Saturday, April 5

சிவசுப்பிரமணியம்,சின்னத்தம்பி (வைத்திய கலாநிதி)

0

1940-02-11 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மேற்கு, கயந்தப்பை என்னுமிடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1966 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து வைத்தியப் பட்டதாரியாக வெளியேறி தனது முதலாவது சேவையினை யாழ். பொது வைத்தியசாலையில் ஆரம்பித்தார். வைத்திய பயிற்சியின் பின்னர் நிக்கரவெட்டிய, மானிப்பாய், பதுளை ஆகிய இடங்களில் சேவையாற்றினார். யாழ். பொது வைத்தியசாலையில் சேவையாற்றிய பொழுது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று அங்கு காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சையில் டிப்ளோமா பட்டத்தினை 1979 இல் பெற்று நாடு திரும்பிய இவர் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் சேவையாற்றி இறுதியில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1986 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வுபெறும் வரை சத்திர சிகிச்சை நிபுணராக சேவையாற்றினார்.

2011 ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறிய இவர் வைத்தியராவதற்கு முன்பு கதிர்வீச்சு சிகிச்சைத் தொழில் நுட்பவியலாளராக சிலவருடங்கள் பணியாற்றியுள்ளார். இத்துறையில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் தனது சகோதரனாரின் உதவியுடன் க.பொ.த. உயர்தரத்தில் கற்று சித்திபெற்று பேராதனை மருத்துவபீடத்திற்குத் தெரிவானார். ஒரு காலகட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதற்கும் காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணராக இவர் ஒருவரே கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடப்படவேண்டியதொன்றாகும். இவரிடம் வரும் நோயாளர்களை ஆலோசனை கூறி சிகிச்சையளிப்பதில் வல்லவர். மிகவும் நெருக்கடியான காலத்தில் வைத்தியசாலையில் குடிநீரளிப்பதும் கழிவுநீரகற்று வதும் மிகவும் கடினமாக இருந்த நிலையில் இப்பொறுப்பை இவர் ஏற்று மிகவும் திறமையாக செயற்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில் பதில் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். தனது இறுதி நேரம் வரை தன்னை நாடி வந்த நோயாளர்களுக்கு ஆறுதலும், உதவியும், ஆலோசனையும் வழங்கினார். தனது மனதில் தோன்றும் எண்ணத்தை அப்படியே நேருக்கு நேராகச் சொல்லும் சுபாவம் கொண்டவர். 2012-11-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!