Thursday, July 25

யோகநாதன், செல்லையா

0

1941-10-01 ஆம் நாள் யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்ற இடத்தில் செல்லையா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஏறத்தாழ ஐந்து சகாப்தங்களாக ஈழத்து இலக்கியத்திற்குப் பல்வேறு துறை களில் செழுமை சேர்த்த யோகநாதனவர்கள் கலைச்செல்வி சஞ்சிகையில் மனக்கோலம் என்ற சிறுகதையை எழுதியதன் மூலம் படைப்பிலக்கியத்துறையில் புகுந்து கொண்டவர்.தனது கல்விப் பாரம்பரியத்தினை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் கற்று பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். ஆரம்ப காலங்களில் இனவுணர்வு மொழியுணர்வு மிக்கவராக தன்னை தமிழரசுக் கட்சியில் இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டிருந்த போதிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பேராசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது கருத்து நிலைகளால் கவரப்பட்டு தீண்டாமை இயக்கத்தில் ஈடுபட்டு மார்க்சிய முற்போக்குவாதியாகித் தேசியம், மண்வாசனை, யதார்த்தம் ஆகிய கருத்து நிலைகளுக்குட்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சோளகம், வடு, கலைஞன், மலரும் கொடியும், நிறங்கள், புதிய நட்சத்திரம் ஆகிய சிறுகதைகள் வெளியாகின. பேராதனைப் பல்கலைக்கழகம் 1960 – 1964 காலப்பகுதியில் வெளிக்கொணர்ந்த முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். தமிழகம் நன்கறிந்த ஈழத்து எழுத்தாளர்களில் யோகநாதன் முக்கியமானவர். இவரின் சிறுகதைகள் வெளிவராத ஈழத்து, தமிழக பத்திரிகைகள் எதுவுமே யில்லை. இவரது முதலாவது சிறுகதைத்தொகுதி யோகநாதன் கதைகள் என்றபெயரில் 1964 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவ நிலையில் வெளிவந்தது. 1983 இலிருந்து மீண்டும் தேசியவாதம் இவரது சிறுகதைகளில் ஆழவேரூன்றியது. எவ்வாறாயினும் இவருடைய சிறுகதைகள் சமூக வாழ்க்கை விமர்சனங்களாக விளங்குகின்றன. ஈழத்து வாழ்க்கைப் பிரச்சினைகளின் மையங்களை இனங்கண்டு வார்த்தைகளில் உணர்வோடு பதிய வைத்திருக்கின்றார். தமிழகப் பத்திரிகைகளில் எழுதிய என்று தணியும், அகதி, வீழ்வேன் என்று நினைத்தாயோ, அன்னையின் குரல், மைலாய், தேடுதல், சரவணபாலாவின் பூனைக்குட்டி, இன்னொரு மனிதன். அவர்களின் மகன், அடிமைகள் இல்லாத இடத்தில், பூமுதிரை, முதலான பல சிறுகதைகளைப் படைத்தார். தனது படைப்புக்களுக்காக தங்கப்பதக்கங்களைப் பெற்றுக்கொண்டவர். இளம் எழுத்தாளர் சங்கம், பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் இலக்கியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பரிசினைப் பெற்றுக் கொண்டவர்.  ஒளி நமக்கு வேண்டும் என்ற குறுநாவல் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுக்கொண்ட இந்நூல் யுனெஸ்கோ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரது குறு நாவல்கள் நவீன இலக்கியத்திற்கு செழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது. நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, இரவல் தாய்நாடு, வீழ்வோம் என்ற நினைத்தாயா ஆகிய மூன்றும் நர்மதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள நாவல்களாகும். இவற்றினை விட கனவுகள் ஆயிரம், காணி நிலம் வேண்டும், தலைவர்கள், கேட்டிருப்பாய் காற்றே, சுந்தரியின் முகங்கள், இனிவரும் வசந்தங்கள் என குறுநாவல் தொகுதிகள் வெளிவந்தள்ளன. சுந்தரியின் முகங்கள் என்ற குறுநாவல் தொகுதி தமிழக அரசின் விருதினைப் பெற்றுக்கொண்டது. தமிழக அரசின் விருதினை நான்கு தடவைகளும், கலை இலக்கிய பெருமன்ற விருதினை இரண்டு தடவைகளும், பாரத ஸ்டேட் பாஸ் விருதையும் வென்றவர்.