Thursday, January 16

ஆறுமுகநாவலர், ஸ்ரீலஸ்ரீ

0

யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 ஆம் நாள் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19வது வயதில் (1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்தார். சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் ஆண்டு நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்து டன் யாழ்ப்பாணம் திரும்பினார். தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டகயமக வந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார். இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். 1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மை களைத்திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னு;}ற்காணடிகையுரை, சிவபூசாவிதி, மூன்றாம் அனுட்டான விதி, குருசிஸ்யக்கிரமம,;  பூசைககு; இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார். ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971 அக்டோபர் 29 இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது பிடியரிசியும், கஞ்சித்தொட்டித் தர்மமும் செய்து சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் பல சைவப் பாடசாலைகளை நிறுவி சைவமும் தமிழும் தளைத்தோங்கு வதற்கு அரும்பாடுபட்டவர். யாழ்ப்பாணக்கலாசாரம் கந்தபுராணக் கலாசாரமே என உலகிற்கு பறைசாற்றியவர். கத்தோலிக்கர்களின் விவிலிய நூலை தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். தமிழில் வசனநடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்பட்டவர். தமிழில் கதாப்பிரசங்கம் என்ற கலைவடிவத்தினை அறிமுகம் செய்து சைவ சமயமே மெய்ச்சமயம் என்னும் கோட்பாட்டை உலகில் நிலைநிறுத்திய தனால் திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது. அவர் பரிசோதித்தும் புதிதாய் இயற்றியும், புத்துரை வகுத்தெழுதியும் வெளியிட்ட நூல்களாக சூடாமணிநிகண்டு, சௌந்தரியலகரி, பாலபாடம் (1,2,3,4,), பெரிய புராணவசனம், நன்னூல் காண்டிகையுரை, திருமுருகாற்றுப் படை, சைவவினாவிடை, திருச்செந்தூரகவல், திருக்குறள் பரிமேலழகர் உரை, சேதுபுராணம், கந்தபுராணம், இலக்கணச்சுருக்கம், திருவிளையாடற் புராணவசனம், சிவாலய தரிசன விதி, சைவத்துடன் பரிகாரம்,சுப்பிரபோதம், ஏரெழுபது, திருக்கை வழக்கம், புட்பவிதி, மறையசந்தாதி, கோயிற் புராண மூலம், தருக்கசங்கிரகம், தொல் காப்பிய சூத்திரவிருத்தி என்பன போன்ற அறுபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளமை இப்பெரியார் 1879-12-05 ஆம் நாள் சமாதி நிலையடைந்தார்.  

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!