Saturday, February 1

வண.லீவை ஸ்போல்டிங்

0

1820ஆம் ஆண்டு அமெரிக்க இலங்கை மிஷனின் இரண்டாவது அணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இந்த அணியிலே நான்கு தம்பதியினர் இருந்தனர். வண.லீவை ஸ்போல்டிங் திருமதி மேரி ஸ்போல்டிங், வண.ஹென்றி வூட்வேட், திருமதி லிபியா வூட்வேட், டாக்டர் ஜோன் ஸ்காடர், திருமதி ஹரியற் ஸ்காடர், வண.மைரன் உவின்சிலோ, திருமதி ஹரியற் உவின்சிலோ என்பவர்களே அவர்களாவர்.

யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இவ்வணியைச் சேர்ந்த வண.வூட்வேட் தம்பதியினர் மானிப்பாயிலும் டாக்டர் ஸ்காடர் தம்பதியினர் பண்டத்தரிப்பிலும் வண.உவின்சிலோ தம்பதியினர் உடுவிலிலும் வண.லீவை ஸ்போல்டிங் தம்பதியினர் உடுவிலிலும் பணியாற்றத் தொடங்கினார்கள். வண.லீவை ஸ்போடிங் கல்வியிலே மிகச் சிறந்து விளங்கியவர் கேணல் (ஊயசநெட) பல்கலைக்கழகத்தில் கற்று அப்பல்கலைக்கழகத்து ஆ.யு பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்றவர். 1833இல் உடுவிற் பெண் பாடசாலை அதிபராக இருந்த திருமதி ஹரியட் உவின்சிலோ இறந்தபோது இவருடைய மனைவி மேரி அக்கல்லூரியினை நடத்தி வந்தார். 1844இல் ஸ்போல்டிங் தம்பதியினர் அமெரிக்கா சென்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சுவிஷேச பணிகளைப்பற்றி சொற்பொழிவுகள் ஆற்றினர்.

லீவை ஸ்போல்டிங் அமெரிக்க மிஷனில் மட்டுமன்றி யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து இயக்கம் முழுவதிலுமே பெருமதிப்புப் பெற்று விளங்கினர்.வேதாகம சங்கத்தில் யாழ்ப்பாணக் கிளைக்கு இவர் தலைவராக விளங்கி கிறிஸ்தவ வேதாகமம் தமிழிலே வெளியிடப் படுவதற்கு பெருந்தொண்டாற்றினார். அகராதிப் பணியில் இவர் ஆற்றிய தொண்டு இன்று வரை போற்றப்பட்டு வருகின்றது. மேநாட்டு மதத் தொண்டர்களுக்கு தமிழ் சொற்களுக்கு விளக்கம் கூறும் அகராதிகள் அவசியம் தேவைப்பட்டன. தமிழ் மக்கள் நிகண்டுகள் மூலமாகவே சொற்களின் பொருளை அகர வரிசைப்படுத்தி பொருள் கூறுவது அவசியமாக இருந்தது. இந்தப் பணியில் முதன் முதலாக ஈடுபட்டவர் நல்லூரில் பணியாற்றிய அங்கிலிக்கன் மதத் தொண்டராகிய ஜோசப் நைற் என்பவராவர். இவர் இங்கிலாந்துக்கு விடுமுறையில் சென்றபோது இறந்து போனபடியால் இந்தப் பணியினைத் தொடர்ந்து முடிக்குமாறு அமெரிக்கன் மிஷன் தொண்டர்கள் கேட்கப்பட்டனர் .இந்தப்பணியினை ஏற்று செய்து முடித்தவர் லீவை ஸ்போல்டிங்கே ஆவார்.

தமிழ் சொற்களுக்கு தமிழிலேயே அருத்தம் கூறும் இந்த அகராதி 1842ஆம் ஆண்டு மானிப்பாயில் இருந்த அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இந்த அகராதி முதலில் கையகராதி என்றும் பின்னர் மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் குறிப்பிடப்பட்டது. லீவை ஸ்போல்டிங் சிறந்த தமிழ் அறிஞராக விளங்கினார். ஜோன் பனியன் ஏழதிய  Pilgra Progess என்ற நூலை பரதேசியின் மோட்ச பிரயாணம் என்னும் பெயருடன் மொழிபெயர்ந்து பதிப்பித்தார் .இந்த மொழிபெயர்ப்பே கிறிஸ்தவக் கம்பர் எனக் கருதப்படும் ர்.யு.கிருஸ்ணப்பிள்ளை “இரட்சண்ய யாத்திரிகம்” என்ற காவியத்தைப் படைப்பதற்கு உந்துதல் அளித்தது. இவர் சிறந்த தமிழ் அறிஞராக விளங்கியமையால் துண்டுப்பிரசுர சங்கத்தாலும் வேதாகம சங்கத்தாலும் வெளியிடப்பட்ட ஆக்கங்களெல்லாம் இவரால் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரேயே பதிப்பிக்கப்பட்டன. இருபதுக்கு மேற்பட்ட தமிழ்ப் பிரசுரங்களின் ஆக்கியோனாகவும் விளங்கிய ஸ்போல்டிங் பல ஆங்கில தோத்திரப் பாடல்களைத் தூய மொழியிலேயே மொழிபெயர்த்துள்ளார் இவருடைய பணி யாழ்ப் பாணத்தில் 52வருட காலம் நீடித்திருந்தது. இவ்வளவு நீண்டகாலம் வேறெந்த அமெரிக்க மிஸன் தொண்டராவது இலங்கையில் பணியாற்றவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது இவர் 1873ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி இவ்வுலக வாழ்வினை நீத்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!