அறிமுகம்.
தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெபநேசன் அவர்கள் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதநேயம் கொண்ட மாபெரும் ஆளுமையாளராவார். யாழ்ப்பாண மாவட்டத்தின் நுழைவாயிலாக விளங்கும் சாவகச்சேரி தந்த மனிதருள் மாணிக்கம். ஜெபநேசன் அவர்கள் ஒரு காலத்தில் குழைக்காடு என அழைக்கப்பட்ட தென்மராட்சிப்பதியின் கல்வி மற்றும் தலைமைத்துவத்தில் மேலோங்கியிருந்த குடும்பத்தில் பிறந்தவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் பாண்டித்தியமும் இந்தியிலும், மலையாளத்திலும் ஓரளவு பரீட்சயமுமுடையவர்.
காரைநகரில் வைதீக சைவ சமயக் குடும்பத்தைச் சேர்ந்த இராமுப்பிள்ளை நாராயணபிள்ளை வள்ளியம்மை தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணியம். இவர் சாவகச்சேரி சின்னத்தம்பி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கல்விகற்றபொழுது கிறிஸ்தவராகி நாராயணபிள்ளை சாமுவேல் சுப்பிரமணியம் எனத் தனது பெரை மாற்றியதுடன் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியரான விநாசித்தம்பி அலிஸ் கனகம்மா என்னும் பெண்மணியை திருமணம் செய்து சாவகச்சேரியில் வாழ்ந்து வந்தார். இவர் தனது ஆசிரியத் தொழில் நிமித்தமாக பல்வேறு இடங்களிலும் பணியாற்றி வந்த நிலையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் மெமொறியல் ஆங்கிலப் பாடசாலையில் தாயாரும்; உடுவில் துவிபாஷா பாடசாலையில் தந்தையாரும் கற்பித்து வந்தபோது இவர்கள் மானிப்பாயில் தற்காலிகமாக வாழ்ந்தவேளை 1940-03-28ஆம் நாள் பிறந்தவர் எங்கள் பேராயர் ஜெபநேசன் அவர்கள்.
தனது இரண்டு வயது வரை மானிப்பாயில் வசித்துப் பின்னர் சாவகச்சேரியை நிரந்தர வாழிடமாக அரவணைத்துக் கொண்டார். பிறக்கும் போதே நோயாளியாகப் பிறந்த ஜெபநேசன் அவர்கள் தாயின் உன்னத கவனிப்பாலும்; “இந்தப் பிள்ளை சுகம் பெற்று வாழுமானால் இவனை உமது பணிக்கே விட்டு விடுகிறோம்” என தந்தையாரின் வேண்டுதலினாலும் ஆண்டவரினால் ஜெபநேசன் அவர்கள் குணமாக்கப்பட்டுக் கல்வி மற்றும் இறையியல் கற்கைகளில் மேன்நிலையடைந்து தென்னிந்தியத் திருச்சபையின் பேராயராக உயர்ந்து உன்னதமான ஆன்மிகப் பணி செய்தவர்.
பேராயரவர்கள் தனது ஆரம்பக் கல்வியை 1944ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்ப் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்ட அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் எஸ்.எஸ்.சி வகுப்பு வரை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் கற்று 1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இணைந்து இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் 1959ஆம் ஆண்டு பட்டப்படிப்பிற்காக கலைத்துறையில் தெரிவாகி இணைந்து கொண்டார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மூன்று வருடங்கள் கல்வி கற்றார். பேராயரவர்களது கல்வித்துறை வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய கல்லூரி என வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை பெருமையுடன் கூறிக்கொள்ளும் பேராயர் இங்கு தான் தனது வளர்ச்சிக்கு அத்திவாரமிடப்பட்டது எனவும் ஆங்கிலம், தமிழ், இலக்கியம், கர்னாடக சங்கீதம், நடனம், படப்பிடிப்புக்கலை போன்ற கற்கைகள் தகுந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வழிப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணக்கல்லூரி கலைத்துறை ஆசிரியர்களும் நூல்நிலையப்பொறுப் பானவரான செல்லையா அவர்களும் என்றும் மறக்க முடியாதவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இவர் இதே கல்லூரியின் அதிபராய் அமர்ந்த வரலாறும் நினைவிற் கொள்ளத்தக்கது.