இலங்கையில் நான்குமுறை சாகித்திய மண்டல விருதினைப் பெற்றுக்கொண்டவர். ஆசிரியரா க சிறிதுகாலம் பணியாற்றிய இவர் இலங்கை நிர்வாகசேவைப்பரீட்சையில் சித்தியடைந்து உதவி ஆணையாளராகவும், உதவி அரசாங்க அதிபரா கவும் பணியாற்றினார். இவருடைய சிந்தனைப்போக்கின் காரணமாக தாய்நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையினால் பதின்னான்கு ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்தவர். தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் “இந்த நூற்றாண்டின் ஈழத்துச்சிறுகதைகள்” என்றபெயரில் இரண்டு பாரிய சிறுகதைத் தொகுதிகளாக ஈழத்தின் பலதரத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத்தொகுத்து வெள்ளிப் பாதரசம், ஒரு கூடைக்கொழுந்து என்கின்ற இரு சிறுகதைத்தொகுதி நூல்களை தமது வாழ்க்கைத் துணையான சுந்தரலட்சுமியுடன் இணைந்து வெளியிட்டு ஈழத்து சிறுகதைப்படைப் பாளிகளை தமிழகத்திற்கு உரியமுறையில் அறிமுகம் செய்திருப்பது இவருடைய முக்கியபணியாகும். சத்திய பாரதி என்னும் பெயரில் சொந்தப் பதிப்பகம் ஒன்றினை தமிழகத்தில் நிறுவி பல நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளார். யோகநாதனின் படைப்பாளுமையை சிறுகதை, நாவல், குறுநாவல், குழந்தை இலக்கியம், கட்டுரை, சினிமா என வகைப்படுத்தி நோக்கமுடியும். எண்பத்தேழு நூல்களை எழுதியுள்ளார். குழந்தை இலக்கியங்களை வெளியிடுவதில் அக்கறை செலுத்திய இவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தபோது ரத்தினபாலா, கலாமணி, கலைச்செல்வம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தனது இலக்கியப் பயணத்தினை தனது பிள்ளைகள் மூலம் தொடரும் நிலையை உருவாக்கியுள்ளார். அந்தவகையில் இவரது மகன் வைத்தியகலாநிதி யோ.சத்யன் அவர்களும் மகளான வைத்திய கலாநிதி ஜெயபாரதி அவர்களும் சிறுவர் நூல்களை எழுதி வருகின்றார்கள் என்பதுடன் இவர்களது படைப்புக்களை தமிழகம் நர்மதா பதிப்பகத்தினர் வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்படத் தயாரிப்பாளர்களான பாலு மகேந்திரா, லெனின் ஆகியோருடன் இணைந்து திரைப்படத்துறையில் பணியாற்றியவர். கண்ணாடி வீட்டினுள் இருந்து ஒருவன் என்ற மலையாளத் திரைப்படத்திற்கு கதைவசனம் எழுதியவர். ஜானகி,  தனியாக ஒருத்தி, தஞ்சம் புகுந்தவர்கள், கிட்டி, வனமலர், நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே, நியாயப்படுத்தப்பட்ட கொலைகள், சிறுபொறி பெருந்தீ ஆகிய நாவல்களையும், கனவுகள் ஆயிரம், ஒளி நமக்கு வேண்டும், காவியத்தின் மறுபக்கம், இரவல் தாய் நாடு, தலைவர்கள் சுந்தரியின் முகம், இனி வரும் வசந்தங்கள், காணி நிலம் வேண்டும், அகதியின் முகம். காற்றும் சுழிமாறும், அரசு, இன்னும் இரண்டு நாட்கள் ஆகிய குறுநாவல்களையும், கண்ணீர்விட்டே வளர்த்தோம், தேடுதல், அந்திப்பொழுதும் ஐந்தாறு கதைகளும், காற்றில் ஏறி விண்ணையும் சாடலாம், ஒரு சொல், அவளுக்கு நிலவென்று பேர், வீழ்வேன் என நினைத்தாயோ?, மூன்றாவது பெண் ஆகிய சிறுகதைகளையும், சிறுவர் கதைக்களஞ்சியம். சூரியனை தேடியவன், சின்னஞ் சிறு கிளியே, காற்றின் குழந்தைகள், தங்கத் தாமரை. அற்புதக் கதைகள், அதிசயக் கதைகள், எல்லாரும் நண்பர்களே ஆகிய குழந்தை இலக்கியங்களையும். பெண்களும் சினிமாவும்,சுவாமி விபுலாநந்தர் ஆகிய நூல்களும் என எண்பத்து நான்கு (84) நூல்களை வெளியிட்ட யோகநாதன் என்னும் படைப்பாளி ஈழத்து இலக்கியத்திற்கு மிகச் செழுமையான பங்களிப்பினை அழித்து 2008-01-28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!