Wednesday, April 9

சங்கரசிவம், கந்தையா

0

மிருதங்கவித்துவான் சங்கரசிவம் அவர்கள் இசைக்கலைஞர்கள் செறிந்து வாழும் இணுவையூரில் கந்தையா என்பவரின் புதல்வராக15.60.1939இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை 1944 முதல்க.பொ.த வரையும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 1956 வரை பயின்றார். இதன் பயனாக இவர் ஓர் உதவி ஆசிரியராக1960 ஆம் ஆண்டு அரசாங்கப் பாடசாலையிலும் நியமனம் பெற்றுக்கடமை புரிந்தார். இக்காலத்திலேயே மிருதங்கம் பயிலவும் ஆரம்பித்தார். இவருடைய ஆரம்பக்குரு காலஞ்சென்ற மிருதங்க வித்துவான் திரு. அம்பலவாணர் ஆவார். இவர் பிரத்தியேகமான இப்பயிற்சியைமிருதங்க வித்துவான்களான ப.சின்னராஜா, ஏ.எஸ்.ராமநாதன.; எம்.என்.செல்லத்துரை ஆகியோர்களிடமும் விசேடமாகப் பயின்றார். இது மட்டுமின்றி வாய்ப்பாட்டு இசையினையும் சங்கீதபூஷணம் எஸ்.பாலசிங்கம் அவர்களிடம் பயின்றார்.

திரு.சங்கரசிவத்தின் மிருதங்க அரங்கேற்றம் 1972ஆம் ஆண்டுநடைபெற்றது. இவர் இக்காலங்களிலேயே வட இலங்கை சங்கீதசபைப் பரீட்சைகளுக்கும் தோற்றி 1976 ஆம் ஆண்டு மிருதங்க ஆசிரியர்தராதரம் பெற்றார். தொடர்ந்தும் மிருதங்கக்கலையில் மாணவர்களைத் தயார் செய்வதில் தனக்கென ஒரு முறையை அமைத்துக் கொண்டவர். மேலும் இவர் ஏனைய மிருதங்கக் கலைஞர்களை வயதிற்சிறியோராயிருப்பினும் மதிக்கும் தன்மையுடையவராகவும் இருந்தார். அத்துடன் தனக்கு இக்கலையிலுள்ள சந்தேகங்களையும் ஏனையவர்களுடன் விளங்கிப் புரிந்து கொள்ளும் பண்புடையவர். இவருடைய மிருதங்கவாசிப்பு பாடகர்களுக்கோ, வாத்தியக் கலைஞர்களுக்கோ இடையூறு இன்றியதாக இருக்கும். இவர் மற்றக் கலைஞர்களுடன் பழகும் விதமும் மிகுதியான பண்புடையது.

இவர் கலைச்சேவை பெரும்பாலும் வட இலங்கை சங்கிதசபையின் மிருதங்கப் பரீட்சைகளுக்கு மிகுதியாகப் பயன்பட்டது. 1977 தொடக்கம் 1988 வரை செயன்முறை பரீட்சகராகவும் வினாப்பத்திரத் தயாரிப்பாளராகவும் மீளாய்வுக் குழுவினராகவும் பலகொண்டவர். இவரது கலைத்தொண்டில் விசேடமானது 1979 ஆம்ஆண்டு “மிருதங்ககருக்க விளக்கம் என்னும் நூல் வெளியிடபட்டமையாகும். மிருதங்க சங்கீதத்திற்கான நூல்கள் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி வெளியிடப்பட்டது குறைவு. இந்நிலையிலும் இவருடைய மிருதங்க சுருக்க விளக்கம் என்னும் சிறிய நூலானது வெளியிடப்பட்டது நல்ல அம்சமாகும்.

 இவருடைய கலைச்சேவை வாழ்க்கையானது துரதிஸ்டவசமாக நீடித்து விளங்காது போயிற்று. திடீரென இவருக்கு ஏற்பட்ட ஜுரம் இவரை இசையுலகிலிலிருந்து 17.05.1988 அன்று நள்ளிரவே நிலையுலகிற்கு பிரித்துச் சென்றது. கலையுலகில் பெயர் நிறுத்திய சங்கரசிவத்தின் நல்ல அம்சங்கள் என்றும் வாழக்கூடியன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!