Thursday, July 25

வண்டில் – வகைகள்

0

நூறு வருடங்களுக்கு முற்பட்ட யாழ்ப்பாண வாழ்வில் வண்டில்கள் சமூக பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தையும், சாதாரணமான வீடுகளில் பல செயற்பாடுகளில் முக்கியத்துவ முடையதாகவும் இருந்திருக்கின்றது. கமக்காரர்களில் அநேகமானோர் வண்டில்களைச் சொந்தமாக வைத்திருந்தார்கள். வீட்டிலிருக்கும் குடும்ப அங்கத்வர்கள் அனைவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வண்டில் பராமரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். நடுத்தரக் கமக்காரக் குடும்பங்கள் ஒவ்வொன்றினதும் வாழ்வும் வளமும் வண்டிலுடன் பின்னிப் பிணைந்ததாக இருந்ததோடு, அவர்களுடைய உழைப்பும் இவற்றினை சார்ந்ததாக இருந்தது. குடும்ப அங்கத்தவர் யாவரும் இதன் செயற்பாட்டில் பல வழிகளில் தொடர்பு பெற்றவர்களாக இருந்தனர். வண்டிலைக் கமத் தொழிலின் தேவைகளுக்காகக் கொண்டு செல்வது மட்டுமன்றி வீட்டிலிருப்போர் மாடுகளின் உணவுக்காக ஓலைகிழித்தல், புல்லுச்செருக்குதல், நுங்குவெட்டுதல், மாட்டடி கூட்டித் துப்பரவு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவை அவர்களது நேரத்தை பிடித்து வைத்திருந்ததோடு நாளாந்த வாழ்வியக்கமாகவும் இருந்தது.

வீடு, வளவு அமைப்பிலும் கூட வண்டிற் பாவனைக்கேற்ற வகையில் தட்டிகள், பாதைகள், மாடுகள் நிற்பதற்கு, வண்டில் நிற்பதற்கு என்று ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்ட கொட்டில், வண்டில் மாடு வைத்திருந்த அநேகரிடம் இருந்தன. இக்கொட்டில் மாட்டுமால் என்று அழைக்கப் பட்டது. மாட்டுக் கொட்டிலினுள் தொழுவம், நுகம், கொழுப்புக்கட்டை, கயிறு, பாய் போன்ற பொருள்கள் இருந்தன. வளவினுள் வைக்கோற் கும்பி காணப்படும். பயிற்செய்கை விதைப்புக் காலங்களில் மாடுகளைப் பயன்படுத்தி உழவுத்தேவைகளைப் பூர்த்தி செய்துவந்தனர்.

சமூகத்தின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பல்வேறு வகைப்பட்ட வண்டில்கள் தயாரிக்கப்பட்டன. அதுமட்டு மன்றி வண்டில் தொழிலோடு கூடிய ஆசாரியார், இரும்புவேலை செய்வோர் என்பவர்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். வண்டிலின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வதற்கு வண்டில் வகைகளை விளங்கிக் கொள்வது பொருத்தமானதாகும்.

 1. பாரவண்டில் / பெரிய வண்டில்
  •  இரட்டைத் திருக்கல் வண்டில்
  •   சிலிங்காட் எனப்படும் மரம் கட்டும் வண்டில்
 1. போக்குவரத்து வண்டில்
  • மொட்டை வண்டில்
  • கூடார வண்டில்
  • பெரிய வில்லு வண்டில்
  • சிறிய வில்லு வண்டில்
  • ஒற்றைத் திருக்கல் வண்டில்
 1. சவாரி வண்டில்
 2. தண்ணீர் வண்டில்
 3. மண்ணெய் வண்டில்
 4. மிசின் வண்டில்
 5. பிரேத வண்டில்
 6. ரயர் வண்டில்

என எட்டு வகை வண்டில்கள் யாழ்ப்பாணத்து வாழ்வில் பெரும்பாலும் பயன்பாட்டிலிருந்து வந்துள்ளதனை அடையாளம் காணமுடிகின்றது. இவற்றில் சில மறைந்துவிட்டன. ஒரு சில வண்டில்கள் இன்றும் பாவனையிலிருந்து வருகின்றன. இன்னும் சில அழியும் நிலையில் இருக்கின்றன.