தமிழ், பொருளியல், ஐரோப்பிய வரலாறு ஆகிய பாடங்களைத் தெரிவு செய்து துறைசார்ந்த விற்பன்னர்களைக் குருவாகப் பெற்றுப் பல்கலைக்கழக் கல்வியை நிறைவு செய்தார். அக்காலத் தில் அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலும் நிறைந்த கல்விமான்களிடம்; பாடங்கேட்கும் வாய்ப்புப் பெற்றார். பொருளியல் கற்பிப்பதில் நிபுணரான பேராசிரியர் எச்.ஏ.டீ.ஈ குணசேகரா பேராசிரியர் பாலகிருஸ்னன் ஆகியோரிடமும், ஐரோப்பிய வரலாற்றிற்கு வணபிதா பின்ரோ, இங்கிலாந்தின் வரலாற்றிற்கு திரு ரிக்கிரி அபயசிங்கா, தமிழ்த்துறையில் பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை, பேராசிரியர் வி.செல்வநாயகம், பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் ஆ.சதாசிவம் போன்றவர்களின் வழிப்படுத் தல்கள் கிடைக்கப் பெற்றவர். பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே தான் மதகுருவாக வரவேண்டும் என்ற எண்ணத்தினை மனதில் நிலைநிறுத்தி தன் பயணத்தினை ஆன்மீகப் பாதையில் இட்டுச்சென்றார். பேராதனை பல்கலைக் கழக வழாகத்தில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்துடனும் அங்கு பணியாற்றிய வண சி.எல்.விக்கிரமசிங்க (இவர் தற்போதைய மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமிங்கவின் சித்தப்பா முறையானவர்) அவர்களுடனும் மிக நெருக்க மாகப் பழகினார். அவரை தன் ஆன்மீக வழிகாட்டியாக வரித்துக் கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ மாணவர் இயக்கம், தமிழ்ச் சங்கம் என்பவற்றின் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி புதிய அனுபவங்களைப் பெற்றார். தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த ‘இளங்கதிர்’ சஞ்சிகையின் இதழாசிரியராக 1961ஆம் ஆண்டு பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மொழியில் கல்வி கற்ற மாணவர்கள் பலர் பல்கலைக்குத் தெரிவாகி வருகை தந்தனர். அவர்களுள் பலர் கவிஞர்களாகவும் சிறுகதையாசிரியர்களாகவும் ஆக்க கர்த்தாக்களாகவுமிருந்தனர். செ.யோகநாதன், க.குணராசா, செ.மௌனகுரு, செ.கிர்காம நாதன், ஆர்.இராஜகோபால், வை.கைலாசநாதன், கோபாலகிருஸ்னன் அகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். பேராதனையில் தமிழ்ச் சங்கம் 1961ஆம் ஆண்டு பாரியதொரு கலைவிழாவினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு படைப்பாளிகளிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. பல படைப்பாளி கள், கவிஞர்கள் இவ்விழா மூலம் கலையுலகில் வெளிக்கொணரப்பட்டனர். இதன் முழுவீச்சும் பேராயர் ஜெபநேசன் அவர்களையே சாரும். பட்டப்படிப்பில் சிறப்புக் கலைத்தேர்வில் இணையாது பொதுக்கலைமாணியாக வெளியேறியதனால் தான்பட்ட துன்பங் களை இன்றும் வெளிப்படுத்தி தனக்குப் பல்கலைக்கழகம் வழங்கிய வாய்ப்பினைப் பயன்படுத்த வில்லை என்ற குற்ற உணர்வுடன் திருப்திகொள்ளும் பேராயரவர்கள் தனது வாழ்வை முழுமை ஆக்கியதும் பேராதனைப் பல்கலைக்கழகமென்றே விதந்து பேசுகின்றார். அங்கு தனக்கு கற்பித்த பேராசிரியர்களும் சகபாடிகளான மாணவ மாணவிகளும் தன் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவர்களாக நன்றிகூறி நினைவு கொள்கின்றார். இங்கு கற்றதனால் தான் தனக்கு எங்கு சென்றாலும் எளிமை வாய்க்கப்பெற்றவன், எதனையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடிய வன், நகைச்சுவை மிகுந்தவன் என எல்லோராலும் போற்றப்படும் சிறப்புமிகு விழுமியங்களை பெற்றதாகவும் இப்பண்புகளை போதித்தவர்கள் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் என்று குறிப்பிட்டு பெருமை கொள்ளும் இவர் தன் பல்கலைக் கழக வாழ்க்கை யினை நினைந்து கடவுளுக்கு நன்றிகூறும் பேராயரவர்கள் ஏற்றிப்போற்றப்பட வேண்டியவர்.
பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை நிறைவு செய்த பின்னர் சிறிது காலம் வேலைவாய்ப்பின்றி தத்தளித்துக் கொண்டிருந்த இவருக்கு இலங்கை மத்திய வங்கியின் ஈ.பி.எவ் பிரிவில் பட்டதாரிகளுக்கு நாளாந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. இதன் பொறுப்பாளராகவிருந்த டி.கே. சுப்பிரமணியம் என்பவர் தன்னை சிலகாலம் அலைக்கழித்துப் பின்னர் நாளாந்தப் பணிக்கான நியமனக் கடிதத்தினை வழங்கியதாக குறிப்பிடும் பேராயர் 1962ஆம் ஆண்டு வரை பணியாற்றிய பின்னர் கொம்பனித்தெருவில் மலையாளிகளினால் நடத்தப்பட்டு வந்த பாடசாலையான Anderson College இல் கற்பித்து வரலானார். 1963ஆம் ஆண்டு கண்டியிலுள்ள புனித அந்தோனியார் கல்லூரியில் சிங்கள மற்றும் பறங்கி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்கான தற்காலிக ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களின் பின்னர் அதாவது 1964ஆம் ஆண்டில் இப்பாடசாலை நிர்வாகத்தினரால் நிரந்தர ஆசிரியராக நியமனம் வழங்கப்பட்டது. இங்கு கற்பித்துக்கொண்டிருந்தவேளை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரமாக ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆங்கிலத்துறை நியமனம் வழங்கியது. காலையில் புனித அந்தோனியார் கல்லூரியிலும் மதியத்தின் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் ஆங்கிலம் கற்பிக்கும் வாய்ப் பினைப் பெற்றார். இங்கு பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம், திருமதி பத்தினியம்மா திலகநாயகம்போல் உட்பட பலசிறந்த மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தமை யையிட்டு மிகுந்த மகிழ்ச்சியு டன் வாழ்கின்றார்.
