Monday, October 13

திருஞானசம்பந்தபிள்ளை முத்துக்குமாரசாமி, கொக்குவில் – சைவசமய அறிஞர்

0
அறிமுகம்
சைவப்புலவர், சித்தாந்த சிரோன்மணி, கலைஞானச்சுடர், ஓய்வுநிலை அதிபர் அமரர் முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் தீவகத்தின் வேலணை பதியில் சைவ ஆசார பண்பாட்டுடன் தமிழும் சைவமும் செழித்தோங்கிய கலட்டி என்னும் பதியில் சைவ ஆசார மரபில் உதித்த முத்துக்குமாரசாமி காமாட்சியம்மா தம்பதிகளின் ஏகபுத்திரனாக இருசகோதரி களுடன் 1938-12-25ஆம் நாள் பிறந்தார். சைவத்தையும் தமிழையும் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்தவர். மிகச் சிறந்த அதிபராக விளங்கிய இவர் மாணவர்களை நல்லொழுக்கமுடைய ஆசாரசீலராய் உருவாக்கி அவர்கள் வாழ்வில் உயரச் செய்த பெருந்தகையாளன். 
தனது ஆரம்பக் கல்வியை வேலணை நடராசா வித்தியாசாலையில் பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பண்டிதை வேதநாயகி, சிவஞானசம்பந்தர் ஆகியோர் குருவாய் அமைய கல்வியில் உயர்ந்தார். உயர்தரக் கல்வியினை வேலணை மத்திய கல்லூரியில் கற்றார். சிரேஸ்ட தராதரப் பரீட்சையில் ஆங்கில மொழிமூலம் சித்தியடைந்து கல்லூரி வாழ்வை நிறைவு செய்து ஆசிரியத்துள் தன்னை இணைத்துக்கொண்டார். 
சைவபரிபாலன சபையின் செயலாளர், தலைவர் மற்றும் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு சைவத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் தன் அர்ப்பணிப்பான பங்களிப்பினை வழங்கியவர். 
ஆசிரியராக திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள்
1957-1958 காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழில் சிறப்பு ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். பயிற்சி யின் பின்னர் தலவாக்கல புனித பத்திரிசியார் பாடசாலை, இராகல அரசினர் தமிழ் மகா வித்தியாலயம், ஹக்கல அ.சி.த.க.பாடசாலை, இறம்பொட தமிழ் மகா வித்தியாலயம், லிந்துல மகா வித்தியாலயம் என பல்வேறு பாடசாலைகளிலும் தனது ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தினை வெளிப்படுத்தி சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்கினார். 
1966ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு மாவட்ட தமிழ் மொழிமூலமான பாடசாலைகளான தெமட்டகொட அ.தஇகஇபாடசாலை, பம்பலப்பிட்டி இந்து கனிஸ்ட பாடசாலை ஆகிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சைவ சமயத்தினை போதித்தார். பின்னர் அதிபர் தர பதவி உயர்வுடன் யாழ்ப்பாண மண்ணில் 1971ஆம் ஆண்டு கால்பதித்தார். யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத் தில் 1971 -1978 வரை கடமையாற்றி நல் மாணாக்கர் பலரை உருவாக்கினார். பின்னர் வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபராகப் பணியாற்றி இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவினையும் சிறப்பான முறையில் கொண்டாட வழிசமைத்தார். 1983ஆம் ஆண்டு தொடக்கம் சில மாதங்கள் வரை யாழ்ப்பாணம் அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையிலும், 1985ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபராய் சேவையில் அமர்ந்தார். 1989ஆம் ஆண்டு அதிபர் சேவையின் தரம் 1 பதவியுயர்வு பெற்றார்.1991ஆம் ஆண்டு இணுவில் மத்திய கல்லூரியின் அதிபராய் பணியாற்றி 1998ஆம் ஆண்டு கல்விப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 
மணவாழ்க்கை
‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்                                                நல்லாற்றில் நின்ற துணை’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க இல்லறத்தில் இணைந்தார். கொக்குவிலில் வாழ்ந்து வந்த பொன்னம்பலம் பாலாம்பிகை தம்பதியரின் ஏகபுத்திரியான சௌந்தராம்பிகையை கரம் பற்றி ஆறு பிள்ளைச் செல்வங்களைப்பெற்று அவர்களை கல்வியில் உயர வைத்து கல்வி அதிகாரியாகவும், ஆசிரியர்களாகவும் தொழிலில் அமர வைத்து அழகு பார்த்தவர். 
