Thursday, July 25

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்.(தமிழ் விக்கிபீடியா மூலவர்)

0

அறிமுகம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் மையப்பகுதியாகிய யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்பது யாழ்ப்பாணப் பண்பாட்டிருப்பின் மையமாகவும் கலை, இலக்கியங்களின் கருவூல மையமாகவும் திகழ்ந்த பூமியாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணிலிருந்து இரத்தினவேலுப்பிள்ளை, தங்கலட்சுமி தம்பதிகளுக்கு மூத்த மகனாக மயூரநாதன் 1952 செப்டெம்பர் 07 ஆம் நாள் பிறந்தார். தனது பாடசாலைக் கல்வி முழுவதையும் கல்வியுலகில் மிகச்சிறந்த வித்வான்கள் கற்பித்த வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் பெற்றுக்கொள்வதற்காக 1956 ஆம் ஆண்டு இணைந்து கொண்ட மயூரநாதன் அவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்காக எதிர்பார்த்துக் காத்திருந்த இடைக்காலத்தில் ஓராண்டு காலம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கணித விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார். 1976 ஆம்; ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பெத்த வளாகம் என அழைக்கப்பட்ட தற்போதைய மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலைத் துறையில் பட்டதாரி மாணவனாக தன்னை இணைத்துக் கொண்டார். இவர் பட்டப்படிப்பிற்காக சென்றவேளை கட்டுப்பெத்த வளாகம் என இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கி இறுதியாண்டில் மொறட்டுவப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டு  கட்டடக் கலைத்துறையில் விஞ்ஞானமாணி உருவாக்கற் சூழல் B. Sc. (BE) என்னும்  இளநிலைப் பட்டதாரியாக வெளியேறினார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலைத்தறையில் முதுநிலைப் பட்டப்படிப் பினை மேற்கொண்டு முதுநிலை விஞ்ஞானமாணி M.Sc. (Arch) உயர்பட்டத் தினைப் பெற்றுக் கொண்டார். இத்தகுதி நிலையில் மயூரநாதன் அவர்கள் தன்னை இலங்கைக் கட்டடக் கலைஞர் சங்கத்திலும், பிரித்தானியக் கட்டடக்கலைஞர் களுக்கான அரச சங்கத்திலும் உறுப்பினராக இணைந்தார்.

இவர் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் 17 ஆண்டுகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 23 ஆண்டுகளுமாக மொத்தம் 40 ஆண்டுகள் கட்டடக்கலைத் துறையில் பணிபுரிந்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் முழுநேரக் கட்டடக்கலைஞர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிய மயூரநாதன், பல்வேறு சமூக நோக்கங்கொண்ட அமைப்புகளுடன் தன்னார்வலராக இணைந்து பணியாற்றி வருகின்றார்.

1984 ஆம் ஆண்டு  இணுவிலைச் சேர்ந்; திருநாவுக்கரசு தம்பதிகளின் புத்திரியான உயிரியல் பட்டதாரி ஆசிரியை பாமதி அவர்களை தனது வாழ்க்கைத் துணைவியாகக் கரம்பற்றிக் கொண்டார். இல்லறமாம் நல்லறத்தில் இவர்களுக்கு இரண்டு பெண் மக்கட்செல்வங்கள் உள்ளனர். இவர்களியுவரையும் கல்வியில், தொழிலில் சிறப்புற வாழ வைத்த மயூரநாதனவர்கள் சமூக சேவையில் ஈடுபட்டு தன்னடக்கத்துடன் வாழ்ந்து வருகின்றார்.

கட்டடக்கலைத்துறையில் மயூரநாதன்.

அனுபவமும் முதிர்ச்சியும் மரபும் பண்பாடும் இணைந்து கட்டடக் கலைத்துறையில் கட்டடக்கலை நிபுணராக ஆலோசகராக செயலாற்றும் ஒருவராக ஏம்மத்தியில் வாழும் கட்டடக்கலை ஆளுமையாளனாகத் திகழ்வது எம் மண் பெற்ற பேறாகும்.

