Thursday, July 25

வைரமுத்து, வி,வி (நடிகமணி)

0

1924.02.11ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். இசைநாடகக்கலையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், ஜலதரங்கம் முதலான இசைக்கருவிகளை மீட்டுவதில் வல்லவர். இத்துறைகளில் தேர்ச்சியினையும், பயிற்சியினையும் தனது தாய் மாமனான பிள்ளைநாயகம் அவர்களிடம் கற்றுக்கொண்டவர். திரைப்படம், நடிகர், நெறியாளர் என அரங்கியல் ஆற்றலுடையவர். 1953 ஆம் ஆண்டு இலங்கையர்கோனின் துணையுடன் வசந்தகானசபா என்ற நாடக சபையை நிறுவி தனது உறவினர்களில் நடிப்பாற்றலுள்ளவர்களையும், ஊர்க் கலைஞர்களையுமிணைத்து பார்சிவழி நாடகங்களை இலங்கையின் பட்டிதொட்டிகளிலெல்லாம் அரங்கேற்றியவர். தமிழ்நாட்டின் சங்கரதாஸசுவாமிகளின் வழியைப் பின்பற்றி இந்தியநாடகக் குழுக்களினால் அரங்கேற்றப்பட்ட இசை நாடகங்களினால் கவரப்பட்டதன் வழிப்பேறாக ஈழத்தில் ஊற்றெடுத்ததே வைரமுத்துவின் அரங்க நடவடிக்கைகளாகும். அந்த வகையில் அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி,சத்தியவான் சாவித்திரி, நல்லதங்காள், ஞானசௌந்தரி, பூதத்தம்பி, இரணியன், இலங்கேஸ்வரன், மந்திரிகுமாரி, திருநீலகண்டர், வள்ளிதிருமணம், பவளக் கொடி, அல்லிஅருச்சுனா, அப்பூதியடிகள், பக்தநந்தனார் போன்ற பல இசை நாடகங்களை அரங்கேற்றியவர். பேராசிரியர் சு.வித்தியானந்தன், கிருபானந்தவாரியார் சுவாமிகள், தமிழக நடிகர்களான ரீ.கே.பகவதி, ரீ.கே.சண்முகம், ஜெய்சங்கர், அசோகன், நாகேஸ், இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் பிரபல சிங்கள நாடகக் கலைஞர் தம்மயா கொட போன்றவர்கள் இவரது நடிப்பாற்றலை வியந்து பாராட்டியுள்ளதுடன் பட்டங்கள் வழங்கிக் கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 1960 இல் கலையரசு சொர்ணலிங்கமவர் களால் நடிகமணி என்ற பட்டமும், பேராசிரியர் சு.வித்தியானந்தனவர்களால் கலைக்கோமான் என்ற பட்டமும், 2004 இல் யாழ். பல்கலைக்கழகம் தேகாந்த நிலையில் கௌரவ கலாநிதிப் பட்டமும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. மேலும் நடிப்பிசைச் சக்கரவர்த்தி, நாடகரத்தினா, நடிகரத்தினா, முத்தமிழ் வித்தகர், நாடகவேந்தன் போன்ற பட்டங்களும் அன்பர் களால் வழங்கப்பட்டுள்ளன. இவருடன் அரியாலை செல்வம், வி.கே.இரத்தினம், தெல்லிப்பளை க.உருத்திராபதி, வி.ரி.செல்வராஜா, சுன்னாகம் ம.தைரியநாதன், சண்டிலிப்பாய் வி.என்.செல்வராஜா போன்ற பல கலைஞர்கள் இணைந்து நடித்துப்புகழ் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.இவரைப் பற்றி, கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளையவர்களினால் நாடகதீபம், ஈழத்து இசை நாடக வரலாறு, பூதத்தம்பி இசைநாடகம், நடிகமணி வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் என்பன போன்ற சுயசரிதை வடிவில் அமைக்கப்பட்ட ஈழத்து வரலாற்று நாடக ஆய்வு நூல்களாக எழுதியுள்ளார். இலங்கைத் தயாரிப்பான நிர்மலா என்னும் திரைப்படத்தில் இவருடைய மயானகாண்டம் என்ற நாடகத்தின் காட்சியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வானொலியிலும் இவரது நாடகங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பிய மையும் 1959 இல் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி திறந்த வெளியரங்கில் நடைபெற்ற மயானகாண்டம் நாடகத்தினை லண்டன் தொலைக்காட்சி நிலையம் ஒளிப்பதிவு செய்து உலகமெங்கும் ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது. 1989-07-08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!