Tuesday, July 23

மூதறிஞர் சங்கரப்பிள்ளை அம்பிகைபாகன்.

3

அறிமுகம்

கல்விப்பாரம்பரியக் கல்விக்குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும் இயல்பாகப் பெற்ற அமைதியான சுபாவத்தினாலும் அனைவரினதும் உள்ளங் களில் உயர்ந்து நிற்கும் அம்பிகைபாகன வர்கள் நிர்வாகத்திறன், கற்பித்தற் திறன், எழுத்துத்திறன், பேச்சுத்திறன் எனப் பன்முக ஆளுமை ஊடாக  ஆசிரிய ராக, அதிபராகக் கல்விப் பணியாற்றியதற்கப்பால் யாழ்ப்பாணத்துப் பண்பாட்டின் மூலவேராயும் திகழ்ந்துள்ளார். பெரியோர் களை மதித்தல், அவர்களுக்கான விழாக்களை முன்னெடுத்தல், நூல்களை வெளியிடுதல், சைவப்பெரியார்களின் குருபூசைகளை நடத்துதல், தாயகம், இந்தியா, மேலைநாடுகள் என அனைத்து இடங்களிலும் வாழ்ந்து வந்த அறிஞர்களோடு உயர் நட்பைப்பேணி யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி, ஆன்மீக, இலக்கிய, கலை, ஒழுக்கம் என்னும் அறிவியல் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் மும்மணிகளில் ஒருவரான இவரது பணிக்காலம் வைத்தீஸ்வராவின் பொற்காலம் எனப்போற்றப்படும். இவரது அயராத அர்ப்பணிப்பும் உழைப் பும் சேவையும் யாழ்ப்பாண மக்கள் பெற்ற கொடை. பல்வேறு விடயப்பரப்பு களை உள்ளடக்கிய வகையில் 200இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியதோடல்லாமல் பல்வேறு அறிஞர்குழாமோடு தொடர்புகளைப் பேணி, பல சமூக மட்ட அமைப்புகளில் அங்கம் வகித்து யாழ்ப்பாண மண்ணிற்குதமிழ்கூறும் நல்லுலகிற்கு தன்னாலான பணிகளையாற்றிய பெருந்தகை யாளன்தமிழ்ப்பெரியார் அம்பிகைபாகனது பணிவும் ஆற்றலும் அறிவும் வழிகாட்டும் நற்பண்பும் எவராலும் என்றும் மறக்க முடியாதனவாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் எழில்மிகு நகராம் சுன்னாகம் என்னும் பகுதியில் காங்கேசன்துறை வீதியில் கப்பல் வளவு என அழைக்கப்படும் வளவில் வசித்து வந்த சிறப்புமிக்க கல்விப் பாரம்பரியக் குடும்பத்தில் சீர்மிகு தந்தையாம் சங்கரப்பிள்ளை சிவகாமசுந்தரி தம்பதிகளின் மூன்றாவது புதல்வனாக 1908-05-03ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அப்போதைய மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையில் ஆரம்பித்து இடைநிலைக் கல்வி வரை கற்றார். இடை நிலைக் கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்று சித்தி பெற்றார். இக்காலத்தில் அளவெட்டி ஆசிரியர் செ.மயில்வாகனம் அவர்களது இல்லத்தில் தங்கியிருந்து அம்பிகை பாகன் கல்வி கற்கச்சென்ற போது யாழ்ப்பாணத்துப் பெரியார்கள் பலரது அறிமுகம் அவருக்கு ஏற்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபரான றூப் (Troupe)  அவர்கள் அம்பிகைபாகனுக்கு ஆங்கில மொழியிலும், ஆங்கில இலக்கியத்திலும் பெரும் ஈடுபாட்டினை ஏற்படுத்தியவராக அம்பிகைபானவர்களால் மதிக்கப்படுபவராக குறிப்பிடப்படுகின்றது. இவர் சென்னை பிறசிடென்சிக் கல்லூரிக்குச் (Presidency College, Madras) சென்று கலைமாணி பட்டப்படிப்பினை மேற்கொண்டார். இக்காலத்தில் தமிழகத் திலுள்ள தேசிய இயக்கங்கள் சுதந்திரத்துக்கான சத்தியாக்கிரகம், வேலைப் பகிஸ்கரிப்புகள், போன்ற போராட்டங்களில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பங்கள் அம்பிகைபாகனாரது ஆளுமையில் பெருஞ்செல்வாக்கை ஏற்படுத்தியிருந் ததோடு இராமகிருஸ்ணமிஷன் செயற்பாடுகளும் இவரைப் பெரிதும் கவர்ந் தன. இத்தகைய அவதானிப்புகளும் பட்டறிவும் அம்பிகைபாகனாரை யாழ்ப்பாணத்தின் மிகச் சிறந்த ஆளுமையானாகசிறந்த கல்விமானாக மேற்கிளம்ப வழிவகுத்த தெனலாம். சென்னை பிறசிடென்சியில் பீ. பட்டம்பெற்று இராமகிருஸ்ணமிஷனது உயரிய பண்புகளையும் இலட்சியங் களையும் தாயகத்திற்குக் கொண்டு வந்தார். இவர் இந்தியாவில் பட்டதாரி மாணவனாக இருந்தபோது திரு வி.., கல்கி, பெரியசாமித்தூரன், போன்ற தமிழ் அறிஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அடிக்கடி மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மிஷனுக்குச் சென்று அங்குள்ள பல சுவாமிகளை அறிந்து கொண்டார். பின்னாளில் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராவின் அதிபரானபோது பல சுவாமிகளை அழைத்து வருவதற்கு உதவியாக இருந்தமை கண்கூடு.

