அறிமுகம்
அமைதி, அடக்கம், கிரகிக்கும்தன்மை, குருபக்தி நிறைந்த தன்னடக்கமுடைய ஒருவராக எம்மத்தியில் வாழ்ந்து மிருதங்கக்கலையில் தடம் பதித்த வித்துவான் க.ப.சின்னராசா அவர்கள் யாழ்ப்பாணத்து மிருதங்க வித்துவான்களில் முக்கயமானவர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு என்பது வரலாற்றில் கலைப்பூமியாகத் திகழும் பிரதேசம். ஐவகை நிலங்களான மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி, பாலை என அனைத்து வளங்களையும் ஒருங்கே கொண்டமைந்த பூமி. ஒருபுறம் வெற்றிலைச் செடியும் மறுபுறம் ஆன்மீக வளமும் என வரலாறு பேசும். நெய்தல் நிலமாகிய மயிலிட்டி என்னும் பதியில் இசைக் கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் ஓதுவார்களும் நிறைந்திருந்து கலை வளர்த்த பாரம்பரியத்தில் அமரர்களான க.பண்டாரம் நாகமுத்து தம்பதிகளின் புதல்வனாக 1934-07-18ஆம் நாள் பிறந்தார். நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயரந்து இலக்கம் 87. மானிப்பாய்வீதி, மருதனார்மடம் என்னும் முகவரியில் தற்காலிகமாக வாழ்ந்து வந்த இவர் கலைப் பாரம்பரியப் பூமியில் கலைஞானத்தோடு பிறந்து மிகச் சிறந்த மிருதங்க வித்துவானாக பிரகாசித்து அமைதியாக இருந்து கலைத்துறையில் பலநூற்றுக்கணக்கான மிருதங்க மாணவர்களை உருவாக்கி சாதித்;த ஆளுமையாளராவார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியினை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் ஆரம்பித்து இடைநிலை, உயர்;கல்வி வரை கற்று ஆங்கில மொழி மூலம் எஸ்.எஸ்.சி தரத்தினை 1955ஆம் ஆண்டு நிறைவேற்றினார். பின்னர் 1960ஆம் ஆண்டு தமிழ் மொழியில் கற்று எஸ்.எஸ்.சி தரத்தினை அடைந்தார். தனது பதினாறாவது வயதில் மிருதங்கக்கலை மீது ஆர்வங்கொண்டு மிருதங்க கலை வாழ்வினை ஆரம்பித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் ‘சங்கீதரத்தினம்’ டிப்ளோமா பட்டத்தினை 1974ஆம் ஆண்டு பெற்றார்.
1970ஆம் ஆண்டு பராசக்தி என்னும் மங்கையை கரம்பற்றித் திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட இவர் ஒரேயொரு பெண்பிள்ளைச் செல்வத்தினைப் பெற்று அவரை கல்வியில் உயரவைத்து நூலகத்துறையில் ஆழ்ந்த அறிவுடை வித்தகராய் உருவாக்கி இன்று தலைசிறந்த நூலகராகப் பணியாற்றுவதற்கு வழியேற்படுத்தினார்..
மிருதங்க வித்துவானாக க.ப.சின்னராசா அவர்கள்.
