Friday, April 19

உலகப் பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள், கலைஞர்களிடையே நடத்தும் ‘யாழ்தாரகை’ விருதிற்கான கலை ஆக்கத்திறன் வெளிப்பாட்டுப்போட்டிகள் – 2023

 

யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மரபுரிமைச் சொத்துக்களின் ஆவணப்படுத்துதலையும் பாதுகாத்தலையும் நோக்கமாகக் கொண்டு இத்துறையில் ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள் ஒன்றிணைந்து ‘யாழ்ப்பாண வாழ்வும் வளமும் சார்ந்த நூற்றாண்டுப் புலமைகளின் தேடல்களை ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கும் தன்னார்வ அமைப்பாக’ செயற்பட்டு வருகின்றது. புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் எமது உறவுகளுக்கும் தாயகத்தில் வாழ்ந்து வருகின்ற உறவுகளுக்கும் இடையில் பாரிய பண்பாட்டிடைவெளி ஏற்பட்டு வருகின்றது. இத்தகைய சந்ததி இடைவெளியினை இவ்வாறான போட்டிகள், விழாக்கள் ஊடாக உறவுப்பாலத்தினை ஏற்படுத்தி சந்ததி இடைவெளிகளின் நீட்சியினை குறைப்பதற்கு உதவமுடியும் என்ற நம்பிக்கையில் இப்போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கொவிட் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னரும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்வியல் அழுத்தம் காரணமாகவும் மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அழுத்த நிலைகளிலிருந்து விடுவித்தலும், அவர்களை இவ்வாறான நிகழ்வுகளினூடாக ஆற்றுப்படுத்துவதற்காகவும் இத்தகைய விழாக்கள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். எமது இளைய தலைமுறையினர், மாணவர்கள் என அனைவரும் நவீனம், உலகமயமாதல் என்னும் சிந்தனைகளுக்காட்பட்டு எமது பண்பாட்டையும் மரபையும் மறந்தவர்களாக – மறக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில துரதிஸ்டவசமாக தீயபழக்க வழக்கங்களும் நடவடிக்கைகளும் எம்மை ஆட்கொண்டு அதலபாதாழத்தில் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தில் ஏங்கிக்கொண்டிருக்கும் எம் சமூகத்தினை கலைகளினூடாக வழிப்படுத்த வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு. ‘வான்புகழ்கொண்ட தமிழ்ப் பண்பாடே நின்னைப் போற்றுவோம்’ கலையால் உலகை ஆழலாம் கலைகள் மனித சமூகத்தை ஒன்றிணைக்கும். கலைகள் மனித மனத்தைப் பண்படுத்தும். ஆற்றுப்படுத்தும். வழிப்படுத்தும். மிகச்சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும். ஆற்றல்மிகு ஆளுமையாளர்களாக உருவாக்கும். எனவே பண்பாடும் மரபும் மனித சமூகத்தை பண்படுத்தும் என்ற உயரிய நோக்கில் உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு “பண்பாட்டுமரபு பேணி மாண்புறு சமூகமாய் மீண்டெழுவோம் வாரீர்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடம் 2023ஆம் ஆண்டு வைகாசி மாதம் இருபத்தோராம் திகதி (2023-05-21) முப்பெருந்தமிழ் விழாவொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இவ் விழாவினை முன்னிட்டு பின்வரும் போட்டிகளை நடத்தி ‘யாழ்தாரகை’ விருது வழங்கி கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

போட்டி விபரங்களும் போட்டிக்கான பொது நிபந்தனைகளும் வருமாறு :-

போட்டி விபரங்கள் :-

  • 1) பேச்சு.(பாடசாலை மாணவர்கள்,திறந்தபோட்டி)
  • 3) சிறுவர்களுக்கான கதை சொல்லல்.
  • 5) சிறுகதையாக்கம்.
  • 7) ஓராள் அரங்கு.
  • 9) தனிநடனம்.