புனித அந்தோனியார் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த காலத்தில் 1967ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கான டிப்ளோமா கற்கை நெறியினைப் பயில்வதற்கு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவேளை தனக்குப் பதிலாக பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களை பதிலாசிரியராக நியமித்து மாணவர்களின் கல்வி பாதிப்படையாதவகையில் தனது டிப்ளோமா கற்கையினை பூர்த்தி செய்து மீளவும் 1968ஆம் ஆண்டு கல்லூரிக்குத் திரும்பி தனது ஆசிரியப் பணியை பொறுப்பேற்றுக் கற்பித்துக்கொண்டிருந்தவேளை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பிப்பதற்கான நியமனம் கிடைத்தது மடடுமல்லாது திருமணமும் நிச்சயமானது. இதனால் இவர் தனது கண்டி வாழ்க்கைக்கு 1968 செப்ரம்பர் மாதம் நான்காம் திகதி முற்றுப் புள்ளி வைத்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
1969 ஓகஸ்ட் 18ஆம் திகதி சுண்டிக்குளியிலுள்ள பரியோவான் தேவாலயத்தில் பேராயரது வாழ்வில் இணையும் திருமணம் என்னும் நலலறம் உதயமானது. யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைச் சேர்ந்த கல்விமானும் அரசியல் செல்வாக்கு மிக்கவருமான ஜே.ஜி.இராஜகுலேந்திரன் செல்வராணி தம்பதிகளின் நான்காவது புத்திரியும் மேலைத்தேய இசையாசிரியையுமான சீத்தா விமலலக்சுமி என்பவரைத் திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளைச் செல்வங்களைப் பெற்றார். பிள்ளைகள் இருவரும் கல்வியில் உயர்ந்து இல்லறத்தில் நல்லறமாய் வாழ்ந்து வருகின்றார்கள். மூத்த மகள் Hyacinth நிர்மலீன் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற் கற்று M.A பட்டம் பெற்றதுடன் மேல்நாட்டு இசையிலும் LTCL என்கின்ற பட்டத்தையும் பெற்றவர். இரண்டாவது மகள் Christene கீதாஞ்சலி பெங்களுர் மவுன்காமல் கல்லூரியிற் படித்து பொருளியலில் B.A பட்டம் பெற்றதுடன் லண்டன் பல்கலைக்கழகத்தில் M.A பட்டமும் பெற்றவர் எனபதும் குறிப்பிடத்தக்கது.
திருமணத்தின் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக 1969-09-04 ஆம் திகதி யாழ்ப்பாணக்கல்லூரி ஆசிரியர் குழாமில் ஒருவராக இணைந்து கொண்டார். தொடர்ந்து கல்வியில் உயர்வடைவதற்கான தனது முயற்சிகளை சற்றும் தளரவிடாத பேராயரவர்கள் தனது மனைவியின் பக்கபலத்தினால் கல்வி மட்டுமல்ல மனிதகுலத்திற்கான வழிகாட்டிப் பாதையிலும் உயர்ந்த உத்தமராக நிமிர்ந்து நிறகின்றார். தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும், சமயத்திலும் என மூன்று M.A பட்டத்தினைப் பெற்றுக் கொண்ட பேராயர் டீ.னு பட்டத்துடன் மிக இளவயதில் கலாநிதிப்பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட பெருமையை தனதாக்கினார். யாழ்ப்பாணக் கல்லூரியிற் கற்பித்த காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வேதனைப்பட்ட பேராயரவர்கள் பேராதனைப் பல்கலைக கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெறுவதற்கான முதுகலைமாணி தகுதிகாண் தேர்விற்காக தன்னை தயார்படுத்தும் நோக்கில் கண்டி சென்று வசிப்பதும் பொழுதைக் கழிப்பதுமாக இருந்தார். இந்நிலையில் வரலாற்றுப் பேராசிரியர்; சி.பத்மநாதனவர்களிடம் ‘யாழ்ப்பாணக் கல்லூரி வாழ்வு எனக்கு நிம்மதியைத் தரவில்லை. கண்டியை விட்டு நீஙகியது பெரிய தவறு’ என்று கவலையுடன் கூறியதாகவும் அதற்குப் பேராசிரியர் சி.பத்மநாதனவர்கள் ‘யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நீ பயந்து ஓடக்கூடாது, முயற்சி செய்து அவர்கள் எல்லோருக்கும் தலைவனாக வரவேண்டும். இப்பொழுது யாழ்ப்பாணக் கல்லூரியை விட்டு நீங்கினால் அது அவர்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாகும்” என்று கூறி தன்னை ஆற்றுப்புட்த்தினார் என்று கூறும் பேராயரவர்கள் பேராசிரியரது வார்த்தைகளின் உண்மையை உணர்ந்து அதனை தன் தலைமேல் நிறுத்தி முன்னேறலானார்.
யாழ்ப்பாணக் கல்லூரியிற் கற்பித்துக்கொண்டிருந்த சம காலத்தில் பெங்களுர் இறையியற் கல்லூரியின் இறையியல் கற்கை வெளிவாரி மாணவனாக பதிவு செய்து கற்று வந்தார். யாழ்ப்பாணக்கல்லூரி அதிபரின் ஒத்துழைப்போடு பரீட்சைகளுக்குத் தோற்றினார். காலப்போக்கில் நேரடி வழிகாட்டலில் இறையியற் கல்வியை கற்க வேண்டுமென்ற எண்ணம் பேராயரது மனதில் தோன்றியது. இவரது தந்தையாரின் எண்ணமும் இதுவாகவே இருந்தது.
இந்தியாவில் இறையியல் படிப்பிற்காகச் சென்றார். 1979ஆம் ஆண்டு இறையியல் படிப்பை முடித்து தாயகம் திரும்பினார். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் பல்கலைக் கழகமாக தரமுயர்த்தப்பட்டிருந்ததுடன் அதன் முதலாவது துணைவேந்தராக பேராசிரியர் சு.வித்தியானந்தனவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இறையியல் படிப்பினைமுடித்து தாயகம் திரும்பியிருந்த பேராயர் ஜெபநேசன் அவர்களை துணைவேந்தர் அணுகி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கிறிஸ்தவ நாகரிகத்துறையின் பணியினை செயற்படுத்தி உதவுமாறு கேட்டதற்கமைவாக தற்காலிக விரிவுரையாளராக இணைந்து கொண்டார். இருந்த போதிலும் யாழ்ப்பாணக கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே இப்பணியைiயும் செய்தார். யாழ்ப்பாணக் கல்லூரியின் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மாணவர்களின் இலக்கிய மன்றங்களாகிய சகோதரத்துவக் கழகம், தமிழ்க் கழகம், கிறீஸ்தவ மாணவர் இயக்கம் ஆகிய மன்றங்களின் போஷகராக நியமிக்கப்பட்ட அதே வேளை கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், பொருளியில், கிறிஸ்தவம் ஆகிய பாடங்களையும் கற்பிக்கலானார். இக்காலத்தில் மிகச் சிறந்த அருளுரையாற்றுபவராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த பேராயரவர்கள் மீது அப்போதிருந்த யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர்சபைத் தலைவர் முன்னாள் பேராயர் அமரர் சபாபதி குலேந்திரன் அவர்களதும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் அமரர் டி.யே. அம்பலவாணர் அவர்களினதும் பார்வைபட்டது. இவர் பின்னாளில் பேராயராவதற்கும் நடமாடும் பல்கலைக்கழகமாக இருப்பதற்கும் இப்பார்வைகளே அடிகோலியது என்றால் மிகையாகாது.
யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகத்திடம் இரண்டு வருட கல்விக்கான அரைச்சம்பள விடுமுறை பெற்று இறையியல் கற்கையினை பல்வேறு இடர்களுக்கும் மத்தியில் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. 1977ஆம் ஆண்டு யூன் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக தமிழ்நாடு இறையியற் கல்லூரிக்குச் சென்றார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் கலாசாரம் என்பவற்றின் மீதிருந்த பற்றும் அபிமானமும் காரணமாக சம காலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்து M.A பட்டத்திற்கான படிப்பினையும் நிறைவு செய்தார்.; மதுரையில் கற்ற காலத்தில் சாலமன் பாப்பையா அவர்களும் தமிழ்க்குடிமகன் அவர்களும் இவருடைய சிறந்த நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். பிள்ளைகள், குடும்பம் ஆகியவற்றின் மீதிருந்த பற்றும் சிறந்த குடும்பத்தலைவன் என்ற உணர்வும் இவரை பெஙகளுர், சென்னை, வட இந்திய மாநிலங்களில் உள்ள இறையியற் கல்லூரிகளில் ஒன்றினைத் தெரிவு செய்யாமல் மதுரையிலுள்ள இறையியற் கல்லூரியினைத் தெரிவு செய்து படிப்பதற்கான மூல காரணமாயிற்று.
யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்திலும் இலங்கைப் பல்ககை;கழகத்திலும் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு புத்தகப்பூச்சியாக இருந்தமையினையிட்டு கவலை கொண்டிருந்த பேராயரவர்கள் தமிழ்நாடு இறையியற் கல்ல}ரியில் ஆடல், பாடல், பேச்சுப்போட்டி, விவாதமேடை, நடிப்பு என்பவற்றில் தன் உச்சத்திறமைகளை வெளிப்படுத்தி கலையுலகிலும் பிரகாசித்தார். 1978இல் மதுரையை அடுத்துள்ள கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தினை அறிவதற்கு இரண்டு நாள் துவிச்சக்கரவண்டிச் சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது. இச் செயற்பாடானது பேராயரது வாழ்வின் உச்ச அனுபவ காலமாகும். இறையியல் கல்லூரியால் தயாரித்த ‘அன்பளிப்பு’ இசை நாடகத்தில் நூற்றுக்கதிபதி என்னும் பாத்திரமேற்று நடித்தார். இக்காலத்தில் யாழ்ப்பாண வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம், தாயரின் இழப்பு ஆகியவற்றால் துயரப்பட்டார். இத்தகைய அனுபவங்களோடு புதிய பாதையில் பயணிக்கும் மனிதனாய் உள்ளொளி பெருகிய ஆளுமையாளனாய் 1979ஆம் ஆண்டு தாயகம் திரும்பி யாழ்ப்பாணக் கல்லூரியில் இணைந்து கொண்டார்.
தனது அறிவையும் ஆற்றலையும் அனுபவங்களையும் பயன்படுத்தி யாழ்ப்பாணக் கல்லூரியை வளர்க்கவேண்டுமென்று நீண்ட காலமாக தன்னுள் புதைத்து வைத்திருந்த சிந்தனைக்கு சுடர்கொடுக்கத் தொடங்கினார். காலம் உருவாகியது. 1986ஆம் ஆண்டு திரு தர்மன் குலத்துங்கம் அவர்களும் சு.ஜெபநேசன் அவர்களும் இணைத்துணை அதிபர்களாக நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாணக் கல்லூரி மரபின் பிரகாரம் துணை அதிபரே அதிபராக தலைமைத்துவமாகுவார். 1988 செப்டெம்பர் பத்தாம் திகதி நடைபெற்ற இயக்குநர் சபைக் கூட்டத்தின் பிரகாரம் ஜெபநேசன் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார்.
அதிபரானதன் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். மாணவர்களின் அப்பியாசக் கொப்பிகளில் ஆசிரியர்கள் திருத்தம் செய்து கையொப்பமிடும் நடைமுறையில் உன்னிப்பாக கவனித்து கல்வித்தரத்தில் மேம்பாட்டினை மேலும் அதிகரிக்கச் செய்தார். மாணவிகளுக்கான சீருடை, கழுத்துப்பட்டி அணியும் முறை, ஆசிரியர்களின் வரவொழுங்கும் கையொப்பமிடும் முறையும் எனப்பல மாற்றங்களை பல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் செயற்படுத்தி கல்லூரியின் சிறப்பிற்கு வெற்றிகண்டார். ஒரு பாடசாலையின் சிறப்பு, கல்வித்துறையில் அது நிகழ்த்தும் சாதனைகளிலேதான் தங்கியிருக்கிறது என்னும் தாரக மந்திரத்தினை மனதிருத்தியவராகச் செயற்பட்டார். இதற்காக அயராது உழைத்தார.; கல்லூரி உயர்வடைந்தது. அரசாங்க அறிவித்தல்கள், போராளிகளின் கடிதங்கள், இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகள் என எல்லாமே யாழ்ப்பாணத்தில் பணியாற் றிய நிர்வாகிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தின. இத்தகைய இறுக்கமான காலகட்டத்தில் பணியாற்றி வெற்றி கண்ட அதிபர்.
யாழ்ப்பாணக் கல்லூரியின் அமெரிக்க அறங்காவற்குழுவினர் 1989ஆம் ஆண்டு வண. போல் கிளேய்ரன் என்பவரை யாழ்ப்பாணக் கல்லூரியின் நிலவரங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவற்காக அனுப்பியிருந்தார்கள். அவர் அமெரிக்கா சென்று ஜெபநேசனவர்களை வானளாவப் புகழ்ந்து பாராட்டியதுடன் சுற்றறிக்கை ஒன்றினையும் கல்லூரியோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தின் பின்னர் ஜெபநேசனவர்களுக்கு பல நன்மையான விடயங்கள் நிகழ ஆரம்பித்தன.