இப்பண்புகளோடு ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்தலானார். 1934 ஜனவரி மாதத்தில் ஆசிரியராக இலங்கை கல்விச்வேவையில் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் இணைந்தார். இங்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமயம் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். கடவுளின் அனுக்கிரகத்தால் இராம கிருஸ்ணமிஷனால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் பதவியில் 1935ஆம் ஆண்டு சுவாமி விபுலாநந்த அடிகளால் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து ஓய்வு பெறும் வரை அயராது பாடுபட்டுழைத்து கல்லூரியின் தரத்தினையும் பௌதீக வளங்களையும் பரீட்சைப்பெறுபேறுகளையும் அதிகரித்து கல்விப்புரட்சியை ஏற்படுத்தினார். 1935ஆம் ஆண்டு தொடக் கம் 1968ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக முப்பத்து மூன்று வருடங்கள் அதிபராகப் பணியாற்றி மாணவர்களினதும் பெற்றோர் களினதும் கல்;விச் சமூகத்தினதும் இதயங்களை வென்றவராக மிளிர்கின் றார்.

இல்வாழ்விலும் பொதுப்பணியிலும் சமமாக சிறந்து விளங்கியவர்கள் எனக் குறிப்பிடத்தக்கவர்கள் அரிதாகவேயுள்ளனர். அவ்வாறு அரிதான சிறப்புப் பெற்றவர்களில் ஒருவராக திருவாளர் அம்பிகைபானாரை விதந்து குறிப்பிட முடியும். 1941 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் நீதிபதியுமாக விருந்த உயர்திரு .சுப்பிரமணியம் தம்பதியினரின் இரண்டாவது புத்திரியும் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றவருமான அம்பிகை யின் நாமம் பூண்ட செல்வி நகுலாம்பிகை என்னும் மங்கையை கரம் பற்றினார்மல்லாகம் மணிமனை இவரது வாழ்விடமாக மாறியது.

இல்லறத்தின் பயனாக பார் போற்றும் ஐந்து பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களையும் கல்வியில் உயரவைத்து வாழ்க்கையில் சீரும் சிறப்புடனும் வாழ்வதற்கான ஒரு தந்தையின் கடமையினை செவ்வனே நிறைவேற்றியுள்ளார். ஆனந்தகுமாரசுவாமி, பூங்கோதை, பாலசுப்பிர மணியம், செந்தில்செல்வன், ஆனந்தகௌரி என இவருடைய பிள்ளைகளுக்கு தூய தமிழில் நாமங்களைச்சூட்டி தமிழ் மீதுள்ள தனது பற்றை வெளிப்படுத்தி நிற்பது ஈண்டு மனங்கொள்ளத் தக்கது. பிள்ளைகள் ஐவரும் உயர் கல்வி கற்று உயர் தொழில் அமர்ந்து தந்தையின் சிறப்பினையும் பெருமையினையும் பேணிக்காத்து வருவது…………

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல் என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றிற்கு இலக்கணமாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

மக்கள் இதயங்களை வென்ற மூதறிஞராக அம்பிகைபாகன்.

