அறிமுகம்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து. ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இம் மாநிலத்து நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்’ என்று பாரதி பாடினான். ஈழத்திலும் இத்தகைய நிலையால் நெஞ்சு பொறுக்க முடியாமல் பிறர் ஈன நிலை கண்டு தன்உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈழ மண்ணுக்கும் மக்களுக்குமாய் அர்ப்பணித்தார் மாவீரன் சிவகுமாரன். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாய் கழுத்தில் சயனைட் குப்பியினை அணிந்து போராடி தன்னை முதல் ஆகுதியாய் ஈழ மண்ணில் அர்ப்பணித்து விடுதலைச் சுடரினை கொழுந்து விட்டெரிய வைத்த விடுதலைப் போராளி. அந்த நேரத்தில் தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும், சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தவர். அவர் எல்லா மாணவர்களின் நலனினும் கவனம் செலுத்தினார். அவர் ஈழ மக்களின் நலனின் கவனம் செலுத்தினார். அவர் ஈழத் தமிழ் மக்களின் விடுதலையிலும் உரிமையிலும் கவனம் செலுத்தினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் உரும்பிராய் வாழ் பொன்னுத்துரை, அன்னலட்சுமி தம்பதியரின் மூன்றாவது மகனாக 1950ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் உரும்பிராயில் சிவகுமாரன் பிறந்தார். தன் ஆரம்பக் கல்வியை உரும்பிராயிலும் உயர் கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றவர். அவர் உயர் கல்வி கற்ற காலகட்டத்தில்; இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மத்தியகுழு உறுப்பினராகச் சிவகுமாரன் செயற்பட்டார்.
இயல்பாகவே பிறர் ஈன நிலை கண்டு பொங்கியெழுகின்ற பண்பினையுடைய வராக சிவகுமாரன் காணப்பட்டார். சமூகக் கட்டுப்பாடுகளில் மூழ்கியிருந்த யாழ்ப்பாணத்து மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவன். தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின் நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தவர். குறிப்பாக சாதி ஒழிப்புப் போராட்டத்தில் இளைஞர்களை அணி திரட்டினான். மரண வீடுகளில் அடிக்கப்படுகின்ற பறையினை தடுத்து நிறுத்தும் முயறிசியில் பறை வாத்தியக் கலைஞர்களது ஒத்துழைப்போடு உரும்பிராய் சந்தியில் பறை மேளங்களை கொண்டு வந்து குவித்து அடித்து உடைத்து எரித்து சாதி ஒடுக்கு முறைக்கான போராட்டத்தினை ஆரம்பித்ததோடு படிப்படியாக ஈழ விடுதலைப் போராட்டத்தின் தமிழ் மக்களின் விடுதலை நாயகனாக முகிழ்த்தார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.
1970களில் இலங்கை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் அவர்களது தாக்குதலோடு ஆயுதப் போராட்டத்திற்கான களம் உருவாகியது. உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் நிகழ்வொன்றிற்காக வருகை தந்திருந்த அமைச்சர் சோமவீர சந்திரசிறி அவர்களுடைய வாகனத்திற்கு சிவகுமாரனால் கைக்குண்டெறியப்பட்டது. இதன் காரணமாக சிவகுமாரன் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் வரை சிறையிலிருந்தபடியே மல்லாகம் நீதி மன்றத்தில் வழக்கினையும் எதிர்கொண்டவர். இவ்வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்கள’; மீது தாக்குதலில் ஈடுபடலானார் குறிப்பாக உரும்பிராயில் அமைந்திருந்த இக் கட்சியின் அலுவலக பெயர்ப்பலகையினை இரவோடிரவாக அகற்றி எரியூட்னார்.
1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது இலங்கை சுதந்திரக் கட்சியின்; யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகவும் பதவி வகித்த அல்பிரட் துரையப்பா அவர்களை குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையில் கழித்தார். இச்சம்பவமானது 1971 பங்குனி மாதம் யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்கு வீதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
1974 தை 09ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாடும் அதன் தாக்க வன்மைகளும் சிவகுமாரனை அதிகளவில் பாதித்தன. தமிழாராய்ய்சி மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அரசிற்கும் யாழ் நகர பிதாவிற்கும் துளியளவேனும் விருப்பமிருக்கவில்லை. இந் நிலையில் சிவகுமாரன் தானும் தன் நண்பர்களும் தொண்டர்களாளாக மாநாட்டில் இணைந்து பணியாற்றினார்கள். மாநாட்டிற்கான மண்டப ஒழுங்கமைப்பு பணிகளை சிவகுமாரன் தனது மேற்பார்வையில் ஒழுங்கமைத்தார். மாநாட்டின் எழுச்சி ஊர்வலம் நல்லூர் சட்டநாதர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாவதாக ஊர்திப் பவனி ஒழுங்கமைக்கப்படடிருந்தது. இவ் ஊர்திப் பவனியில் 150 ஊர்திகள் கலந்து கொண்டமையால் இருபாலைச் சந்தி வரை ஊர்திகளின் வரிசை நீண்டிருந்தது. இதில் பண்டார வன்னியன் ஊர்தியை இணைத்துக் கொள்வதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோமடைந்த சிவகுமாரனும் அவர்களது நண்பர்களும் பண்டாரவன்னியன் ஊர்தி பவனியிலி; இருந்து விலக்கினால் ஊர்திப் பவனியை நடக்க விடமாட்டோம் என போராட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக அரசு அடிபணிந்து அனிமதித்த நிலையில் ஊர்திப்பவனி நடந்தேறி மாநாடும் மிகச் சிறப்பாகவே நடைபெற்றது.
