Saturday, October 5

பேராசிரியர்,கா. கைலாசநாதக் குருக்கள்.

0

தமக்கெனச் சிறிதும் வைக்காது தொடர்ந்து வழங்கிய பரந்தமனப்பான்மையினராக அந்தணர் குலத்து விளக்காக உயர்பண்பாளராக யாழ்ப்பாணத்து நல்லூரில் பிரம்மஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் தம்பதியரின் புதல்வனாக கைலாசநாதக் குருக்கள் பிறந்தார். தனது எண்பதாவது வயதை அண்மித்து வரும்வேளை அவுஸ்ரேலியாவில் அமரத்துவம் அடைந்த பெருந்தகையாளர் .பேராசிரியர், இலக்கியகலாநிதி, கலாநிதி, கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கட்டிக்காத்த இவ்வுயர் பண்புக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்.

இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் இந்தியா பூனா பல்கலைக்கழகத்திலும் ஆங்கில மொழி மூலமாக சம்ஸ்கிருத மொழியைக் கற்றுத் தாம்பெற்ற கல்விச் செல்வத்தை எமது நாட்டில் சிறப்பாக யாழ்ப்பாண மாணவர்களுக்கென்றே தம்மை அர்ப்பணித்து உலகளாவிய நிலையில் பிரசித்திபெற்று விளங்கிய பேராசிரியர் குருக்கள் அவர்கள் தனக்கேயுரிய இடத்தை வகித்து பரந்த சீடர்மரபுகளை உலகில் பலபாகங்களிலும் நிலைநிறுத்தினார்.

பேராசிரியர் குருக்களின் முன்னோர்கள், தாம் பூஜை செய்துவந்த வெள்ளியினாலான வேலாயுதத்தை ஓலையால் கோவில் அமைத்து கி.பி. 1793ஆம் ஆண்டு ஸ்தாபித்து நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஆரம்பத்திற்கு காரணமாக இருந்தவர் கிருஷ்ணையர். அவர் மகன்சுப்பையர். இவர் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நோர்த் தேசாதிபதியால் ‘கோவில் குருக்கள்’ எனக் கையொப்பமிட்டுக் கொடுக்கப்பட்டவர். இவரின் மகன் கிருஷ்ணையர். இவரின் மகன் கணபதிஐயர். இவரது மகனாக வெங்கடேசஐயர் சுந்தரம்மாளின் மகனே கார்த்திகேயக் குருக்கள். இவரே பேராசிரியர் குருக்களின் தந்தை. இம் முன்னோர்களின் மூதாதையர்கள் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து வசித்தவர்கள்.

சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் அவர்கள் ந.வே. கார்த்திகேயகுருக்கள் என அழைக்கப்படு பவர், இவரைத் தம்பையாக் குருக்கள் என்றும் அழைப்பர். இவர் சேர்.பொன். இராமநாத வள்ளலின் சமாகுருவாகத் திகழ்ந்தவர். வேதாகமவிற்பன்னர். சோதிட நிபுணர் இலங்கையின் பல இடங்களிலும் கும்பாபிஷேகக் கிரியைகளில் குருத்துவம் வகித்து மனமொருங்க கிரியைகள் நடத்துவதில் ஈடிணையற்றவர். இவரது தர்மபத்னி முனீஸ்வரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சுந்தரம்மாள் ஆவார். இவர்கள் தமக்கு சந்ததியினை வேண்டியும் தமது ஆத்மலாபத்தின் பொருட்டும் நல்லூரில் கல்வளவு எனும் காணியைப் பெற்று வடக்கு நோக்கியதாக பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கைலாசநாதர் கமலாம்பிகை, நடராஜப்பெருமான் ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்றதாகவும் சிவாகமமுறைப்படி அம்பிகையாகிய கமலாம்பிகையை வலப்புறம் கொண்டு விளங்கும் ஸ்ரீகைலாசநாதப் பெருமானைப் பிரதிஷ்டை செய்தனர். சுவாமி அம்பாளின் திருவருள் அவர்களுக்குக் கிட்டியது.

ஸ்ரீகமலாம்பிகாசமேத ஸ்ரீ கைலாசநாதப் பெருமானின் திருவருளால் பேராசிரியர் குருக்கள் அவர்கள் துர்மதிவருடம் ஆடிமாதம் முப்பத்தோராம் நாள் (15.08.1921) திங்கட்கிழமை பூராட நட்சத்திரத்தில் ஜனனமானார். பெற்றோர் தாம் முன்னர் கொண்டிருந்த விண்ணப்பப்படி கைலாசநாதகுருக்கள் நாமகரணம் செய்தனர். பேராசிரியர் குருக்களுக்கு தந்தையே குருவாக இருந்து ஐந்தாவது வயதில் அட்சரஆரம்பத்தையும்,ஏழாவதுவயதில் உபநயனம், யக்ஞோப வீததாரணம், பிரம்மோபதேசம ஆகியவற்றைச் செய்து வைத்தார். தொடர்ச்சியாக சமஸ்கிருத மொழியின் ஆரம்பக்கல்வியை தமது தந்தையாரிடம் பெற்று வந்ததோடு வைதிகக் கல்வியான வேத அத்யயனத்தில் வைக்கம் பிரம்மஸ்ரீ க. சிதம்பரசாஸ்திரிகள், சுன்னாகத்தை உறைவிட மாகக் கொண்ட பிரம்மஸ்ரீ P.V.சிதம்பரசாஸ்திரிகள், கோப்பாயில் சிலகாலம் வசித்து வந்த பிரம்மஸ்ரீ ஸ்ரீ நிவாஸசாஸ்திரிகள் ஆகியோரிடம் பத்தாண்டு காலமாக மரபுவழியாக வேத மோதும் விசேட பயிற்சியைப் பெற்றார். ஆகமக் கல்வியை தந்தையே உரிய நிமயங்களோடு கற்பித்து வந்தார்.