‘மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி                                                                                       அவையத்து முந்தியிருப்பச் செயல்’  என்னும் வாக்கிற்கமைய பிள்ளைகள் அறுவரும் தந்தையையும் தாயையும் அவையத்து முந்தியிருக்கச் செய்தனர்.
சைவமகான்
வாழ்நாள் முழுவதும் சைவ சமய விழுமியங்களையும் சிறப்பையும் கடைப்பிடித்து கடமை தவறாத ஒழுக்க சீலராய் வாழ்ந்து ஏனையோர்க்கு வழிகாட்டினார். இளம்சைவப் புலவர் பரீட்சைக்குத் தோற்றி அகிலஇலங்கை ரீதியில் முதன்மைத் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். யாழ் பல்கலைக்கழக மமுதுகலைமாணி பயிலும் மாணவர்களுக்கு சைவ சித்தாந்த விரிவுரைகளை வருகை விரிவுரையாளராக இணைந்து கற்பித்து வந்தார். திருவாவடு ஆதினத்தால் நடத்தப்படும் சித்தாந்த பயிற்சி மையத்தில் தன்னை இணைத்து இணுவில், கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்திருந்த கிளைகளில் சைவ சித்தாந்த விரிவுரைகளை எடுத்துரைப்பதில் வல்லவராக விளங்கினார். இப்பயிற்சியின் ஓர் அங்கமாக இருந்த தென்னிந்திய யாத்திரைகளிலும் கலந்து கொண்டு நெறிப் படுத்தியவர்.  இதன் காரணமாக அனைத்து சைவ சமய அறிஞர்களதும் பாராட்டி னைப் பெற்றார். அதுமட்டுமல்லாது சைவப்புலவர் பரீட்சைக்குத் தோற்று வோருக்கான வழிகாட்டல் விரிவுரைகளை யாழ் வண்ணை நாவலர் வித்தியாலயத் தில் நடத்தியதுடன் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை, சிவதொண்டன் நிலையம், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி ஆகிய இடங்களில் 1995, 1996 காலப்பகுதிகளில் நடத்தினார். சைவப்புலவர் அமரர் சு.செல்லத்துரை அவர்களின் நட்புடனும் நற்காரியங்கள் பலவற்றை சைவத்திற்காகவும் தமிழிற்காவும் செய்தார். இத்தகைய பணிகளின் சாட்சியங்களாக சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர், கலைச்சுடர் போன்ற விருதுகள் அவரது பணியினை மெச்சி நிற்கின்றன. அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். சைவ சித்தாந்தத்தில் மிகச் சிறந்த புலமையுடையவர். அத்துடன் ஆங்கில்புலமை யும் சிஙகளம் மற்றும் தமிழ்ப்பலமையும் கொண்ட அறிஞர். சைவபரிபாலன சபையின் செயலாளராக, தலைவராக, சமயப் பிரசாரகராக எனப் பல வகிபாகங்களைவ வகுத்து சைவபரிபாலன சபையின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் உறுதுணையாகச் செயற்பட்டவர். சைவ நற்சிந்தனைகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாகவும் பிரசாரித்தவர். 
சைவத்தின் காவலராய் நாவலர் வழிநின்று பல்வேறு பரிமாணங்களில் சைவப் பணிசெய்து  2020-12-09ஆம் நாள் ஊர்கூட முடியாத நேரத்தில் கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்க உச்சத்தில் எம் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தி இறைவனின் திருப்பாதத்தில் சரண்புகுந்தார். சைவத்திற்கும் தமிழிற்கும் தன்னை அர்ப்பணித்து சைவப்பெரியாராகவே தன் இறுதி வரை வாழ்ந்த இப் பெரியாரின் அர்ப்பணிப்பினை நினைந்து யாழ்ப்பாணப்பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் தலைவணங்கி நிற்கின்றது. 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!