தமிழாராய்ச்சி மாநாட்டின் பத்தாம் நாள் நிகழ்வில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தினால் வீரசிங் கம் மண்டபத்தை விட்டு திறந்த வெளியில் அரங்கமைத்து நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை மாநாட்டிற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா மற்றும் பொலசார் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டனர். இதனால் மின்சார வயர் அறுந்து 14 வயதுச் சிறுவன் உட்பட ஏழு பேர் உடல் கருகி மாண்டனர். இந்நிகழ்வானது தமிழாராச்சிசி மாநாட்டுப் படுகொலை யாக வரலாற்றில் பதிவானது. இப் படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தார் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார்.
மாநாடு முடிவடைந்து வீடு திரும்பும் வழியில் நல்லூரில் அமைந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரின் அருளம்பலம் வீட்டு வாசலில் காவலிற்கு நின்ற பொலிசார் மீது தாக்குதலை நடத்தினான். தொடர்ந்து பொலிஸ் அதிகாரி சந்திசேகரா மீது நல்லூர் கைலாச பிள்ளiயார் கோயிலடியில் வைத்து குண்டுத்தாக்குதலை மேற்கொண்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட பல முயற்சிகள் சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.
சிவகுமாரனின் போராட்ட வடிவங்கள்
சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டம்.
இளைஞரணியும் மாணவர் பேரவையும் தொடர்பான போராட்டம்.
அரசியல் எதிர்ப்புப் போராட்டம்.
ஆதயுவழிப்போராட்டம்.
அமைச்சர் சோமவீர சந்திரசிறி அவர்களின் தாக்குதல்.
யாழ்நகர பிதா அல்பிரட் துரையப்பா மீதான தாக்குதல்.
பாராளுமன்றஉறுப்பினர் அருளம்பலம் அவர்களது வீட்டுக்காவல் அதிகாரி மீதான தாக்குதல்.
பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா மீதான தாக்குதல்
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் பிரகடனம்
தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. சிறிலங்கா அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். சிறிலங்கா அரசியலில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட கல்வித் தரப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தமிழ் மிதவாத தலைமைகளால் எதுவும் செய்ய முடியாதபோது சிவகுமாரன் அகிம்சைப் பாதையிலிருந்து விலகி ஆயுதப் பாதையில் சென்றார். தமிழ் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை ஆளும் சிங்களத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளா மல் ஒடுக்குமுறையை ஈழ மக்களிடத்தில் தொடர்ந்து பிரயோகித்த போதுதான் சிவகுமாரன் உருவாகினார். அப்போதுதான் சிவகுமாரன் ஆயுதப் பாதையை கையில் எடுத்தார்.
சிவகுமாரனின் தனிமனித போராட்ட சரித்திரம் நினைவுகூரவும் மதிப்பிடவும் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒன்றாகும். ஈழமும் இளைய தலைமுறையும் என்றுமே மறக்க முடியாத, மறக்கக்கூடாத ஒரு மாவீரனே பொன். சிவகுமாரன்.
தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன் ‘ளுiஎயமரஅயசயn றூழ குழரபாவ வுhந டுiடிநசயவழைn ழுக வுயஅடைள’.
தமிழீழ விடுதலையை தமிழர் தேசத்தில் பேரெழுச்சி கொள்ள வைத்த தலைவர் பிரபாகரன் அவர்கள் பொன். சிவகுமாரன் அவர்களை ஒரு அண்ணனாக வழிகாட்டியாக கொண்டவர்;. ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக நிர்ணயம் செய்யப்ட்டது.
தேடுதலும் கைதும்
சிவகுமாரனை தேடும் படலம் முடுக்கி விடப்பட்டது. உரும்பிராய் கிராமம் பல தடைவை சுற்றிவளைப்பிற்குள்ளானது. சிவகுமாரனின் தலைக்கு விலை பேசினார்கள்;. இதன் காரணமாக சிவகுமாரனை இந்தியாவிற்கு அனுப்பி பாதுகாப்பதற்கு முடிவு செய்து நிதி தேடினர் எவரும் நிதிவழங்க முனவராததனால் கோப்பாய் கிராமிய வங்கியை கொள்ளையிடத் திட்டமிட்டு செயற்பட்ட வேளையில் அக்கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில் தோட்டவெளிக்குள்ளாக தப்பியோடிய வேளையில் கைது செய்யப்பட்ட போது உயிருடன் அகப்படக்கூடாது என எண்ணி தன் கழுத்தில் அணிந்திருந்த சயனைட் குப்பியை கடித்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரை மாய்த்தார். 1974-06-05ஆம் நாள் தனது 23 வது வயதில் சயனைட் அருந்தி வீரச்சாவினை அடைந்தார்;. ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே. ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் விதை. ஈழத் தமிழ் தேசத்தின் என்றைய தலைமுறைக்கும் சிவகுமாரன் அவர்கள் வழிகாட்டும் ஒரு நாயகனாக இருப்பார் என்பது திண்ணமானது.
நன்றி
யாழ் தினக்குரல் 2025-06-05














