Thursday, October 3

மெற்றாஸ்மயில், செல்லையா (கலாபூஷணம்)

0

1945-04-29 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து யாழ்ப்பாணம் கச்சேரி, நல்லூர் வீதி, மூத்தவிநாயகர் கோயிலடி என்னும் இடத்தில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புக் கலைமாணியான இவர் தீவக வலயக்கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர். மரபு வழிக்கலைகளின் காவலனாக – நடிகனாக – நெறியாளனாக – தயாரிப்பாளனாக – ஒப்பனையாளனாக – இணைப்பாளனாக எனப் பன்முக வகிபாகமுடையவராக கலைப் பணியாற்றியவர். மரபுவழிக் கலைகள் தொடர்பில் எண்ணற்ற சிந்தனைகளோடு தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தவர். கண்ணகி வழக்குரை,வேழம்படுத்த வீராங்கனை,சத்தியவான் சாவித்திரி, சங்கிலியன், பூதத்தம்பி, ஸ்ரீவள்ளி போன்ற பல பார்சி முறையிலமைந்த நாடகங்களை நெறியாள்கை செய்து முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தவர்.இவரால் தயாரிக்கப்பட்ட வேழம் படுத்த வீராங்கனை என்ற முல்லைப்பாங்கில் அமைந்த ஆட்டநாட்டுக்கூத்து யாழ்ப்பாணம் மட்டுமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக்கழகம் என்ற அமைப்பினை நிறுவி அதன் செயலாளராகப் பணியாற்றி பல கலைப் படைப்புக்களை ஆவணப்படுத்தியவர். அந்த வகையில் ஈழத்தில் அரங்கேற்றப்பட்டு நூலுருவாக்கம் செய்யப்படாமல் இருந்த பல பார்சி நாடக எழுத்துருக்களில் சிலவற்றினைத் தொகுத்து “இசை நாடகங்கள் ஒன்பது”, பார்சிஅரங்கில் தோன்றி நடித்து வரலாற்றுப்பதிவுகள் எவையுமின்றிக் காணப் பட்ட மூத்த கலைஞர்களது விபரங்களைத் தொகுத்து “கூத்து இசை நாடக மூத்த கலைஞர் வரலாறு” என்ற இருநாடக தொகுப்பு நூல்களை வெளியிட்டதுடன் வன்னிப்பிரதேசங்களில் வழக் கிலிருந்த நாட்டார் பாடல்களைத் தொகுத்து “வன்னிவள நாட்டார் பாடல்கள்” என்கின்ற நூலையும் வெளியிட்டவர். மேலும் பார்சி அரங்கில் பாடப்பெற்ற பாடல்களைத் தொகுத்து இறுவட்டில் வெளியிட்டு ஆவணப்படுத்தியவர்.பார்சி அரங்க நாடகங்களை அவற்றின் பாரம்பரியம் கெட்டுவிடாமல் ஒளிப்படமாக்கியவர். கூத்து மற்றும் பார்சி அரங்க முறை நாடகங்களில் பல்வேறு போட்டிகளை ஒழுங்கு செய்து பணப்பரிசில்களை வழங்கியதோடு மட்டுமல்லாமல் விருதுகள் வழங்கியும் கௌரவிப்புகளையும் செய்தவர். 2010-02-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!