அறிமுகம்

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, Brunei, பிரித்தானியா லண்டன், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்கள் கதிர்காமர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனாக 1928-01-14ஆம் நாள் பிறந்தார்.
ஆசிரியராக நியமனம் பெறுவதற்கு முன்னர் பிரித்தானிய விமானப்படை அலுவலகத்தில் தனது 12 வது வயதில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியதோடு இரண்டே ஆண்டுகளில் நிருவாகப் பகுதியில் பணியில் பதவி உயர்வு பெற்றுப்பொறுப் போடு பதவியைத் தொடர்ந்தார். பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியதைத் (1948) தொடர்ந்து தனது படைகளை மீளப்பெற்றுக்கொண்டமையால் பாலசுந்தரம் அதுவரை வகித்துவந்த அலுவலகப் பணியில் தொடர முடியாதநிலை ஏற்பட்டது. வேலையை இழந்தமையால் மீண்டும் அப்போதைய அதிபராக திரு.வீரசிங்கம் அவர்கள் புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் இருந்தவேளை இவரை அழைத்துச் சென்று அங்கு கல்வியைத் தொடரவைத்தார். அதிபரின் மகன் ஆனந்தசங்கரி யும் இவரது வகுப்புத் தோழராக கல்வியை மேற்கொண்டார். அங்கிருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை 1958களில் முடித்துக்கொண்டு வெளியேறினார். வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து காத்திருந்தவேளை பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். போதிய ஊதியம் கிடைக்காமையால் அந்தப்பணியை விட்டுவிட்டு இந்து போர்ட் இராசரத்தினம் அவர்களை நாடி ஆசிரியர் தொழிலில் காலடிவைத்தார். அதன் காரணமாக வன்னியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ‘ஆயிலடி’ என்னும் குக்கிராமத்தில் உள்ள இந்துப் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக தனது கற்பித்தல் பணியை ஆரம்பித்தார். ஆசிரிய பயிற்சிக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் Dip.in.Ed. கல்விநெறியைத் தொடர்ந்தார். அதன்பின்னர் கண்டியில் உள்ள ‘யகலத்தன முஸ்லிம்’ மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக 1966ல் பணியைத் தொடர்ந்தார்.
ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை மேலதிக வகுப்புகளை தனது வீட்டில் வைத்தே மாணாக்கருக்குப் புகட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில இலக்கணப் பாடநூல்கள் அச்சுப்பதிவாகின.
கனகாம்பிகை என்னும் மங்கையைக்கரம் பற்றி இல்லறத்தில் நல்லறமாய் இரு பிள்ளைச்செல்வங்களைப் பெற்றார் அவர்களிருவரையும் கல்வியில் உயர வைத்து தந்தை மகற்காற்றும் கடமையினை செவ்வனே நிறைவேற்றினார்.
யூனியனில் பொற்காலம்
இவர் யூனியன் கல்லூரியில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய காலம் கல்லூரியின் வரலாற்றில் புனரமைப்புக் காலமாகப் பதிவாகியுள்ளது. கல்வியால் தன்னை வளர்த்துக்கொண்ட அவர். சிறந்த ஆசிரியராக பணியாற்றிதோடு அதிபராகவம் பதவி உயர்வுபெற்றார். தனது நிருவாகக் காலத்தில் யூனியன் கல்லூரியில் 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட சைவசமயத்தவர்களைக் கொண்டபாடசாலையில் அவர்கள் வழிபடுவதற்கு ஒரு ஆலயம் இன்மையை உணர்ந்து அந்தக் குறையை நிவர்த்தி செய்ய ஒரு ஆலயத்தையும் நிறுவினார். இது யூனியன் கல்லூரியின் வரலாற்றில் முதன்முதலாக இந்து ஆலயம் அமைக்கப்பட்ட வரலாறு பதிவாகியுள்ளது. ஆங்கிலக் கல்வி, தமிழ் மொழியாகியவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற நல்லாசானாகத் திகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து எழுத்தாளராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
பாடசாலையின் கல்வி மேம்பாட்டிற்கும் விருத்திக்கும் ஆளணியினரோடு பௌதிக வளங்களின் முக்கியத்துவத்தை நன்கறிந்த அதிபராக பணியாற்றி கட்டிடத் தொகுதிகள், விளையாட்டு மைதானம், தண்ணீர் வசதி, சிற்றுண்டிச்சாலை, கிறஸ்தவப் பிள்ளகைளகு மட்டும் கிட்டிய வழிபாட்டு வாய்ப்பை 80 விழுக்காட்டிற்கு மேலான சைவ மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதை மனதிருத்தி துணிவோடும், மன உறுதியோடும் பாடசாலை வளவிற்குள் ஒரு சைவ ஆலயத்தையும் அமைத்தார்.