பேராசிரியர் குருக்களின் ஆரம்பக்கல்வி 1927 – 1930 வரையாகநல்லூர் மங்கையற்கரசி வித்தியாசாலையில் ஆரம்பமானது. சேர்.பொன். இராமநாதன் அவர்களால் சைவச் சிறார்களுக் கென்றே 1921ல் உருவாக்கப்பட்டபரமேஸ்வரிக் கல்லூரியில் 1931-1941 வரைகாலமும் கற்றுவந்தார்.

திருபுடை மருதூரிலிருந்து சுழிபுரத்திற்கு 1936ஆம் ஆண்டில் வந்து அங்கு கற்பித்துவந்த வியாகரண சிரோமணி பிரம்மஸ்ரீ கி. சீத்தாராம சாஸ்திரிகளிடம் பாணினீயவியா கரணம், காவ்யங்கள், நாடகங்கள், அலங்கார சாஸ்திரங்கள் முதலானவற்றை மரபுவழிக் கல்வி மூலம் கற்ற பேராசிரியர் குருக்கள் சமஸ்கிருத மொழியில் சிறந்த பாண்டித்தியம் பெற்று விளங்கினார்.

தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க தமது பதினெட்டாவது வயதில் முனீஸ்வரம் சிவஸ்ரீ சாம்பசிவக் குருக்கள் காலம்பிகை தம்பதிகளின் பன்னிரண்டு வயது நிறைந்த மகளான ஸ்ரீ மதிதிரிபுரசுந்தரி  அம்மாளை பேராசிரியர் குருக்கள் 04.02.1940இல் வைதிக முறைப்படி விவாகம் செய்துகொண்டு இல்லற வாழ்கையை நடத்தி வந்தார். ஆங்கிலம், கணிதம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்கள் அடங்கிய இலண்டன் மெற்றிகுலேசன் பரீட்சையில் (London Matriculation Examination) 1941இல் சித்தியடைந்த பேராசிரியர் குருக்கள் சமஸ்கிருத மொழியின் இலக்கிய சுவையையும், மொழியின் சிறப்பையும், அவசியத்தையும் உணர்ந்து அதற்குரிய அடித்தளத்தை பிறமொழிகளுடன் ஒப்பீட்டடிப்படையில் அறிவதற்கு ஆவலுடையவராக ஆங்கிலம், இலத்தின், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய பாடங்கள் அடங்கிய இலண்டன் இன்டர்மீடியட் பரீட்சையில் (London Intermediate  Arts Examination)  1943இல் சித்தியடைந்தார்.

பேராசிரியர் குருக்கள் அவரதுதந்தையார் அக்காலத்தில் பெருமதிப்புப் பெற்று விளங்கிய சேர். பொன். இராமநாதன் போன்றே சட்டத்துறையில் படிப்பிக்க வேண்டும் என விருப்பம் கொண்டிருந்த போதிலும் சமஸ்கிருதமொழியை நன்கு ஆழமாகக் கற்க வேண்டும் எனும் தனது விருப்பத்தை பேராசிரியர் குருக்கள் தமது தந்தைக்கு தெரிவித்திருந்தார்கள். சோதிடக் கலையில் மிகுந்த திறமையும் அனுபவமும் நுட்பமும் பெற்றிருந்த பேராசியர் குருக்களின் தந்தையார் தமது ஆயுட்காலத்தின் முடிவினை ஒருவருடகாலத்திற்கு முன்னதாகவே அறிந்திருந்தார். தந்தையின் தீர்க்க தரிசனத்தையறிந்த தாய் ஸ்ரீமதிசுந்தரம்மா 1942இல் திடீரென ஆஸ்மா நோயினால் பீடிக்கப்பட்டு முப்பத்தாறாவது வயதில் தை அமாவாசை தினத்தன்று தீர்க்க சுமங்கலியாக ஸ்ரீ கமலாம்பிகையின் திருவடியைச் சேர, தந்தை இருதய நோயால் அதேயாண்டு ஆடிச் சதுர்த்தியன்று ஸ்ரீகமலாம்பிகை சமேத ஸ்ரீகைலாசநாதப் பெருமானின் திருவடிகளைச் சென்றடைந்தார். இதன் காரணமாக பேராசிரியர் குருக்களுக்கு குடும்பப் பொறுப்பு, ஆலய பரிபாலனம், புரோஹிதம், ஜோதிடம், எனும் பொறுப்புகள் கல்வியுடன் இணைந்த பணிகளாயின. மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்தியடைந்த பேராசிரியர் குருக்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் திருவாளர் வீரசிங்கத்தின் அனுசரணையில் சிலகாலம் தமிழ்ப் பாடஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

உயர் படிப்புக்காக இலங்கையின் முதற் பல்கலைக் கழகமான கொழும்பு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1944இல் அனுமதி பெற்ற பேராசிரியர் குருக்கள் சமஸ்கிருதம், தமிழ், பாளி, ஆகிய பாடங்களை முதலாமாண்டுக் கலைத் தேர்வுக்காகக் கற்று 1945 இல் தேர்ச்சி பெற்றார். தமிழை உப பாடமாகக் கொண்டு சமஸ்கிருதமொழியை சிறப்புக் கலைமாணிப் பட்டத்திற்காகக் கற்று இரண்டந்தரம் உயர் பிரிவில் 1947இல் சித்தியடைந் தார். சமஸ்கிருத மொழியில் முது கலைமாணிப் பரீட்சையில் (Master of Arts) 1949இல் சித்தியடைந்தார். 1947இல் கொழும்பு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக நியமனம் பெற்றார். பேராசிரியர் குருக்கள் இலண்டன் பல்கலைக் கழகத்தால் கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கென்று அனுப்பி வைக்கப்பட்ட ஜேர்மனிய நாட்டு முதற் சமஸ்கிருத பேராசிரியர் Betty Heiman அவர்களின் வழிகாட்டலில் கல்வி கற்றபெருமை தனித்துவமானது.