தமிழ் விக்கிபீடியாவின் மூலவராக மயூரநாதன்

ஆங்கில மொழிப்புலமையுடைய இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்த காலத்தில், இன்று பிரபலமாக விளங்கும் விக்கிப் பீடியா இணையவழிப் பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டம் ஆங்கிலத்தில் உருவாகியிருந்தது. விக்கிப்பீடியாவின் ஆற்றலையும் அதன் சமூகப் பயன்பாட்டின் முக்கியத்துவத் தினையும் உணர்ந்த மயூரநாதனவர்கள்  தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் அதன் முக்கியத்துவத்தையும் பயனபாட்டினையும் ஏற்படுத்த வேண்டு மென தன்னுள் நினைத்து அதற்கான திட்டமிடலில் இறங்கினார். இதற்காக அவர்  2002 ஆம் ஆண்டில், விக்கிப்பீடியாவை இயக்கும் விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் தமிழில் விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கு வேண்டிய ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுத்தார். அதன் முதல் பங்களிப்பாளரான மயூரநாதன், புதிய பங்களிப்பாளர்கள் இணையும் வரை, ஏறத்தாழ ஒராண்டு காலம் தனியாளாகத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக உழைத்தார். 2002 ஆம் ஆண்டிலிருந்து மூன்று மாதங்கள் தனியாக தமிழ் விக்கிப்பீடியாவின் மென்பொருள் தமிழில் இயங்குவதற்குத் தேவையான தமிழ்ப்படுத்தல்களைச் செய்வதிலும் அடிப்படையான பக்கங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டார். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை சிறிதும் பெரிதுமான ஏறத்தாழ ஐயாயிரம் கட்டுரைகளை இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளார். இன்று பல நூறு பங்களிப்பாளர் களையும் இலட்சத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா சிறப்பாக இயங்கி வருகின்றது.

மரபுரிமைக் காவலனாக மயூரநான்.

இலங்கைத் தமிழரின் மரபுரிமைகள் தொடர்பில், சிறப்பாக மரபுவழிக் கட்டடக்கலை தொடர்பில், ஆர்வம் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தின் மரபுவழிக் கட்டடங்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டு பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் இவர் எழுதிய கட்டுரைகள் பத்திரிகைகளிலும் இதழ்களி லும் வெளிவந்துள்ளன. யாழ்ப்பாண நகரத்தின் பௌதீக வரலாறு குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப் பட்ட தொடர் கட்டுரை வார இதழ் ஒன்றில் வெளியானது. மேலும் யாழ்ப்பாண கட்டடக்கலை தொடர்பாக தன்னால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள், தரவுகள் என்பவற்றினை அனைவருக் கும் பகிரும் வகையில் இணையத்தளம் ஒன்றினையும் உருவாக்கி செயற்படுத் தினார். யாழ்ப்பாண நகரின் நானூறு வருடங்கள் கொண்ட வரலாற்றினை மரபு சார்ந்த நிலையில் நூலாக்கம் செய்துள்ளார். இந்நூலாக்கம் இன்னமும் அச்சு வடிவம் பெறவில்லை. வுpரைவில் அச்சுவடிவம் பெற்று அனைவருக்கும் பயனளிப்பதற்கு எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்புரிவார் என நம்புகின்றோம்.

மயூரநாதன் எழுதிய கட்டுரைகள்

 1. “Understanding the Architectural Traditions of Jaffna,” The Sri Lanka Architect, Journal of the Sri Lanka Institute of Architects, Sep 2002-Feb 2003 Vol. 104, No. 1.
 2. “இலங்கைத் தமிழர் மரபுவழிச் சூழல்களும் அவற்றை ஆவணப்படுத்தலும்,” தமிழ் ஆவண மாநாடு 2013 – ஆய்வுக் கட்டுரைக் கோவை, நூலக நிறுவனம், 2014, பக். 49-60.
 3. சமூக, பொருளாதார, இயங்கியல் நோக்கில் யாழ்ப்பாணத்து வீடுகள், ழகரம், ஏடு 5 (ஆனி 2016), பக் 56-61.
 4. “அழிந்துவரும் பொருட்பண்பாட்டுக் கூறுகளும், தேவையான நடவடிக்கை களும்,” உதயன் (சூரியகாந்தி), 2017
 5. 400 ஆவது ஆண்டு நிறைவு: யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றுச் சுவடுகள் (தொடர் கட்டுரை), தீபம் 17-5-2020 – 26-11-2020, (22 கட்டுரைகள்)
 6. யாழ்ப்பாணத்து வீடுகளில் முற்றமும் பண்பாடும், மலேசியாவில் இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
 7. “யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகளின் மூலம் – சில கருத்துக்கள்,” மணற்கேணி, இதழ் 50, சிறப்பு மலர் 2021, பக். 270-282.
 8. “மரபுரிமை அழிப்பின் தொடர் வரலாறு – கங்கா சத்திரத்தின் கதை,” உதயன் சஞ்சீவி, சுடர்: 36, கதிர்: 288, (12 செப். 2021), பக். 13.