தமிழர் கல்வி கேள்விகளில் காலத்தால் முந்தி நிற்பவர்கள். உரோம, கிரேக்க இலக்கியங்களைப் போன்று தமிழுக்கும் பண்பாட்டு மரபு தொன்மை வாய்ந்தது. ஆனால் மற்றைய வரலாறுகள் போன்று தமிழின் வரலாற்றையோ அன்றித் தமிழரின் வரலாற்றையோ ஒரு ஒழுங்குமுறையில் பதிந்து வைத்திருக்கப்படவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பணியில் அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்கள் பேசப்படவேண்டியவர். அவர் எழுதிய நூல்கள் அவற்றிற்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.
சிறுகதைகள்
அவர் எழுதிய சிறுகதைகள் சமூக நலம் சார்ந்தவை என ‘அந்நிய விருந்தாளி
’ என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளத் தக்கது. மறைவில் ஐந்துமுகங்கள் என்னும் நூலுக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் க.பஞ்சாங்கம் “நம்பிக் கைத் துரோகங்களும், காட்டிக்கொடுத்தல்களும், அவநம்பிக்கைகளும் சூழ்ச்சிகளும், வஞ்சகங்களும், பொறாமைகளும், கூட இருந்தே குழிதோண்டல்களும், காரணமுடியாத சாவுகளும், (அதாவது யாரால், எந்தக் குழுவினரால், எதற்காகச் சுடப்பட்டோம் என்பதை யூகித்துக்கூட அறியமுடியாதபடியான சூழலில் செத்து விடுவது) தப்பிப்பிழைத்து ஓடிவிடுவதற்காகப் பின்பற்றப்படும் எல்லாவிதமான தகுடுதத்தங்களும், பொய்களும், பொறாமைக ளும் எந்த அளவிற்கு ஒரு இனத்தை நாசப்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பதை உருவக மொழியில் பலாறு பல கோணத்தில் சொல்லிக் கொண்டு போகிறது நாவல்” எனக் குறிப்பிட்டுள்ளது அவரது நாவல் எழுத்துக்கு கட்டியம் கூறி நிற்பதைக்காணலாம்.

அவரது நூல்கள் சிறுகதைகள், நாவல் இலக்கியங்களோடு வரலாற்று ஆவணங்களாகவும் பாட நூல்களாகவும் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்டவை என்பது வெளிப்படை. அவர சிந்தனா ஓட்டம், அவர் தான் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளின் ஆழ்ந்த நுண்மாண் நுழைபுல அவதானிப்புக்கள் என்பன இளையோடிக் கிடக்கின்றன.