தனது பதினாறாவது வயதில் ஆரம்பித்த மிருதங்க கலையில் வித்துவானாக தொடர்ந்து பயணித்த பெருமை இவருக்குரியது. வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மிருதங்க வித்துவான் தம்பிராசா அவர்களிடம் ஆரம்பக் கலையை பயின்றார்.; பின்னர் மிருதங்க வித்துவான் சங்கீதபூ~ணம் ஏ.எஸ்.இராமநாதன் அவர்களிடம் எட்டு வருடங்கள் பயின்று காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கம்பன் கலைக்கழக ஆதரவுடன் சங்கீதவித்துவான் ஐயாக்கண்ணு தேசிகர் தலைமையில் இணுவில் தவில் வித்துவான் சின்னராசா முன்னிலையில் தனது மிருதங்க அரங்கேற்றத்தினை நிகழ்த்தினார். சங்கீதபூஷணம் ஏ.எஸ்.இராமநாதன் அவர்கள் உலகமறிந்த வித்துவான். தமிழ்நாடு சிதம்பரத்தைச்சேர்ந்த இவர் யாழ்ப்பாணம் வருகை தந்து திருநெல்வேலியில் தனது வாழ்விடத்தை அமைத்து மிருதங்க கலை பயிற்சியை ஆரம்பித்தார். ஆரம்பத்தின்போது மூன்று மாணவர்களுக்கு மிருதங்க கலையை பயிற்றுவித்து வந்தார். அம் மூவரும் யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த மிருதங்க வித்துவான்களாக கலையுல கில் மிளிர்ந்தவர்கள். அவர்களில் குருநகர் ரீ.பாக்கியநாதன்,வண்ணார்பண்ணை அம்பலவாணர், மயிலிட்டி ப.சின்னராசா ஆகியோராவர். 1970ஆம் ஆண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிருதங்கத்துறை யின் வடஇலங்கை சங்கீத சபையின் முதலாவது மிருதங்க மாணவனாக ஆசிரியர் தராதரம்பெற்ற சின்னராசா அவர்கள் இலங்கை வானொலி தாளவாத்தியக் கலைஞனாக தன்னை முன்னிலைப்படுத்தினார். 1976ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் மிருதங்க வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடம், வடஇலங்கை சங்கீத சபை அனைத்துலக அறிமுறைத்தேர்வுப் பரீட்சகராகவும் கடமையாற்றியவர்.
தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபை
பருத்தித்துறை ஞானசம்பந்தர் கலைமன்றம்.
யாழ்ப்பாணம் ரசிக ரஞ்சன சபா.
இணுவில் இசை,நடன கிராமியக் கலைக்கல்லூரி.
மாவிட்டபுரம் முத்தமிழ் கலைமனறம்.
அளவெட்டி தொண்டர் சபை.
சுhவகச்சேரி கலைமன்றம்.
குரும்பசிட்டி சன்மார்க்க சபை.
சங்கானை கலைமன்றம்.
இணுவில் இளந்தொண்டர் சபை.
வண்ணார்பண்ணை வீ.கே.நல்லையா குருN~த்திரம் ஆகிய கலை நிறுவனங்களில் மிருதங்க ஆசிரியராக தன் கலைப்பணியாற்றி கலைநயம்மிக்க நல் மாணாக்கர் பலரை உருவாக்கினார். அவர்களுக்கான மிருதங்க அரங்கேற்றத்தினையும் நிகழ்த்தி கலைஞர்களாக அங்கீகரித்தார்.
தனது கலை வாழ்வின் அனுபவத்தின் மூலம் பெற்ற அறிவுத்தேட்டத்தினை ஒலிநாடாவுடன் கூடிய ‘விநாக மகத்துவம்’, ‘பல்லவி அமுதம்’ ஆகிய இருநூல்களையும் வெளியிட்டார். ;பல்வகைப் பல்லவிகள்’, ‘கச்சேரிக்கும் நடனத்துககும் ஏற்ற பாடல்கள்’, ‘அறிமுறை செய்முறை இணைந்த மிருதங்கப் பாடநூல்’, ‘தாளத்தின் உரைநடை உற்பத்தி சித்திரம்’ ஆகிய நூல்கள் அச்சேறாமல் கையேட்டுப்பிரதிகளாக இன்றுவரை இருக்கின்றன. (இவருடைய மாணவர்கள் தனித்தும் இணைந்தும் இந்நூல்களை வெளியிட முன்வருது வித்துவானுக்குச் செய்யும் குருதட்சனையாகும்.) நாற்பதிற்கும்மேற்பட்ட மிருதங்க மாணவர்களை அரங்கேற்றம் செய்து வைத்ததுடன் 20இற்கும் அதிகமான மாணவர்கள் வடஇலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதரம் சித்தியடைந்து மிருதங்க ஆசிரியர்களாக பயணித்து வருவதும் இவரது கலைத்தொடர்ச்சியின் பெருமை ஆகும். சிறு வயதிலிருந்தே நிறைய கேள்விஞானம் மிகுந்தமையாலும் தனது குரு இராமநாதன் அவர்களின் வாசிப்பு நுட்பங்கள், பெரிய மேதைகளின் வாசிப்பு நுட்பங்களையும் கேட்டு உள்வாங்கி தனக்கென ஒரு பாணியை வகுத்தார். புதிய கோர்வைகள், குறைப்புகள் எல்லாவற்றையும் தாளக் கணிப்பு தவறாது லயக்கோர்வையாக அளிக்க வல்லவர். அவற்றை ஆவணப்படுத்தியும் தனது மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தும் தனது இசைப்பாரம்பரியத்தை தொடர வைத்தார். தனது மாணவர்களின் மிருதங்க அரங்கேற்றங்களுக்கு அழகான புதிய பல்லவிகளை (இராகம்,தாளம்,பல்லவி) தனது பாணியில் மாணவர்களின் தரத்திற்கேற்ப அமைத்து வழங்கி அவற்றை ஏனையோரும் பயன்பெறும் வகையில் நூலுருவிலும் ஒளிப்பேழையாகவும் ஆவணப்படுத்தினார். அவரது நடன வாசிப்பும் வித்தியாசமானது. நடன ஆசரியர்களுக்கேற்ற பாடல்கள், நடன ஜதிகள் என்பவற்றையும் ஆக்கியுள்ளார். இசைக் கச்சேரிகளில் இசைக்கப்படும் இராகம், தாளம், பல்லவி என்பவற்றினை நடனத்திலும் புகுத்தி புதுமை கண்டார்.
