அறிமுகம்
முத்தமிழ் கலைமேதை நாராயணர் முருகையா என்னும் நாமம் கொண்ட இவர்
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு தொல்புரம் பதி வாழ் நாராயணர் சின்னம்மா தம்பதிகளின் தவப்புதல்வனாக நான்கு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் 1932-03-17ஆம் நாள் பிறந்தவர். இசை நாடகக் கலைப் பாரம்பரியத்தில் ஊறித்திழைத்த இவரது தந்தையார் நாராயணர் இசைநாடகங்களில் ஒன்றான சகுந்தலா விலாசத்தில் வருகின்ற விருத்தம் ஒன்றினை நான்கு இராகங்களில் முப்பது நிமிடங்கள் வரை பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர். இத்தகைய பாரம்பரிய வழியில் பன்முக ஆளுமைமிக்க கலைஞராக முருகையா அவர்கள் மேற்கிளம்பினார்.

கல்வி
தனது ஆரம்பக் கல்வியை தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும், இடைநிலை, உயர்நிலைக் கல்வியை பண்ணாகம் மெய்கண்டான், பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கற்றார். ஆங்கில மொழிமூலம் எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்தியடைந்து பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று, பயிற்றப்பட்ட ஆசிரியராக உயர்வு பெற்று அதிபர் தரப் பரீட்சையில் முதலாந்தர அதிபராக தெரிவானார்.
1956ஆம் ஆண்டு பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியராக நயமனம் பெற்று, புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியாசாலை, தொல்புரம் விக்னேஸ் வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக தன் கல்விப்பணியினை மேற்கொண்டு நன்மாணாக்கர் பலரை உருவாக்கினார். புpன்னர் அதிபர் நியமனம் பெற்று மாத்தளை கௌடுபலல்ல மகா வித்தியாலயம், கரியவள தேவஹாவா முஸ்லிம் மகா வித்தியாலயம், தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயம், மூளாய் அமெரிக்கன் மி~ன் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் அதிபராகப் பணிபுரிந்து 1992ஆம் ஆண்டு அரச கல்விப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆசிரியையான விசாகபூஷணம் என்பவரை கரம் பிடித்து ஐந்து பிள்ளைச்
செல்வங்களைப் பெற்றார். வாழ்க்கைத் துணை விசாகபூஷணம் அவர்கள் ஆசிரியராகவும், உப அதிபராகவும், ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியவர். தனது புதல்வர்களுக்கு மிருதங்கக் கலையினைப் பயிற்றுவித்தும், பெண் பிள்ளையை பரதம், இசை, வாய்ப்பாடு மற்றும் வயலின் ஆகிய கலைகளைப் பயிற்றுவித்து தன் கலைத்தொடர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் கலைஞன் முருகையா அவர்களது கலைப்பணி தமிழ் கூறும் நல்லுலகில் என்றும் பேசப்படும் ஒன்றாகும்.

கலைஞனாக முருகையா ஆசிரியரவர்கள்.
தனது பன்னிரண்டாவது வயதில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பவளக்கொடி நாடகத்தில் புலேந்திரனாகவும் பவளக்கொடியாகவும் நடித்து கலைவாழ்வில் தடம் பதித்தார். பின்னர் சுழிபுரம் நடராஜா, வரகவி கிருஸ்ணபிள்ளை ஆகியோரது நெறியாளுகையில் சாவித்திரி, அல்லி அர்ச்சுனாவில் அல்லி, வள்ளி திருமணத்தில் வள்ளி, சத்தியபாமா போன்ற ஸ்திரிபார்ட் என அழைக்கப்படும் பெண்பாத்திரங் களை ஏற்று நடித்தார். குப்பிளான் செல்லத்துரையிடம் பண்ணிசையையும், வட்டுக்கோட்டை செல்லத்துரை அவர்களிடம் ஹார்மோனியத்தினையும் கற்றார். டபுள் ~hர்மோனியம் வாசிக்கும் மேதையான இவர் பரராஜசிங்கம் நாட்டியக் குழுவிற்கும், சின்னமணி வில்லிசை, ஆறுமுகம் வில்லிசை, ராஜன் வில்லிசை, குருஜி கனடா வில்லிசைக் குழுக்களிற்கும் ஹார்மோனிய வித்துவானாக பெரும்பங்காற்றினார்.

ஆகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியின் நிமித்தமாக தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்காக 1974இல் ‘வந்தாளும் மாமயில்’ என்னும் காவடிச்சிந்துப் பாடலை எழுதி இசையமைத்து மாணவர்களை அண்ணாவியாராக இருந்து நெறிப்படுத்தி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற வைத்து பெருமை சேர்த்தார். இப்பாடலானது தாளநடை மாற்றம், ஜதிக்கோர்வை காவடிக்கு எவ்வாறு அமையும் என்பதை துல்லியமாக புலப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதுடன் பின்னாளில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக் கற்பித்தற் காலத்தில் கவிதை, சமூகநாடகம்;, தாளலய நாடகம், நகைச்சுவை நாடகம், கதாப்பிரசங்கம், புராண இதிகாச நாடகங்கள், வில்லிசை போன்ற பல வகையான கதைப்பிரதிகளை உருவாக்கி
இசையமைத்து நெறியாள்கை செய்து மாணவர்களை கலைத்துறை ரீதியாக வழிப்படுத்தி கல்வியில் முன்னேற்றினார்.
காலச்சூழ்நிலையால் தாயத்திலிருந்து கனடா தேசத்திற்குப் புலம்பெயர்ந்து
மொன்றியல் நகரில் தமிழர் ஒளி அமைப்பின் அதிபராகக் கடமையாற்றி கலைப்பயணத் தினை தொடர்ந்தார். இவ்வாறு பல வழிகளிலும் கலைவழியால் எம் சமூகத்ததை ஆற்றுப்படுத்திய மாபெரும் கலைச்சாதனை யாளன் முருகையா அவர்கள் கனடாவில் 2013ஆம் ஆண்டு 11மாதம்15 நாள் கலையுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார்.

