  11) கவிதை எழதுதல்.
  • 2) கையெழுத்துச் சஞ்சிகை.
  • 4) நாடகப் பிரதியாக்கம்.
  • 6) ஓவியம்,
  • 8) தனிப்பாடல்.
  • 10) மேடை நாடகம் – திறந்த போட்டி.
  12) அறிவிப்பாளன்.
  பொது நிபந்தனைகள் :-
  • தாயகம் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க் கலைஞர்கள், கலைமன்ற உறுப்பினர் கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் யாவும் 2023-02-28ஆம் நாளுக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும். விண்ணப்படிவம் மற்றும் விதிமுறைகளடங்கிய சுற்றறிக்கையினை எமது இணையவழி அருங்காட்சியகமான treasurehouseofjaffna.com என்னும் தளத்தில் பார்வையிட அல்லது தரவிறக்கம் செய்ய முடியும்.
  • விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து தமது நிறுவனத் தலைவரின் அல்லது மன்றத் தலைவரின் அல்லது செயலாளர், பாடசாலை அதிபரின் சிபார்சுடன் 118661005995 இலக்க திருநெல்வேலி சம்பத் வங்கிக் கணக்கில் Director, Treasure House of Jaffna- Image Gallery என்னும் பெயரில் போட்டிக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சிட்டையினை இணைத்து aruldcokili@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலமாக அல்லது எமது 0777743240,0764669188, 0770088501 WhatsApp இலக்கத்தினூடாக விண்ணப்பங்களை தெளிவாகச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வழிகளில் சமர்ப்பிக்க முடியாதோர் போட்டிச்செயலாளர், திருமதி றஜனிநரேந்திரா, கலாசாரஉத்தியோகத்தர், பிரதேசசெயலகம், வலிகாமம்மேற்கு, சண்டிலிப்பாய் என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும்.
  • பிந்திக் கிடைக்கும் விண்ணப்பங்களும் பொறுப்பானவர்களால் உறுதிப்படுத்தப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் கலைஞர்கள், மாணவர்கள் மட்டும் கலைமன்றங்களினூடாக விண்ணப்பிக்க முடியாத சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட விண்ணப்பங்களை இங்கு குறிப்பிட்ட விதிமுறைகளில் அனுப்பி வைக்க முடியும்.
  • ஒரு போட்டியாளர் அனைத்துப் போட்டிகளிலும் பங்குகொள்ளமுடியும். குழுப்போட்டியாயின் குழுவின் சார்பில் ஒருவர் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும். குழுப்போட்டி தவிர்ந்த பங்குகொள்ள விரும்பும் அனைத்துப் போட்டிகளுக்கும் விண்ணப்பதாரர் தனித்தனி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதுடன் மேலதிகமான ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • போட்டிகளிற்கான பதிவுக்கட்டணமாக தாயகத்திலிருக்கும் விண்ணப்பதாரிகள் ரூபா இருநூறு (200/-) விண்ணப்பத்துடன் செலுத்துதல் வேண்டும். பாடசாலை மாணவர்கள் மட்டும் ரூபா நூறு (100/-) விண்ணப்பத்துடன் பதிவக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். உலகெங்கும் போட்டியாளர்கள் விண்ணப்பிக்கும் பொழுது அவர்களுடன் மெய்நிகர் செயலி மூலம் அல்லது போட்டியாளர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கேற்ப போட்டிகள் செயற்படுத்தப்படும். இவர்கள் போட்டிக்கான பதிவுக் கட்டணமாக போட்டியாளர்கள் வாழும் நாட்டின் பண அலகில் 100 செலுத்த வேண்டும். ஒருபோட்டியாயின் – 100டொலரும் ஒன்றிற்கு மேற்பட்ட போட்டிகளில் பங்குகொள்ள விண்ணப்பிப்பாராயின் 150 டொலரும் பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். போட்டி விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கேற்ப போட்டி நடத்தப்படும் சுற்றொழுங்கு தீர்மானிக்கப்படும்.