பார வண்டில் அல்லது பெரிய வண்டில்

இவ்வண்டில் பாரமான வேலைகளைச் செய்வதற்காக அமைக்கப் பட்டது. பதினைந்து அடி சுற்றளவுடைய சில்லினையும், மிகவும் பலம்வாய்ந்த, விலையுயர்ந்த இனமான மாடுகளைப் பூட்டி பாரமான வேலைகளைச் செயற்படுத்துவதற்காக மிகப்பலம் வாய்ந்த வண்டிலாக அமைந்திருந்தன. இத்தகைய பண்;பு கொண்ட வண்டில் தேவைகளினடிப்படையில் இரண்டு வகையினதாக காணப்படுகின்றது.

 1. இரட்டைத் திருக்கல் வண்டில்
 2. சிலிங்காட் எனப்படும் மரம் கட்டும் வண்டில் என்பனவாகும்.

இரட்டைத் திருக்கல் வண்டில்.

இரண்டு பலம் வாய்ந்த மாடுகள் பூட்டப்பட்டு வியாபாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு அமைக்கப்பட்ட வண்டியாகும். எடுத்துக்காட்டாக கிடுகு ஏற்றுதல், இது கொடிகாமம், பளை, சாவகச்சேரி போன்ற இடங்களிலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு வியாபார நோக்கில் மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். மேலும்; கல், மணல் ஏற்றி இறக்குதல் கமத்தேவைகளில் குப்பை, எரு, நெல்மூட்டை, வைக்கோல் என்பவற்றை ஏற்றி இறக்குவதற்கும் பயன்படுத்தப் படுவதை குறிப்பிடலாம்.

சிலிங்காட் வண்டில்.

பாரிய மரங்களைச் சங்கிலியாற் பிணைத்துக் கட்டிக் குறிப்பிட்ட இடத்திற்கு இலகுவாக நகர்த்து வதற்குப் பயன்படும் வண்டில் ஆகும். இவ்வண்டில்; ஏனைய வண்டில்களிலிருந்து சில்லு, அச்சு, துலா மட்டும் கொண்டதாக வேறுபடுகின்றது. அச்சின் கீழ்ப் பக்கத்தில் குடைந்து பாரிய மரங்களை பிணைக்கக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தவரின் சிறப்புத் தொழில்நுட்பமாக இவ் வண்டில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. யானை பலம் கொண்ட இவண்டிலை மிகவும் இலகுவாக, இரண்டு வடக்கன் மாடுகள் இழுத்துச்செல்லும். இதனால் என்னவோ எம் முன்னோர்கள் “மாடு முக்கிவர” என்ற முதுமொழியை உருவாக்கி இருக்கின்றார்கள் என எண்ணத்தோன்று கின்றது. (தகவல் (வண்டிற்காரச்சிஸ்ரீ) ஆனந்தராசா.நா, நாச்சிமார் கோயிலடி, யாழ்ப்பாணம,2005;)

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரேயொரு எம் மரபுரிமைச் சொத்தான இவ்வண்டில் ரூபா 100,000.00 இற்கு விற்பனை செய்யப்பட்டு தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட செய்தியை அறிந்து மனம் வேதனை அடைந்ததனைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

போக்குவரத்து வண்டில்

பல்வேறு தேவைகளின் நிமித்தம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மனிதனையும், சிறிய பொருள்களையும் இடம் நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்டில்கள் போக்குவரத்து வண்டில்கள் என அழைக்கப்பட்டன. பொதுவாக இவ்வண்டில்களில் பூட்டப்படும் நாம்பன்களை அழகுபடுத்துவதற்காக அதன் கொம்புகளில் வெள்ளிப் பூண்பூட்டியும், நெற்றியிலும், கழுத்திலும் வெண்டயம் அணிந்து, இரு கொம்புகளுக்குமிடையில் குஞ்சங்கள் கட்டி அழகுபடுத்துவர். மாடுகளின் ஏரிகள் உயர்ந்து அழகுடையனவாக இருக்கும்.