கொழும்பு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1952ஆம் ஆண்டுவரை தற்காலிக விரிவுரையாளராக திகழ்ந்து வந்த பேராசிரியர் குருக்கள் 1953ஆம் ஆண்டில் பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்துறைக்கு நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.

உயர்பட்ட ஆய்விற்கான கற்கை விடுகையில் சமஸ்கிருத மொழியில் கலாநிதிப்பட்ட ஆய்வுக்காக இந்தியா பூனா பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியரும், பூனே பண்டர்கார் ஆய்வு நிறுவன இயக்குனருமாக திகழ்ந்த ஜேர்மன் அறிஞரின் வழிகாட்டலில் ஆய்வுகள் பலவற்றைச் செய்தவருமான பேராசிரியர் கலாநிதி R.N.தண்டேகார் அவர்களின் வழிகாட்டலில் திகாசகால சைவசமயமும் அதன் கிளைநெறிகளும் சிறப்பாக தென்னிந்தியாவிலும் இலங்கையில் நிலவும் சமயக்கிரியை மரபுகளுடன் தொடர்பு படுத்திய ஆய்வு(A Study of Saivism of the Epic and Puranic Periods together with its Ancillary Cults with special reference to the Saiva Religious Practices in South India and Ceylon)என்ற தலைப்பில் ஆய்வு செய்ததன் பயனாக உருவான ஆய்வு நூலின் தகுதி கண்ட பூனே பல்கலைக்கழகம் 1960இல்  Doctor of Philosophy (Ph. D) எனும் பட்டத்தினை வழங்கியது.

உயிரோட்டமிக்க சம்ஸ்கிருதமொழியில் கலாநிதிப்பட்டம் பெற்ற பேராசிரியர் குருக்கள் இலக்கிய, இலக்கணமொழியியற் பார்வைகளோடு இணைந்த வைதிக இலக்கியங்கள் சமஸ்கிருத இலக்கியங்கள் பற்றிய அறிவுத் தேடலுக்கு அக்காலத்தில் சிறந்து விளங்கியவர் களான இந்தோ ஆரியத்தில் உயர் ஆய்வு செய்த மொழியியல் வல்லுனர் தமிழ்ப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை வைதிக இலக்கியத்திலும் பௌத்த மததத்துவத்தில் துறைபோந்த சம்ஸ்கிருதமொழிப் பேராசிரியர் O.H.De.A விஜயசேகரா முதலான பேரறிஞர்களின் தொடர்புகள் பெரிதும் உதவி புரிந்தன. இதன் பயனாக பல்கலைக்கழகத்தினூடாக தமிழ் இலத்தின் பாளி ஆகிய மொழிகளில் ஆழமாகவும்;, ஜேர்மனியம், பிரஞ்சு ஆசிய மொழிகளில் ஆராய்ச்சிக்கேற்ற அளவிலும், சமஸ்கிருத மொழியறிவோடு பெற்றிருந்த பேராசிரியர் குருக்கள் இரண்டாந்தர விரிவுரையாளராக பதவியுயர்ந்த நிலையினை 1960இல் அடைய 1961இல் தமிழ்மொழி மூலமான சம்ஸ்கிருதமொழிப் பொதுச் சிறப்புப் பட்டங்களுக்குரிய கற்கை நெறியின் ஒழுங்கமைப் பாளராக விளங்கி வருகையில் கொழும்பு கிளைப் பல்கலைக்கழகத்தின் பகுதி சம்ஸ்கிருதத்துறையின் பொறுப்பு விரிவுரையாளராக 1965இல் நியமிக்கப்பட்டு 1967இல் முதற்தர விரிவுரையாளராகத் தகுதியுயர்வுபெற்று சம்ஸ்கிருதமொழியை கற்பித்து வந்தார். அவ்வேளையில் இந்துதத்துவங்கள் பற்றியும் விரிவுரையாற்றி வந்தார்.

சேர் பொன் இராமநாதன் அவர்களின் கனவாக விளங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பரமேஸ்வரக் கல்லூரியினை அடித்தளமாகக் கொண்டு 1974.10.06இல் யாழ்ப்பாண வளாகமாக உருவாக்கப்பட்டபோது மொழிகள் மற்றும் கலாசார கற்கைநெறித் துறையின் பதிற் தலைவராக நியமனம் பெற்ற பேராசிரியர் குருக்கள் 1975இல் முதன் முதலாக உருவாக்கப்பட்ட இந்துநாகரிகத்துறையின் முதல் பேராசிரிய ராகவும் துறைத் தலைவராகவும் நியமனம் பெற்றார்.