  • குழுப்போட்டி தவிர்ந்த ஏனைய போட்டிகளில் முதலாமிடம் பெறுபவருக்கு ‘யாழ்தாரகை’ என்னும் விருது வழங்கப்படும்.
  • போட்டிகளின் கருப்பொருள்கள் அரசியல் கலப்பற்றதாக இருக்கவேண்டும்.
  • போட்டிகளில் பங்குகொள்பவர்கள் ஒப்பனை, போக்குவரத்துச் செலவினங்களை தாமே பொறுப்பேற்க வேண்டும். போட்டிகள் தொடர்பிலான முடிவுகளில் திருப்தியின்மை ஏற்படுமாயின் அதற்கான முறைப் பாடுகளை பொறுப்பு வாய்ந்த அலுவலர்களால் எழுத்து மூலமாக போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் சமர்ப்பிக்க வேண்டும். பிந்தி அனுப்பும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இம்முறைப்பாடுகள் உடனடியாக நடுவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவர் களது ஆலோசனையின் பிரகாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
  • போட்டிகளில் முதல் மூன்று வெற்றி நிலைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு 2023வைகாசி மாதம் நடைபெறவுள்ள முப்பெருந் தமிழ்விழாவில் பரிசில்கள் வழங்கப்படும்.
  • கவிதைப் போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறவுள்ள நிலையத்தில் வழங்கப்படும். பதினைந்து நிமிடங்கள் மட்டும் போட்டி ஆயத்தத்திற்காக வழங்கப்படும்.
  • பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் எமது treasurehouseofjaffna.com என்னும் இணைய வழி அருங்காட்சியகத்தில் பதிவிடப்பட்டுள்ள ஆளுமைகளிலிருந்து விரும்பிய ஒருவரை தெரிவு செய்து பேசலாம்.
  • சிறுகதையாக்கம், குறுநாடகப் பிரதியாக்கம், கையெழுத்துச் சஞ்சிகை. ஆகியன விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பதல் வேண்டும். ஆக்கங்கள் யாவும் சுயமானதாக இருக்க வேண்டும். ஏனைய போட்டிகள் யாவும் எமது அட்டவணைக்கமைவாக நடத்தப்படும். வேறு போட்டிகளில் பங்குகொண்ட படைப்புகளாக இருக்கக்கூடாது. தழுவல்கள், சாயல்கள்,பிரதிபண்ணுதல் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டால் அவை போட்டியிலிருந்து உடனடியாக நீக்கப்படும். அனைத்துப் போட்டிகளுக்கும் நடுவர்களின் தீர்ப்பே இறுதி முடிவாகும்.
போட்டிகள் யாவும் கீழ்க் குறிப்பிடப்படும் அட்டவணைக்கமைவாக நடத்தப்படும்.
போட்டி வகைகளும் விடயதானங்களும் :-
  பேச்சு:-
   பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் இப் போட்டிகள் பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் ஒழுங்கு செய்யப்படும்.
    1. – தரம் 3 தொடக்கம் 5 வரையான மாணவர்கள் – 5 நிமிடங்கள்
    2. – தரம் 6 தொடக்கம் 9 வரையான மாணவர்கள் – 7 நிமிடங்கள்
    3. – தரம் 10 தொடக்கம் 13 வரையான மாணவர்கள் – 08-10 நிமிடங்கள்.
    4. – திறந்த பிரிவு – 08-10 நிமிடங்கள்.