 ஒரு மனிதன் தன் மனம் நிறைந்த பொதுப்பணிகளையாற்றுவதற்கு பல்வேறு தடைகளும் முட்டுக்கட்டைகளும் காணப்படும். ஆனால் அம்பிகைபாகனவர் களுக்கு தடைகளன்றி அன்பும் ஆதரவும் ஊக்கமும் கிடைத்தன. இதற்காக அவரது பாரியாருக்கும் குடும்ப உறவுகளுக்கும் நன்றி சொல்லவேண்டியவர் களாக நாம் உள்ளோம். அம்பிகைபாகனவர்கள் ஆற்றிய பணிகளை பல்வேறு அளவுகோலில் மதிப்பிட்டு ஆய்வு செய்யப்படவேண்டியனவாகும். இவரால் ஆற்றப்பட்ட பணிகளில் குறிப்பிடத்தக்கனவற்றினை ஆராய்ந்து அவற்றினை வகைப்படுத்திக் கூறுவது பெரிதும் பொருத்த மாய் அமையும் என நம்பலாம்இவருடைய பணிகளை பின்வருமாறு அட்டவணைப்படுத்த முடியும்.

1-    கல்வி நிர்வாகப் பணி

2-    பதிப்புப்பணி

3-    நூலாக்கப்பணி

4-    கட்டுரைப்பணி

5-    சமயப் பணி

6-    பொதுப்பணி

கல்வி நிர்வாகப்பணியில் அம்பிகைபாகன்.

மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராக இணைந்து சுவாமி விபுலாநந்த அடிகளினால் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தின் அதிபராக கல்விப்பணியாற்றியவர். முப்பத்தைந்து வருடகால கல்விச் சேவையில் கல்வியோடிணைந்த பல நிர்வாகப் பணியினை ஆற்றி ஒரு தலைமை ஆசிரியர்அதிபர் எவ்வாறெல்லாம் தமைத்துவத்தினை மாணவர் களுக்கும் கல்விச் சமூகத்திற்கும் கொடுக்க முடியும் என முன்னுதாரணமாக செயற்பட்டவர். இவருடைய இத்தகைய பணிகளை யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் ஏற்பட்ட அபிவிருத்திகளும் மாணவர் அடைவு மட்டங்களும் கல்விப்புறச் செயற்பாடுகளும் நிதர்சன சாட்சியங் களாக சான்று பகர்கின்றன.

இவற்றிற்குமேலாக பல்வேறு கல்வி சார் நிறுவனங்களில் அங்கத்தவராக இணைந்தது மட்டுமல்லாது  முக்கிய பொறுப்புகளையும் வகித்து சிறந்த பணியாற்றியவர். குறிப்பாக ஆசிரியர் சங்கம், ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், ஆறுமுகநாவலர் சபை, ஆலய புனருத்தாரண சபை, பல்கலைக் கழக மூதவை எனப் பல கல்வி அமைப்புகளில் அங்கம் வகித்துச் சேவை செய்தவர்.

வடமாகாண ஆசிரியர் சங்கம் (North Province Teachers Association)    – கௌரவ செயலாளர். (1938-1939)

அகில இலங்கை ஆசிரியர் சங்கம்                     –     பொருளாளர் (1944)

வடமாகாண ஆசிரியர் சங்கம்                              –     தலைவர் (1966-1967)

யாழ்ப்பாணம் கீழைத்தேச கல்விச்சபை, வட இலங்கை சங்கீதசபை     –நிறைவேற்றுக்குழு உறுப்பினர்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்.

ஐக்கிய நாடுகளின் (.நா) கல்வி விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் தேசிய ஆணைக்குழு உறுப்பினர் (Member of National Commission of the UNESCO)

இலங்கைப் பல்கலைக் கழகம்   –  மேலவை உறுப்பினர் (1964-1966)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்  –  முதற்பேரவை உறுப்பினர் (1979)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கல்விப்பீட கல்விக்குழு உறுப்பினர்.

இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் செயலாளர்  என்கின்ற கல்வியில் நேரடித் தாக்கத்தினை ஏற்படுத்தும் நிறுவனங்களில் அங்கத்தவராகவும் முக்கிய பொறுப்புகளையும் வகித்து கல்வி நிர்வாகத்தில் தனது ஆளுமையினையும் ஆற்றலையும் வழங்கி பல நல்ல கல்விப் பணிகளை ஆற்றினார். தமிழ் மாணவர்களது கல்வி மட்டுமன்றி முஸ்லிம் மாணவர்களது கல்வியிலும் அதிக கவனம் செலுத்தினார். 1940ஆம் ஆண்டளவில் ஏறக் குறைய 200 முஸ்லிம் மாணவர்கள் அம்பிகைபாகனவர்களது நிர்வாகத்தின் கீழ் கல்வி கற்று பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்றதோடு உயர்பதவிகளை அலங்கரித்திருப்பதும் மனங்கொள்ளத்தக்கது. கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, கற்பவனுக்கும் கற்பிப்பவனுக்கும் உதவி செய்பவனாக இரு, இவற்றில் எதுவுமற்றவனாக மட்டும் இருந்து விடாதே என்ற இஸ்லாமிய கல்விச் சிந்தனைக் கோட்பாட்டின் இலக்கண புருஷராக அறிஞர் அம்பிகைபாகன் திகழ்கின்றார் என்றால் மிகையாகாது.

பதிப்புப்பணியில் அம்பிகைபாகன்.

ஈழத்தில் பதிப்புப் பணிகளில் பல அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பேராசிரியர் சு.வித்தியானந்தன், சீ.வை.தாமோதரம்பிள்ளை, .சி.குலரத் தினம், ..வேற்பிள்ளை எனப்பல அறிஞர்ககை குறிப்பிட முடியும். அவர்களது பணிவரிசையில் அம்பிகைபாகனவர்களும் சில பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்; 1863ஆம் ஆண்டு தொடக்கம் 1929 வரையான காலத்தில் வாழ்ந்த சுன்னாகம் செல்லாச்சியம்மா என்னும் சித்தர் பற்றி இந்துசாதனம், ஈழகேசரி போன்ற பத்திரிகைகளில் பலராலும் எழுதப்பட்ட கட்டுரைகளைத்தேடித் தொகுத்து சுன்னாகம் செல்லாச்சி  அம்மையார் நினைவு மலர் எனப்பதிப்பித்தார்தனது பதின் நான்காவது வயதிலேயே தமிழகம் சென்று சைவத்திற்கும் தமிழிற்கும் அருந்தொண்டாற்றிய இலக்கணச் சுவாமிகள் என்னும் ஸ்ரீமத்முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் தொடர்பில் .வே.திருஞானசம்பந்தர், சிவக்கவிமணி சீ.கே.சுப்பிரமணியமுதலியார், கொழும்பு அருள் தியாகராசா, கா.சுப்பிர மணியபிள்ளை, ஸ்ரீலஸ்ரீ ஈசானசிவாசாரியார், கலைப்புலவர் .நவரத்தினம் முதலியோரால் எழுதப்பட்ட கட்டுரைகளுடன் 1956ஆம் ஆண்டு அம்பிகை பாகனவர்களால் இலங்கை வானொலியில் ஸ்ரீமத் இலக்கணம் முத்துக்குமாரத் தம்பிரான் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் கருத்தையும் ஒருசேரச் சேர்த்து 1958இல் இலக்கணச் சுவாமிகள் என்னும் ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் நினைவு மலரைப் பதிப்பித்தார். மேலும் 1960ஆம் ஆண்டு அச்சுவேலி சிவஸ்ரீ .குமாரசுவாமிக் குருக்கள் பாராட்டு விழா மலர், திருக்கேதீஸ்வரம் சைவ மாநாட்டு மலர் ஆகிய நூல்கள் இவராற் பதிப்பிக்கப்பட்டமை ஈண்டு நினைவுகூரற்குரியதாகும்.

நூலாக்கப்பணியில் அம்பிகைபாகன்.

ஏப்போதும் தனிமையையும் அமைதியையும் விரும்பும் அம்பிகைபாகனவர் கள் தனது பணி ஓய்விற்குப் பின்னர் அதிகமான படைப்பாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பழமையும் புதுமையும் கலந்த படைப்பாக்கமாக இவருடைய எழுத்துகள் காணப்படுமென பண்டிதமணி அவர்கள் எழுதியிருப்பது இவருடைய படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தி நிற்கின்றது. கல்வி, நிர்வாகப் பணிகளுக்கு அப்பால் நூலாக்க முயற்சிகளில் ஈடுபடுவதென்பது மிகவும் சுமைமிகுந்ததாகவிருக்கும். இருந்தாலும் இவர் சைவத்தமிழ்ப் பேரறிஞர்களின் வரலாறு, சமயம், இலக்கியம், கல்வி, பொதுவான விடயங்கள் சார்ந்தனவாக ஆறு நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளார்.

