இணுவிலைச் சேர்ந்த கந்தர் தெய்வானை தம்பதியினரின் இரண்டாவது மகனாக சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் பூண்டவராக 1860 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் கல்வியில் நாட்டமில்லாமல் தந்தையாரது வேளாண் தொழிலில் மாடுகளை மேய்த்து பாதுகாத்து வருவதில் ஈடுபட்டார்.இவர் காரைக்கால் சிவன்கோயிலடியிலுள்ள வெளிகளில் மாடுகளை மேய்த்து வரும்வேளையில் தாயாரின் உருவத்தில் மாரியம்மன் தோன்றி உணவு கொடுத்து ஞான மூட்டப்பட்டவர். மாரியம்மனின் பேரருளால் முக்காலத்தையும் உணர்ந்தார். தமது அருளாற்றலால் தீராத நோய்களையும், பில்லிசூனியத்தால் பாதிக்கப்பட்டோரையும் உடல் நலங்குன்றிய ஏழைகளின் துயரங்களையும் சிவசின்னம் திருநீறு இட்டு மணிமந்திரம் ஓதிக் குணப்படுத்தினார். தம்மை நாடிவரும் அன்பர்கள், அடியார்கள், அயலவர்களின் உதவியுடன் காரைக்காலில் மூலிகை மரங்கள், கனிதரும் மரங்கள், நிழல்தரும் மரங்கள், நல்லினப்பூ மரங்கள், இலைக்கறி, காய்கறிப் பயிர்களையும் உள்ளிட்ட 1008 நன்மரங்களை நாட்டி மக்களுக்கு உதவலானார். காரைக்காலில் வாழ்ந்தாலும் தமது மூதாதையரால் பராமரிக்கப்பட்டு வந்த குலதெய்வமான இணுவைக் கந்தனையும் மனதாரப்பூசித்து வந்தார். ஒரு சுப இரவு சுவாமியாரவர்கள் உறங்கச்செல்லுமுன் முருகனைத் தியானித்து விட்டு உறங்கினார். அன்று கனவில் முருகன்தோன்றி தனது வெளிவீதியுலாவுக்காக அலங்கார மஞ்சமொன்றை அமைக்குமாறும் அத்திருமஞ்சத்தின் அமைப்பு உருவம் கொண்ட சிறப்பான திருக்காட்சியையும் காண்பித்து மறைந்தார்.அதனை செயல்வடிவமாக்கும் வேலையில் சுவாமிகள் செயற்படலாயினார். இவ்வாறு பல அரிய நிகழ்வுகளுடன் திருமஞ்சம் மஞ்சத்தடி என்ற குறிச்சியில் பெரியாரின் வாழினிடத்தினருகே ஆரம்பித்து உலகிலேயே மிகப்பிரமாண்டமான மஞ்சமாக அமைந்தது. பெரிய சந்நியாசியார் என்ற பெருஞ்சித்தர் 57 ஆண்டுகள் வாழ்ந்து பல அற்புதங்கள் செய்து மக்களுக்கு இன்றும் சமய,சமூகப்பணிகளின் முன்னோடியாகவும் அருளாளரா கவும் நல்லாசி வழங்கிய சுவாமிகள் 1917 சித்திரை மாதம் திருவோண நட்சத்திரமன்று மகாசமாதி நிலையடைந்தார். சுவாமிகளால் வணங்கப்பட்ட வேல் சுவாமிகள் சமாதியடைந்த பதினாறாம் நாள் சமாதி மீது நாட்டப்பட்டு உரியமுறைப்படி அபிடேகம், பூசைகள் நடைபெற்றன. தெய்வானை முருகன் வழிபாடு இன்று அருணகிரிநாத சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.