அறிமுகம்

மணி ஐயா அவர்கள் தனது கலை ஈடுபாட்டால் கீரிமலையில் உதயசூரியன் கலா மன்றம் என்ற ஒன்றினை உருவாக்கி நிறைந்த கலைப்பணியாற்றினார். 1956ஆம் ஆண்டு கீரிமலையில் உபதபால் அதிபராக தொழிலை ஆரம்பித்தார். கடமையில் கண்ணாகவும் மக்களுடன் அன்பாகவும் பணியை சிறப்புடன் செயலாற்றி நாற்பத்து நான்கு வருடங்கள் உப தபால் அதிபராகப் பணியாற்றி 1998ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
1957ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். வடகோவை சித்திர வேலாயுத சுhவாமி பிரதான குருக்கள் சிவஸ்ரீ சித்தார்ந்தபாணு சோ.சுப்பிரமணி யக்குருக்கள் இரத்தினசௌதரியம்மா தம்பதிகளின் இரண்டாவது புத்திரியான பத்மாவதி அம்மாவை கரம்பற்றி ஒரு ஆண்மகனையும் நான்கு பெண் பிள்ளை களையும் பெற்று கல்வியில் மட்டுமல்லாது கலைத்துறையிலும் குறிப்பாக இயல், இசை, நாடகம் என்பவற்றில் வித்தகராக உருவாக்கி ஜெயதுர்க்கா என்ற பெயரில் ஆலயங்கள், பாடசாலைகள், கலைமன்றங்கள் சார்ந்த சிறப்பு மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பலரது பாராட்டினைப் பெற்றனர்.
கலைத்துறையில் சாதனையாளனாக மணி ஐயா

மணி ஐயா என்றால் அனைவருக்கும் பிடித்த பெயர். நிறைந்த மக்கள் ஆதரவு
இவருக்கு கிடைத்தது. மணி ஐயா அவர்கள் தனது கலை ஈடுபாட்டால் கீரிமலையில் உதயசூரியன் கலாமன்றம் என்ற ஒன்றினை உருவாக்கி நிறைந்த கலைப்பணியாற்றினார். இவருடன் இணைந்து இவரது சகோதரர்களும் கலைத்துறையில் பங்காற்றியுள்ளனர். குறிப்பாக கர்நாடக இசையிலும் நாடகத்துறையிலும் விசேடமாக வயலின், வீணை, கடம், கெஞ்சிரா போன்ற வாத்தியங்களைக் கற்று சிறப்பான இசைக்கலைஞர்களாகவும் மணி ஐயாவுக்கு ஒத்தாசையாகவும் விளங்கினர்.

உதயசூரியன் நாடகக் கலாமன்றத்;தின் தலைவராக மணி ஐயா அவர்கள் செயற்பட்டார். இவரும் இவருடைய சகோதரர்களும் இணைந்து உதயசூரியன் நாடகக் கலாமன்றத்;தின் சார்பாக வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்ற நாடகத்தை 1958ஆம் ஆண்டு முதற்தடவையாக தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் அரங்கேற்றினர். நாடகத்தயாரிப்பில் நாடகத்திற்கான உடை, ஒப்பனை, காட்சிவிதானிப்பு, நடிப்பு, நெறியாளுகை என அத்தனை விடயங்களும் மிகவும் சிறப்பாக
அமைக்கப்பட்டமையால் நாடகத் தயாரிப்பினை ஆயிரக்கணக்கான மக்கள் பாராட்டினர். மணி ஐயர் வீரபாண்டிய கட்டப்பொம்மனாக நடித்து சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றார். இந்நாடக அரங்கேற்றத் தினூடாக இவரும் இவருடைய சகோதரர்களும் சிறந்த நடிகர்கள் என்பதற்கப்பால் கலைத்தாகம் கொண்ட கலைக் குடும்பம் என்பதனை நிரூபித்தனர்.

இவரது நாடகப்படைப்பில் இதயசாந்தி, தெய்வத்தாய் (ஒளவையார்), தெய்வமகள் போன்ற நாடகங்கள் பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு பத்து தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத் தக்கது. இவருடன் குரம்பசிட்டி சன்மார்க்கசபை ஏ.ரி.பொன்னுத்துரை அவர்களும் பேபி ஆசிரியை அவர்களும் இணைந்து செயற்பட்டுள்ளனர். உதயசூரியன் நாடக மன்றச் செயற்பாட்டிற்கு இவருடன் இவரது சகோதரர்கள் மற்றும் கலைஞர்களின் இதயபூர்வமான பங்காற்றல் கிடைத்தமை இம் மன்றத்தின் வெற்றியாகும்.
உதயசூரியன் நாடக மன்றத்தின் நாடகத் தயாரிப்புகள் பின்வருவனவாகும்.
1- வீரபாண்டிய கட்டப்பொம்மன். 

