அறிமுகம்
தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம் (Bharati Rajanayagam) சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர். முழுநேர ஊடகவியலாளராக 40 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடகத்துறை அனுபவத்தை கொண்டவராவார். ஞாயிறு தினக்குரல், தினக்குரல் ஒன்லைன் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும் வீரகேசரி வடபிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்த பத்திரிகையாளர்.
யாழ்.திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இராஜநாயகம் பாரதி அmவர்கள் பிரபல கணித ஆசிரியரான இராஜநாயகம் சிவயோகம் தம்பதியினருக்கு 06 செப்டம்பர் 1962 ஆம் ஆண்டு பிறந்தார்.
வடமராட்சியைச் சேர்ந்த விவாக பதிவாளர் தாமோதரம்பிள்ளை தனலக்ஷ்மி தம்பதியினரின் மகளான தேவகி அவர்களை கரம் பற்றி இல்லறவாழ்வில் இணைந்து கொண்டார்.
பாரதி இராஜநாயகம் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டதோடு அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ். காரியாலய பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
பாரதி புதிய தொழில்நுட்பத்தோடு தன்னைப் பொருத்திக் கொள்ள விரும்பவில்லை. அவர் புதிய தொழில்நுட்பச் சூழலோடு தன்னை முழுமையாக பொருத்திக் கொள்ளாத தலைமுறையைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர்.
பத்திரிகைத் தர்மத்தை கடைப்பிடித்து முழுநேர அச்சூடக ஊடகவியலாளராக தன் வாழ்வினை அர்ப்பணித்து தமிழ்த்தேசியத்தின் பால் பற்றுதியோடு தன் இறுதி மூச்சு வரை பணியாற்றிய இவர் 09-02-2025 உடல் நலக்குறைவால் திருநெல்வேலியில் அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அவர் ஒரு நாடோடியாக யூடியூப்புக்குள் வர விரும்பவில்லை. அவருடைய ஊடக ஒழுக்கம், தனிப்பட்ட சுபாவம் போன்றன அவரை அதற்குள் வரவிடவில்லை.
ஒரு முனிவரைப் போல எல்லாவற்றையும் சாட்சியாகக் கடந்து போவார்.தனக்குச் சரியெனப்பட்ட விடயத்தையும் ஆக்ரோஷமாகச் சொல்ல மாட்டார்.மற்றவர்கள் ஆக்ரோஷமாகப் பேசும் பொழுது அமைதியாக, சலனமின்றிக் கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால் அவருக்கென்று ஓர் அரசியல் நிலைப்பாடு இருந்தது.
பாரதி ஒரு சிறந்த பத்திரிகையாளன் என்பதற்கு அப்பால் ஒரு சிறந்த மனிதநேயன். அரசியலைப் போன்றே போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்ததாக மாறிவிட்ட ஊடகத்துறையில் பாரதியைப் போன்று முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகலருடனும் இணக்கப் போக்குடன் ஊடாட்டங்களைச் செய்யும் ஒரு பத்திரிகையாளன்.
முதலில் 1980 களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றி பாரதி இந்திய அமைதி காக்கும் படை வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் விபத்தொன்றில் சிக்கிய பின்னரே வீரகேசரியில் இணைந்துகொணடார்.
பாரதியின் பத்திரிகைத்துறை வாழ்வு உள்நாட்டுப்போர் நீடித்த மூன்று தசாப்தங்களையும் போர் முடிவுக்கு வந்ததற்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களையும் உள்ளடக்கியதாகும். அதன் காரணமாக அவர் இயல்பாகவே தமிழ்த் தேசியவாத அரசியல் கோட்பாடுகளில் நிறைந்த ஈடுபாடு கொண்டவராக, தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் பற்றுறுதியுடன் நியாயப்படுத்துவதற்கு தனது எழுத்தை அர்ப்பணித்தவராக வாழ்ந்தார். பத்திரிகையாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவராக விளங்கிய பாரதி பல தடவைகள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றினார். தினக்குரல் பத்திரிகை 1997 ஏப்ரலில் தொடங்கப்பட்டபோது பாரதி தினக்குரலில் இணைந்தார். பாரதி ஞாயிறு தினக்குரலின் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார். வாரப்பத்திரிகையின் வளர்ச்சிக்கு பாரதியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
செய்திகளைக் கையாளுவதை விடவும் வாரப்பத்திரிகைக்கு உரிய சிறப்பு அம்ச விடயதானங்களைக் கையாளுவதில் பாரதியின் ஆற்றல் அபாரமானது என்பதை அவர் தனது பணியின் மூலம் நிரூபித்தார். கலை இலக்கியத்துறைச் சார்ந்தவர்களை ஞாயிறு தினக்குரலின் பக்கம் கவர்ந்ததில் பாரதியின் பங்களிப்பு முக்கியமானது.
1980-களில் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியதுடன் அதன் பின்னர் முரசொலி பத்திரிகை ஆசிரிய பீடத்திலும் பணியாற்றிய நிலையில் பின்னர் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். இந்நிலையில் 1997ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகை தோற்றம் பெற்றதன் பின்னர், அதில் தம்மை இணைத்துக்கொண்ட அவர் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக 2021ஆம் ஆண்டு வரை பணிபுரிந்ததுடன் தினக்குரல் ஒன்லைன் ஆசிரியராகவும் செயற்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றியதுடன் தற்போது வீரகேசரியின் வடபிராந்திய பதிப்பின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஊடகத்துறையில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பல மட்டங்களில் பாரதிக்கு பெருமளவில் நண்பர்கள், அபிமானிகள் இருந்தார்கள். வெறுமனே அலுவலகத்திற்குள் தன்னை முடக்கிக் கொண்ட ஒரு பத்திகையாளராக இல்லாமல் வெளித் தொடர்புகளை நிறையவே அவர் ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திலும் அவர் நன்கு அறியப்பட்டவராக விளங்கினார். பல வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டு தனது அனுபவத்தை வளப்படுத்திக் கொண்டார்.
பாரதி தனது அபிப்பாராயங்களைப் பெரிதாக வெளியில் பேசாத ஒரு பிறவி. ஆனால், நிதானமாக, ஆரவாரமின்றி சகலவற்றையும் அவதானித்து செயற்பட்ட ஒருவர். பரபரப்புக் காட்டுவதில் நம்பிக்கையில்லாத ஒருவர். ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைக் கச்சிதமாகச் செய்வதில் கண்ணாயிருப்பார். வீணான அபிப்பிராயங்கள் குறித்து அக்கறை காட்டமாட்டார். அதுமட்டுமன்றி தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினரான இராஜநாயகம் பாரதி பின்னர் அதன் தலைவராகவும் செயலாளராகவும் இருந்துள்ளார். பத்திரிகைத் தர்மத்தை கடைப்பிடித்து முழுநேர அச்சூடக ஊடகவியலாளராக தன் வாழ்வினை அர்ப்பணித்து தமிழ்த்தேசியத்தின் பால் பற்றுதியோடு தன் இறுதி மூச்சு வரை பணியாற்றிய இவர் 09-02-2025 உடல் நலக்குறைவால் திருநெல்வேலியில் அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
இவர்களுக்கு நன்றி
நிலாந்தன்.கொம், IBC தமிழ், DAN News, News first tamil.