வெளியிட்ட நூல்கள்.

ஆங்கிலேயராட்சியிலே யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சி.

சர்வகலாசாலை சம்பந்தமான பிரச்சினைகள்.

இலங்கையில் சுவாமி விவேகானந்தர்.

யோகசுவாமிகள்.

விபுலாநந்தர் உள்ளம்.

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி.

கச்சியப்பர் கந்தபுராணம் ஒரு தமிழ் நாட்டுக் காப்பியம்.

யாழ்ப்பாணத்தில் கொச்சிக் கணேசையர் பரம்பரை என்கின்ற எட்டு நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றினை விரிவாக அறிந்து கொள்வதற்கு முருகேசு கௌரிகாந்தன் என்பவரால் ஆய்வுசெய்து நூலாக்கம் செய்யப்பட்ட ‘அம்பிகைபாகன் ஆளுமைத் தடம்’ என்னும் நூலில் பார்த்தறிந்து கொள்ளமுடியும்.

அம்பிகைபாகனும் கட்டுரையாக்கமும்.

அதிபர் பெருமகனார் அம்பிகைபாகனவர்கள் நூலாக்கம் என்பதற்கப்பால் கட்டுரை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். இவருடைய சிந்தனை வெளிப் பாடுகளே நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்பட்டு சமூகத்திற்குப் பயன்மிகு செயற்பாடாய் நின்று நிலைத்திருக்கிறது. சமயம், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு, கல்வி, சைவத்தமிழ்ப் பெரியார்கள், அறிஞர்கள் என அனைத்து விடயங்களிலும் தன்சிந்தனையோட்டத்தினைப் புகுத்தி பயனுள்ள இருநூறிற்கும்மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை

1-    சமயம் சார் கட்டுரைகள்

2-    ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு தொடர்பான கட்டுரைகள்

3-    கல்விக் கட்டுரைகள்

4-    சைவத்தமிழ் பெரியார்கள், அறிஞர்கள் சார் கட்டுரை

5-    பொதுவான கட்டுரைகள் என ஐந்தாக வகைப்படுத்திப் பட்டியலிட முடியும்.

          சமயம் சார் கட்டுரைகள்

1-    மாணிக்க வாசகரின் ஆத்மீக யாத்திரை.

2-    ஈழநாடும் சைவமும்

3-    நாவலரும் கீரிமலைப் புனருத்தாரணமும்

4-    ஈழநாட்டில் சித்தர் மரபு

5-    யோகசுவாமிகளும் செல்லாச்சி அம்மையாரும்

6-    பாரதி பாடிய யாழ்ப்பாணத்துச்சாமி

7-    ஜேர்மன் சுவாமி என்னும் கௌரிபாலா

8-    நாட்டுக்கோட்டைச்செட்டிமாரின் அரும்பணிகள்

9-    சைவசித்தாந்த சமாஜமும் ஈழநாடும்   

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு தொடர்பான கட்டுரைகள்

நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (Some Land Marks in the History of Tamil Literature in Ceylon)  என்னும் ஆய்வுக் கட்டுரையும் ஐந்தாம் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஈழநாடும் தமிழ்ச் சங்கங்களும் (Eelanadu and the Tamil Sangam)  என்னும் கட்டுரையும் புதிய சிந்தனையை ஏற்படுத்தி நிற்கின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறானது தமிழக இலக்கிய வரலாற்றின் ஒரு கூறு என்ற நிலைமாறி அது ஒரு தனித்துவம்மிக்க துறையாக வளர்ச்சி பெறுவதற்கு பங்களித்திருக்கின்றன. இக்கட்டுரைகள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருப் பதனால் அதனை எல்லோராலும் படிக்க முடியவில்லை. இக்கட்டுரைகளை தமிழாக்கம் செய்தால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கல்விக் கட்டுரைகள்

1-    நாவலர் கல்விப்பணி  (நாவலர் மாநாடு விழா மலர் 1969).

2-ஆங்கிலேயப் புரட்சியிலே யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக் கல்வியின்             வளர்ச்சி   (பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலர் 1972).

