அறிமுகம்.
மரபுவழிக் கல்விப்புலமையாளரும், நவீன கல்விப்புலமையும் கொண்ட பண்டிதரவர்கள் பாரம்பரிக் கலைகளிலும், இலக்கியத்;திலும், நாடகம் நடிப்பு, பிரிதியாக்கம், மரபுக் கவிஞன் என பல்துறை ஆற்றலாளனாய்–ஆளுமையாள னாய் திகழ்கின்றார். காப்பியதாசன், ஆடல்வல்லான், வட்டூர்க்கடம்பன் என்னும் புனைபெயர்களில் பத்திரிகைகளிலும் ஆக்கி இலக்கிய சஞ்சிகை களிலும் இறக்கும் வரை பல காத்திரமான ஆக்கங்களை எழுதியவர். இத்தகைய ஓர் ஆளுமையாளனுடன் பழகுவதற்கு கிடைத்த சந்தர்ப்பம் யாம் பெற்றபெரும்பேறேயாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு பிரதேசத்தின் வட்டுக்கோட்டை கிராமத்தில் வடமோடிக்கூத்தும் கிராமியக் கலைவடிவங்களும், இயற்கை மருத்துவமும் இலக்கியமும் சிறந்து விளங்கும் சிந்துபுரம் என்னும் சிற்றூரில் ஆசிரியர் திலகமாய் விளங்கிய மயில்வாகனம் நவரத்தினம் பாக்கியம் தம்பதியினரின் இரண்டாவது புதல்வனாய் 1947-12-10ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை வட்டு திருநாவுக்கரசு வித்தியாலயத்திலும் உயர் கல்வியினை வட்டு இந்துக்கல்லூரியிலும் கற்று (சி.பா.த) விஞ்ஞானம் ஆங்கிலப் பிரிவில் சித்தியடைந்தார். மரபுவழிக் கல்வியும் நவீன கல்வியும் இணைந்தவருமான ஆளுமையின் அடையாளமாகத் திகழும் பண்டிதரவர்கள் ஓர் பயிற்றப்பட்ட ஆசிரியர் ஆவார்.
ஆசிரியர், விரிவுரையாளர், நூலகர், தொழில்நுட்பவியலாளர், பத்திரிகை யாளர், எனப் பல பரிமானங்களை பெற்றுள்ள இவர் இன்று நம்மிடையே வாழ்ந்து வழிப்படுத்திக்கொண்டிருக்கும் மரபுவழிக் கல்விச் சிந்தனையாளர் என்றால் மிகையாகாது.
இலங்கை தொழில் நிறுவனத்தின் (I.L.O) உதவித்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சி நெறியில் பங்குபற்றி தொழில்நுட்பக் கல்லூரியால் நடத்தப்பட்ட கைத்தொழிற்பேட்டையில் கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினைப் பெற்றார். பின்னர் வட்டுக்கோட்டையில் இயங்கிய சீநோர் வலைத்தொழிற் சாலையில் தொழில்நுட்ப மேற்பார்வையாளராக எட்டு வருடங்கள் கடமையாற்றிப்பெற்ற அனுபவத்தினூடாக சொந்தமாக தொழிற்சாலை ஒன்றினை ‘மாயன்’ என்னும் பெயரில் மின்னிணைப்பு மற்றும் மின் ஒட்டும் தொழிற்சாலையை ஆரம்பித்து நடத்தி வந்தார். இக்காலப் பகுதியில் அவரது கல்வி கற்கும் தாகம் அவரை நூலகத்துறையில் கற்கும் வாய்ப்பினை பெற்று நூலக விஞ்ஞான இடைத்தரவியற் பரீட்சையில் சித்தியடைந்து வட்டுக்கோட்டை, சங்கானை, சுழிபுரம் பகுதிகளில் இயங்கிய நூலகங்களில் நூலகராக கடமையாற்றிய போதிலும் தனது பண்டிதக்கல்வியை வளர்க் கவோ அல்லது பயன்படுத்தவோ இவை துணைநிற்காது என உணர்ந்து தனது நூலகர் பதவியை துறந்து 1991ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றிய காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். இக்கல்லூரியில் பதின் மூன்று வருடங்கள் ஆசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்று தினக்குரல் பத்திரிகையின் கோலமஞ்சரி பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றி பத்திரிகையாளனாக தன்னை வெளிப்படுத்தினார். 1970-1990 காலப்பகுதிகளில் ஈழநாடு, உதயன், முரசொலி ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகளும், கவிவரிகளும் வெளிவந்ததுடன் வீரகேசரி, தினகரன் இதழ்களில் விமரிசனங்களும் வெளிவந்தன. இத்தகைய செயற்பாடுகளால் இவருக்கு புலவர் பார்வதிநாத சிவம் அவர்களின் தொடர்பு கிடைத்தது. தற்பொழுது யாழ்ப்பாணப் பல்கலக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புகள் பீடத்தில் தமிழ்த்துறையில் வருகைதரு விரிவுரையாளராக கடமைற்றுகின்றார்.