1. அந்நிய விருந்தாளி, (சிறுகதைகள்)
2. பொற்காலம் -யூனியன் கல்லூரியின் நினைவுகள் பதிவுகள்
3. மறைவில் ஐந்து முகங்கள் (நாவல்)
4. அமர்தலிங்கம் சகாப்தம் – அரசியல் வாழ்வியல்
5. சாணக்கியன் அன்னியர்கள் 100 வது ஆண்டுகள்
6. சத்தியங்களின் சாட்சியம் (அரசியல்)
7. அவதாரம் – மேன்மை தங்கிய சிலம்புநரி
8. வன்னி – நாவல்
9. வாரிசுகள் நாவல்
- Blood AND Terror Novel
- 11. His Roya Highness, The Tamil Tiger
- A Militant’s Silence
- Modal Doova – English Letteratuer G.C.E. Model Questions and Answers
- English Letteratuer G.C.E. Model Questions and Answers –Drama Prose fictions
- DRAMA FICTION PROSE- Literature
16. விமர்சனம்: மறைவில் ஐந்து முகங்கள் (இலக்கியம்)
- A Model Approach to English Grammar (Grammar)
- A Model Approach to English Grammar – Verb forms (Grammar)
- A Novel Approach to English Grammar – Part of speech
20. சிவதலம் – ஆவரங்கால்
21. தங்கத் தாரகை
யூனியன் தந்த பேராளர்கள்
யூனியன் கல்லூரியில் கல்வி கற்று பெருமை தந்தவர்கள் வரிசையில் சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள், தமிழே வாழ்வென ஏட்ச்சுவடிகளைப் பதிப்பித்த
சி.வை.தாமோதரம்பிள்ளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற் றிய சு.வித்தியானந்தன், கே. குணரத்தினம், கல்வியியலாளரும் விஞ்ஞானியுமான அலன் ஆபிரகாம், கணினித்துறையில் விற்பன்னராக வும் மலேசிய நான்யாங் பல்கலைகழகத்தில் பொறியியல் பேராசிரியராக திகழும் பி.என். சுகந்தன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவமகாராஜா, அவுஸ்ரேலியா வில் வாழ்ந்து வரும் இந்நூலில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் கே. எஸ். சுதாகர், முன்னைநாள் பாராளமன்ற உறுப்பினரும் உயர்நீதிமன்ற நீதிபதியுமான தெல்லிப்பளை இராஜரட்ணம் போன்றோர் யூனியன் பெற்றெடுத்தவர்கள் என்பது கதிர் பாலசுந்தரம் அவர்களின் பெரு முயற்சியால் வரலாற்றுப்பதிவாக்கப்பட்டமை பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

ஓய்வுபெற்றபின் பிறந்தகத்தில் இருக்கமுடியாத போர்காலச் சூழ்நிலை காரணமாக புறூணை நாட்டில் பணியாற்றிவரும் மருத்துவக் கலாநிதி கயல்விழியிடம் தனது துணைவியாரோடு 1992 சென்று இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தவர். மகனோடு இருக்கவிரும்பி பின்னர் இலண்டன்ககுப் புறப்பட்டு அங்கு 1994ல் சென்று வாழ்ந்து வந்தவேளை அன்புப் புதல்வன் யாழ்கோவன் கனடாவிற்கு வந்தமையால் அவர்களோடு இணைவதற்காக கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார். கனடாவில் அவர் தனது இறுதி மூச்சுவரை எழுதிக்கொண்டே இருந்தார். அவரது வரலாற்றுப் பதிவு ஈழத்து வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கல்வியையும், அதன்வழி மாணவர்களையும், பாடசாலையையும், வாழ்ந்த சமுதாயத்தையும் நன்கு நேசித்தவர். மண்ணையும் மைந்தர்களையும் ஆழமாக நேசித்த ஒருவரால்தான் அவற்றை உள்ளடக்;கிய படைப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும். இதற்கு அவர் எழுதிய நூல்களே சாட்சியம். அமிர்தலிங்கம் ஒரு சகாப்தம், வன்னி நாவல் என்பன அவரது சமுதாய, அரசியல் பார்வையினை படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆவரங்காலில் பிறந்த அவர் தனது ஊரிலுள்ள சிவன் ஆலயத்தைப் பற்றி பதிவு செய்திருப்பது காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுப்பதிவு பெற்ற கதிர் பாலசுந்தரம் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அதிபர் அவர்களின் கல்விப்பணியால் உயர்ந்த எம்சமூகம் என்றும் அவரது பணியினை மறந்த மாந்தர்களாக வாழாது அவரை தம் நெஞ்சில் இருத்தி நினைவு கொண்டு வாழ்கின்றனர். யாழ்மண்ணிற்கும் தமிழிற்கும் ஆற்றிய உங்கள் பணியை வயந்து யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடம் தலைவணங்கி நிற்கின்றது.

