சதாசிவம் அப்பாத்துரை அப்பாத்துரை இரத்தினம்மா தம்பதிகளின் புதல்வனாக கொக்குவில் கிழக்கு என்னும் இடத்தில் 1936ஆம் ஆண்டு பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்று 1958ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணி பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். கல்வித்திட்டமிடலும் நிர்வாகமும் தொடர்பான சர்வதேச ரீதியிலான பட்டப்பின் டிப்ளோமாவை புதுடில்லி பல்கலைக்கழகத்தில் பெற்றார். 1982ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.
1958 முதல் 1980 வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் மாணவர்களை வழிப்பிடுத்திய இவர் 1980முதல் அதிபர் சேவைக்குள் தன்னை ஈர்த்துக்கொண்டார். முதலாவது அதிபர் சேவையினை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் ஆற்றினார். இவருடைய தன்னலம் கருதாத அதிபர் சேவையினால் பல ஆயிரக்கணக்கான நன்மாணக்கர்களை உருவாக்கியது மட்டுமல்லாது அனைவரினதும் நெஞ்சங்களிலும் நீங்காத இடத்தினைப் பெற்றார். 1991லிருந்து 1996 வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பணியாற்றி அங்கேயே ஓய்வு பெற்றார். கல்வியிலும் ஒழுக்கத்திலும் கண்டிப்புடன் மாணவர்களை வழிப்படுத்துவதில் நிபுணத்துவமுடைய இவரின் கைவண்ணத்தால் உருவான மாணவர்கள் பலர் இன்று உயர் கல்வியிலும் உயர் தொழில்வாண்மையிலும் வாழ்ந்து அதிபரின் பெயரை உலகறியச் செய்தவண்ணமுள்ளனர்.
ஸ்ரீமதி பரமேஸ்வரி அவர்களை தனது இல்லற வாழ்வில் இணைத்து இரண்டு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களை கல்வியிலும் உயர் தொழில்வாண்மையிலும் சிறந்து வாழ வைத்துள்ளார்.
ஓய்வின் பின்னர் உயர்தொழில்நுட்பக் கல்லூரியின் வருகை தரு விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலமொழி அலகின் வருகைதரு விரிவுரையாளராகவும் பலாலி ஆசிரியர் கலாசாலையின் வருகைதரு விரிவுரையாளராகவும் தன் கல்விப்புலம் சார்ந்த அறிவினை அனைவருக்கும் வழங்கினார். யாழ்ப்பாண விஞானசங்கத்தின் தலைவராகவும் யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கௌரவ உறுப்பினராகவும் கௌரவ பதவிகளை வகித்தவர்.
யாழ்ப்பாணச் சமூகம் என்றில்லாமல் அனைத்துச் சமூகத்தினரும் பயன்பெறும் வகையில் தனது அறிவினையும் கல்வி ஆற்றலையும் பயன்படுத்தி மிகச்சிறந்த ஆளுமைக்கட்டுரைகளை பத்திரிகைளில் எழுதி வந்தது மட்டுமல்லாது இன்று வரை எம்சமூகத்தின் வழிகாட்டியாக சிறார்களை வழிப்படுத்தும் மூலவராக திகழ்ந்து தனது அரச சேவைக்காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட பணியினை செவ்வனே நிறைவேற்றி கண்ணியத்துடனும் கௌரவத்துடனும் எம்மை வழிப்படுத்திய அதிபர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்கள் சிறந்த ஆளுமையாளனாகவும் கல்விமானாதகவும் திகழ்களும் இவருக்கு யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக்கலைக்கூடம்;- 2023ஆம் ஆண்டு உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு நடத்திய முப்பெருந்தமிழ் விழாவில் “பணித்திருந்தகை” என்னும் விருது வழங்கி பெருமைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.