1969ஆம் நாள் வட்டுக்கோட்டை சிந்துபுரம் குழந்தைவேலு நல்லம்மா தம்பதிய ரின் புத்திரியாம் மகேஸ்வரி என்னும் மங்கையை திருமணம் என்னும் பந்த்தில் கரம் பற்றி இல்லறத்தினை நல்லறமாக வழிநடத்தினார். இதன் பயனாக மூன்று பிள்ளைச் செல்வங்களைப் பெற்றார். தமிழ்ன்பாற் கொண்ட பற்று பிள்ளைகளுக்கு தூயதமிழில் பெயர்சூட்டி மகிழ்ந்தார். மூத்த புதல்வனுக்கு மணிமாறன் எனவும் இரண்டாவது புத்திரிக்கு ஆரணி எனவும், மூன்றாவது புத்திரனுக்கு துளசிமாறன் எனவும் பெயர்களை சூட்டினார். அவர்களை கல்வியில் உயரவைத்தது மட்டுமல்லாது மூத்த மகனை கல்வி நிர்வாக சேவையாளனாய் உருவாக்கி கொழும்பு பம்பலப் பிட்டி இந்துக்கல்லூரியின் அதிபராய் பணியாற்றும் கல்வியாளனாய் அவையத்து முந்தியிருக்கச் செய்தார்.
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க பண்டிதரான கடம்பேசுவரனவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணி பட்டத்தினையும், தமிழ்நாடு கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இளம் விஞ்ஞானமாணி பட்டத்தினையும் பெற்றுக் கொண்ட இவர் பயிற்சி பெற்ற ஆசிரியராகவும், நூலக விஞ்ஞானத்துறையினைக் கற்றவராகவும், தொழில்நுட்ப அறிவில் பாடங்களைக் கற்றவராகவும், ஊடகவியல் துறையில் தடம் பதித்தவராகவும் திகழ்கின்றார்.
பல்பரிமாணம் பெற்ற பண்டிதர்.
பண்டிதர் செ.துரைசிங்கம், அரியாலையூர் பண்டிதர் இலக்கணக்கொத்து க.இராசையா, வியாகரண சிரோன்மணி சீதாராம சாஸ்திரிகள், வித்துவான் ந.சுப்பையாபிள்ளை, வேலணை சரவணை வித்துவான் க.பொன்னையா பண்டிதர், புலவர்மணி சோ.இளமுருகனார், இவர்களின் கூட்டாக வித்துவான் வேலன் அவர்கள் நாவலர் மகா வித்தியாலயத்தில் அதிபாராயிருந்த காலத்தில் நாவலர் காவிய பாடசாலையில் மரபுவழி தமிழ்க் கல்வி தொடர்பிலே வகுப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்தினார். இத்துணை பண்டித கல்விப் பெருந்தகைகளோடு நெருங்கிப் பழகிய பண்டிதரவர்களை ஆசிவதித்து வாழும் வரை உறவு பாராட்டி சமூகத்தின் முன்னிலையில் வைத்தனர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பாலபண்டித, பண்டித வகுப்புகளுக்கான கல்வியை மட்டுவில் பண்டிதர் ச.பொன்னுத்துரை அவர்களிடம் குருகுல முறையில் கற்றார். பண்டித பட்டத்தின் பின்னர் இலக்கண வித்தகர் நமசிவாயதேசிகர், ஏழாலை பண்டிதர் மு.கநதையா, பண்டிதர் அ.ஆறுமுகம், பண்டிதர் உமாமகேஸ்வரன், கலாநிதி வித்துவான் க.ந.வேலன் போன்ற சான்றோர் சேர்க்கையானது பண்டிதத்துவத்தின் மேலதிகமான அறிவுத்தேடலுக்கும் சந்தேக நிவர்த்திக்கும் கல்வி வளர்ச்சிக்கும் ஆதார சுருதியாய் அமைந்து தனிப்பெரும் ஆளுமையாய் மிளிர வைத்தன.
