Monday, October 13

அமரசிங்கம் சின்னத்தம்பி ஆச்சாரியார். சிற்பம் – அராலி

0

தமிழரின் இசைக் கருவிகளுள் பழைமையானதாகவும் பண்பாட்டு அடையாள மாகவும் மங்கல வாத்தியமாகவும் திகழும் நாதஸ்வரக் கருவியை இலங்கையில் உருவாக்கிவருகின்ற ஒரேயொரு கலைஞராகவும் இந்து ஆலயங் களுக்குரிய பல தேர்களையும் எண்ணற்ற வாகனங்களையும் உருவாக்கிய சிற்பத்துறை வல்லுநராகவும் ஓவியம், சோதிடம், மனையடி சாஸ்திரம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் மிக்கவராகவும் இருந்துவரும் சின்னத்தம்பி அமரசிங்கம், அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கலைப்பணி ஆற்றியவர். 1965ஆம் ஆண்டு முதல் மரத்தாலான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார். இவர் இலங்கையில் நாதஸ்வரம் உருவாக்கிய ஆரம்பகால சிற்பிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது. பாரம்பரிய கலை வல்லுநரகளான கார்த்தியப்பா மற்றும் தேர்ச்சிற்ப வல்லுநரான சின்னத்தம்பி பரம்பரையில் 1945-10;-2ஆம் நாள் அராலியில் பிறந்தவர்.
“ஆலய வழிபாடுகளில், இசை விழாக்களில், மங்கல வைபவங்களில் நாதமழை பொழியும் நாதஸ்வரக் கலைஞர் களின் புனிதமான கரங்களில் என்னால் உருவாக்கப்பட்ட கருவிகள் இருந்து அவர்களுக்கு வாழ்வளிக் கின்றமை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, ஆத்மதிருப்தியைத் தருகிறது” என்பது சிற்பத்துறை மேதாவியும் நாதஸ்வர உருவாக்குநருமான அராலியூர் நாதஸ்வர சிற்ப வித்தகர் அமரர் சின்னத்தம்பி அமரசிங்கம் அவர்களின் மகிழ்ச்சி மேலீட்டின் கூற்று.
சிற்பக் கலையைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், அராலி அமெரிக்கன் மிஷன் மற்றும் சரஸ்வதி மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கற்று எஸ்.எஸ்.சியில் சிறப்புச் சித்தி பெற்று மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார். எனினும், கலை மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக உயர் கல்வியைப் பூர்த்திசெய்யவில்லை. தனது தந்தை மற்றும் மாமன்மார்களிடம் சிற்பத் தொழிலை வரன்முறை யாகக் கற்றுக்கொண்டார். அத்துடன், ஆலய வாகனங்களையும் சிற்பங்களையும் அழகுடன் உருவாக்கித் தனது இளவயதிலேயே சிறந்த சிற்பாசாரியாராக மேற்கிளம்பினார்.
ஆலயங்களுடன் தொடர்புடைய புனிதமான பணிகளில் ஈடுபட்டுவரும் இவர், தவில்- நாதஸ்வரக் கலைஞர்களுடன் நட்புறவைப் பேணி வருகிறார். அத்துடன், மங்கல இசையின் இரசிகனாகவும் ஆன்மீகவாதியாகவும் மிளிர்கிறார். சமூகத் தொண்டிலும் விருப்புடன் ஈடுபடுகிறார். இவர் ஆற்றிவரும் கலைப்பணிக்காக கலைஞானகேசரி, ஸ்ரீசண்டிகா சிற்பக்கலைஞான சேகரம், கலாவிநோதன், திட்ப-நுட்ப சிற்பக் கலாமணி, சிற்பக் கற்பகம், சிற்பக் கலைமாமணி, ரதாதி நாதஸ்வர சிற்ப கற்பகம், நாதஸ்வர சிற்ப வித்தகர், வண்ணபுரத்துச் சிற்பக்கலை வேந்தன் போன்ற எண்ணற்ற பட்டங்களையும் விருதுகளையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
அராலி அமரசிங்கம் ஸ்தபதி அவர்கள் தாய்மாமன் கா.சண்முகம்,இந்திய பரிணி ஸ்தபதிகளில் இரா.கோவிந்தராஜ்,மாயவரம் ச.ஏகாம்பரம், ஆகியோரிடம் தேர் நிர்மாணம், சிற்ப வடிவமைப்பு ஆகிய துறைகளில் பயிற்சி பெற்றவர் என்பது சிறப்பிற்குரியதாகும்.
அமரரால் உருவாக்கப்பட்ட நாதஸ்வரத்தை ஈழத்தின் நாதஸ்வரக் கலைஞர்கள் பலரும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்.கே.பத்மநாதன் ஏற்று அங்கீகரித்த பின்னர் அனைத்து நாதஸ்வரக் கலைஞர்களும் இவரிடமிருந்துதான் நாதஸ்வரக் கருவிகளைப் பெற்றுக்கொள் கின்றனர். கே.எம்.பஞ்சாபிகேஷன், எம்.பி.பாலகிருஷ்ணன், ஆர்.சுந்தரமூர்த்தி, கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி, ஆர்.கேதீஸ்வரன் போன்ற மேதைகள் முதல் தற்கால நாதஸ்வரக் கலைஞர்கள் வரை அனைவரது கரங்களிலும் இவரது கை வண்ணத்தில் உருவான நாதஸ்வரக் கருவிகளே தவழ்ந்து இசைபரப்பி வருகின்றன. மேலும், ஈழத்துக் கலைஞர்கள் மட்டுமன்றித் தமிழகக் கலைஞர்களான மாம்பலம் சிவா, நடராஜன், இளையராஜா, கார்த்திகேயன் முதலானோரும் என்னிடமிருந்தே நாதஸ்வரக் கருவிகளைப் பெற்றுவருகின்றனர்.
இதுவரை 25இற்கும் அதிகமான தேர்களையும் பலநூறு வாகனங்களையும் உயிரோட்டத்துடன் படைத்தளித் திருக்கின்றார். கொழும்பு பொன்னம்பல வானேஸ்வரர் கோவில், பருத்தித்துறை கோட்டுவாசல் முத்துமாரியம்மன் கோவில், அராலி வண்ணபுரம் சிவன் கோவில், அராலி வடக்கு முருகமூர்த்தி கோவில், மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில், சங்கரத்தைப் பத்திகாளி கோவில் முதலானவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
பிறர்வாழ தன் வாழ்வை ஆகுதியாக்கி பேரறிய தரணி போற்றும் நாயகனாகி அயராது ஒளி தந்த ஆதவனாகி அராலி மண் பெற்ற தேச விளக்காய் நின்று 2015-06-19ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!