இந்துநாகரிகத் துறையின் புதிய நிலையில் உருவாக்கத்திற்காக உழைத்த பேராசிரியர் குருக்கள் யாழ். பல்கலைக் கழகத்திலேயே இத்துறையினூடாக முதல் கலைமாணி (டீயு) பட்டதாரியையும் முதல் கலாநிதி (Ph.னு) பட்டதாரியையும் குறுகிய காலத்தில் உருவாக்கிய பெருமை தனித்துவமானது. இந்துநாகரிகத்துறையின் பொது, சிறப்புக் கலை கற்கைநெறிகளோடு பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்கைநெறியில் இந்துநாகரிகத் தையும் ஒரு பாடமாகக் கற்பிப்பதற்குரிய பாடத்திட்டத்தை உருவாக்கிய பேராசிரியர் குருக்கள், இராமநாதன் நுண்கலைக்கழக நுண்கலைத் துறையின் தலைவராகவும் விளங்கி அக்கற்கை நெறிகளினை வளம்படுத்தினார்.

மனிதப் பண்பியற் பீடாதிபதியாக 1977இலும், பதில் கலைப் பீடாதிபதியாக 1983இலும் நியமனம் பெற்ற பேராசிரியர் குருக்கள் 1984இல் ஒருவருட காலவிடுமுறையின் போது பாரத நாட்டிற்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் சென்று சிறப்புக் கிரியைகளை நிகழ்த்தியும் இந்துப் பண்பாடுபற்றி விரிவுரைகளாற்றியும் வந்தார். தாம் ஆய்விற்கெனப் பயன்படுத்திவந்த சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல நூல்களையும் யாழ். பல்கலைக்கழ நூல் நிலையத்திற்கு வழங்கிய பேராசிரியர் குருக்கள் 1986இல் பல்கலைக்கழக முப்பத்தொன்பது வருட கால ஆசிரியப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுத் தொடர்ந்து 1987 முதல் 1989 வரையான காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் இந்துநாகரிகப் பேராசிரியராக விளங்கினார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரிகத்துறை, சம்ஸ்கிருதத்துறை, உயர்மட்ட ஆய்வுகளுக்கும் இலங்கையில் விளங்கும் பல்கலைக்கழகங்களினதும் சம்ஸ்கிருத மொழியைப் பற்றிய உயர்மட்ட ஆய்வுகளுக்கும் ஆலோசகராகவும் பரீட்சகராகவும் இருந்துவந்த பேராசிரியர் குருக்களுக்கு யாழ். பல்கலைக்கழகம் முதன் முதலாக வாழ்நாட் பேராசிரியர் என்ற தகுதியை 1991இலும், 1998.10.04 அன்று நடைபெற்ற பொதுப் பட்டமளிப்பு விழாவில் ‘இலக்கியகலாநிதி’ எனும் கௌரவப் பட்டத்தையும் வழங்கிக் கௌரவப்படுத்தியது.

ஸ்வகுருவாகத் தமது தந்தையான கார்த்திகேயக் குருக்களை ப்ரகாசானந்தநாதர், எனவும் பரமகுருவாக முனீஸ்வரம் சோமஸ்கந்தக்குருக்களை விமர்சானந்தநாதர் எனவும், முனீஸ்வரம் குமாரசுவாமி குருக்களை ஆனந்தானந்தநாதர் எனவும் குரு பரம்பரையை கொண்டவராக மனதுள் சாக்தராகவும், புறத்தோற்றத்தில் சைவராகவும் கர்மங்களைச் செய்வதில் வைஷ்ணவராகவும் வைதிகராகவும் விளங்கியதோடு பெறுதற்கரிய உயர்ந்த உபதேசமான ஸ்ரீ சோடசாக்ஷ ரீஉபதேசம் பெற்று தமது ஆலயத்தில் செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, நவராத்திரி காலங்களில் ஸ்ரீ சக்ர பூசையைச் செய்து வந்த பேராசிரியர் குருக்கள், ஸ்ரீ பரசுராம கல்ப்ப சூத்திரம் கூறும் விதிப்படி பத்திநூலான நித்யோத்சவத்தின் சபர்யாக்கிரமப்படி 1957ஆம் முதல் 1985ஆம் ஆண்டு வரையாக அதிகாலையில் இடையறாது பாஹ்யமாக பூர்ணமேருயந்திரத்தில் ஸ்ரீ சக்ரபூஜை செய்துவந்ததோடு தொடர்ந்து மானசீகமாக ஸ்ரீ சக்ரபூஜை, தேவீமஹாத்மிய பாராயணம் என்பவற்றை நியமமாக செய்துவந்தார்.

மந்திரம், கிரியை, பாவனை என்பவற்றைத் தன்னகத்தே கொண்ட கிரியை எனும் கலையை நிகழ்த்துவதில் விளங்கிய பேராசிரியர் குருக்கள் தமது பன்னிரண்டாவது வயது முதலாகவே பத்துவருடங்களாக தமது தந்தைக்கு பத்ததி வாசித்து சாதகராக விளங்கியவர். தமது ஆலயத்தில் 1942ஆம் ஆண்டு முதலாக தமது மாமனாரும் முனீஸ்வரம் சோமாஸ்கந்தக் குருக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டு கிரியைத்துறையில் சிறந்து விளங்கியவருமான முனீஸ்வரம் சாம்பசிவக் குருக்களின் உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் நவராத்திரியை திறம்பட நடத்தி வந்தவர். அத்தோடு கும்பாபிஷேகங்கள், மஹோற்சவங்கள், சிவாசார்ய இறுதிக்காலம் வரை ஆலய அமைப்புக்கள், கிரியைகள், நெறிமுறைகள் அபிஷேகங்கள் போன்ற பலவற்றை நடத்திவந்ததோடு அவை பற்றி விளக்கந் தருபவராகவும் சிறப்புடன் திகழ்ந்தார்.