பண்டிதர்களால் உருவாக்கப்பட்ட ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் செயலாளாரய் நீண்ட காலம் பணியாற்றி அச்சங்கத் தினை 40வருடங்களுக்கு மேலாக தன் தோள் மிது தாங்கிக் கட்டிக்காத்து பல பாலபண்டிதர்களும் பண்டிதர்களும் உருவாகுவதற்கு காலய் அமைந்தார். இறக்கும் வரை அதன் செயலாளராகப் பணிபுரிந்தவர். கீழைத்தேய மொழியியல் கல்லூரி என்னும் பெயரில் சங்கத்தினை செயற்படுத்தினார். சங்கத்திற்கான சொந்தக் கட்டடத்தினை யாழ்ப்பாணம் கொட்டடியில் அமைந்து சங்கக் காணியில் நிறுவினார். துர்ரதிஸ்டவசமாக அக்கட்டடம் இராணுவத்தினர் கைவசம் இருந்தமையினால் தற்காலிகமாக கள்வியங்காடு ஞானோதய வித்தியாலயத்தின் கட்டடத்தொகுதியில் சங்கத்தின் அலுவலகத்தினை நிறுவி தமிழ்ப்பணியை தொடர்ந்தார். இக்கட்டடத்தினை மீளவும் சங்கம் பெற்றுக்கொண்வதற்காக அவர் அலைந்த போதிலும் இன்று வரை அது மீளாக் கனவாகவே அமைந்து விட்டது. அவரின் கனவாகிய தமிழ் மரபுக் கல்வியை அழியவிடாது பேணித்தொடரும் வகையில் சிந்தித்த அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா அவர்களது ஆதரவோடு பல்கலைக்கழகத்தில் இணைத்து அதனை பல்கலைக்கழக கற்கைக்குரியதொன்றாக மாற்றியமைத்து உயரிய அங்கீகாரத்தினை தோற்றுவித்தார்.
தொழில்நுட்பவியலாளராகிப் பின்னர் நூலகராய் தொழில் அதிபராய். ஆசிரியராய், செயலாளராய், வருகைதரு விரிவுரையாளராய், பல்முகங் காட்டும் நல்ல மனிதராய் வாழ்ந்து வரும் பண்டிதரவர்கள் பத்திரிகைத் துறையில் ஈழநாடு, ஈழமுரசு பத்திரிகைகளின் அலுவலக நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் தினக்குரல் பத்திரிகையின் கோலமஞ்சரி வார இதழின் ஆசிரியராகவும் சுன்னாகம் அவைக்காற்றுகைக் குழு வெளியீடான கல்யாணி நாடக அரங்கியல் சஞசிகையின் ஆசிரியர் களில் ஒருவராகவம் சிறப்பான பணிகளில் மிளிர்ந்தார். கல்வித் திணைக்களத்தின் கல்வி தொடர் பான செயலமர்வுகளில் விரிவுரையாளராகப் பங்குகொண்டும் தனது ஆளுமைத்திறனை வெளிப்படுத்தினார். தெல்லிப்பளை கலை இலக்கியக் களத்தின் இயற்தமிழ் அவைத் தலைவராகவும் வலிமேற்கு பிரதேச நாட்டார் கலைகள் அபிவிருத்திக் குழு தலைவராகவம் வடக்குமாகாண கல்வி அமைச்சின் ண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிறந்த நூல் மதிப்பீட்டுக் குழுவில் ஒருவராகவும் இன்று வரை செயற்படுகின்றார். இவ்வாறு பல்பரிமாணத்தில் அனுபவங்களைப் பெற்ற பண்டிதரவர்கள் தன்னுடைய ஆய்வினூடாக பல நுல்களுக்குச் சொந்தக்காரராக விளங்குகின்றார். அந்த வகையில் பின்வரும் நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தவர்.