இவரிடம் மிருதங்கம் கற்ற மாணவர்கள் ஆசிரியர்களாகவும், பொறியியலாளர் களாகவும், வைத்தியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கலாபூஷணம் க.ப.சின்னராசா அவர்களிடம் மிருதங்கம் பயின்று இன்று இத்துறையில் உலகம் பூராவும் சாதனையாளர்களாக மிளிரும் பலர் உள்ளனர். அவர்களில் ஆசிரியரால் பட்டியலிடப்பட்டுள்ளவர்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும்.
திருவாளர் வேணிலான் – ஆசிரியர், கொழும்பு.
திருவாளர் ஜெம்புநாதன் – விரிவுரையாளர், கொழும்பு.
திருவாளர் கஜன் – விரிவுரையாளர், நுண்கலைப்பீடம்.
திருவாளர் மாதவன், – விரிவுரையாளர் – மட்டக்களப்பு.
திருவாளர் சு.வரதராஜன் – ஆசிரியர். யாழ்ப்பாணம்
திருவாளர் சி.செந்தூரன் – ஆசிரியர், யாழ்ப்பாணம்
திருவாளர் வினோத்காந் – ஆசிரியர், யாழ்ப்பாணம்
பிரம்மஸ்ரீ சிவசுந்தரசர்மா – ஆசிரியர், யாழ்ப்பாணம்
திருவாளர் சுபேஸ் – கிராம சேவகர். யாழ்ப்பாணம்
திருவாளர் ஞானவேல் – வங்கியாளர். யாழ்ப்பாணம்
திருவாளர் அமிர்தலோஜனன் – யாழ்ப்பாணம்
திருவாளர் அருட்செல்வன் – அமெரிக்கா.
திருவாளர் கிருஸ்னானந்தன் – கனடா.
திருவாளர் கணேசதாசன் – கனடா.
திருமதி சந்திரகுமாரி – கனடா.
திருமதி புஸ்பராணி – கனடா.
திருவாளர் விவேகானந்தன் – சுவஸ்ற்சர்லாந்.
திருவாளர் சிவரூபன் – ஜேர்மனி.
திருவாளர் பிறின்ஸ்அன்று – சுவிஸ்ற்சர்லாந்து ஆகியோர் ஆசிரியரது குறிப்பிலி ருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விபரங்களாகும். இவர்களைத் தவிர இன்னும் பலர் இருக்கக் கூடும். ஆசிரியர் தனது நினைவில் இருந்த தகவல்களை மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். (ஆசிரியரிடம் பயின்ற மாணவர்கள் எவராவது இப்பதிவைப் பார்த்தால் தங்களது பெயர் விடுபட்டிருப்பதாக உணர்ந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.)
இக்கட்டுரையினை எழுதுவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாய் நின்ற மிருதங்க வித்துவான் மிருதங்க கலாவித்தகர், இசைச்செல்வர், கலைச்சுடர், லயஞானபேரொளி வை.வேனிலான் அவர்களுக்கும் வேணிலான் அவர்களது தொடர்பினை ஏற்படுத்தி உதவிய யாழ்ப்பாணப் பெட்டக மதியுரைஞர் மூதவை உறுப்பினர் கணனிப்பொறியியலாளர் சிவப்பிரகாசம் சக்திதரன் அவர்களுக்கும் நன்றி.