அறிமுகம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் எனச் சிறப்பிக்கப்படும் உடுவில் பிரதேசத்தின் தமிழ் தொன்மையும் பாதுகாவலர்கள் மிகுந்த பூமியான கந்தரோடையில் 08-04-1939ஆம் நாள் சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்
எழுத்தாளர், ஆசிரியர், அதிபர் என்பதற்கப்பால் கவிஞராகவும் சிறுகதை படைப்பாளியாகவும், பேச்சாளராகவும் அறியப்பட்டவர். பல்வேறு நூலாக்க கர்த்தாவாகவும் விளங்குகின்றார். இவர் தனது கல்வியைக் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலயத்திலும் சுன்னாகம் ஸ்கந்தவரோத யாக் கல்லூரியிலும் கற்றதுடன் சி. ஆறுமுகம், பவுன் சுந்தரமூர்த்தி ஆதவன், சி. பொன்னம்பலம் ஆகியோரிடமும் கற்றார்.
இவர் 1957ஆம் ஆண்டு முதல் இலக்கியத்துறை, சமயத்துறை, நாடகத்துறை, ஒலி- ஒளி இறுவெட்டுத் தயாரித்தல், சமயம், தொலைக்காட்சித் துறை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் பத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் மூன்று கவிதை நூல்களையும் எழுதியதுடன் 1960 ஆம் ஆண்டு கலா நிலையத்தை நடத்தி அதன் மூலம் நெறியாள்கை செய்தும் நடித்துள்ளார். இவர் இசைப் பாவலர், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். அரும்பண்பாட்டுக் கோங்கள், பண்சுமந்த பாடல், பாலன் வருகிறான், சுன்னாகத்தில் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள் ஆகிய நூல்களுக்குச் சொந்தக்காரர்.
ஒரு இலக்கியத் தேனீயாக தேடலும், செயல்முனைப்புங் கொண்டு செயற்பட்ட கவிஞர் துரையர் தனது 83வது வயதில் இவ்வுலகை நீத்தார். தனது ஆரம்பக் கல்வியை கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை, ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப, இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இவர் ஆசிரியராகப் பணியில் இணைந்து கொண்டார். பின்னர் பதவியுயர்வு பெற்று அதிபராகப் பல பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வுபெற்றார். தனது அறிவாலும், ஆற்றலாலும் தாம் கடமையாற்றிய பாடசாலைகளில் முத்திரை பதித்த செயல்வீரராக இவரை பாடசாலைச் சமூகங்கள் அடையாளங் காண்கின்றன. பல பாடசாலைகளைத் தரமுயர்த்திய அதிபராக இவரது சேவை போற்றப்படுகிறது. பல மாணவர்களை நன்னிலைப்படுத்திய பெருந்தகையாகவும் இவர் விளங்கினார்.
கவிஞனாக துரையர்
படிக்கும் காலத்தில், தனது பதினாறாவது வயதில் வீரகேசரியில் எழுதிய கவிதையுடன் இவரது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது. கவிதைகள், சிறுவர் பாடல்கள் எழுதுவது, பாடசாலை நாடகப் போட்டிகளுக்கு நாடகங்கள் எழுதுவது என்று இவரது ஆரம்பகாலச் செயற்பாடுகள் அமைந்தன. இவரது கவிதைகள் வீரகேசரி, விவேகி,ஈழநாடு, வலம்புரி முதலான பத்திரிகைகளிலும், இலங்கை வானொலியிலும் வெளியாகின.
இவரது முதலாவது கவிதைத் தொகுதி தெருவிளக்கு 1972இல் கந்தரோடை சனசமூக நிலைய வெளியீடாக வெளிவந்தது. சந்தவோசை மிக்க 41 கவிதைகளும், 7 சிறுவர் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றிருந்தன. பேராசிரியர் சி.தில்லை நாதனின் அணிந்துரையுடன் இந்நூல் வெளிவந்தது.
எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வங்கொண்ட இவர் அடுத்து கவிக்குரல்கள் என்ற ஒலிநாடாவை வெளியிட் டார். இவரது கவிதைகளை வேறு கவிஞர்களின் குரலில் வெளிப்படுத்துவதாக இவ்வொலிநாடா விளங்கியது.
அதனைத் தொடர்நது 50 நாடுகளை அறியுங்கள், 46 நாடுகளை அறியுங்கள் என இரு புவியியல் நூல்களை எழுதி வெளியிட்டார். நாடுகள் தொடர்பான குறிப்புகள்,படங்களுடன் இந்நூல் வெளிவந்தது.
ஆலயங்களுக்கு பக்திப் பனுவல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். ஆலயங்கள் மீது பாடப்பட்ட கீர்தனைகளை பண்சுமந்த பாடல் என்ற பெயரில் சிறுநூலாக வெளியிட்டதுடன், அவற்றை நூல்வெளியீட்டு நிகழ்வில் இசைக் கலைஞர்களைக் கொண்டு பாடவைத்தார். அதுபோல அம்மன் கவசம் என்ற நூலை வெளியிட்டதுடன் இசைத்துறை விரிவுரையாளரான கலாநிதி தர்சனனின் குரலில் ஒலிநாடாவாகவும் வெளியிட்டார். மயூரபதி பத்திரகாளியம்மன் மும்மணிக் கோவையையும் எழுதினார்.