இத்தகைய வண்டில்கள் சமூகத்தில் ஒருவரது அந்தஸ்து, தகுதி என்பவற்றிற்;கேற்ப அமைந்திருக்கும். இவ்வகை வண்டில்களாக.

 1. மொட்டை வண்டில்
 2. கூடார வண்டில்
 3. பெரிய வில்லு வண்டில்
 4. சிறிய வில்லு வண்டில்
 5. ஒற்றைத் திருக்கல் வண்டில் என ஐந்து வகையினதாக இருந்தமை காணலாம்.

மொட்டை வண்டில்.

இவ்வகை வண்டில்கள் பொதுவாகக் கூடாரம் அற்றனவாக அமைந்திருக்கும். வெறுமனே கிறாதி அல்லது பக்கத்தட்டியினை மட்டும் கொண்டிருப்பதோடு ஏனைய போக்குவரத்திற்குரிய அமிசங்களையும் கொண்டிருக்கும்.

கூடார வண்டில்.

சாதாரண வண்டிலின் தட்டிகளின் மேல் கமுகஞ் சிலாகைகளினாலும் பிரப்பந்தடிகளினாலும் கூடார வடிவில் வளைத்துக்கட்டி அதன்மேல் கித்தான் துணி அல்லது சாக்கு என்பவற்றினால் மூடி வெய்யில், மழை என்பவற்றிலிருந்து பாதுகாப்பளித்து போக்குவரத்து வசதியினை வழங்கு கின்ற வண்டிலாக இது விளங்குகின்றது.

வில்லு வண்டில்.

இரும்பினால் வில்வடிவில் அச்சு அமைக்கப்பட்டு அழகியல் உணர்வுடன், வசதியாகப் பிரயாணம் செய்யக்கூடிய வண்டில் வில்லு வண்டில் என அழைக்கப்பட்டது. இவ் வண்டில் சிறிய வில்லு வண்டில், பெரிய வில்லு வண்டில் என இரண்டு வகையினதாக அமைந்திருக்கும். ‘வில்’ என்ற முடிவினைக் கொண்ட இப்பெயர்களில் இருந்து வில்லுவண்டில் வந்ததாகவும் குறிப்பிடுவர்.

1832 ஆம் ஆண்டு சுழிபுரத்தைச் சேர்ந்த விக்டோரியாக் கல்லூரியின் முன்னாள் அதிபரான ஏரம்பமூர்த்திச் சட்டம்பியரால் பெரிய பிரித்தானியாவிலிருந்து வில், குடம் என்பன இறக்குமதி செய்யப்பட்டு, ஏனைய பகுதிகள் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு வில்லு வண்டில் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. வில்லு வண்டில்களைப் பயன்படுத்தியவர்கள் சமூகத்தில் உயரிய அந்தஸ்தை உடையவ ராக வாழ்ந்தனர். உதாரணமாக, ‘மரபால் மதியால் உயர்ந்த குணசர முதலியார்” என்ற சொற்றொடரைக் கூறலாம். இச்சொற் றொடர் சமூகத்தில் சில சர்ச்சைகளையும் தோற்றுவித்ததாக அறியக்கிடக்கின்றது. பெரிய, சிறிய வில்லு வண்டில்களின் அமைப்பும் செயற்பாடுகளும் பொதுவானவையாக உள்ளன. வண்டிற் கூடாரம், மிதி பலகை, அறிவுறுத்தல் மணி, இரண்டு லாந்தர், பித்தளையால் செய்யப்பட்ட உதை கிழி, நுகம், மாடுகள் என்பன முக்கியமானவையாக இருக்கும்.

