Monday, October 13

பேராசிரியர் சந்திரசேகரம்பிள்ளை பாலகுமாரன் – கல்வி

0
அறிவாற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க கல்வியலாளன் அமரர் பேராசிரியர் சந்திரசேகரம்பிள்ளை பாலகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் பல்வகைகளில் ஒரு தனித்துவமான மனிதர் ஆவார். முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான கல்வியியலாளன் எனும் பெருமைக்குரியவர். நவிண்டில் நெல்லியடியைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் அமரர்களான திரு. சந்திரசேகரம்பிள்ளை திருமதி. ராஜேஸ்வரி சந்திரசேகரம்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1969.07.29ஆம் நாள் நெல்லியடி மண்ணில் அவதரித்தார். அவருக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் வாய்க்கப்பெற்றனர். இயல்பாகவே ஆன்மீகநாட்டமும் இறை நம்பிக்கையும் கொண்ட குடும்பப் பின்னணி பேராசிரியர் அவர்களையும் அவ்வாறே வாழ்வித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிர்இரசாயனவியல் துறையின் விரிவுரையாளராக இணைந்து கொண்ட இவர், மூத்த விரிவுரையாளராக கடமையாற்றினார். உயிர் இரசாயனவியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் தனது இறுதிக்கணம் வரை அந்தப் பதவியைத் தொடர்ந்த வண்ணமிருந்தார். 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஒன்பதாவது பீடாதிபதியாக போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் தாமோதர வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மி~ன் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று உயிரியல் விஞ்ஞானப் பட்டக்கற்கைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு தெரிவுசெய்யப் பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டதாரி மாணவனாக இணைந்த அவரது தொடர்பு பின்னர் விஞ்ஞான முதுமாணி மாணவன், கலாநிதிப்பட்ட ஆய்வாளன் எனப் பரிமாணம் பெற்றதுடன் உதவி விரிவுரையாளர், சிரேஸ்ட விரிவுரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர், பீடாதிபதி, பதில் துணைவேந்தர் என தொழில்சார்ந்தும் விரிந்து சென்றது.
மருத்துவபீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றிய காலத்தில் பீடத்தின் வளர்ச்சிக்குப் பல்வேறு வழிகளிலும் தன் பங்களிப்பை நல்கினார். குறிப்பாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நிறைவுறாது இருந்த மருத்துவபீட கூவர் கலையரங்கத்தின் நிர்மாணிப்பு வேலைகளை நிறைவுறுத்தியது 2014ஆம் ஆண்டு சம்பிரதாயபூர்வமாக நவீன வசதிகளுடன் கூடிய மண்டபமாக மாணவர் பாவனைக்காக கையளித்தார். அதே ஆண்டில் மருத்துவ பீடப்பரீட்சை மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.
மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்கு அண்மையாக அமைக்கப்பட்;டிருக்கும் ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடத்துக்கான காணியை நன்கொடையாகப் பெற்றுக் கொடுப்பதில் இவர் பெரும் பங்காற்றியிருந்தார்.
கற்பித்தல் நடவடிக்கைகளுக்கப்பால் மாணவர்களைச் சிறந்த முறையில் வழிகாட்டுவதிலும், அதனது நிர்வாகத் திறனினூடாக மருத்துவ பீடத்தைத் தரமுயர்த்துவதிலும் பெரும் பங்காற்றி இருக்கிறார். 2019ஆம் ஆண்டு இவருக்குத் திறமை அடிப்படையில் உயர் இரசாயனவியலில் பேராசிரியராகப் பதவியுயர்வு வழங்கப்பட்டது.
பேராசிரியர் ச. பாலகுமார் அவர்கள் விலங்கியலில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை நிறைவுசெய்த பின்னர் உயிர் இரசாயனவியல் துறையில் முதுமானிப்பட்டத்தை யும் அதே துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். அவர் தனது கலாநிதிப் பட்ட ஆய்வை மறைந்த உயிர் இரசாயனவியல்துறை வாழ்நாள் பேராசிரியர் க. பாலசுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொண்டமை சிறப்புக்குரிய விடயமாகும்.
01.11.2001 இருந்து 30.03.2003 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உயிர் இரசாயனவியல் துறையில் ஒப்பந்த  அடிப்படையில் சிரேஷ்ட விரிவுரையாள ராக இணைந்து கொண்ட அவர் 03.03.2003ஆம் ஆண்டு நிரந்தர சிரேஷட விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். தொழில்வாழ்வில் படிப்படியாக முன்னேறிய அவர் 2019ஆம் ஆண்டு திறமை அடிப்படையில் உயிர் இரசாயனவியல் துறையின் பேராசிரியராக உயர்வு பெற்றார்.
தனது தொழில்வாழ்க்கைக் காலத்தின் போது ஒரு பல்கலைக்கழக ஆசிரியனுக்கு விதிக்கப்பட்ட முப்பெரும் பணிகளான கற்பித்தல், ஆய்வு, கல்வி நிர்வாகம் எனும் தளங்களில் தனது தனித்துவ ஆற்றலினாலும் விசேடித்த குணாம்சங்களினாலும் காலக்கனதிமிக்க பல வரலாற்றுக் கடமைகளை ஆற்றிய பேராசிரியர் பாலகுமார் அவர்கள் 2022-04-12ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!