யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை என்னும் ஊரிலே கோடையிடி வித்வான் என அழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை என்னும் மிருதங்க வித்வான் தம்பாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் மூத்த புதல்வனாக 05.02.1932-05-02ஆம் நாள்;; பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரத்தினசிங்கம் என்பதாகும்.
இரத்தினம் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை நாவாந்துறை றோ.க.த.வித்தியாலயத்தில் பயின்றார். இவருக்கு கல்வியில் நாட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் கல்லூரிப்படிப்பை நிறுத்திக் கொண்டவராய்த் தன் தந்தையார் வழியிலேயே மிருதங்க இசைக்கலை பயில்வில் ஆர்வம் கொண்டவராய்த் தன் தந்தையாரைப்பின்பற்றி மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார். எனினும் அவருக்கு அக்காலத்தில் காவடி, நாடகம், சின்னமேளம், பஜனை போன்ற நிகழ்சிகளுக்கே வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலமாக இவருக்கு நிறைய வருவாயும் கிடைத்தது எனலாம்.
திரு. க. இரத்தினம் அவர்கள் மேற்கூறிய நிகழ்ச்சிகளுக்கு வாசிப்பதை விரும்பாத இவருடைய தந்தையார் (கோடையிடி தம்பாபிள்ளை) இவரை அக்காலத்து வயலின் வித்துவான் மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை அவர்களது அனுசரணையுடன் இந்தியாவுக்கு அனுப்பிச் சிலகாலம் வாய்ப்பாட்டு இசையையும் கற்பித்தார். தொடர்ந்து மிருதங்க இசையையும் கர்நாடகப் பாணியில் பயில வேண்டும் என்னும் நோக்கத்துடன் தஞ்சைக்குற்றாலம் சிவவடிவேற்பிள்ளை அவர்களுடைய குருகுலத்தில் மிருதங்கம் கற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றார். யாழ்ப்பாணம் சண்முகப்பிள்ளை, புதுக்கோட்டை மகாதேவன், தஞ்சாவூர் நாகராஜன், தஞ்சாவூர் ஸ்ரீநிவாசன், குற்றாலம் விஸ்வநாதஐயர் போன்ற இசைக்கலைஞர்களும் இரத்தினம் அவர்களுடன் இதே குருகுலத்தில் மிருதங்கம் பயின்ற சகபாடிகளாக மாணவர்களாகவும் நண்பர்களாகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
தாயகம் திரும்பிய கலைஞர் இரத்தினம் அவர்களுடைய மிருதங்க அரங்கேற்றம் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் 1951ஆம் ஆண்டு வாய்ப்பாட்டு இசையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதே ஆண்டு நடைபெற்ற இசைப்புலவர் சண்முகரத்தினம் அவர்களுடைய அரங்கேற்றம் இவருடைய இசைக்கலையின் திருப்புமுனை எனலாம். தொடர்ந்தும் பல இசையரங்குகளிலும் மிருதங்கம் வாசித்து வரலானார். இசையரங்கு என்ற வகையில் பரதநாட்டிய நிகழ்வுகளுக்கு இவர் சிறப்பாக வாசிக்க ஆரம்பித்தார். இவருடைய மிருதங்க வாத்திய வித்துவத்திறமையினால் இலங்கை வானொலியில் 1952 ஆம் ஆண்டு நிலைய வித்துவான் நியமனம் கிடைத்தது. திரு. இரத்தினம் அவர்களுடன் சமகாலத்தில் நிலையக் கலைஞர்களாக வயலின் வித்துவான் வி.கே.குமாரசாமி, வாய்ப்பாட்டுக் கலைஞர் ஜோன்பிள்ளை போன்றவர்களும் கடமை புரிந்துள்ளார்கள். வானொலி மூலம் இவருக்கு மிருதங்கக்கலையில் பல வழிகளிலும் முன்னேற்றம் கண்டார்.