  • குறிப்பிடப்பட்ட நேரத்திற்குட்பட்டதாக பேச்சுஅமைய வேண்டும். எமது treasurehouseofjaffna.com என்னும் இணைய வழி அருங்காட்சியகத்தில் பதிவிடப்பட்டுள்ள ஆளுமைகளிலிருந்து விரும்பிய ஒருவரை தெரிவு செய்து பேசலாம். அல்லது கீழ்க்குறிப்பிடப்படும் ஆளுமைகள் தொடர்பில் பேசுதல் வேண்டும். மூதறிஞர் ச.அம்பிகைபாகன், கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை, கலைப்பேரரசு A.T.பொன்னுத்துரை, கலாபூஷணம் G.P.பேர்மினஸ், கலாபூஷணம் சிவநேசன் ஞானகுமாரி, வர்ணகுலசிங்கம் வர்ணராமேஸ்வரன், கலாநிதி வண.நீ.மரியசேவியர், கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி V.V.வைரமுத்து, முகத்தார் ஜெசுரட்ணம் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் அ.துரைராசா, பேராசிரியர் க.கைலாசபதி, நவாலியூர் சோமசுந்தரப்புலவர், காத்தார் சூரன், இந்து போட் இராசரத்தினம், கலாபூஷணம் உருத்திரேஸ்வரன், கலாபூஷணம் கந்தையா நடேசு(தெணியான்), காரை செ.சுந்தரம்பிள்ளை, வர்ணவாரிதி இரத்தினம் கனகராஜா, ஆறுமுகம் இராஜகோபால்(செம்பியன் செல்வன்), கந்தையா குணராசா(செங்கை ஆழியான்), செல்லையா யோகநாதன், அண்ணா நடராசா, நூலகஞான வித்தகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் ஆகியோரில் ஒருவரை போட்டியாளர்கள் தெரிவு செய்து தயார் செய்திருத்தல் வேண்டும். தலைப்பிற்கேற்றதாக பேச்சு அமைய வேண்டும். பொருந்தாத விடயங்களும் அரசியல் கருத்துகளும் இடம்பெறுமாயின் போட்டியாளர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார். பேசவேண்டிய ஒழுங்கு திருவுளச்சீட்டின் மூலம் தீர்மானிக்கப்படும்.
  சிறுவர்களுக்கான கதைசொல்லல்:-
   15நிமிடங்களுக்குட்பட்டதான இப்போட்டியில் பங்கு கொள்வதற்காக பன்னிரண்டு வயதிற்குட்பட்ட பத்திற்கு (10) குறையாத சிறுவர்களை போட்டியாளர் ஒழுங்கு செய்து அழைத்து வருதல் வேண்டும். சிறுவர்களுக்குப் பொருத்தமான அறிவூட்டுதல், மனப்பாங்கினை வளர்த்தல் போன்ற விடயப்பொருளை உள்ளடக்கியதாக கதைசொல்லல் நிகழ்வு அமைதல் வேண்டும். கதைசொல்லும் படிமுறை கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். முதலில் சிறுவர்களுடன் சபையில் தோன்றி கதையினை நிகழ்த்துவார். இவற்றின்போது சிறுவர்களின் துலங்கல் மதிப்பீடு செய்யப்படுவதுடன் சிறுவர்களின் பின்னூட்டல் செயற்பாடும் முடிவில் கவனத்திலெடுக்கப்படல் வேண்டும்.
  நாடகம் :-
   இது ஒரு திறந்த போட்டியாகும். 08 நடிகர்களுக்குக் குறையாமலும் அதற்குமேல் நடிகர்கள் பங்குகொள்வதுடன் 30 நிமிடங்களுக்குட்பட்டதாக நாடகம் அமைய வேண்டும். பொருத்தமான காட்சிவிதானிப்பு, இசை, ஒப்பனை என்பன கவனிக்கப்படல் வேண்டும். மேடையேற்றத்திற்கு முன்னதாக நாடகத்தின் இரண்டு பிரதிகள் ஒழுங்கமைப்பாளர்களிடம் வழங்க வேண்டும். ஒழுங்கமைப்பிற்காக பதினைந்து நிமிடங்கள் வழங்கப்படும். நவீன நாடகப் பண்புகளை உள்ளடக்கிய, அரசியல் கலப்பற்றதாக அமைதல் வேண்டும். சங்க இலக்கிய (ஐ வகை நிலங்கள்) கருப்பொருள்களை உள்ளடக்கியதாக அல்லது புராண, இதிகாச கருப்பொருள்களை உள்ளடக்கிதாக தற்கால சமூக மாற்றங்களை கருத்திற்கொண்டு பண்டைய காலத்தின் சிந்தனைகளை வெளிக்காட்டும் வகையிலான கருப்பொருள் சமூக நலன்கொண்ட நாடகங்களை நவீன நாடக அரங்க முறைமைகளுக்கமைவாக மேடையேற்ற வேண்டும்.
