இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். உள்ளார்ந்த கலை, இலக்கிய படைப்பாற்றல் மிக்க ஒருவர் இந்த பூமியின் எந்தத் திக்கிற்குச்
சென்றாலும் தமது ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார் என்பதற்கும் ரகுநாதன் மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.





யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்த இவர் 1935-05-05ஆம் நாள் மலேசியாவில் பிறந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். 1947ஆம் ஆண்டு தனது முதலாவது நாடகத்தில் நடித்தார். கலையரசு சொர்ணலிங்கத்திடம் நாடகக்கலையை பயின்றார். தேரோட்டி மகன் என்ற நாடகம் இவருக்குப் பெரும் புகழ் ஈட்டிக்கொடுத்தது. கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர். மேடை நாடகம், திரைப்படம், வானொலி, குறுந்திரைப்படங்கள் என்று பல்வேறு தளங்களில் செயற்பட்டு வந்தவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தவர். பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, கனடா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி அங்கெல்லாம் வாழும் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றும் பிரமாண்டமான தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
1966 ஆம் ஆண்டில் வெளிவந்த கடமையின் எல்லை திரைப்படத்தில் அருள்நேசன் என்ற பாத்திரத்தில் தோன்றி முதன் முதலாக நடித்தார். 1968 இல் நிர்மலா என்ற திரைப்படத்தைத் தயாரித்து நடித்தார். தெய்வம் தந்த வீடு திரைப்படத்தில் நாதசுவர மேதை வேணுகோபாலனாக நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
கடமையின் எல்லை
நிர்மலா
தெய்வம் தந்த வீடு
நெஞ்சுக்கு நீதி
புகழ் பெற்ற மேடை நாடகங்கள்
தேரோட்டி மகன்
ரகுபதி ராகவ ராஜாராம்
சாணக்கியன்
வேதாளம் சொன்ன கதை
குறுந் திரைப்படங்கள்
பராவின் பேரன் பேர்த்தி
விருதுகள்
2016 இல் பிரான்சில் நடைபெற்ற ஐபிசி தமிழா நிகழ்ச்சியில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனாவைரசுத் தொற்றுக்கு உள்ளாகி பிரான்சில் மருத்துவமனையில் ஏப்ரல் 22, 2020ஆம் நாளன்று தனது 90வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.