மூலவேர் (கட்டுரைகள்)
பொற்கலசம் (கட்டுரைகள்)
தீந்தேன் (சிறுவர் இலக்கியம் தொடர்பான கவிதைகள்)
காப்பியதாசனின் கட்டுரைகள்.
நன்னூல் விருத்தியுரை.
தமிழ் இலக்கியத் திறனாய்வு
இலக்கண மரபு.
செந்தமிழ் காப்போம்.
தொல்காப்பிய எழுத்ததிகார விளக்கவுரை.
தமிழ் அறிஞர் சரித்திரம் (இணைந்து எழுதியது)
ஞானச் செல்வர் (இணைந்து எழுதியது)
ஆய்வுக் கட்டுரைகள் (நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுதியமை)
பொறுப்பனோயான் (நாடகநூல்)
இதனைவிட முதுதமிழ்ப்புலவர் மு.நல்லதம்பி பாடல்கள், முதுதமிழ்ப் புலவரின் கட்டுரைகள் ஆகிய இரு நூலினதும் பதிப்பாசிரியராகவும் பணியாற்றிய பண்டிதர் ஆளுமைத்திறனுக்காக பல்வேறு விருதுகளும் பாராட்டுக்களும் வங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாடகக் கலைஞனாக பண்டிதரவர்கள்
சுன்னாகம் அவைக்காற்றுகைக் குழு தயாரித்த நாடகங்களில் முக்கிய வகிபாகத்தினை பண்டிதவர்கள் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இயல்பாகவே பண்டிதருள் நாடக படைப்பிற்கான உந்துதல்களும் ஆற்றல்களும் உள்ளிருந்தன. அந்த ஊற்று சுன்னாகம் அவைக்காற்றுகைக்குழுவால் மேற்கிளம்ப வாய்ப்பளித்தது. தெல்லிப்பளை மகாயனக் கல்லூரியின் தமிழ்த்தினப் போட்டிக்காக சங்க இலக்கியங்களிலிருந்து கருப்பொருளைப் பெற்று இலக்கிய நாடகங்களை உருவாக்கினார். குறிப்பாக ஐவகை ஒழுக்கங்களான நெய்தல், முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம் முதலிய ஒழுக்கங்களை தழுவியதாக மாணவர் ஆற்றுகைக்குரிய நாடகப்பனுவல்களை உருவாக்கினார். நெய்தலை அடியாகக்கொண்டு “பொறுப்பனோ யான்“, பாலை நிலத்தினை அடியாகக் கொண்டும் முல்லை நிலத்தினை அடியொற்றியதாக “பாரிவள்ளல்“ கதையி னையும் நாடகங்களாக்கினார். அவற்றினை சுன்னாகம் அவைக்காற்றுகைக்குழு சார்பில் மா.அருள்சந்தினால் நெறியாள்கை செய்து அரங்கேற்றம் செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதிகளை உள்ளடக்கிய நாடகநூற் தொகுப்பாக ”பொறுப்பனோ யான்” என்னும் பெயரில் வெளியிட்டார்.
நாடகமும் அரங்கியலும் கற்கை நெறி மாணவ்களுக்காக அமரர் ஆறுமுகம் கல்யாணசுந்தரேசன் அவர்களது நினைவாக “கல்யாணி“ என்னும் அரங்கியற் சஞ்சிகையினை் இணை ஆசிரியராய் அமர்ந்து சஞ்சிகையினை புதிய வடிவில் வெளியிட்டு வந்தமை இவருடைய மரபுக்கப்பால் நவீன சிந்தனையை உருவாக்கும் திறன் உணரமுடிகின்றது.