  அறிவிப்பாளன் :-
   போட்டி நடைபெறும் இடத்தில் வழங்கப்படும் செய்தியினை/தகவலை 10 நிமிடங்களுக்குள் வாசித்தல் அல்லது அறிவித்தல் வேண்டும். இடையில் பிரதான நடுவரால் கோரப்படும் விடயங்களையும் செய்துகாட்டும் கடமைப்பாடும் போட்டியாளருக்கு உண்டு. பொதுவைபவமொன்றில் அறிவிப்பாளன் தோன்றும் விதத்தில் பண்பாட்டிற்கேற்ப உடை, அலங்காரம் பயன்படுத்தப்படல் வேண்டும்.
  கையெழுத்துச்சஞ்சிகை :-
   போட்டியாளர்கள் விண்ணப்பத்துடன் கையெழுத்துச் சஞ்சிகையினை போட்டிக்காக அனுப்புதல் வேண்டும். சஞ்சிகையானது அழகான முறையில் கையால் எழுதப்பட்டிருப்பதுடன் இருபது பக்கங்களை உள்ளடக்கியதாக தாழின் இருபக்கங்களிலும் நூலின் அமைப்பினையுடையதாக துணுக்குகள், சிறுகதை, கட்டுரை, ஆசிரியர் தலையங்கம், செய்திகள் எனப்பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைவதுடன் அட்டைப்படமானது கையால் வரையப்பட்டதாக அமைய வேண்டும். கவனம் செலுத்துதல் வேண்டும்.
  தனிப்பாடல்:-
   இசையமைப்பானது வேறு மெட்டுக்களின் தழுவலாக அமைதல் கூடாது. ஆனால் பாடலின் நடை மாறலாம். ஒரே இராகத்தில் மெட்டு அமைதல் அவசியமானதுடன் சுருதி கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். பாடலிற்கானநேரம் 4-5 நிமிடங்களாக அமைந்திருக்க வேண்டும். ஒரு தாள வாத்தியம் மட்டும் பயன்படுத்த முடியும். பாடலுக்கான நிகழ்த்திக்காட்டல் தவிர்க்கப் படவேண்டும். பண்பாட்டைப் பிரதிபலிக்கும் உடை அணிதல் அவசியமானது. ஈழத்து மெல்லிசைப்பாடல்களை பொருத்தமான வாத்தியங்களுடன் இசைத்தல் வேண்டும். பாடல்கள் ஈழத்துக் கவிஞர்களால் ஆக்கப்பட்டிருப்பது முக்கியமானதுடன் போட்டியாளர்கள் தாமும் இயற்றிப்பாடல்களை உருவாக்கி போட்டியில் கலந்து கொள்ளமுடியும். இவ்வாறு உருவாக்கப்படும் புதிய பாடல்கள் அரசியல், மற்றவர் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்திருத்தல் முடியாது. சமூக விழிப்புணர்வூட்டும் தன்மையில் அமைந்திருப்பது விரும்பத்தக்கது.
