யாழ்ப்பாணம், தெல்லிப்பளை என்ற ஊரில் சுப்பிரமணியம் அம்பலவாணர் என்பவருக்கு 1856 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் கற்ற கனகசபை அவர்கள் உயர் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் கற்று 1878 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்று 1882ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். இவர் 1885 இல் சங்கரப்பிள்ளை கனகசபை என்பரின் மகள் காமாட்சி அம்மாளைத் திருமணம் புரிந்தார்.
1882 இல் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்த இவர் 1907 இல் யாழ்ப்பாணம் வழக்குரைஞர் அவை தலைவரானார். புதிய வடக்குத் தொடரூந்துப் பாதையை அமைப்பதற்கு இவர் பெரும் பங்காற்றியவர்.
1906 பெப்ரவரி 4 இல் கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவையின் தமிழர் சார்பில் டபிள்யூ. ஜி. ரொக்வூட்டுக்குப் பதிலாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1912 இல் இவர் மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக இவர் 11 ஆண்டுகள் சேவையாற்றினார். 1921இல் இவர் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமூகப் பணி
கனகசபை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து பணியாற்றி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்தார். இந்துக்கல்லூரியின் பணிப்பாளர் சபையிலும் இவர் தலைவராக இருந்தார் கொழும்பு கொம்பனித் தெருவில் சைவக் கோயில் ஒன்றையும் இவர் அமைத்தார்.அரச ஆசியர் சபை, வேளாண்மைக் கழகம், கல்வி வாரியம் ஆகியவற்றில் உறுப்ப்பினராகவும், யாழ்ப்பாணம் வணிகக் கூட்டு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து செயலாற்றினார்.திருச்சிராப்பள்ளியில் 1909 ஆம் ஆண்டில் நடைபெற்ற சைவ சித்தாந்த சமாசத்தின் நான்காம் ஆண்டு விழாவில் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்கு பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கி சிறப்புப்படுத்தியது. சேர் பட்டம் பெற்ற மூன்றாவது இலங்கைத் தமிழர் இவராவார். 1921 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் மகாஜன சபையின் தலைவராகவும் இவர் இருந்தார். 1927 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.