இவர் பிறந்த ஊர் வடமோடிக்கூத்தில் சிறந்து விளங்கும் பிரதேசமாகும். இக்கூத்தில் தலைசிறந்த அண்ணாவிமார்களும் நடிகர்களும் வாழ்ந்த பிரதேசம். இப்பின்னணியில் இவரும் வடமோடிக் கூத்தின் ஆடல்வல்லவனாய் திகழ்ந்தவர். இவருடைய புதல்வர்களில் மூத்தவரான மணிமாறன் மிகச்சிறந்த வடமோடி ஆட்டக் கலைஞனாவார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்.
இலங்கை இலக்கியப் பேரவையின் 2009ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதினையம் 2010ஆம் ஆண்டு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிறந்த நூற் பரிசினையும், காப்பியதாசன் கட்டுரைகள் நூலுக்கான இரா உதயணன் விருதினை யாழ் பல்கலைக்கழகத்தின் புலமைசார் கௌரவத்திற்காகவும் பெற்றுக்கொண்டார்.
கலைஞர்கள் வாழும் போதே வாழ்த்தப்படவேண்டியவர்கள் என்ற உயரிய சிந்தனை பண்டிதரவர்களுக்கு உயரிய கௌரவங்களை வழங்கியது. அரச திணைக்களங்களும் பொது அமைப்புகளும் பல்வேறு கௌரவங்களையும் விருதுகளையும் வழங்கி அவரின் தமிழாளுமையினை – மரபுவழிசார் கல்விப்புலமையினை உலகறியச் செய்தார்கள்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2010ஆம் ஆண்டு ஆளுநர் விருதினையும், கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும் வழங்கிக்கௌரவித்ததோடல்லாமல் நாட்டார்கலை, இலக்கியம், நாடகம் என்பவற்றிற்காககலைவாரிதி என்னும் கௌரவத் தினையும் வழங்கினார்;கள்.
யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக்கலைக்கூடம் 2023ஆம் ஆண்டு உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு நடத்திய முப்பெருந்தமிழ்விழாவில் கலைநேயப்பரிதி என்னும் விருதினை வழங்கி கௌரவித்தார்கள்.
சமூகப் பணியாளனாய் பண்டிதர்
தனது சொந்தக் கிராமத்திற்கு மட்டுமல்லாது தனது தமிழறவையும் கலைப்புலமையையும் நாடு கடந்த நிலையில் வாழும் தமிழ் மக்களுக்காக வெளிப்படுத்தினார். அவரது சேவைகள் குறுகிய நிலையில் மட்டுப்படுத்தப்படாமல் விரிவடைந்தது.
ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராய் அமர்ந்து தமிழ் கூறும் நல்லுலகில் பல்வேறு பணிகளை ஆற்றிய பெருந்தகையாளர். சுங்கம் தனது சொந்தக் கட்டடத்தை இழந்து நின்ற போதிலும் மனந்தளராது பல்வெறு இடங்களிலும் சங்கத்தை செயற்படுத்தி வந்தவர். பாரம்பரிய கல்வி முறையினை பயில்வதில் நாட்டமற்றுக் காணப்படும் மனோபாவமுள்ள இன்றைய சமூகத்தில் பண்டிதர் கடம்பேசுவரன் அவர்கள் தனித்து நின்று மரபுவழிக்கல்வியின் போராளியாய் வாழ்ந்தவர்.
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், சைவபரிபாலன சபை, ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் பரீட்சகராக பணியாற்றியதுடன் சிறந்த சைவப்புலவர்கள் உருவாவதற்கும் நற்பேறுடை பண்டிதர்கள் உருவாவதற்கும் பாலமாய் செயற்பட்ட பெருந்தகையாளன். இவற்றினை விட பண்டிதர் பிறந்த மண்ணில் பலகோடி ரூபா பெறுமதியில் நூலகம் ஒன்று அமைவதற்கு அடித்தளமிட்டவராகவும் வட்டுக்கோட்டைத் தொகுதி தமிழ்ச் சங்க வெளியீடுகளின் பதிப்பாசிரியராகவும் பணிபுரிந்து பண்புடை மனிதாராய் பன்முக ஆளுமையாளராய் வாழ்ந்த பண்டிதரவர்கள் 2024-04-16ஆம் நாள் நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்.