1952ஆம் ஆண்டு திருமணம் என்னும் நல்லறத்தில் இணைந்தார். தம்பித்துரை என்பவரின் மகளான வண்ணமணி என்பவரைத் திருமணம் செய்ததன் பயனாக இவர்களுக்கு ஒரு ஆண் மகவும், நான்கு பெண்களும் வாரிசுகளாக கிடைத்தனர். 1965களில் இவர் கே.பி.நவமணி என்பவரையும் தம் வாழ்க்கையில் வரித்துக்கொண்டார். இவருக்கு மக்கள் இருவர். இவர்களில் இரத்தினதுரை என்பவர் இலங்கை வானொலியில் பல்லிசை வாத்தியக் கலைஞராக நிகழ்ச்சி வழங்கி வருகிறார். மற்றவர் மிருதங்க வித்வான் இரத்தினசிங்கம் கொழும்பு சென்ஜோசப் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இரத்தினம் அவர்களின் மகளைத் திருமணம் செய்து கொண்ட இராஜசிங்கம் என்பவர் மிருதங்கக் கலையை இரத்தினம் அவர்களிடத்திலேயே ஆரம்பித்து தற்போது மிருதங்க இசையில் பிரகாசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
திரு. இரத்தினத்தினுடைய மிருதங்க வாசிப்பானது தனித்துவமுடையது எனலாம். இவருடைய மிருதங்க வாசிப்பில் பரண்களின் சுருதி சுத்தமும் அதி துரித காலமுடையது. பக்க வாத்தியம் வாசிக்கும் வேளையில் மத்திம கால உருப்படிக்கு இடையிடையே மேற்காலடேகாக்களை வாசித்துப் பாடகரை உற்சாகப்படுத்தும் தன்மை இவருக்கே தனி. அதிலும் பரத நாட்டியம் இசை அரங்குகளில் இவருடைய மிருதங்க வாசிப்பு அதிசிறப்பு அமிசம் பொருந்தியதாகும். நட்டுவாங்கம், நாட்டிய வெளிப்பாடு போன்றவற்றிற்கு இவரின் வாசிப்பானது ஜதிகளை, பொருத்தமான இடத்தில் பொருத்தமான காலத்தில் வாசித்து மேடையிலுள்ளவர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் தன்மையது.
ஈழத்தின் தென்பகுதியில் “நாட்டியத்திற்கு மிருதங்கம் இசைப்பவர் இரத்தினம் அவர்களே” என்ற அளவில் அநேக நிகழ்ச்சிகளில் மிருதங்கம் வாசித்து கலைஞர்களையும் தன்னையும் பெருமைப்படுத்தியவர். திரு.இரத்தினம் மேடை நிகழ்ச்சிகளுடய இலங்கை வானொலி, ரூபவாஹினி ஆகிய நிலையங்களிலும் சிறப்புக்கலைஞராக தனி நிகழ்ச்சிகள் வழங்கியும், உள்நாட்டு வெளிநாட்டுக் கலைஞர்களுக்குப் பக்கவாத்தியம் வாசித்தும் பாராட்டுப் பெற்றவர். வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைகளுக்கும், நிலைய இசைக்கலைஞர் தேர்வுகளுக்கு பரீட்சகராகவும் சிலவருடங்கள் தேர்வாளராகவும்; கடமைபுரிந்துள்ளார். சிறந்த கலைச்சேவையின் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் இவருக்கு ‘கலாசூரி” என்னும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவர் இலங்கையில் மட்டுமன்றி ஜேர்மனி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று அநேக நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட கலைஞருமாவார்.
கலாசூரி இரத்தினம் அவர்கள் தனது வாழ்நாளில் தன்னிகரற்ற கலைஞனாக இசைச்சேவை புரிந்து கே.கே.அச்சுதன், எம்.கந்தசாமி, எம் விக்கிரமன், பிரமநாயகம், ஈஸ்வரசங்கர், போன்றவர்களை மிருதங்கம், கடம், கஞ்சிரா போன்ற லய வாத்தியங்களில் சிறப்பாகப் பயிற்சியளித்து உருவாக்கியுள்ளார். தனது பிற்காலத்தில் மிருதங்கம் பற்றிய தொழில் நுட்பத்தை ஆராய்ந்தும் இசைக்கருவிகளைச் சீர்படுத்தும் தொழிலில் இலங்கைத் தொலைக் காட்சியில் பேட்டி நிகழ்ச்சி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். தன் பிள்ளைகளையும்; மாணவர் பரம்பரையினரையும் மிருதங்க வித்வான்களாக உருவாக்கி மிருதங்கக் கலையின் கலைத்தொடர்ச்சியினை ஏற்படுத்தி சிறப்பான இசைச்சேவை புரிந்த கலாசூரி இரத்தினம் அவர்கள் 08.02.1995-08-02 ஆம் நாள்; தனது 63 ஆவது வயதில் கலையுலக வாழ்வை நீத்து அவ்வுலகமாம் நிலையுலகம் சென்றார்.