அறிமுகம்
ஓவியர் ஆசை இராசையா ஈழத்து ஓவியர், ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப் பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராக வும் விளங்கியவர். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.
ஆசை, செல்லம்மா தம்பதியரின் புதல்வனாக அச்சுவேலி யில் 1946-08-16ஆம் நாள் பிறந்தவர். பிறந்தவர் இராசையா. அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை, அச்சுவேலி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆரம்ப மற்றும் உயர் கல்வியைக் கற்றவர். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் ஓவியக் கல்வியைக் கற்றுக் கொண்டார். ஓவியக் கல்லூரியில் கற்கும்போதே பல ஓவியக் கண்காட்சிகளிலும் ஓவியப் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார். 1968-இல் கொழும்பு கோல்ட் இசுடோர்சு நிறுவனம் நடத்திய ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியம் முதல் பரிசைப் பெற்றுக் கொண்டது. பரிசு பெற்ற ஓவியம் அந்நிறுவனத்தின் 1969 நாட்காட்டியிலும் இடம்பெற்றது. 1975 முதல் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் பணியாற்றி வந்தார். எட்டு முத்திரைகளுக்கு இவர் ஓவியம் வரைந்துள்ளார். பின்னர் இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
ஓவியங்கள்
இவரது படைப்புகளில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ் மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. இவர் சேர். பொன். இராம நாதன், சேர். பொன். அருணாசலம், சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி, சேர். ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ. டி. சில்வா, ஈ. பி. மல்ல சேகரா ஆகியோரின் மெய்யுரு ஓவியங்களையும், தவலம் என்ற மலையகப் போக்குவரத்து மார்க் கத்தையும், இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியத்தையும் முத்திரை ஓவியங்களாக வரைந்துள்ளார்.
பெற்றுக்கொண்ட விருதுகள்
கலைஞானச் சுடர் விருது (2009, நல்லூர் பிரதேச செயலகம் வழங்கியது),
வடமாகாண ஆளுநர் விருது (2009)
கலாபூஷணம் விருது (2010)
கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012)
ஞானம் சஞ்சிகை விருது (2012)
ஓவியர் கிக்கோ தமிழியல் விருது (2013, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கியது)
கலைஞானபூரணன் விருது (2014, திருமறைக் கலாமன்றம் வழங்கியது)
அச்சூர்க்குரிசில் விருது (2014, அச்சுவேலி கலை பண்பாட்டு மன்றம் வழங்கியது)
ஓவியத்துறையில் என்றும் நீங்கா இடத்தினை வகித்திருக்கும் ஆசை இராசையா அவர்கள் 2020-08-29ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.