“ஊட்டம் விருத்தி உறுதுணை ஒண்கலைகள்
நாட்டுவதே கொள்கை நமக்கு” என்னும் மகுட வாக்கியத்தினை கொண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலையும் கற்கை நெறியாகக் கொண்ட மாணவர்களினதம் அரங்கியல் ஆர்வலர்களினதும் அரங்க ஆற்றுகைத் திறன் மேம்பாட்டிற்காக சுன்னாகம் அவைக்காற்றுகைக் குழு என்னும் பெயரிலமைந்த நாடகக் குழுவொன்றை உருவாக்கி ஷேக்ஸ்பியரது நாடகங்களை அரங்கேற்றி வந்த இக்குழுவானது அரங்கியல கற்கைநெறி மாணவர்களின் தேடல்களுக்கு களம் அமைக்கும் வகையில் 1998-05-11ஆம் நாள் அரங்கியலுக்கான சஞ்சிகை ஒன்றினை ‘கல்யாணி’ என்னும் பெயரில் அமரர் க.சொக்கன் ஐயா அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பிக்க அமரர் கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை அவர்கள் மதிப்பீட்டுரை வழங்கி ஆரம்பித்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன், மா.அருள்சந்திரன் ஆகிய இருவரும் பிரதம ஆசிரியராக இணைந்து இச்சஞ்சிகையினை அவைக் காற்றுகைக் குழுவின் காலாண்டு இதழாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக ஏழு சஞ்சிகைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டுரைப்பகுதி, சஞ்சிகைப்பகுதி என இரண்டு பகுதிளாக வடிவமைக்கப்பட்ட இச்சஞ்சிகை அரங்கியலாளர்களது ஆக்கங்கள், மாணவர்களது ஆக்கங்கள், நிகழ்வின் பதிவுகள், துளித்துளி வைரங்கள் என்னும் கலைஞர் வரலாற்றுப் பக்கம் என்பவற்றுடன் குறுவினாவிடைப்போட்டி ஆகியவற்றினை உள்ளடக்கி வடிவமைக்கப் பட்டிருக்கின்றது.
கட்டுரைப்பகுதியானது அரங்கியல் சார் அறிஞர்கள் மற்றும் அரங்க மாணவர்களது கட்டுரைகளைத்தாங்கியதாகவும் சஞ்சிகைப்பகுதி யானது வழி வழி வந்த வைரங்கள் என்னும் கலைஞர்களது வரலாற்றுத் தொகுப்பும், குறுவினாவிடைப்போட்டி, களமும் காட்சியும், விமர்சன வியல், மாணவர்பகுதி, வாசகரின் மனப்பதிவுகள் என எல்லைப் பரப்புகளை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
அரங்கியல் மாணவர்களது ஆற்றல் மேம்பாடு மற்றும் செய்முறை அறிவினை ஏற்படுத்துவது இச்சஞ்சிகையின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. நாடகவியலாளர் அமரர் ஆ.கல்யாணசுந்தரேசன் நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் வெளியிடப் பட்டு வந்த இச்சஞ்சிகையானது தொடர்ந்து வெளிவராமையானது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.