யாழ்ப்பாணம் சுண்டுக்குளி என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதியரின் புதல்வனாக 1948-08-14ஆம் நாள் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான அவர்,1979ஆம் ஆண்டு யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியில் அளவையியல் (Logic) ஆசிரியராக கால் பதித்து, 2009ஆம் ஆண்டு வரை சுமார் முப்பது ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். ஒரு சிறந்த ஆசானாக மட்டுமன்றி, ஒரு திறமையான பேச்சாளராக, தமிழ் சிந்தனையாளராக, ஒரு போராட்ட தலைமுறையை உருவாக்கிய கல்வியாளராக அவரது பங்களிப்பை மறுக்க இயலாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப் பையும், தொடர்ந்து கலாநிதி (PhD) பட்டத்தையும் பெற்றவர் என்பதே அவரது கல்வி ஆளுமைக்குச் சான்றாகும். அவர் யாழ். பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையில் பகுதிநேர விரிவுரையாளராகவும், மேலும் தனியார் கல்வி நிறுவனங் களில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அளவையியல் மற்றும் உள்வாரி–வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மெய்யியல் பாடங்களை விரிவுரைக ளாக வழங்கியவர். யாழ்ப்பாணம் பட்டப்படிப்புகள் கல்லூரியில் இவரிடம் மெய்யியல் கற்ற மாணவர்கள் ஏராளம்.
சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஒரு சிறந்த தமிழ் ஆசிரியராக, அளவையியல் ஆசானாக, தமிழ் சங்கம் மற்றும் இந்து மாமன்றத்தின் அர்ப்பணிப்பு மிக்க போஷகராக, விடுதி காப்பாளராக, சாரண ஆசிரியராக மாணவர்களின் கல்வி, ஒழுக்க, சமூக வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பு செய்தவர். (G.C.E O/L) தமிழை காதல் நயத்துடனும், இடையிடையே நகைச்சுவையுடனும் மாணவர்களின் மனதில் பதியக் கற்பக்கும் பாணி அவருக்கே உரித்தானது. 12ஆம் வகுப்பில் (G.C.E A/L) வணிகத் துறை மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருந்த அளவையியல் (Logic) வாழ்வியலோடு தொடர்புபடுத்தி, தத்துவ அடிப்படையோடு மிக எளிமையாக “லாஜிக்கலாக” கற்பித்தவர். அளவையியல் என்பது வாழ்க்கைக்கே தேவையான பல தத்துவங்களின் அடிப்படை என்பதை தனது கற்பித்தலூடாக எடுத்துரைத்தவர். விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள் பலரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தனது பாணியில் கற்பித்தவர்.
ஆசிரியரின் நூல்கள் அறிவுற்றகம் குறியீட்டு அளவையியல் வெண்பட வரைமுறை ஓர் அறிமுகம் அளவையியற்போலி அறிவாராய்ச்சி நோக்கில் இயக்கவியல் மெய்யியல் பகுப்பாய்வு முறை ஊடக அனுமானம் விஞ்ஞானமும் விஞ்ஞான முறையும். ஆகிய எட்டு அரிய நூல்களை சமூகத்திற்களித்தவர். ஆசிரியரின் தனிச்சிறப்பு என்னவெனில் மாணவர் கூட்டத்தில் எந்த தலைப்பைக் கொடுத்தாலும், எந்த முன்தயாரிப்பும் இன்றி, மணிக்கணக்கில் கருத்துச் செறிவுடனும் நகைச்சுவையுடனும் பேசும் அபூர்வ ஆற்றல் அவருக்கு இருந்தது. கல்வியாளராக, இலக்கியவாதியாக, கவிஞராக, பேச்சாளராக, எழுத்தாளராக, விரிவுரையாளராக, மெய்யியலாளராக – பன்முக ஆளுமையு டன் விளங்கிய ஆசிரியர் மாணவர் நலன் கருதி சுமார் 15க்கும் மேற்பட்ட நூல்களையும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் சமுதாயத்துக்கு அர்ப்பணித்து விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் “அளவையியல் போலி (Logical Fallacies)” என்ற நூலில், மேலைத்தேய தத்துவம் மற்றும் தர்க்கத்துறைகளில் இனங் காணப்பட்ட போலிகளை சமூக அறிவியல் நோக்கில் தொகுத்து, எமது சமூக-பண்பாட்டிற்குப் பொருந்தும் உதாரணங்களோடு, மனிதன் அறிந்தோ அறியாமலோ செய்யும் பல தவறுகளை ஆழமாகவும் அழகாகவும் ஆராய்ந்துள்ளார். ஆசிரியர் தனது கற்பித்தல் முறையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய தோடு, நகைச்சுவையுடன் கதை சொல்லும் ஒரு தனித்துவமான வடிவத்தை உருவாக்கி மாணவர்களின் மனதில் அழியாத நினைவுகளை பதித்தமை குறிப்பிடத்தக்கது. 2022.01.04ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.