கோவிலில் 1998இலும் நடைபெற்ற மஹாகும்பாபிஷேகங்களில் பிரதான முனீஸ்வரம் தேவஸ்தானத்தில் 1963இலும், நல்லூர் சிவன்கோவிலில் 1998இலும் நடைபெற்ற மஹாகும்பாபிஷேகங்களில் பிரதான சிவாச்சாரியாராகத் திகழ்ந்த பேராசிரியர் குருக்கள், 1991இல் முனிஸ்வரம் தேவஸ்தானத்தில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகத் திற்கு சர்வபோதகாசாரியராகவும் விளங்கினார்கள்.

அம்பிகையிடத்தில் மனதைலயமடையச் செய்யும் பேராசிரியர்குருக்கள் முனீஸ்வரத்தில் வடிவழகிக்கும் நல்லூரில் கமலாம்பிகைக்கும் வசந்தநவராத்திரி, சாரதாநவராத்திரி காலங்களில் செய்யும் எண்மஹோமம், அபிஷேகம், ஸ்ரீசக்ரபூஜை என்பது தனித்துவமான சிறப்புடையவை.

முனீஸ்வரத்தில் ஸ்ரீவடிவழகி அம்பிகைக்கு நவராத்திரி காலங்களில் 1976ஆம் ஆண்டு முதலாக ஸ்ரீ சதசண்டீஹோமத்தையும், நல்லூரில் கமலாம்பிகைக்கு சாரதாநவராத்திரி காலங்களில் 1988ஆம் ஆண்டு முதலாக தசண்டீஹோமத்தையும் தாந்திரீக முறைப்படி ஆரம்பித்து தாமே பிரதான சிவாச்சாரியாரக திகழ்ந்த பேராசிரியர் குருக்கள் தமது துணைவியாருடன் மஹா நவமி காலங்களில் செய்து ஆரம்பித்து வைத்த சுவாஸினீ பூஜை, குமாரீபூஜை என்பனவும் தனித்துவமிக்கன.

நல்லூர் சிவன் கோவில் மண்டலாபிஷேக காலங்களில் 48தினங்களும் மாலைவேளைகளில் இடையறாது ஸ்ரீ சக்ரபூஜை செய்து வந்த பேராசிரியர் குருக்கள், 1988இல் ஆடிப்பூரநன்னாளில் பூரணமேரு ஸ்ரீ சக்ரத்தைப் பிரதிஷ்டை செய்ததோடு புங்குடுதீவு சிவன்கோவில், அளவெட்டி கும்பளாவளைப் பிள்ளையார் கோவில், வண்ணை வீரமாகாளி அம்மன் கோவில் ஆகிய ஆலயங்களிலும் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள்.

நாட்டின் அமைதிவேண்டி காம்யயக்ஞமாக தெல்லிப்பளை துர்க்கை அம்பாள் ஆலயத்தில் 1983இலும், நல்லூர் சிவன் கோவிலில் 1985இலும், வேலணைமாரி அம்மன் கோவிலில் 1988இலும் ஸ்ரீ சண்டீஹோமத்தைச் செய்த பேராசிரியர் குருக்கள் 1986ல் இலங்கை இந்து கலாசார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க முனீஸ்வரம் தேவஸ்தானத்தில் ஸ்ரீ சண்டிஹோமத்தை தொடர்ச்சியாக 27தினங்கள் பிரதான சிவாசாரியாராக இருந்து செய்து வைத்தார்கள்.

குருத்துவ பாரம்பரியத்தினை உரிய அடித்தளங்களுடன் உருவாக்க எண்ணங்கொண்ட பேராசிரியர் குருக்கள் அறுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட விஸ்வ வித்யாபீடத்தில் சிவாசாரிய மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கற்பித்து வந்ததோடு தமது இல்லத்தில் 1980இல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீவித்யாகுருகுலத்தில் தாமே காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஸ்வர அட்சரசுத்தங்களுடன் வேதமந்திரங்களை அத்யனம் செய்து வந்தார் கள். இதன் விரிவான நிலை முழுநேர குருகுலமாக 1990இல் ஏற்பட்டபோது நாட்டின் சூழ் நிலை காரணமாக குருகுலத்தின் வளர்ச்சி யாழ்ப்பாணத்தில் தடைப்பட்ட நிலையையடைய 199இல் கொழும்பு சென்று செட்டியார் தெரு ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய பரிபாலகர் திருமதி கொதியாகாராஜா அவர்களின் உதவியுடன் குருகுலம், வேதாகம பாடசாலை என்பவற்றுடன் இணைந்த முத்துவிநாயகர் வேதாகம ஆய்வு நிறுவனத்தை அமைத்து வகுப்புகளை நடத்தி வந்தார்கள்.