  கவிதை எழுதுதல் :-
   வழங்கப்பட்ட விடயப்பொருளில் ஒன்றை பங்குபற்றுவோர் திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்து எழுதுதல் வேண்டும். தனித்தனி இருக்கைகளில் நடுவர்களின் முன்னிலையில் கவிதைகள் எழுதுவதற்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும். மரபாகவோஃபுதுக்கவிதையாகவோ எழுதலாம். நடுவர்குழு சமர்ப்பிக்கப்பட்ட பிரதிக்கு 80 புள்ளிகளை மதிப்பீட்டின் மூலம் வழங்கும். கவிதை புனைந்தோர் அரங்கிலேறி தம் கவிதையை வாசிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும். வாசிப்பிற்கு 20 புள்ளிகள் வழங்கப்படும். கவிதை இயற்றுதல், வாசித்தல் இரண்டிற்கும் வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களும் தெரிவு செய்யப்படும்.
  தனிநடனம்:-
   உருப்படி   : தமிழ் பதவர்ணம்.
   உள்ளடக்கம் : திரிகஸத்தீர்மானத்துடன் பல்லவி, அனுபல்லவி, முத்தாயிஸ்வரம், சரணம் உள்ளடங்கலாக அமைய வேணடும்.
   20 – 25 நிமிடங்களுக்குட்பட்டதாக தனிநடனம் அமைவதுடன் பரதநாட்டியத்திற்குப் பொருத்தமான உடையமைப்புகளுடன் நடனத்தின் பின்னணிக்காக இறுவட்டினை மட்டும் பயன்படுத்த முடியும்.
  ஓராள் அரங்கு :-
   போட்டியாளர் தகுந்த வேட உடை ஒப்பனைகளுடன் எடுத்துக்கொண்ட கருப் பொருளை வளர்த்துச்செல்வதுடன் 10 நிமிடங்கள் தொடக்கம் 15 நிமிடங்கள் வரை நடித்து ஓராள் அரங்காக வெளிப்படுத்தப்படல் வேண்டும். அரசியல் கலப்பற்ற தற்கால வாழ்வியல் நெருக்கடிகளை அல்லது எமது பண்பாட்டுச் சூழலுக்கேற்ற கருப்பொருளை தெரிவு செய்து இசைப்பின்னணியும் கலந்ததாக ஆற்றுகை செய்ய வேண்டும்.
  நாடகப் பிரதியாக்கம்:-
   பதினைந்து நிமிடங்களுக்கு அரங்கேற்றக்கூடிய வகையில் பிரதிகள் அமைவதுடன் அரசியற் கருத்துகள் முன்வைக்கப்படாமல் எமது பண்பாடு, வாழ்வியல், வாழக்கைச் செலவின அதிகரிப்பு, சமூக துர்நடத்தைகள், நவீனம் தரும் ஆக்கமும் சிதைவும், தொலைந்த உறவுகள், போதைகளுக்கு அடிமையாகும் மாணவப்பருவம் என பல்வேறு கருத்து நிலைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆக்கங்கள் அமைதல் வேண்டும். மேடைக் குறிப்புகள், நெறியாளுகை குறிப்புகள் பிரதியில் காணப்படுமாயின் விசேட புள்ளிகள் வழங்கப்படும். விண்ணப்பத்துடன் நான்கு பிரதிகள் விதிகளிற்கமைவாக எழுதி அனுப்பப்படல் வேண்டும்.
  சிறுகதையாக்கம்:
   இளையோர் மத்தியில் இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் குழப்பங்கள் தவறான நடத்தைக்கோலங்கள் பற்றியும் அவற்றில் இருந்து அவர்கள் விடுபட்டு ஒழுக்க சீலர்களாக மாறி கல்வியின் அடைவுமட்டத்தை அதிகரிக்க வழிவகுக்கும் கருத்துக்கள் பேசுபொருளாக அமைவதுடன் மொழிச்செழுமை கவனத்திற்கொள்ள வேண்டும். ஆயிரத்துஐந்நூறு சொற்களிற்கு குறையாமல் இருப்பதுடன் சமூகப்பிரக்ஞை பூர்வமான கருத்துகள் மையப்பொருளாக அமைதல் வேண்டும். ஆக்கம் சொந்தப்படைப்பாக அமைவதுடன் எவரையும் எவரது வாழ்வையும் சுட்டிக்காட்டுதல் தவிர்க்கப்பட்டிருப்பதுடன் அரசியல், மதக்கருத்துகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  ஓவியம் :
   போதைப்பொருள் அபாயத்திலிருந்து எமது சந்ததியைக் காப்போம் அல்லது எமது பண்பாட்டு விழுமியங்களில் அருகிச்செல்லும் பிரபஞ்சநேசம் என்ற பொருளில் 18×14 அளவில் நிலைக்குத்தாக வரையப்படல் வேண்டும். நீர்வண்ணம் அல்லது போஸ்டர் வர்ணம் அல்லது சோக் வர்ணம் ஆகியவற்றில் இரு ஊடகத்தைப் பயன்படுத்தி படைப்பு அமைய வேண்டும்.