சுன்னாகத்தில் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள் என்ற சிறுநூலை வெளியிட்ட இவர் வரத பண்டிதரில் இருந்து இளையண்ணா வரையான சுன்னாகத்தின் எழுத்திலக்கிய ஆளுமைகள் 32 பேரையும், அவர்களது படைப்பாக்கங்களையும் அறிமுகம் செய்துள்ளார். அதுபோலவே தமது திருமணப் பொன்விழா வெளியீடாக இயல்வாணனின் தொகுப்பில் ‘கந்தரோடை தந்த தமிழறிஞர் ந.சி.கந்தையாபிள்ளையின் தமிழ்த்தொண்டு’ என்ற நூலை வெளியிட்டு, இலவசமாக வழங்கினார். 66 நூல்களை வெளியிட்ட பேரறிஞரான ந.சி.கந்தையாபிள்ளையை தமிழ் எழுத்துலகம் கண்டு கொள்ளவில்லை என்ற கவலை இவருக்கிருந்தது. அதனாலேயே இந்த நூல் மூலம் அவரை சமூகத்துக்கு அடையாளங்காட்ட இவர் விழைந்தார் என்பது முக்கியமானது.
அரும்பண்பாட்டுக் கோலங்கள் என்ற நடைச்சித்திரத்தையும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும், மரபுரிமையையும் நினைவுபடுத்தி, மறைந்துபோன, மறைந்து கொண்டிருக்கும் பண்பாட்டுக் கோலங்களை நீள நினைக்க வைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. சுன்னாகம் கலை இலக்கியச் சங்க வெளியீடாக வெளிவந்த இந்நூலில் அரிய புகைப்படங் களையும் இவர் இணைத்துள்ளார். பிற்காலத்தில் சிறுவர் இலக்கியத்தின் மீது இவரது கவனம் திரும்பியது. சிறுவர் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை எழுதியதுடன் சிறுவர் பாடல்கள், கதைகளையும் எழுதி நூல்களாக வெளியிட்டார். ஆடும் மயில், வயல் செய்வோம், உண்டு மகிழ்வோம், நட்பே உயர்வு, பாலன் வருகிறான் முதலான சிறுவர் இலக்கிய நூல்களை இவர் வெளியிட்டார். பாலர் கணிதம், எண்ணும் எழுத்தும் முதலான சிறுவர் பயிற்சி நூல்களையும் எழுதினார்.
ஓய்வின் பின்னர் வலம்புரி பத்திரிகையில் இணைந்து உதவி ஆசிரியராக, செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் வலம்புரியில் சிறுகதைகள், கவிதைகள் வெளிவரக் காரணமாக இருந்தார். தானும் கவிதைகளுடன் சிறுகதைகள் சிலவற்றையும் எழுதினார். கவிதைப் போட்டிகளை நடத்தி, பரிசு வழங்கி இளங் கவிஞர்களை ஊக்குவித்தார்.
1950களின் இறுதியில் இளம் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதிலும், செயற்படுத்துவதிலும் முன்னின்று செயற்பட்டார். 1960ஆம் ஆண்டு இளம் எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் துரையரைச் சந்தித்து உரையாடிய பசுமை நினைவை அந்தனிஜீவா நினைவுகூர்ந்துள்ளார். கந்தரோடை கலா நிலையம், சுன்னாகம் கலை இலக்கியச் சங்கம் ஆகியவற்றினை உருவாக்குவதிலும் இவர் முன்னின்று செயற்பட்டுள்ளார். பல்வேறு பொது அமைப்புகளிலும் தன்னை ஈடுபடுத்தி, பிரதேச மக்களுக்குச் சேவையாற்றியுள்ளார்.
இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருது, வலிகாமம் தெற்கு கலாசாரப் பேரவையின் ஞானஏந்தல் விருது, சுன்னாகம் பொது நூலகத்தால் வழங்கப்பட்ட தமிழ்ச்சுடர் விருது, வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆளுநர் விருது, இரா.உதயணன் விருது, இசைப்பாவலர் விருது எனப் பல விருதுகளும் பாராட்டுக்களும் இவரது இலக்கியப் பணிக்காக வழங்கப்பட்டிருக்கின்றன.
தனது எழுத்தாலும், முன்னோக்கான செயற்பாடுகளாலும் தமிழ் எழுத்துலகில் ஒளிவீசிய கவிஞர் துரையர் அவர்கள் 14-12-2022ஆம் நாள் இவ்வுலகை நீத்தார். அவர் உலகை நீத்தாலும், அவரது எழுத்துக்களில் அவர் என்றும் வாழ்வார். அவரால் உருவாக்கப்பட்ட நன்மாணாக்கர் நெஞ்சங்களிலும் அவர் வாழ்வார்.
இவர்களுக்கு நன்றி
இயல்வாணன் எனப் புனைபெயர் பூண்டிருக்கும் படைப்பாளி ஸ்ரீகுமரன் அவர்களுக்கும் அவரது https://iyalvaanan.blogspot.com இணையத்தளத்திற்கும் மனமார்ந்த நன்றி.