இலங்கையில் மாத்திரமன்றி 1991 பெப்ரவரியில் சிங்கப்பூர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றதோடு, சிவநெறிக் கழகத்தின் விசேட அழைப்பின்பேரில் தென்னிந்தியா பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் 08.11.1991,ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு தலைமை வகித்த பேராசிரியர் குருக்களை இலங்கைக்கும் சிவாசார்ய சமூகத்திற்கும் உயர்வு அளிக்கும் தன்மையில் சிவநெறிக் கழகமும் சென்னை அழகப்பா கல்லூரியும் இணைந்து ‘சிவாகமஞானபானு” எனும் பட்டம் வழங்கி கௌரவித்தன. இலங்கை இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் 1993இல் ‘வேதாகமமாமணி’ என்றும் பட்டமளித்து கௌரவிக்கப் பெற்ற பேராசிரியர் குருக்கள், 1994இல் அவுஸ்திரேலியா சென்று வசித்து வரும் காலங்களில் மெல்போனில் தென்னிந்திய மற்றும் சிவாகம முறைப்படி அமைக்கப்பட்ட சிவாவிஷ்ணு ஆலய அமைப்பு, கும்பாபிஷேகம் ஆகியனவற்றிற்கும் 1995இல் பேர்த் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட பிள்ளையார் கோயில்  அமைப்பு கும்பாபிஷேகம் ஆகியவற்றிலும் தலைமை வகித்து பங்கு பற்றினார்கள்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் காலங்களிலேயே அந்தண சமூகத்திடையே நிகழுகின்ற வைதிக பூர்வக் கிரியைகளையும் அவ்வப்போது அபரக் கிரியைகளையும் செய்து வைக்கின்ற போது தனக்கேயுரிய பாணியைக் கையாண்டு வந்த பேராசிரியர் குருக்கள் அவுஸ்திரேலியா, டென்மார்க், ஐக்கிய இராச்சியம், ஸ்வீடன், தவித்சலாந்து ஆகிய நாடுளிலும் வைதீக பூர்வக்கிரியைகளைச் செய்து வைத்து பெருமை சேர்த்தார்.

ஸ்ரீமதிகௌரி, பிரம்மஸ்ரீ ஸ்ரீதரன் எனும் பிள்ளைச் செல்வங்களுள், மகளுடன் வாழும் பேராசிரியர் குருக்கள் தம்பதிகள் 1997இல் அவுஸ்திரேலியா பிரஜாவுரிமை பெற்றனர். இவர்கள் 1996இல் மார்ச்சில் முதலாவது உலகச் சுற்றுலாவாக நியூசிலாந்து, டென்மார்க், சுவிட்சலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும், இரண்டாவது உலகச் சுற்றுலாவாக 1998 டிசம்பரில் நியூசிலாந்து, பெல்ஜியம், டென்மார்க், ஹொலண்ட், ஜேர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று உலகநாடுகளில் இந்துப் பண்பாட்டின் அம்சங்களை பரவச் செய்ததோடு தென்னிந்திய மற்றும் சிவாகமமரபில் உலக நாடுகள் அனைத்திலும் ஆலயங்கள், ஆலயகிரியைகள் என்பன இடம் பெறவேண்டும் என்ற அவசியத்தை வற்புறுத்தியதோடு அவ்வாறான ஆலயங்களின் அமைப்பு முறைகளையும் விளக்கி வந்தவர்.

சம்ஸ்கிருத மொழியில் கவிதைரூபமாக ஸ்ரீவடிவாம்பிகா பஞ்சரத்தினத்தை 1971இலும், ஸ்ரீ கன்யாகுமரி பஞ்சரத்தினத்தை 1972இலும், காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு பஞ்சரத்தினத்தை 1972இலும் சமர்ப்பித்து ஆசார்ய சுவாமிகளால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதை வாழ்வின் உயர் பேறாகப் பெற்ற பேராசிரியர் குருக்கள், தமது குருநாதர் வியாகரண சிரோமணி பிரம்மஸ்ரீ தி.கி. சீதாராம சாஸ்திரிகளுக்கு ஸ்ரீ குருஸ்தோத்திரம், சாஸ்திரிகளின் சஷ்டியப்த பூர்த்தியில் ஆசிவேண்டி பிரார்த்தனை, துதிகள் என்பனவற்றையும் கவிதைவடிவில் இயற்றியதோடு நல்லூர் சிவன் கோவில், முன்னேஸ்வரம் தேவஸ்தானம் ஆகியவற்றிற்கும் மஹாகும்பாபிஷேக பிரகடனங்களையும் வசனரூபமாக இயற்றியுள்ளார்கள். இதேபோல் வேறுபல ஸ்தோத்திரங் களினையும் ஆசீர்வாதங்களையும் சமஸ்கிருத மொழியில் கவிதை, வசனரூபமாக இயற்றியுள்ளார்கள்.

தமிழ் மொழி மூலமாக சம்ஸ்கிருத மொழிப் பயிற்சிக்கென சம்ஸ்கிருத இலகு போதம் iஇii (1960, 1962) வடமொழி இலக்கிய வரலாறு – வைதிக இலக்கியம் (1962) சைவத் திருக்கோவிற் கிரியை கொழும்பு இந்து கலாபிவிருத்திச் சங்கம், கலாநிலையம் இவற்றைநெறி (1963) எனும் நூல்கள் பேராசிரியர் குருக்களால் இயற்றப்பட்டு வெளியிட்டுள்ளதோடு வசந்த நவராத்திரி விழா மில்க்வைற் நிறுவனத்தால் 19.03.1980இலும், இந்துப்பண்பாடு – சில சிந்தனைகள் யாழ். பல்கலைக் கழகத்தால் 09.08.1985இலும் விஷேச திரவ்யஹோம் மந்திரங்கள், தீபாராதனை வேதமந்திரங்கள், வேத மந்திரங்களின் தொகுப்பு – கல்லச்சுப் பதிப்பாக சுழிபுரம் அமரர் சிவஸ்ரீ வ.இராதாகிருஷ்ணக் குருக்கள் நினைவாக 1988இலும், ஸ்ரீசக்ரபூஜை (சபர்யபத்ததி) தொகுப்பு, கிரந்தலிபி, மஹேஸ்வரக் குருக்கள் சஷ்டியப்த பூர்த்தி வெளியீடாக 1995இலும், சமஸ்கிருத கிரந்தட்சரலகு போதம் 1997இலும் பேராசிரியர் குருக்களால் எழுதப்பட்டு தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை சாஹித்ய அக்கடமி பரிசினைப் பெற்ற வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலைச் சென்னை நர்மதா பதிப்பகத்தினர் 1981இலும், இந்துப் பண்பாடு சில சிந்தனைகள் எனும் நூலை சென்னை தமிழியல் பதிப்பகத்தினர் செப்டம்பர் 1986இலும், சைவத்திருக்கோயிற் கிரியை நெறி என்னும் நூலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் 1992இலும் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீ சண்டீஹோமபத்ததி, ஸ்ரீகணபதிஹோமபத்ததி, விக்னேஸ்வரர், சுப்பிரமண்யர், சிவன், தேவி, பைரவர், மஹாவிஷ்ணு ஆகிய மூர்த்திகளுக்குரிய பிரதிஷ்டை உற்சவ பத்ததிகளை அச்சுப்பதிப்பதற்கு ஏற்றதாக தொகுத்து தயார்படுத்தி வைத்திருந்ததோடு பேராசிரியர் குருக்கள் சைவத் திருக்கோவிற் கிரியைநெறி நூலை ஆங்கில மொழியில் சற்று விரிவுபடுத்தி தாமே மொழிபெயர்த்து வரும் முயற்சியிலும ;ஈடுபட்டவர்.