  பரிசில் விபரங்கள்
   மேடை நாடகம் தவிர்ந்த அனைத்துப் போட்டிகளுக்கும் பின்வருமாறு பரிசில்கள் வழங்கப்படும். முதலாம் பரிசு ரூபா 5,000.பதக்கம், சாண்றிதழ், கேடயம் என்பன வழங்கப்படும். இரண்டாம் பரிசு ரூபா 3,000.பதக்கம், சாண்றிதழ், கேடயம் என்பன வழங்கப்படும். மூன்றாம் பரிசு ரூபா 2,000.பதக்கம், சாண்றிதழ், கேடயம் என்பன வழங்கப்படும்.
  மேடை நாடகத்திற்கானது
  சாண்றிதழ், கேடயம் என்பன வழங்கப்படுவதுடன் பெறுமதியான பணப்பரிசில்களும் வழங்கப்படும். இதனைவிட சிறந்த நடிகன், சிறந்த நடிகை, சிறந்தகதை, சிறந்தநெறியாளுகை, சிறந்த காட்சி விதானிப்பு, சிறந்த இசை அமைப்பு என்பவற்றிகாக சாண்றிதழ், கேடயம் மற்றும் பணப்பரிசிலும் வழங்கப்படும். மேடைநாடகம் தவிர்ந்த ஏனைய போட்டிகளில் முதலாமிடம் பெறும் வெற்றியாளர் குறித்த போட்டி ஆண்டின் ‘யாழ்தாரகை’ விருது வழங்கி கௌரவிக்கப்படுவார். போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு போட்டிச் செயலாளர்- 0764669188 அல்லது இயக்குநர் 0777743240 ஆகிய WhatsApp இலக்கங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
புள்ளியிடும் திட்டம் வருமாறு.
இல
விபரம் புள்ளிகள்
1- பேச்சு – புள்ளியிடும் திட்டம்
1 பொருட்புலப்பாடு 20
2 தொனியும் தெளிவும் 20
3 மெய்ப்பாடு 15
4 அவையீர்ப்பு 15
5 பேச்சு வன்மை 20
6 பொருள் உள்ளடக்கமும் நேரக்கட்டுப்பாடும் 10
7 மொத்தம் 100
2- கவிதை நிகழ்வு – புள்ளியிடும் திட்டம்
1 பொருட்செறிவு 20
2  யதார்த்த உணர்வு 15
3 ஆக்கத்திறன் 20
4 கவித்துவமும் வடிவமும் 10
5 ஓசையும் உணர்ச்சியும் 15
6 வெளிப்படுத்தும் திறன் 20
7 மொத்தம் 100
3- தனிப்பாடல் – புள்ளியிடும் திட்டம்
1 இயல்பான மொழிநடை 20
2 இயைபான ஓசை 20
3 பொருத்தமான தாள வாத்திய இசை 20
4 பொருளுக்கேற்ப உணர்ச்சி வெளிப்பாடு 20
5 நேரம் 05
6 முளுமை 15
7 மொத்தம் 100
4- சிறுவர்களுக்கான கதை சொல்லல் – புள்ளியிடும் திட்டம்
1 கதை தொடுத்துச் செல்லும் பாங்கு 15
2 கற்பனைத்திறன் 15
3 கதையின் முழுமை 15
4 குழுவொருமைப்பாடு 15
