செழிப்பும் வளமும் கொண்டிருந்த காரைநகர் விழானை களபுமி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சண்முகம் விசுவநாதர் முருகேசு இராசம்மா தம்பதியினரின் ஏழாவது புதல்வனாக குணரட்ணம் 1960-11-11 ஆம் நாள் பிந்தார்.
தனது ஆரம்பக் கல்வியினை காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலயத்தில் தரம் மூன்று வகுப்பு வரையும் ஆலடி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தரம் 5 வரையும் கற்று தந்தையின் தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வியின் தொடர்ச்சிக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு எஸ்.எஸ்.சீ வரை கற்று உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக தந்தையாரின் விருப்பப்படி யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் இணைக்கப்பட்டார். பின்னர் தனது பதினேழாவது வயதில் தனது அபார துணிச்சலுடன் தந்தையின் வர்த்தகத்துறையில் கால் பதித்தார். தந்தையாருக்கு இவர் வர்த்தகத்தில் ஈடுபடுவது விருப்பமில்லையாயினும் வேறு வழியின்றி தனது வியாபாரத்தில் இணைத்துக் கொண்டார். இன்று மேன்மையான அறிவு, விடாமுயற்சி, ஒழுக்கம், விழுமியம், ஏழைகளை வாழ வைக்கும் கௌரவமுடைய தொழில் அதிபராக தர்மத்தின் வழி நிற்கும் உத்தம வர்த்தகராக உலகம் போற்றும் தொழில் அதிபராக மேன்மையுறு மனிதராக எஸ்.வி.முருகேசு என்னும் வியாபார நிறுவனத்தினூடாக தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்றார்.
தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் வர்த்தகத்தைக் கவனிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட குணம் அவர்கள் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக கொழும்பு டாம் வீதியில் ஒரு இடத்தை சொந்தமாக வாங்கி தனது வணிகத்தை நிலைநிறுத்தினார். படிப்படியாக உயர்ந்தார். இவ்வருடம் தந்தையாரின் நூறாவது பிறந்த நாளில் தனயன் போற்றப்படுகின்றார்.
1993இல் தனது 33 வது வயதில் காரைநகரைச் சேர்ந்த பத்மின என்னும் பெண்மணியை திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களிருவரையும் கல்வியில் உயர்த்தியதுடன் வணிக மாணித்துறையில் பட்டம் பெற்ற இரண்டாவது புதல்வியை தனது வணிக நிறுவனத்தடன் இணைத்துமுள்ளார்.
சமயம், கல்வி, கலை, சமூகப்பணி என அனைத்திலும் ஈடுபட்டு வரும் இவர் கல்ரெக்ஸ்,யுனிலிவர், லிட்ரோ சயமல் எரிவாயு போன்ற பொருள் வியாபாரங்களின் யாழ்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான ஏக விநியோகஸ்தர் உரிமையை பெற்றுள்ளார்.
முப்பது வருடங்கள் நாட்டில் நடைபெற்ற யுத்த சூழலில் யாழ்ப்பாண மக்களுக்கான பொருள்கள் விநியோகத்தில் முக்கிய பங்காற்றினார்.
தான் செய்யும் தொழிலுக்கூடாக ஈட்டுகின்ற செல்வத்தில் ஒரு வீதத்தினையாவது பொதுப்பணிகளுக்குச் செலவிட வேண்டு மென்ற எண்ணம் உருவாகும் லட்சம் பேர்களில் ஒருவராக எஸ்.வி.குணரட்ணம் அவர்கள் முகிழ்த்தெழுந்தார்.
எமக்கெல்லாம் முன்னுதாரணமாக – மக்களை நேசித்து மனிதனாகத் திகழும் யாழ்ப்பாணத்து மிகப்பெரிய வர்த்தக ஆளுமை எஸ்.வி.குணரட்ணம் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம் 2023ஆம் ஆண்டு உலகப் பண்பாட்டு தினத்தினை முன்னிட்டு நடத்திய முப்பெருந்தமிழ்விழாவில் “பணிநேயப்பரிதி“ என்னும் விருது வழங்கி பெருமைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.