1989ஆம் ஆண்டின் பின்னர் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கான சுற்றுப் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகின. பல மேற்குலக நாடுகளுக்கும் பயணம் செய்தார். புதிய தொடர்பாளர்களையும் புதிய அனுபவங்களையும் பெற்றார்.
யாழ்ப்பாணக் கல்லூரியின் துரித முன்னேற்றத்திலும் கரிசனையாக இருந்தார். தடைப்பட்டிருந்த பட்டதாரிப்பிரிவினை ஆரம்பித்தல், பழைய மாணவர் சங்கங்களைப் பலப்படுத்துதல், யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பப் பிரிவிற்கான புதிய கட்டடங்கள் அமைத்தல் என பல திட்டங்களை நிறைவேற்றுவதில் அயராது உழைத்தார்.
இத்தனை செயற்பாடுகளுக்கும் மத்தியில் இவரை உதவிக்குருவாக அபிஷேகம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் இவருடைய சகோதரன் வைத்திய கலாநிதி ஜெயசீலன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மரணமடைந்தார். இச்செய்தியை ஜெபநேசனவர்களுக்கு தெரியப்படுத்தாது அவருடைய உதவிக்குரு அபிஷேகம் வட்டுக்கோட்டைப் பேராலயத்தில் வண வுழஅ ழுடநைசல அவர்களது பிரசங்கம் முன்னிலையில்; 1989ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியின் கிளைப் பாடசாலை ஆரம்பிக்கும் திட்டத்தினை செயற்படுத்த முனைந்தார். அப்போது தென்னிந்தியத் திருச்சபையின் கிளிநொச்சி மதகுருவாக இருந்த வண.எஸ்.ஜெயநேசன் அவர்கள் இத்திட்டத்திற்கான நிலத்தினை பரநதன் பூநகரி வீதியில்; வாங்கிக் கொடுத்தார். அக்காணியில் அமைக்கப்பட்ட முக்கியமான கட்டடங்களுடன் யாழ்ப்பாணக் கல்லூரி பரந்தன் கிளைப்பாடசாலையானது 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் பரிசளிப்பு விழா முடிவுற்றவுடன் வண கலாநிதி பிரான்சிஸ் தம்பதியினரும் வண கலாநிதி எரிக்காஸ் அவர்களும் இணைந்து சம்பிரதாயமாக கிளைப்பாடசாலையை திறந்து வைத்தனர்.
இந்தியாவிலிருந்த அங்கிலிக்கன் திருச்சபை, மெதடிஸ்ததிருச்சபை, எஸ்.ஐ.யூ.சீ, பிறஸ்பிட்டீரியன் கொங்றிகேஷனல் திருச்சபைகளின் ஐக்கியமாக 1947 செப்டெம்பர் இருபத்தேழாம் திகதி தென்னிந்தியத் திருச்சபை உருவாகியது. இதன் முதலாவது பேராயராக யாழ்ப்பாணத்திலிருந்த எஸ்.ஐ.யூ.சீ திருச்சபை சபாசங்கத்தின் நிறைவேற்று அதிகாரியாகவிருந்த சபாபதி குலேந்திரனவர் கள் யாழ்ப்பாணத்தின் முதலாவது பேராயராக பிரதிஸ்டை செய்யப்பட்டார். இவர் 23 வருடங்கள் பணியாற்றினார். தொடர்ந்து 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1993ஆம் ஆண்டு வரை டீ.ஜே.அம்பலவாணர் அவர்கள் இரண்டாவது பேராயராகப் பணியாற்றினார். மூன்றாவது பேராயராக ஜெபநேசனவர்கள் பணியாற்றுவதற்கு கடவுளின் ஒப்புதல் கிடைத்தது. 1993 இல் யாழ்ப்பாண ஆதீனத்தில் மூன்றாவது பேராயருக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றிபெறும் மூவரது பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு செனட் மகா சபைக்கு அனுப்பப்படும். இங்கு பேராயர் முடிவு செய்யப்படும். இதன் பிரகாரம் நடைபெற்ற தீர்மானங்களில் கலாநிதி சு.ஜெபநேசனவர்கள் மூன்றாவது பேராயராக செனட் மகாசபையால் நியமிக்கப்பட்டார். பேராயருக்கான பிரதிஸ்டை ஆராதனை சென்னை புனிதஜோர்ஜ் தேவாலயத்தில் 1993-05-30ஆம் திகதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் திரும்பிய பேராயரவர்களுக்கு முன்னாள் பேராயர் டீ.ஜே.அம்பலவாணர் அவர்களினால் வட்டுக்கோட்டையிலுள்ள தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனப் பேராலயத்தில் திருநிலைப்படுத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.
