Friday, October 4

பஞ்சாபிகேசன்,முருகப்பா (கௌரவ கலாநிதி)

0

1924.07.01 ஆம் நாள் சாவகச்சேரியில் பிறந்தவர்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயிலும் காலத்தி லேயே இசைக்கலையில் நாட்டமுடையவராகத் திகழ்ந்தார். நாதஸ்வரக் கலையில் நாட்டம் அதிகரித் ததனால் நாதஸ்வர வித்துவான்களான சண்முகம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பகாலப் பயிற்சியினைப் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணம் இராமையாப் பிள்ளையிடமும்,திரு. பி.எஸ்.கந்தசாமிப்பிள்ளையிடமும் பயிற்சி பெற்றார். இதன் பயனாக தனது முதலாவது கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் 14 ஆவது வயதில் நிகழ்த்தினார். மேலும் பயிற்சி பெறுவதற்காக தமிழகம் சென்று திருவாவடுதுறை இராயரத்தினம் பிள்ளையினது மருமகர் கச்சாயி நடராஜசுந்தரம்பிள்ளையிமும், ஐயம்பேட்டை வேணுகோபாலபிள்ளை இடமும் பயிற்சிபெற்று சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக நாடுதிரும்பினார். பாரம்பரிய மரபுவழிக் கச்சேரி செய்யும் முறையை அறிந்தவராக இருந்தது மட்டுமல்லாது, தனது இறுதிக்காலம் வரை நடைமுறைப்படுத் தியும் வந்தவர். தலைநிமிர வைக்கும் இசையாற்றல் பெற்ற இவர் மரபு மாறாத சுத்த சங்கீதத்தை வழங்கியவர்.ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து கச்சேரி செய்யும் ஆற்றல் பெற்றவர். ஈழத்து பிரபல நாதஸ்வர வித்துவான்கள், தவில் வித்துவான்களுடன் ஈழத்திற்கு வருகைதந்த தமிழகத்து கலைஞர்களுடனும் கச்சேரிகள் பலவற்றினைச் செய்தவர். ஆலயங்களில் எவ்வெக் காலங்களில் எவ்வாறான இராகங்களை இசைக்க வேண்டுமோ அவைகளை அதற்குரிய தொனியோடு பக்தரை இசையிலாழ்த்தும் வண்ணம் இசைக்கும் தன்மை கொண்டவர். ஆலயங்களில் திருவூஞ்சல் நடைபெறுகின்ற பொழுது ஊஞ்சல் இசைபாடுகின்ற இசைக் கலைஞர்களிற்கேற்ப நாதஸ்வரம் இசைக்கும் ஆற்றல் பெற்றவர்.70 வருடங்களுக்கும் மேலாக இசைச் சேவை செய்த இக்கலை ஞனுக்கு திருக்கேதீஸ்வர பரிபாலன சபையினர் இசை வள்ளல் நாதஸ்வரக் கலாமணி என்ற பட்டத்தினையும் யாழ். கம்பன் கழகத்தினரால் 1992 ஆம் ஆண்டு இசைப்பேரரசு விருதினையும் 1996 இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூ~ணம் விருதினையும் 1998 ஆளுநர் விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகம் 26ஆவது பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டது. 2015-06-26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!