கூடாரம் பிரப்பந்தடிகளால் கட்டப்பட்டு கமுகஞ் சிலாகையினால் இணைக்கப்பட்டு, கித்தான் துணியினால் தைக்கப்பட்டு, பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் இருக்கும். உட்பகுதியின் இரு பக்கமும் சார்ந்திருப்பதற்காக சொகுசு அணை தைக்கப்பட்டு தட்டில் குசன் இருக்கை அமைக்கப்பட்டிருக்கும். வண்டிலின் பின் புறத்தில் உள்ளே ஏறுவதற்காக இரும்புடன் இணைந்த மிதிபலகை பூட்டப்பட்டிருக்கும். ஆசனத்தட்டில் அமர்ந்திருக்கும் சாரதி சறுக்கி விழாமல் உதைத்துக் கொண்டிருப்பதாக வண்டில் துலாவின் இரு பக்கத்திலும் உதை கிழி பூட்டப்பட்டிருக்கும். நுகத்தின் இரு மருங் கிலும் வெள்ளிப்பூண் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு பக்கத்தி லும் லாந்தர் (கண்ணாடியுடன் பொருத்தப்பெற்ற அரிக்கன் விளக்கு) பொருத்தப்பட்டிருப்பதுடன் அறிவுறுத்தல் மணியும் இணைக்கப்பட்டதாக வண்டிலின் தோற்றம் அமைந்திருக்கும்.

இவ்வண்டிலில் பூட்டப்படும் மாடு வடக்கன் மாடு இனத்தைச் சார்ந்ததாக இருக்கும். அழகாக உயர்ந்து வளர்ந்த இரு கொம்புகளிலும் வெள்ளியிலான கொம்புக் குப்பியும், அதன் நுனியில் இரு குஞ்சமும் கொம்பில் கறுப்புக் கயிறும் காணப்படும். ஏழு மணி பூட்டிய கழுத்துப் பட்டிகள், பதின்னான்கு பட்டு வெள்ளிச் சலங்கைகள், நெற்றியிலிருந்து கழுத்துவரை அலங்கரிக்கப் பட்டிருக்கும். பெரிய மணியினை ஆரயமணி என அழைத்தனர். வில்லு வண்டில் வரும் ஓசை ஏறக்குறைய வீட்டிலிருந்து நூறு யாருக்கு அப்பால் கேட்ட வண்ணமாக இருக்கும் என அறிய முடிகின்றது. மேலும் முற்கட்டை, பனம் வைரப் பகுதியை எடுத்துச் செதுக்கப்பட்டு வெள்ளி, பித்தளைப் பூண்களால் பூட்டப்பட்டிருக்கும். சில்லுகள், வில்லுகள், குடம் யாவும் கவர்ச்சிகரமான தாக காணப்படும். (தகவல்; சிவசண்முகமூர்த்தி நடேசன், அமரர்)

ஒற்றைத் திருக்கல் வண்டில்.         

 

ஒரு மாடு பூட்டி போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்யும் வண்டிலாக இவ் வண்டில் அமைந்திருக்கின்றது. சிறிய வில்;லு வண்டில் இவ்வகையைச் சார்ந்ததாக இருக்கின்றது. வியாபாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ‘மண்ணெய்’; வண்டில், ‘தண்ணீர்’ வண்டில் ஆகியனவும் இவ்வகையைச் சார்ந்தன எனக் கொள்ளலாம்.

சவாரி வண்டில்

சவாரிப் போட்டியில் கலந்துகொள்ளும் நோக்குடன் சில்லு பதினொரு அடிச்சுற்றளவைக் கொண்டு விசேடமாகத் தயாரிக்கப் படும் வண்டில்கள் இவையாகும்.

‘தண்ணீர்’ வண்டில்

 

மக்களின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு தண்ணீர் ஏற்றிச் செல்லும் வசதியுடன் அமைக்கப்பட்ட வண்டில்கள் இவையாகும். இவ்வகை வண்டில்கள் பெரும்பாலும் காரைநகர், மூளாய், கைதடி போன்ற பிரதேசங்களிலேயே இன்றும் பயன்பாட்டில்  இருந்து வருகின்றது.

