Thursday, January 16

செல்வநாயகம், சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை

0

1898-03-31 ஆம் நாள் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வாழ்ந்தவர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்தரம் வரை கற்று, லண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 1923 ஆம் ஆண்டில் இலங்கை சட்டக்கல்லூரியில் இணைந்து தனது 25 ஆவது வயதில் சட்டமாணிப் பட்டத்தினைப் பெற்று பல்வேறு மக்களுக்கும் உதவி வந்தவர்.1939 ஆம் ஆண்டிலிருந்து மரணிக்கும் வரை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் சேவையாற்றிய பெருந்தகையாளன்.ஆரம்ப காலத்தில் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். 1949 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்திய-பாகிஸ்தானியர் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியமை யினால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசுக்கட்சியினைத் ஸ்தாபித்து செயற்படலானார்.இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது பொதுத்தேர்தலில் கோப்பாய் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்கட்சியின் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியர் தம்பியப்பா அவர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக ஊர்வலமாக அழைத்து வந்த வேளையில் புத்தூரில் மாரடைப்பினால் மரணமடைந்த நிலையில் தன்னிடம் ஜூனியர் அப்புக்காத்தாக பணிபுரிந்து மிகுந்த மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த கோப்பாய் கோமான் வன்னியசிங்கம் குமாரசாமி அவர்களை கோப்பாய் தொகுதி வேட்பாளராக நியமித்து தமிழ் மக்களின் அரசியலில் புதிய அத்தியாயத்தினை ஏற்படுத்தினார். அவருடைய பணிகளை யாழ்ப்பாண மக்கள் நன்றியுடன் நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பொதுநூலக வளாகத்தின் தெற்குப் பிரதேசத்தில் நினைவுத்தூபியினையும் சிலையினையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. 1977-04-26ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!