2- சிவபக்தன்.
3- இதயசாந்தி.
4- எல்லாளன்.
5- பாசக்குரல்.
6- தெய்வத்தாய்.
7- கர்ணன்.
8- சமூகத்துரோகி.
9- நேர்த்திக்கடன்.(நசைகச்சுவை நாடகம்)
10- பக்தபிரகலாதன் போன்ற நாடகத் தயாரிப்புகள் மணி ஐயாவிற்கும் உதயசூரியன் நாடக மன்றத்திற்கும் பெருமை சேர்த்தவைகளாகும்.
நாட்டின் யுத்தசூழல் பலரை சொந்த வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர வைத்தது. அதற்கு மணிஐயரும் விதிவிலக்கானவரல்ல. அவர் 1990ஆம் ஆண்டு கீரிமலையை விட்டு இடம்பெயர்ந்து உரும்பிராயில் வாழவேண்டிய சூழக்குத் தள்ளப்பட்டார். இக்காலத்தில் உரும்பிராயில் கிராமத்தின் பல்வேறு நிகழ்வுகளில் தன்னை இணைத்து சமூகசேவகராகப் பணியாற்றியதுடன் மிருதங்க கலையினையும் பயறிறுவித்து வந்தவர். யுத்த சூழலால் இடம்பெயர்ந்து உரும்பிராயில் வாழ்ந்த பொழுது கந்தர்மடம் புலவர் தெட்சனாமூர்த்தி அவர்களால் எல்லாளனுடைய கதையை பின்புலமாக வைத்து 21 காட்சிகளையும் 21 நடிகர்களையும் உள்ளடக்கியதாக ‘இந்த மண் எங்களின் சொந்தமண்’ என்ற நாடகத்தினை தயாரித்தார். இந்நாடகத்தில் றாஜகுருவாக மணி ஐயா அவர்கள் பாத்திரமேற்றிருந் தார். இப்பாத்திரத்திற்கான உடை அலங்காரம் ஒப்பனை உட்பட அனைத்தையும் தனக்குத்தானே மேற்கொண்டிருந்தமையை இக்கட்டுரை ஆசிரியர் நேரடியாக கண்டு கொண்டது மட்டுமல்லாமல் நானும் அவருடன் சிறய பாத்திரமொன்றில் நடிக்கக்கிடைத்த சந்தர்ப்பம் இறைவன் டிஎனக்குக்கொடுத்த வரமாகும்.
ஒரு மனிதன் பிறக்கின்றான் எப்படி வாழ்கின்றான் என்பவற்றுக்கப்பால் அவன் தான் வாழும் சமூகத்தின் ஊடாட்டத்தில் எத்தகைய வகிபாகத்தினை வகிக் கின்றான் என்பதே முக்கியமானதாகும். மணி ஐயா அவர்கள் தான் வாழும் சமூகத்தை கலையால் வழிப்படுத்தி உலக நரோட்டத்தில் ஒழுக்கமுடைய சமூக மாக கட்டியெழுப் புவதில் தன் பங்களிப்பினை வழங்கியவர். கலையால் உறவாடி சமூகத்தை நேசித்த இக்கலைஞன் 2011-10-05ஆம் நாள் இவ்வுலகை விட்டு நீங்கினார். வேதியர் குலத்தில் தோன்றி அக்குலத்தின் கட்டுப்பாடுகள் விதிமுறை களுக்கப்பால் கலையால் சமூகத்தை வழிப்படுத்திய உங்களின் கலை அர்ப்பணிப்பிற்காக யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக்கலைக்கூடம் தலை வணங்கி நிற்கின்றது.
நன.றி –
மணி ஐயாவின் பதிவினை ஆவணப்படுத்துவதற்காக நான் நான்கு வருடங்களாக முயற்சி செய்தேன். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை. காரணம் பலருடன் தொடர்பினை மேற்கொண்டேன். அவர்களால் இதனை செயற்படுத்த உதவ முடியவில்லை. என் விடா முயற்சித் தேடலின் விளைவாக அளவையியலும் விஞ்ஞானமும் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் திரு இ.பிரதாபசர்மா அவர்கள் இவரின் மருமகன் என அறிந்து அவருடன் தொடர்பு கொண்டு கேட்டேன். அவரும் முழுமனதோடு எனக்கு இத்தகவல்களையும் புகைப்படங்களையும் ஓரிரு நாள்களில் பெற்றுத்தந்தார். உண்மையில் நான் எதிர்பார்த்ததற்கு மேலால் பலன் கிடைத்தமை கடவுளின் கிருபையாகும். தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் உப அதிபர் திரு இ.பிரதாசர்மா சேர் அவர்களுக்கும் வலிகாமம் கல்வி வலயத்தில் கடமையாற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை கிருபானந்தன் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்;பட்டுள்ளேன்..

