பேராயராகப் பதவியேற்றிருந்த போதிலும் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராக தனது கடமைகளை ஆற்றிவநத இவர் மெதுவாக அப்பணியிலிருந்து விலகி பேராயருக்குரிய பணிகளை ஆற்ற முனைந்தார். பேராயர் டீ.ஜே.அம்பலவாணர் அவர்களுடன் கலந்துரையாடி அனைத்துப் பணிகளையும் செயற்படுத்தி வந்தார். இவரிடம் இயல்பாகவே காணப்பட்ட இறையியல் அறிவும், அருளுரை ஆற்றும் திறனும், கடின உழைப்பும், எளிமையான வாழ்வும் பேராயரின் சிறப்பினை மேலும் வலுப்படுத்தின. எவரும் எந்த நேரத்திலும் அணுகக்கூடிய பேராயர் ஜெபநேசன் ஒருவர் தான் என மக்கள் விதந்து பேசுமளவிற்கு அவருடைய தோற்றமும் பணிகளும் அமைந்திருந்தன. அவருடைய வாழ்க்கைத்துணைவியார் பெண்கள் ஐக்கியம். பெண்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் இல்லம், சிறுமியர் இல்லம், பாடகர் பயிற்சி, பான்ட் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு பேராயரவர் களின் பணியை மெருகூட்டினார். பேராயரவர்கள் தனக்கே இயல்பான இறையியற் கல்வி, நூலாக்கம், உதயதாரகை வெளியீடு என்பவற்றில் கவனம் செலுத்தி மன நிறைவைப் பெற்றார். பேராயர் பணியில் ஒய்வு ஒழிச்சலின்றி உழைத்தார். இவர் பேராயராக பணியாற்றிய காலத்தில் பின்வருவோருக்கு குரு அபிஷேகம் செய்து வைத்தார்
வண.கே.எஸ்.ஜேசப். வண.ஈ.என்.லோறன்ஸ், வண.ஜி.நடராஜா, வண.ரீ.ஈ. அசோக்குமார், வண. ஜே.ஜே.தேவருட்செல்வம், வண.டீ.எஸ்.மதியாபரணம், வண.ஜி.டீ.மைனசீலன், வண.ஏ.கே.சுரேந்திரன், வண.போல்சுரேஷ், வண.வீ. பத்மதயாளன், வண.ஜோன்எஸ்.செல்வம், வண.பீ.தேவதாஸ், வண.செபஸ்ரியான் அன்ரனி, வண.இனோக்புனிதராசா. வண.எம்.யூட்சுதர்சன், வண.எஸ். குகனேஸ் வரன், வண.பீ.தேவராசா, வண.ரீ.எஸ்ஜோசுவா, வண.ஜே.அன்ரனிசுதாகர், வண.எஸ். தேவகரன், வண.ஐ.றாஜ்குமார், வண.செல்விடெய்சிஆசீர்வாதம், வண.டீ.எஸ்.சொலமன் ஆகியோரும் உதவிக்குருக்களாக வண.பீ.தேவமித்திரன், வண.அ.சௌந்தராஜன் ஆகியோரும் அபிஷேகம் செய்யப்பட்டு திருச்சபையின் கௌரவத்தினை அதிகரித்தார். குருமார்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற் கும், ஆதீனத்தின் உதவிகளை அதிகரிப்பதற்கும் பெரிதும் பாடுபட்டு வெற்றியும் கண்டார்.
பேராயராகப் பணியாற்றினாலும் கல்விப்பணியில் ஆர்வம் குன்றாத இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, மருதனார்மடம் இறையியற் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் மிகுந்த ஆர்வத்தோடு கல்விப்பணியில் ஈடுபட்டார். கல்யியலாளன் ஒருவன் பேராயராக இருப்பதனை யிட்டு மகிழ்வடைந்த கல்லூரிகள், பாடசாலைகள் தமது முக்கியமான விழாக் களுக்கு பேராயரவர்களை அழைத்துப் பெருமைப்படுத்தினார்கள். கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர்மடம், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி என்பன குறிப்பிடத்தக்கனவாகும். பரிசளிப்பு விழாக்கள் மட்டுமன்றி வேறு பல நிகழ்வுகளிலும் பிரதம விருந்தினராகப் பங்குகொண்டு தனது ஆளுமையினை பங்களித்தார். யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம், யாழ்ப்பாண மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றின் கூட்டங்கள் மாநாடுகளில் பிரதமவிருந்தின ராக கலந்து சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். இவ்வாறு சிறப்புற்ற பணிகளை தனது பேராயர் காலத்தில் ஆற்றி 2005ஆம் ஆண்டு பேராயர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
பல்கலைக்கழகத்தோடு பேராயரவர்கள்.
1969ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தமிழில் முதுகலைமாணி (M.A) பட்டம் பெறுவதற்காக பேராதனைப்பல்கலைக்கழகத்தில் அணுகியபோது முதுகலை மாணி பட்டம் பெறுவதாயின் பேராயரவர்கள் பொதுக்கலை மாணிப்பட்டம் பெற்றிருப்பதனால் முதுகலைமாணிக்கான தகுதிகாண் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமென தெரிவித்தநிலையில் அப்பரீட்சைக்காகத் தன்னை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபடலானார். இப்பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் இறையியல் கற்பதற்காக மதுரைக்குச் சென்றார். 1977 ஜூலையிலிருந்து 1979 ஏப்ரல் வரை மதுரையில் தங்கியிருந்த பேராயரவர்கள் இறையியல் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் நடத்தி வந்த பட்டநெறிக் கற்கைகளில் சமயம், தத்துவம் ஆகிய பாடங்களில் M.A படிப்பினை நிறைவு செய்த சம நேரத்தில் செரம்பூர் பல்கலைக்கழகத்தில் B.D பட்டத்தினையும் பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் M.A பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். 1979ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆ.யு பட்;டத்தினை தொடர்ந்தார். பேராசிரியர் சு.வித்தியானந்தனவர்கள் மேற்பார்வை யாளராக அமைய “அமெரிக்கன்மிஷனும் இலங்கையிலே தமிழ் வளர்ச்சியும்” என்னும் அய்வுப் பொருளில் ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாய்வேட்டினை பின்னர் நூலாக 1983ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் மன்றப் போஷகராக இருந்தமையினால் தமிழ் மன்றம் தயாரித்த ‘கல்லூரி வசந்தத்தில்’ என்னும் படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்து கலைஞனாக தன்னை வெளிப்படுத்தியதுடன் அத்திரைப்படப்தயாரிப்பின் மேற்பார்வையாள ராகவும் பணியாற்றினார்.
இத்தகைய பணிகளுடன் தனது கலாநிதிப்பட்டத்துக்கான பதிவினை மேற் கொண்டிருந்த பேராயரவர்கள் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான முயற்சியிலீடு படலானார். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களது மேற்பார்வையில் ‘வட்டுக்கோட்டைச் செமினரியும் இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியும்’ என்ற ஆய்வுப் பொருளிலான ஆய்வுக்கட்டுரையின் ஆய்வேட்டினை 1986ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். இவ்வாய்வேட்டினை பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை, பொன். பூலோகசிங்கம் ஆகியோர் பரிசீலனை செய்து சில திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்குமாறு தெரிவித்தனர். இவ்வாறு மீளவும் திருத்தங்கள் செய்யப்பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டு 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தினால் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.