வேதமந்திரங்களைத் தொகுத்து ‘ஸ்வரஸஹிதவேதமஞ்சரீ” எனஜேர்மன் சாயிநாதம் அச்சகத்தினரால்; அச்சிடப்பட்ட அதேவேளை யஜுர்வேதசந்தியாவந்தனம், சிவஹோமமத்சவபத்ததி, விக்னேஸ்வரபிரதிஷ்டவிதி, நவக்ரஹ ஸ்தோத்திரமஞ்ஜரீ ஆகிய நூல்களைப் பரிசீலித்து சிறந்த முறையில்| சமூகத்திடம் அர்ப்பணித்த பேராசிரியர் குருக்கள் அவர்களுக்கு, காணிக்கையாக நவாலியூர் சோ. நடராஜன் வடமொழி இலக்கிய வரலாறு ‘செம்மொழிக்காலம்” (1967)எனும் நூலையும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களான சமஸ்கிருதப் பேராசிரியர் வி. சிவசாமி ‘சமஸ்கிருத இலக்கிய சிந்தனைகள்” (1988) எனும் நூலையும், சமஸ்கிருதஅறிஞர், இந்துநாகரிகப் பேராசிரியர், கலாநிதி. கோபாலகிருஷ்ண ஐயர் இந்துப் பண்பாட்டு மரபுகள், (1992) எனும் நூலையும் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் குருக்களின் ஆக்கங்களாக குமாரசுவாமிக் குருக்கள் பாராட்டு விழாமலரில் (1960) புராணங்கள் தென்னாட்டின் சமயக்கருவூலம், தினகரன் பத்திரிகையில் (25.10.1962) கோள்களால் விளையும் துயர்களைய கோடியர்ச்சனை, முனீஸ்வரம் கோடியர்ச்சனை மலரில் (1962) கோள் வினைதீர்க்கும் கோடியர்ச்சனை, தினகரன் பத்திரிகையில் (01.07.1963) எல்லோரும்செல்லும் ஆலயத்தின் கும்பாபிஷேகச் சிறப்பு,காரைநகர் சைவமகாசபை பொன்விழா மலரில் (1967) வேதங்கள், பேராதனை குறிஞ்சிகுமரன் ஆலய கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு வெளியீடான பேராதனை இலங்கைப் பல்கலைக்கழக இந்து தருமத்தில் (1968) கும்பாபிஷேகம், சீதாராம சாஸ்திரிகள் மணி விழாமலரில் (1971) ‘எங்கள் குருநாதர்’ புலோலியூர் சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு விழா மலரில் (1978) இந்துநாகரிகம் பேணிய சைவப்பெரியார், யாழ்ப்பாணம் நாவலர் நூற்றாண்டு விழா மலரில் (1979) நாவலர் பணியின் வைதிக அடிப்படைகள், சிலாபம் சிவராத்திரி சிறப்பு மலரில் அண்ணலின் அருளுங்கோலங்கள்,சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பில் (1985) மீமாம்சாதரிசனம், புங்குடுதீவு வீரகத்திப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலரில் (1989) வைதிகமரபும் ஆகமமரபும், திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் மகாகும்பாபிஷேக மலரில் (1989) பூஜையில் உபசராங்கள் பண்டிதமணி நினைவு மலரில் (1989) பண்டிதமணியின் தத்துவங்கள்: கோலாலம்பூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் கும்பாபிஷேக மலரில் (24.03.1997)திருக்கோவில் வழிபாடு, மிருத்யுங்கபோற்றுவோமாக! (பிரசுரங்கள்) எனும் தலைப்புக்களில்மந்திரம், வேதமாகிய தேவாரதிருவாசகங்களை வேதமென Epics and Puranas (University Review Vol XIX. No 2 Oct- 1961:jkpo;nkhopapYk;>A Study of the Kartikeya cult as reflected in the The Vedic Yajna and Puranic Tapas-Anjali  – Prof.O.H.De.AWijayasekkara felicitation Volume 1970: Temples and Rituals: (Par KuppuswamiSastri Research Institute: Madras – 1983; A Study of per) Seminar on Siva Temples and Rituals; Organized by The Research Institute, Madras- 19.06.1983; Agamic Rituals, (paper) the Epic and Puranic Ritual Traditions; Seminar-Kuppuswami Sastri KuppuswamiSastri Research Institute, Madras-1985; என்னும் தலைப்புக்களில் ஆங்கிலமொழியிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றைவிடபல நூல்களில் ஆசியுரை அணிந்துரை, நூன்முகம், முன்னுரை, சிறப்புரை என பல்வேறு நிலைகளில் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பேராசிரியர் குருக்கள் நவாலியூர் சோ. நடராஜனின் வடமொழி இலக்கிய வரலாறு (செம் மொழிக்காலம்) நூலின் உருவாக்கத்திற்கும் பெரிதும் உதவியுள்ளார்கள்.