உரைகள் (பதிப்பிக்கப்படாதவை)

 1. யாழ்ப்பாணத்து வீடுகள்: அறிந்ததும் அறிய வேண்டியதும், 15 ஒக். 2017 அன்று சமகாலக் கலைகளுக்கும் கட்டடக்கலைக்குமான இலங்கை ஆவணக் காப்பகம் நிறுவனத்தில் நிகழ்த்தப்பட்டது.
 2. “Tamil Wikipedia – A Study of Challenges and Potentials in Relation to Socio-Cultural Context of the Tamil Community,” 2010 ஆம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற விக்கிமேனியா மாநாட்டில் நிகழ்த்தப்பட்டது.
 3. “இணையத்தில் தமிழ்வழி அறிவுத் தேட்டம்: விக்கிப்பீடியா தரும் வாய்ப்புகள்,” 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழிணைய மாநாட்டுக் கருத்தரங்கில் ஆற்றிய உரை

மயூரநாதன் கொடுத்த நேர்காணல்கள் (அச்சில் வெளியானவை)

 1. அண்ணா கண்ணன், “தமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் ஒரு இ-நேர்காணல்,” நினைவில் நின்ற நேர்காணல்கள் (சென்னை: திரிசக்தி பதிப்பகம், 2010), பக். 104-119.
 2. தமிழ்மகன், “விக்கிப்பீடியாவில் அசத்தும் தமிழன்,” ஆனந்த விகடன் 16-03-2016, பக். 72-73.
 3. நற்கீரன், “கட்டடக்கலைஞனும் கலைக்களஞ்சியமும்,” காலம் (கனடா), இதழ் 49 (ஏப்ரல் 2016), பக். 84-92.
 4. கணபதி சர்வானந்தா, “இணையத்தில் தமிழுக்கு சாம்ராஜ்யம் தந்த மயூரநாதன்,” தமிழ் முரசு (தமிழன் வாரவெளியீடு) 1-08-2021, பக். 4-5.

வழங்கப்பட்டுள்ள கௌரவங்களும் விருதுகளும்

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காகப் பல விருதுகளும் கௌரவங்களும் தேடிச்சென்றன.  2015 ஆம் ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது மயூரநாதனுக்கு வழங்கப்பட்டது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற அதன் தமிழ் விழா வில் மயூரநாதனை அழைத்து மதிப்பளித்தது. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணி வார இதழான ஆனந்தவிகடன் ஆண்டுதோறும் நடத்தும் நம்பிக்கை விருதுகள் நிகழ்வில், 2016 ஆம் ஆண்டுக்கான “டாப் 10 மனிதர்” களுள் ஒருவராக மயூரநாதனையும் தெரிவு செய்து விருது வழங்கியது. 2019 ஆம் ஆண்டு ஐ.பி.சி தமிழின் தமிழ் ஆளுமைகளுக்கான விருதுகளில் தமிழ் அறிவியலுக்கான விருது திரு. மயூரநாதனுக்கு வழங்கப்பட்டது.

இத்தனை பெலுருமைகளையும் தனதாக்கி மிகவும் எளிமையாக எம்மத்தியில் வாழ்ந்து வரும் மயூரநாதனவர்கள் கட்டடக்கலை ஆளுமைகளில் தமிழ் விக்கிபீடியாவின் உருவாக்க மூலவராக யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்தார். இத்தகைய அறிவியல் ஆளுமையை யளாழ்ப்ப்hணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் ஏற்றிப்போற்றி வணங்குகின்றது.

தனது இல்லத்தில்

கனடா, டொரான்டோவில் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில், மருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களிடமிருந்து மயூரநாதன் இயல்விருது பெறுகிறார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!