்ஸ் கழகத்தில் சாதாரண உறுப்பினராக இணைந்து கொண்டார். சக உறுப்பினர்களுடன் இணைந்து ஆரம்ப காலங்களில் மூக்குக் கண்ணாடி வழங்குதல், இலவச கண் பரிசோதனை, சிரமதானப்பணிகள், கலை இலக்கிய முயற்சியாளருக்கு உதவுதல் என தனது பணிகளை விஸ்தரித்துக் கொண்டார். சிரமம் பாராமல், காலம் நேரம் பாராமல் சமூகப்பணிகளுக் காகவே தனது நேரத்தினை அர்ப்பணித்தார்இதன் பயன் அவரை கோப்பாய் வாழ் மக்கள் கருமத்திருதி எனப் போற்றி மகிழ்ந்தனர். படிப்படியாக லயன்ஸ் கழகத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் பெரியவராக சமூகம் உருவாக்கியது. 2017இல் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டு விழா ஆளுநராக (306 டீ1)ப் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத் தக்கது.

பொது நிறுவனப் பணிகளில் வைத்திய கலாநிதியின் வகிபாகம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பொறுப்புகளை நிறைவேற்றம் குழுக்களில் ஒருவராக இணைந்து தனது பெறுமதியான ஆலோசனைகளையும் நிதியையும் வழங்கி வழிப்படுத்துகின்றமை மனங்கொள்ளத்தக்கது. அந்தவகையில் தலைவராக, போஷகராக, உப தலைவராக, உறுப்பினராகப் பதவிகளை வகித்து குறித்த நிறுவனங்களின் அபிவிருத்தி மேம்பாட்டில் தனது வகிபாகத்தினை செவ்வனே நிறைவேற்றுபவர். ஐவத்தியராக பணியாற்றும் இவர் கல்விக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர். இலங்கையில் ஆசிரியர் களைப் பயிற்றுவிப்பதற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளை உருவாக்கிய வேளை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியவர்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியிற் கல்லூரியின் ஆரம்பம் முதல் அதன் தொடர்ச்சியான வளர்ச்சியில் பங்கெடுத்தவர் லயன் வை.தியாகராசா அவர்கள் என்றால் அதனை எவரும் மறுக்க மாட்டார்கள். தேசிய கலவியியற் கல்லூரியின் முதலாவது பீடாதிபதி திருவாளர் கமலநாதனவர்கள் இன்றும் நன்றியோடு நினைவு கூரும் ஒருவராக கருமத்திருதி அவர்கள் நிலை பெற்றுள்ளார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தற்காலிகமாக அலுவலகப்பணிகளை ஆரம்பித்ததிலிருந்து நிரந்தரக் கட்டடங்கள் அமைப்பது வரையில் கல்லூரி நிர்வாகத்தினருள் ஒருவர் போல் பணியாற்றினார். காணி பெற்றுக்கொத்தமை, ஆரம்;பப் பணிகளுக்கான தளபாடங்கள், நிதிவசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், இடர்கால முகாமைத் துவ ஆலோசனைகள் வழங்குதல் என அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்கெடுத்து யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி  இன்றைய வளர்ச்சி நிலையடைந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பணிகளில் இணைந்து செயற்பட்ட லயன் வை.தியாகராசா அவர்கள்  ஒருபோதும் இதை நான் தான் செய்தேன் என்று கூறி இறுமாப்புடன் முன்னுக்கு வந்து நிற்காது அழைத்தால் மட்டும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்கும் சுபாவமுடையவர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆலோசனைச் சபை சிரேஸ்ட ஆலோசகராக பணியாற்றுகின்றார்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளை விதந்து போற்றி நன்றி பாராட்டியுள்ளனர். கல்லூரிச் சமூகம் அவருக்கு பாராட்டு விழாவொன்றினை ஏற்பாடு செய்து அவ்விழாவில் செய்யும் கருமங்களில் உறுதியாகத் தொழிற்படுபவர் என்னும் பொருள் பொதிந்த கருமத்திருதி என்ற பட்டத்தினை மனதார வழங்கியதோடு கல்லூரியின் நூல்நிலையத்திற்கு கருமத்திருதி லயன் டாக்டர் வை.தியாகராசா படிப்பகம் என்று பெயர்சூட்டி  அவரின் பண்பினையும் மகத்தான மக்கள் சேவையினையும் மாண்புறச் செய்து மகிழ்ந்தனர்.

தன்சேவை வழங்கிய வழங்கி வரும் நிறுவனங்கள்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஆலோசனைச் சபை சிரேஸ்ட உறுப்பினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்.

யாழ்ப்பாணப்பெட்டகம்நிழலுருக்கலைக்கூட மதியுரைஞர் மூதவை உறுப்பினர்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ்hணக கிளை தலைவர் – 1995-2000

யாழ்ப்பாணம் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிய தலைவர்.

கோப்பாய் கல்வி அபிவிருத்திச் சபைத் தலைவர்.

பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் தலைவர்.

சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்கமான மக்கள் குழுவின் உப தலைவர்.

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பழைய மாணவர் சங்க போஷகர்.

கோப்பாய் மகா வித்தியாலயம் போஷகர்.

கோப்பாய் கல்வி அபிவிருத்திச் சபை போஷகர்.

நல்லூர் சங்கிலியன் மன்றம் போஷகர்.

இருபாலை பாரதி கலா மன்றம் போஷகர்.

இருபாலை வன்னியசிங்கம் சனசமூக நிலையம் போஷகர்.

பாராட்டும் விருதும்

கருமத்திருதி       – யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிச் சமூகம்.

கோவைக்குரிசில்   – லயன்ஸ் கழக மாவட்ட உப ஆளுநராகத் தெரிவு செய்யப்பட்டபோது

 கோப்பாய் மக்களால் பாராட்டி வழங்கப்பட்டது.

லயன் வைத்திய கலாநிதி வை.தியாகராசா அவர்களது சேவையினை விதந்து போற்றும் கருமத்திருதி என்னும் வாழ்க்கை நயப்பு நூலை அறிஞர்களும் பொதுமக்களும், கல்விமான்ளும் இணைந்து வெளியிட்டு மகத்தான சேவையாளனை பெருமைப்படுத்தியுள்ளனர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!