வடஇலங்கைசம்ஸ்கிருதசங்கம் (North Ceylon Sanskrit Association) 17.01.1953இல் மதிப்புக்குரிய திருவாளர் சு. நடேசன் தலைமையில் திருநெல்வேல pபரமேஸ்வரக் கல்லூரியில் நடைபெற்ற முதலாவது சம்ஸ்கிருத மநாநாட்டில் ‘சம்ஸ்கிருத இலக்கியங்கள் பற்றி உரையாற்றிய பேராசிரியர் குருக்கள் அறுபதுகளில் சம்ஸ்கிருத இலக்கியங்கள் பற்றி இலங்கை வானொலியில் தொடர்ச்சியாக உரைநிகழ்த்தினார்.

காமகோடி பீடாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் சில்ப்பசதஸ், சென்னையில் 1976இல் நடைபெற்ற அனைத்துலக இந்து மகாநாடு ஆகியனவற்றில் பங்குகொண்ட பேராசிரியர் குருக்கள் 1977இல் பேராசிரியர் T.N..மகாதேவன் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற இந்து மகாநாட்டில் ஆய்வுரையை நிகழ்த்தியதோடு பலஅரங்குகளுக்கும் தலைமை தாங்கி கௌரவம் பெற்றார்கள். அத்தோடு 1978இல் உலக இந்து மகாநாட்டின் இலங்கைக்கான செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்கள். மலேசியாவில் மதுரை பல்கலைக்கழக சமஸ்கிருத பேராசிரியர் டாக்டர் சோ. சுந்தரமூர்த்தி தலைமையில் பல அரங்குகளில் உரையாற்றியும் உள்ளார்கள்.

இலங்கை கல்வி உயர்கல்வி அமைச்சின் இந்துசமய பாட ஆலோசனைக் குழுவில் 1976 – 1985 வரையில் அங்கம் வகித்த பேராசிரியர் குருக்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திலும் அளப்பரிய சேவைகள் பலவற்றை வழங்கி வந்துள்ளார்கள்.

கொழும்பு ராமகான சபையினரால் 1976இல் இந்துநாகரிகத்துறைப் பேராசிரியராக நியமனம் பெற்றதையொட்டியும், மணிவிழாவையொட்டியும் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயத்திலும், பத்திரிகையாளர் சமூகத்தினரால் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் 1981இலும் விழாக்கள் எடுக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

பேராசிரியர் குருக்கள் தமது மணிவிழாவின் போது பத்திரிகையாளர் சமூகத்தினரிடம் யாழ்ப்பாணத்தில் இந்துக் கலைக்கூடம் ஒன்று மிகவிரைவில் அமைக்கப்பட வேண்டும் என தமது மனதுட் கிடந்த செயற்திட்டத்தையும் அபிலாசையையும் வெளிப்படுத்தினார்.

தமது கற்பித்தல் பணியாலும் ஆராய்ச்சித் திறனாலும் இந்தியா இலங்கையோடு மட்டுமல்லாது உலகநாடுகள் பலவற்றிலும் பல பேரறிஞர்களோடு ஆராய்ச்சி நிலையில் தொடர்பு கொண்டு விளங்கும் பேராசிரியர் குருக்கள் பிராமணசமாஜம், அகில இலங்கை பிராமனசங்கம் முதலான பல அமைப்புக்களில் குறிப்பிடத்தக்க அங்கத்தவராக குருசேவாசமூகம், சிவானந்தகுருகுலம், அகில இலங்கை சிவப்பிராமன் பரமேஸ்வரன் ஆலயத்தில் இயங்கிவரும் சேர். பொன். இராமநாதன் இருந்து அளப்பரிய பணியாற்றிய வர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேதாகம ஆய்வுநிறுவனம், நல்லூர் சிவன்கோவிலில் இயங்கிவரும் நியந்த்ரீ. ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் வேதாகமசபா ஆகிய அமைப்புகளின் போஷகராக இருந்து வழிகாட்டிவந்தவர்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி. பாலம் லஷ்மணனின் தூண்டுதலின் பேரில் பேராசிரியர் குருக்கள் தமது சுயசரிதத்தை (யுரவழ டிழைபசயிhல)1998ஆம் ஆண்டு முதலாக எழுதிவந்தார்.

அம்பிகையின் திருவருட் கிடக்கையுடன் எழுபத்தொன்பதாவது வயதைப் பூர்த்திசெய்து இந்துசமயத்திற்கும், சமூகத்திற்கும், அந்தன சிவாசார்யசமூகத்திற்கும், எல்லாவற்றிற் கும் மேலாக கல்விச் சமூகத்திற்கென்றே பணியாற்றிக்கொண்டு நிறைகுடமாக கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டி வந்த பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள் 2000.08.07ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

நன்றி : குப்பிழான் கற்பகம் கலைக்கூடத்தினரால் சி.கனேஸ் அவர்கள் தொகுத்த “இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துச் செம்மல்கள்” – வாழ்க்கைப் பக்கங்களின் தொகுப்பாக்ம் நூலிலிருந்து தகவல்கள் பெறப்பட்டதாகும்.

புகைப்படங்கள் தந்துதவிய மோகன் ஐயா அவர்களுக்கும் நன்றி.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!