Monday, October 13

சுந்தரம்பிள்ளை நடராசா, அராலி – வானொலி நாடகம்

0
அறிமுகம்
தமிழ் சிறுகதை எழுத்தாளரும், நாடக எழுத்தாளரும், நாடகக் கலைஞருமாவார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியை பிறப்பிடமாகவும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த நீராவியடியினை வாழ்விடமாகவும் கொண்டவர்.  இலங்கை வானொலியி ஐநூறிற்குமேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதி ஒலிபரப்பிற்குதவியவர். வானொலி நாடகத்திற்காக பல்வேறு விரதகளையும் பாராட்டுக்களையும் பெற்றதோடல்லாமல் இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாண சபை போன்ற அரச இலக்கிய விருதுகளும் அவரால் எழுதப்பட்ட நாடக நூல்களுக்கு சிறந்த இலக்கிய நூற் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்ட்டவர். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்குப் பகுதியில் நெய்தலும் குறிஞ்சியும் இணைந்த பிரதேசமாக விளங்கும் அராலி என்னும் திருவூரிலே உள்ள அகாயக்குளம் விநாயகராலயத்திற்கருகே லிகிதராக பணியாற்றி வந்த நடராசா பறுவதியார் தம்பதியருக்கு மூத்த புதல்வனாக 1933-09-22ஆம் நாள் பிறந்தார். 
தனது ஆரம்பக் கல்வியை யாழ் அராலி சரஸ்வதி வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்று 1955ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தமிழ்த்துறையில் ஆளுமை மிக்க பேராசிரியர்களிடம் கல்வி பயின்றார். பேராசிரியர்களான வி.செல்வநாயகம், சு.வித்தியானந்தன், க.கணபதிப்பிள்ளை, ஆ.சதாசிவம் ஆகியோரி டம் தமிழ் இலக்கய இலக்கியங்களை கற்கும் வாய்ப்புடன் இவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களிலும் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றார். 
ஆசிரியராக சுந்தரம்பிள்ளை.
பல்கலைக்கழகக் கல்வியின் பின்னர் ஆசிரியராக தனது அரச தொழிலை ஆரம்பித்தார். குறிப்பாக யாழ் செங்குந்தா இந்துக்கல்லூரி, யாழ் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் ஆசரியராக கடமையாற்றி நல் மாணாக்கர் பலரை உருவாக்கி ஆசிரிய சேவவையிலிருந்து ஓய்வு பெற்றார். 
நாடகமும் நாடகப் பணியும்
சுந்தரம்பிள்ளை அவர்கள் தனது பதினாறாவது வயதில் நாடகப் பணியை ஆரம்பித்தார். அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் நண்பர்களும், சகபாடிகளும் இணைந்து இவருடைய ‘இழந்த காதல’; என்னும் முதலாவது நாடகத்தில் நடித்தனர். இவ்வாறு ஆரம்பித்த நாடக வாழ்வு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேலும் பிரகாசிப்பதற்கு வழியேற்படுத்தியது. 1955ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களது சுந்தரம் எங்கே நாடகத்தில் நடித்தார். 1956ஆம் ஆண்டு பேராசிரியரின் துரோகிகள் நாடகத்தில் நடித்தார். பேராதனைபர் பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் கொழும்பு லயனல்வென்ட் தியேட்டர், கண்டி ரிறினிற்றி கல்லூரி, திருகோணமலை புனித யோசப் கல்லூரி, மட்டக்களப்பு நகரசபை மண்டபம், ஆகிய இடங்களில் நாடகங்களை நடித்தார்.தனது ஊரான அராலியிலே நண்பர்களை நடிகர்களாகக் கொண்டு 1954-1974 வரையான காலப்பகுதியில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை அரங்கேற்றினார். இக்காலத்தில் அராலி சரஸ்வதி நாடக மன்றத்தினை உருவாக்கினார். இவருடைய மேடை நாடகத்தில் திரு சபாரத்தினம், திரு பேராயிரவன், திரு தர்மராசா, திரு நடராசா, திரு குமாரசாமி, திரு புண்ணியமூர்த்தி, திரு சிவசோதி, திரு புவனேஸ்வரன் போன்ற கலைஞர்கள் நடிகர்களாக நடித்தனர். 
அராலியில் இவரால் எழுதி மேடையேற்றிய நாடகங்கள்.
இழந்தகாதல்.
பட்டிக்காடு.
மண்கொத்தி.
வெட்கமில்லை(பணமோ பணம்)
ஆசை அலைகள்.
பெரிய மனிதன்.
படித்த முட்டாள்.
காதலிக்காதே.
இருபது வருடங்கள்.
ஒரே இரவில்.
பொலிடோலே கதி.
மைடியர் ரோகினி
காதல் மன்னன்
செல்லப்பிள்ளை
மகாராஜா
முகமூடிகள்
நாடகப் பைத்தியம்
கல்யாண வைபோகமே
அனுபவப்புதுமை
ஒரு நாடகம் அரங்கேறுகிறது
வேறு இடங்களில் மேடையேற்றப்பட்டவை
வாழ்வா? சேவையா?
