தமிழர்கள் இயற்கையோடிணைந்த வாழ்வினையும் உழவுத்தொழிலையும் மேற்கொண்டு வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வில் நிலம்,காற்று, ஆகாயம் என்பன முக்கியமானவையாக இருந்தன. சூரியன் இவர்களது வாழ்வில் கடவுளாக காணப்பட்டார்.
தமழிர்களது வாழ்வில் விவசாயம் இரண்டறக்கலந்தது. விவசாயத்திற்கு உதவி செய்த சூரியக்கடவுளை நினைத்து நன்றி செலுத்தும் பண்டிகையாக இந்துக்கள் மத்தியில் பண்டைய காலம் முதல் தை முதல் நாள் பொங்கிப்படைத்து நன்றி செலுத்தும் நாளாக வழக்கிலிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அறுவடைகாலம் நிறைவுற்று வசந்த கால ஆரம்பத்தைக் குறிக்குமுகமாக சூரியதேவனுக்கு விவசாயிகள் தமது நன்றியினை செலுத்துவதற்காக அதிகாலையில் துயில் எழுந்து தம்மை தூய்மையாக்கி பொங்கலிட்டு சரியாக சூரியதேவன் உதிக்கும் நேரத்தில் படையலிட்டு வழிபட்டு மகிழ்வர்.
தற்காலத்தில் அனைவரும் பொங்கல் தினத்தினை கொண்டாடி மகிழ்வது உற்சாகத்தினையும் பெருமையையும் ஏற்படுத்தி நிற்கின்றது. பொங்கலில் வெடி கொழுத்தி மகிழ்வதும் அயலவர்களுடன் பகிர்ந்துண்பதும் இதனையொட்டிய விழாக்களும் வைபவங்களும் மெய்சிலிர்க்க வைக்கும்.