‘மண்ணெய்’; வண்டில் அல்லது ‘பீப்பா’ வண்டில்.

கிராமப்புறங்களில் மண்ணெய் வியாபாரம் செய்யும் பொருட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்ற வண்டில் வகையாகும். இதன் சில்லுகள், அச்சு, நுகம் என்பன மட்டும் மரத்தினாலும் ஏனைய பகுதிகள் இரும்பினாலும் அமைக்கப்பட்டிருக்கும். இதன் உடல் தகரத்தினால் ‘பீப்பா’ வடிவமைப் பில் ஏற்படுத்தப்பட்டிருப்பதனால் ‘பீப்பா’ வண்டில் என அழைப்பதும் உண்டு. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்ந்த மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இத்தகைய வர்த்தகத்தில் பலர் ஈடுபட்டிருந்தனர். தகரத்தினால் உடலமைப்பு அமைக்கப்பட்டிருந்த போதிலும் இரண்டு காளைமாடுகளைப் பயன்படுத்தி கிராமங்கள் தோறும் மண்ணெண்ணெய்யினை விற்பனை செய்து வருமான மீட்டி தமது குடும்பத்தினை பாதுகாத்து வந்தனர். தற்காலத்தில் எரிவாயு அடுப்பு, அதிகரித்த மின்சாரப் பாவனை என்பவற்றினால் மண்ணெண்ணெய்யின் பாவனை குறைவடைந்தமையினால் யாழ்ப்பாணத்தில் இத்தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் அதனை கைவிட்டுவிட்டு வேறுதொழிலை நாடியுள்ள போதிலும் கொழும்பு போன்ற ஒருசில மாவட்டங்களில் இத்தொழிலைக் கைவிடாது இன்றும் மேற்கொண்டு வருவதனையும் காணக்கூடிய தாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் பாவனையிலிருந்த இவ் வண்டில் ஒன்று பழமை மூலதனமாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகத் தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘மிசின்’; வண்டில்

கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்குரிய ‘ஊசிலி’ நீர்ப்பம்பி பொருத்தக்கூடிய நிலையில் உருவாக்கப்படும் வண்டிலாகும். அளவில் சிறியதாகவும், ஒற்றைத்திருக்கல் வணிடிலின் அமைப்பு முறையில் அமைக்கப்பட்டு ஆழமான கிணற்றிலிருந்து நீரை இறைப்பதற்கு வசதியாக நீர்ப்பம்பி பொருத்தக் கூடியதாகவும் உருவாக்;கப்பட்டிருக்கும். 

‘பிரேத’ வண்டில்

இறந்தவரை பிரேத அடக்கம் செய்வதற்காக அவரது வீட்டிலிருந்து மயானம் வரையும் ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் வண்டிலாகும். இவ்வண்டில் கிராமத்தின் சனசமூக நிலையத்தில் பொறுப்பாக இருக்கும். சிறு தொகைப்பணம் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி அலங்கரித்து உடலினை ஊர்வல மாக எடுத்துச் செல்வர்;.

‘ரயர்’ வண்டில்

மோட்டார் வாகனங்களின் பழைய உதிரிப்பாகங்களில் இருந்து சில்லுகள் தயாரிக்கப்பட்டு, ரயர் பொருத்தப்பட்டு இரண்டு இஞ்சி இரும்புக் குழாயினால் துலா செய்யப்பட்டு, உடல் மட்டும் பலகையினால் செய்யப்பட்டதான வண்டிலே ரயர் வண்டிலாகும். இவ்வகை வண்டில்கள் செலவு குறைந்தனவாகவும் பாரம் குறைந்தனவாகவும் உற்பத்தி செய்யப்படுவதனால் பலரும் இதனை தற்காலத்தில் விரும்புகின்றனர். யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் மத்தியில் இவ் வண்டில் ஓர் புதிய உருவாக்கம் ஆகும்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!