5 பண்பாட்டு வெளிப்பாடும் நேரக்கட்டுப்பாடும் 10
6 ஆளுமை 15
7 கதைகூறும் பாணி 15
8 மொத்தம் 100
5- நாடகம் – புள்ளியிடும் திட்டம்
1 கதைக்கரு 20
2 பாத்திர வெளிப்பாடும் உருவாக்கமும் 25
3 நடிப்பாற்றல் 20
4 இசையமைப்பு 10
5 வேடஉடை ஒப்பனை 10
6 நேரக்கட்டுப்பாடு 05
7 காட்சி விதானிப்பு 10
8 மொத்தம் 100
6- அறிவிப்பாளன் – புள்ளியிடும் திட்டம்
1 குரல்வளம் 15
2 துறைசார்ந்த அறிவு 15
3 உச்சரிப்பு 15
4 சரளமாகப் பேசுதல் 15
5 கவர்ச்சி 15
6 ஆளுமை 15
7 பண்பாட்டு வெளிப்பாடும் நேரக்கட்டுப்பாடும் 10
8 மொத்தம் 100
7- தனிநடனம் – புள்ளியிடும் திட்டம்
1 பாவம் 30
2 தாளம் 20
3 அங்கசுத்தம் 20
4 ஆடல் ஆக்கம் 20
5 சமர்ப்பணம் 10
6 மொத்தம் 100
8- ஓராள் அரங்கு – புள்ளியிடும் திட்டம்
1 கருப்பொருள் 10
2 வெளிப்பாட்டுத்திறன் 25
3 பொருத்தமான ஒப்பனை 10
4 கூட்டிணைப்பு நடிப்பு 30
5 மொத்தம் 20
6 முழுமை 05
7 மொத்தம் 100
9- கையெழுத்துச் சஞ்சிகை – புள்ளியிடும் திட்டம்
1 பொருளடக்கம்
 •   ஆக்கவியல்  -20
 •   தொகுப்பு    -20
40
2 மொழி
 •   தமிழ்    - 5
 •   ஆங்கிலம் -5
10
3 வடிவ நேர்த்தி 20
4 அட்டை 10
5 எழுத்து 10
6 முழுமை 10
7 மொத்தம் 100
10- நாடகப் பிரதியாக்கம் – புள்ளியிடும் திட்டம்
1 கலைத்துவ வடிவமைப்பு 10
2 மொழிச்செழுமை 10
3 எழுத்துரு மூலக்கூறுகளின் உள்ளடக்கம் 30
4 காட்சிப்படுத்தக்கூடிய தன்மை 20
5 சம்பவங்கள் கோர்க்கப்படும் முறைமை 20
6 முழுமையாக்கம் 10
7 மொத்தம் 100
11- சிறுகதையாக்கம் – புள்ளியிடும் திட்டம்
1 கலைத்துவ வடிவமைப்பு 10
2 மொழிச்செழுமை 20
3 கருப்பொருள் 30
4 சமூகஅபிவிருத்திநோக்கு 25
5 முழுமையாக்கம் 15
6 மொத்தம் 100
12- ஓவியம் – புள்ளியிடும் திட்டம்
1  வரைதாளை பயன்படுத்திய விதம் 10
2 தலைப்பை வெளிப்படுத்திய விதம் 30
3 தலைப்பை வெளிப்படுத்திய விதம் 30
4 வர்ணப் பயன்பாட்டின் சிறப்பு 20
5 பூரணப்பாடு 10
6 மொத்தம் 100

மா.அருள்சந்திரன்,
இயக்குநர்,
யாழ்ப்பாணப் பெட்டகம்- நிழலுருக்கலைக்கூடம்

error: Content is protected !!
error: Content is protected !!