1982ஆம் ஆண்டு கீழைத்தேய கல்வி ஆர்வலர் யப்பானிய யொக்கோகொமா பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த அமெரிக்கப்பேராசிரியரான Dr.Richard Fox Young என்பவர் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து 19ஆம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்துக் கண்டன இலக்கியங்கள் தொடர்பில் படிக்கலானார். அதற்கு பேராயரவர்கள் பெருந்துணை புரிந்து வந்துள்ளார். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பேராயரவர்களோடு சேர்ந்து சேகரித்த தகவல்களைக் கொண்டு ஆங்கிலத்தில் The Bible trembled. The Hindu – Christian controversies of Nineteenth Century Ceylon என்னும் நூலை 1985ஆம் ஆண்டு ஆஸ்திரியாவிலுள்ள Institute of Indology Univercity of Vienna என்ற நிறுவனத்தினால் வெளியீடு செய்தார். இந்நூலின் துணை ஆசிரியராக பேராயரவர்களைக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1979ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறீஸ்தவ நாகரிகத்துறையின் பாடவிதானங்களைத் தயாரித்து சமர்ப்பித்தது மட்டுமல்லா மல் அத்துறையில் தற்காலிக விரிவுரையாளராகவும் பணியாற்றி முதலாம், இரண்டாம் வருட கிறீஸ்தவ நாகரிகத்துறை மாணவர்களுக்குப் பொறுப்பாகவும் பணியாற்றினார். 1988 ஒக்டோபர் மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றினார் 1988 ஒக்டோபர் 28ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழப்பாணக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார்.
பேராயர் சு.ஜெபநேசனவர்களை பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களில் ஒருவராக செயற்படுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையினை ஏற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1992ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக செயற்படுவதற்கு நியமனம் வழங்கியது. 2008ஆம் ஆண்டு வரை இவர் பேரவை உறுப்பினராக இருந்து கலைத்துறை விரிவுரையாளர்களது தெரிவுக் குழுவிலும், உயர்படிப்புகள் பீடத்திலும் இதயசுத்தியுடன் பணியாற்றினார்.
பல்கலைக்கழகத் தொடர்புகளும் ஆராய்ச்சி. நூலாக்கம் என்பன இவரது குருதியில் இரண்டறக் கலந்த விடயங்களாகும். அமெரிக்காவிலுள்ள பிறின்ஸ்டன் இறையியற் பள்ளியிலும், அவுஸ்திரேலியாவிலுள்ள பிளின்ரேர்ஸ் பல்கலைக்கழகத்திலும் 2002ஆம் ஆண்டிலும், 2007ஆம் ஆண்டிலும் வருகை அறிஞர் என்னும் தகுதி பெற்ற நிலையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒல்லாந்து தேசத்து லேய்டன் பல்கலைக்கழத்தில் இரண்டு வாரங்கள் ஆய்வு மேற்கொள்வதற் கான வரப்பிரசாதத்தினைப் பெற்றார். உலகின் முக்கியமான பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களுடன் நட்புக்கொண்டிருந்த பேராயரவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஒருவராக திகழ்ந்த இவரை நடமாடும் பல்கலைக்கழகம் எனக்கூறுவதிலும் பார்க்க பல பல்கலைக்கழகங்களிலும் நடமாடி தன்பாதங்களைப் பதித்து அறிவின் பரிபூரணன் ஆக முகிழ்த்தெழுந்தவர் எனக்குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
நூலாக்கப்பணிகள்.
யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபரானதன் பின்னர் பேராயர் “சபாபதி குலேந்திரன் வாழ்க்கை வரலாறு”, “வணக்கத்திற்குரிய டானியல் பூவர்” என்னும் இரு நூல்களை வெளியிட்ட இவர் பேராயரான பின்னர் “யாழ்ப்பாணத்துக் கிறீஸ்தவக் கவிஞர்களும் கீர்த்தனைகளும்” “பழையதும் புதியதும்” “நினைத்துப் பார்க்கின்றேன்” என்னும் நூல்களை வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் கிறீஸ்தவத்திற்கெதிராக எழுந்த கண்டன இலக்கியங்கள் தொடர்பில் அமெரிக்கப் பேராசிரியரான Dr.Richard Fox Young என்பவருடன் இணைந்து துணை ஆசிரியராக The Bible trembled. The Hindu – Christian controversies of Nineteenth Century Ceylonஎன்னும் நூலை 1985ஆம் ஆண்டு ஆஸ்திரியாவிலுள்ள Institute of Indology Univercity of Vienna என்ற நிறுவனத்தினால் வெளியீடு செய்தார். இவற்றினைவிட பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடான ‘இளங்கதிர்’சஞ்சிகையின் ஆசிரியராக 1961ஆம் ஆண்டிலும் ;யாழ்ப்பாணக் கல்லூரி, தமிழ்த்துறை வெளியிட்டு வந்த ‘இளஞாயிறு’ சஞ்சிகையின் ஆலோசகராகவும் ‘மிசலினி’ என்னும் யாழ்ப்பாணக் கல்லூரி ஆண்டு மலரின் ஆசிரியராகவும் செயற்பட்ட இவர் “அமெரிக்கன்மிஷனும் இலங்கையிலே தமிழ் வளர்ச்சியும்” என்ற தனது முதுகலைமாணி ஆய்வேட்டினை 1983ஆம் ஆண்டிலும் ‘வட்டுக்கோட்டைச் செமினரியும் இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியும்’ என்ற கலாநிதிப்பட்ட ஆய்வேட்டினை ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் நூலாக வெளியிட்டார். எல்லாவற்றிற்கும்மேலாக தொடரும் ஆன்மீக கல்விசார் பயணம் என்னும் வாழ்க்கை வரலாற்று நூலொன்றினை மிக அற்புதமாக எழுதி எமக்களித்துள்ளார். இந்நூலானது மிகவும் எழிய நடையில் அதாவது பேராயர் எவ்வாறு மேடையில் கருத்துரைப்பாரோ அத்தகைய பாணியில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலானது பேராயரவர்களது வாழ்க்கை வரலாற்றினை மட்டும் எமக்குத் தரவில்லை. ஒவ்வொரு தலைப்புகளிலும் அந்தந்க் காலத்துத் தகவல்களையும் விடயங்களையும் பண்பாட்டுச் சூழல்களையும் இணைத்துப் பதிவு செய்திருப்பது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஒரு இனத்தினுடைய குறிப்பிட்ட காலத்து வாழ்வியலை வரலாற்றுப் பாதையில் தன் வாழ்க்கை வரலாற்றோடு இணைத்துப் பதிவு செய்திருப்பதானது எமக்கும் அடுத்த சந்ததிக்கும் கிடைத்த பொக்கிஷமாகும். மொழிநடை, வரலாறு சொல்லும்பாங்கு, வரலாற்றை வழிநடத்தும் ஒழுங்கு என்பன நூலை வாசிக்கும் வாசகர்களது மனக்கண்ணில் படிமங்களை தோற்றுவித்து மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண் டும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்நூலை அனைவரும் வாசித்தறிய வேண்டும். மேலும் ‘கண்டதும் கேட்டதும்’, ‘ஆங்கில இலக்கிய வரலாறு’ என்னும் தமிழில் எழுதப்பட்ட நூலும் இவரது அறிவின் அறுவடைகளாகும்.