போர்முரசம் கேட்கிறது
அவர்கள் வெளிநாடு போகிறார்கள்
முதலாம்பிள்ளை
கொழும்பில் கல்யாணம்.
வானொலி நாடகமும் நாடகப் பணியும்.
மேடை நாடகங்களை எழுதி அரங்கேற்றி வந்த சுந்தரம்பிள்ளை அவர்கள் 1980ஆம் ஆண்டு முதல் தனது நாடகப் போக்கை மாற்றி வானொலி நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இவரின் எழுத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஒலிபரப்பியமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வானொலியில் முதலாவதாக எழுதிய நாடகம் நானே ராஜா என்பதாகும். தொடர்ந்து கெட்டிக்காரர்கள் என்னும் நாடகத்தை எழுதினார். இதன் ஆர்வமேலீட்டால் 125 நாடகங்களை எழுதி 30 ஆண்டு காலமாக இலங்கை வானொலியில் நாடக சாதனையாளனாக மிளிர்ந்தார். இவரது நாடகப் பிரதிகளுக்கு உயிர்வடிவம் கொடுத்து நெறியாள்கை செய்தவர்களில் பிரதானமானவராக ஜோச்சந்திரசேகரன் திகழ்கின்றார். இவருடைய நாடகங்களில் நடித்த கலைஞர்களாக இராஜேஸ்வரி சண்முகம், ஜி.பி.வேதநாயகம், ஏ.எம்.சி.ஜெயயோதி, கனிஸ்டா லூக்கஸ், க.பகவான், வி.எம்.எஸ்.உதயச்சந்திரன், கே.எஸ்.பாலச்சந்திரன், எஸ்.கணேஸ்வரன், ஜெயரஞ்சன், யோகராஜா, முருகேசு ரவீந்திரன், இராயபுத்திரன், ஜோகராஜன், புஸ்பராணி சிவலிங்கம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவரால் எழுதப்பட்ட 500 நாடகங்களும் 12 நாடக நூல்களாக வெளிவந்துள்ளன. பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களிடம் நாடகங்களை கற்றதனால் அவரைப்போலவே இவருடைய நாடகங்களிலும் மண்வாசைன ததும்புவது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு இவரது நாடகங்களில் உயிர் மூச்சு. 
எழுத்துத்துறையும் இலக்கியப் பணியும்
நாடகங்களை எழுதுவது மட்டும் இவருடைய இலக்காக இருக்கவில்லை. நாடகத்தோடு நவீன இலக்கியங்களையும் எழுதினார். ஈழத்தில் பிரபலமான பத்திரிகைகளான சுதந்திரன், வீரகேசரி, உதயன், தினக்குரல், முதலியவற்றிலே 60ற்கும்மேற்பட்ட சிறுகதைகளை எழுதி வெளியிட்டு உள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1950ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் கையொப்பம் என்ற விடயப்பொருளில் வெளியானது. யாழ்ப்பாணம் என்னும் தொகுப்பு நூலாக 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 1994இல் அக்கரைக்குச் சீமையில் என்ற நாவலையும் 2001இல் ஒரு காதலின் கதை, என்ற நாவலும் இவரால் வெளியிடப்பெற்றன.மேலும் நாடகம் எழுதுவது எப்படி?, வானொலி நாடகம் எழுதுவது எப்படி?, சிறுகதை எழுதுவது எப்படி?, என்ற ஆய்வு நூல்களும், யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள் என்ற வரலாற்று நூலும் இவரால் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
விமர்சனமும் சுந்தரம்பிள்ளையும்
இலக்கியக் கட்டுரைகள், வீடற்றவன் நாவலின் விளக்கமம் விமர்சனமம், இலக்கிய விமர்சனம், பொருளோ பொருள் நாடகத்தின் விளக்கமும் விமர்சனமும், நவீன இலக்கியங்களை கற்பித்தல், முதலான இலக்கிய நூல்களை எழுதி விமர்சனத்துறையில் தன்னை அடையாளப்படுத்தினார். 
ஆசிரியரின் நாடக நூல்கள்
கெட்டிக்காரர்கள் – 1998., முதலாம்பிள்ளை – 1990., இமயம் – 2004., மனிதர்கள் – 2006, படிப்பும் நடிப்பும்- 2007.
எங்கள் நாடு – 2002, பொலிடோலே கதி- 1976.பணமோ பணம்-  1977, வீடு – 1977, யாழ்ப்பாணமா? கொழும்பா? – 1998, மழை வெள்ளம் – 2004 போன்ற நாடக நூல்கள் குறிப்பிடத்தக்கன.
பெற்ற விருதுகள்.
2001 – கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டது.
2007 – வடக்கு மாகாண ஆளுநர் விருது வழங்கப்பட்டது.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணியில் வானொலி நாடக ஜாம்பவானாக விளங்கிய சுந்தரம்பிள்ளை அவர்கள் 2019-09-08ஆம் நாள் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் சென்றார். 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!