Saturday, October 5

திருஞானசம்பந்தபிள்ளை, ம.க.வே

0

1885 ஆம் ஆண்டு சாவகச்சேரி- மட்டுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையவர்களது புதல்வனாவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக முப்பத்தைந்து வருடங்கள் பணியாற்றிய இவர் நாடக நடிகனாகவும், சமயப்பிரசங்கியாராகவும், நூல், உரைநூற்பதிப்பாசிரியராகவும், சிறந்த எழுத்தாளராகவும் தமிழில் தடம் பதித்தவர். யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் பத்திரிகையான இந்து சாதனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். இப்பத்திரிகையில் உலகம் பலவிதம் என்ற பொதுத்தலைப்பில் 1924 இல் காசிநாதன் நேசமலர், 1927 இல் கோபால நேசரத்தினம், துரைரத்தினம் நேசமணி ஆகிய நாவல்களை எழுதி தமிழ் இலக்கியத் துறையில் தடம்பதித்துக்கொண்டார். துரைரத்தினம் நேசமணி என்ற நாவலில் சைவப்பிள்ளைகளை மதம் மாற்றுகின்ற விடயத்தினைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந் நாவலில் கோபாலன் என்னும் சைவப்பையனை தனது விதவை மகளுடன் குட்டித்தம்பி என்ற போதகர் பழக வைத்து மதம் மாற்றி திருமணம் செய்து வைக்கின்றார். தமது கல்விக்கூடங்களுக்கு கல்வி கற்பதற்குச் செல்லும் சைவப் பிள்ளைகளை மதம் மாற்றுகின்ற அக்கால கிறிஸ்தவப் பாதிரிமார்களின் போக்கினைக் கண்டிக்கும் விதத்தில் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளில் ஓம் நான் சொல்லுகிறேன், சாந்தநாயகி ஆகிய இரு சிறுகதைகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் ஓம் நான் சொல்லுகிறேன் என்னும் சிறுகதை 1968 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான தமிழ் இலக்கியபாடப் புத்தகமான இலக்கிய வரலாற்றுச்சுருக்கம் என்ற பாடப்புத்தகத்தில் வெளிவந்திருந் தமை குறிப்பிடத்தக்கது. இவர் சைவசித்தாந்த நெறி நின்று சைவத்தினையும் தமிழையும் வளர்த்த பெரியவராவார். 1955 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!