அமெரிக்கன் இலங்கைமிஷன் திருச்சபைச் செயற்பாடுகளுக்காக அமெரிக் காவிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்து வாழ்ந்து அரும்பெரும் பணியாற்றிய மாபெரும் சேவையாளர்களது வரலாற்றினை தனக்கேயுரித்தான மொழிநடையில் “அnமிரிக்காவிலிருந்து பாய்ந்து வந்த அன்பு வெள்ளம்” என்னும் நூலினை ஆங்கிலத்திலும் தமிழிலும் சமநேரத்தில் nவிளியிட்டு இந்நூலினூடாக அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பேராயர் பணியிலிருந்து 2005ஆம் ஆண்டு ஓய்வு பெறவேண்டும். தென்னிந்திய திருச்சபை சட்டத்தின் பிரகாரம் ஓய்வு பெறும் தினத்திற்கு ஆறு மாதங்கள் முன்னதாக ஓய்வை அறிவிக்க வேண்டும். அதன்பிரகாரம் செயற்பட்ட பேராயர் ஜெபநேசனவர்கள் 2005 பங்குனி மாதம் 21ஆம் திகதி வட்டுக்கோட்டை பேராயர் இல்லத்திலிருந்து நீங்கி இணுவிலில் இளைப்பாறுகின்ற பேராயருக்கு வழங்கப்பட்ட இல்லத்தில் குடியேறினார். தொடர்ந்து யாழ்மண்ணில் வாழ்ந்து பேராயர் பணிக்கப்பால் இம் மண்ணிற்கு பல சேவைகளை ஆற்றிவருகின்றார்.
விருதுகளும் கௌரவங்களும்.
இவரின் சாதனைப் பயணத்தில் விருதுகளும் கௌரவங்களும் மேன்மையடை கின்றன. அந்த வகையில் இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் 2016ஆம் ஆண்டு இலக்கியத்திற்குரிய உயர் விருதான வாழ்நாட்சாதனையாளர் சாகித்திய ரத்னா என்னும் விருதினை வழங்கி கௌரவித்துள்ளனர். 2012 இல் சென்னைப் பாரதியார் சங்கமும் கொழும்பு தமிழ்ச் சங்கமும் இணைந்து கொழும்பு நகரில் நடத்திய பாரதியார் விழாவில் பாரதியார் விருது லழங்கி கௌரவித்தனர். 2011 இல் மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையம் வழங்கிய கலையருவி விருது, 2006இல் கொழும்பு கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி கௌரவ விருது, தமிழ்நாடு கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தமைக்கான நினைவுப் பரிசில் மாண்புமிகு தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது. கே. டானியல் எழுதிய கானல் என்னும் நாவலை ஆசையபந என்ற தலைப்பில் அங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சிறந்த நாவல் மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய மண்டல விருது வழங்கப்பட்டது.
வாழ்வில் வெற்றியினையும், தோல்வியினையும், ஏமாற்றத்தினையும் மாறிமாறிச் சந்தித்த பேராயரவர்கள் மனித வாழ்க்கை என்னும் கலையில் தேறினார். பன்முக அனுபவங்களை தனதாக்கினார். தான் கடந்து வந்த பாதையில் அனுபவரீதியாக கடவுள் நம்பிக்கை, வாழ்க்கைத் தத்துவம், புலனடக்கம், வாய்மை, சிக்கனம், நகைச்சுவையுணர்வு என்பன வாய்க்கப்பெற்று பேராளுமையாளனாக வாழ்ந்து யாழ் மண்ணை நேசித்து எம்மை வழிநடத்துகின்றார். அவருடைய பணிகளையும் ஆளுமையினையும் ஏற்றிப்போற்றி யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக் கூடம் தலைவணங்குகின்றது.
இக் கட்டுரைக்காக ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் பேராயர் வண.சு.ஜெபநேசன் அவர்களுக்கும் அவரது வாழ்க்கைத்துணை திருமதி ஜெபநேசன் அவர்களுக்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி வழிப்படுத்திய போதகர் அருட்பணி தேவகுணானந் தன் அவர்களுக்கும், பேராயரவர்களால் எழுதப்பட்ட “தொடரும் ஆன்மீக கல்விசார் பயணம்” (வாழ்க்கை வரலாறு) என்னும் நூலிற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.