3-  ஒப்பீட்டுச் சமயம் பற்றிய கல்வியில் சேர் பொன்னம்பலம் இராமநாதன்            அவர்களின் பங்களிப்பு – The Contribution of Sir Ponnambalam Ramanathan to the     Study of Comparative Religion (1975-12-22 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்   கழகத்தில் நடைபெற்ற தென்னாசியாவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட     கட்டுரை).

4-    சுதேசியக் கல்விமுறை (ஈழநாடு 1982-05-05).

5- யாழ்ப்பாணத்தில் இந்துக்களின் கல்வி வரலாறு என்னும் கட்டுரைகள்                    முக்கியமானவை.

சைவத்தமிழ் பெரியார்கள், அறிஞர்கள் சார் கட்டுரை

தாம் வாழ்ந்த காலத்தில் சைவத்திற்கும் தமிழிற்கும் அருந்தொண்டாற்றிய தமிழகத்தினதும் ஈழத்தினதும் மங்காப் புகழ்பெற்ற பேரறிஞர்கள் பலரது பங்களிப்புகள் தொடர்பிலே ஈழத்தில் வெளிவந்த பத்திரிகைகள், மலர்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதினார்குறிப்பாக

1-   பண்டிதமணியின் ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும்பண்டிதமணி            மணிவிழா மலர்,1959.

2-   தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதியாக நின்று தமிழ் மொழிக்கும்                                     இனத்திற்கும்    கிடைத்த கௌரவம்பண்டிதமணி இலக்கிய                        கலாநிதிப்பட்ட   கௌரவிப்பு மலர்,1978.

3-    குப்பிழான் காந்தியவாதி பிரம்மஸ்ரீ சுந்தரசர்மாகுப்பிழான் கிராமோதய       விழா மலர், 1964.

4-  தமிழ்ச் சான்றோன் திரு நடேசபிள்ளைநடேசபிள்ளை ஞாபகார்த்த மலர்,            1966.

5- உயர் கல்வியை ஊக்குவித்தவர் – 1976 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட   மகாஜனன் மலரில் மகாஜன சிற்பி து.ஜெயரத்தினம் நினைவாக            எழுதப்பட்டது.

6- திருக்கேதீஸ்வரத் திருப்பணிச்சபையும் சேர் கந்தையா வைத்தியநாதனும்       – திருக்கேதீஸ்வர மண்டலாபிஷே மலர்,1976.

7-    சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு விழா மலர் – 1978.

8-    நாவலரும் குமாரசாமிப் புலவரும்நாவலர் நூற்றாண்டு மலர்,1979.

9- இலங்கையிலிருந்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டித பரீட்சையில்                  சித்தியடைந்த முதல் இலங்கையர்ஈழநாடு, 1979-07-19.

10-  அளவெட்டி தந்த முன்னாள் அரசாங்க அதிபர் ஸ்ரீகாந்தாவின் சீரிய                         தொண்டுகள்ஈழநாடு, 1982-03-06.

11- கல்விவளர்த்த குடும்பத்தில் தோன்றியவர் பேராசிரியர் கைலாசபதி–                ஈழநாடு, 1983-03-06. ஹன்டி பேரின்பநாயகம், நவாலியூர் சோமசுந்தரப்   புலவர்’, ஈழகேசரி நா.பொன்னையா, எச்.எஸ்.பெரேரா,சண்முகம்           செட்டியார், கவியோகி சுத்தானந்தர், வி.கல்யாணசுந்தரனார், டி.கே.சி                 போன்ற அறிஞர்கள் தொடர்பாகவும் கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பது     குறிப்பிடத்தக்கது.

பொதுவான கட்டுரைகள்

1-நாவலர் புத்தக் கண்காட்சிநாவலர் நூற்றாண்டு நிறைவு விழாச்      சிறப்பிதழ்,1979.

2-    யாழ்ப்பாண நகரிலுள்ள குளங்கள்ஈழநாடு,1981-03-08.

3-    கல்லூரிக் கட்டடத்திற்குப் பணச் சடங்குஈழநாடு,1982-03-08.

4- தமிழில் கீர்த்தனங்கள் தோன்ற வேண்டும். அன்றே குரல் கொடுத்தவர் பாரதியார்வீரகேசரி,1982-08-15.

5-  இராமநாதன் தொடக்கிவைத்த அறக்கட்டளைகள்சிவத்தமிழ்  ஆராய்ச்சிக் கட்டுரைகள், 1985. முதலான் கட்டுரைகள் அம்பிகைபாகனவர்களால் எழுதப் பட்டவை. இவை இவருடைய எழுத்தாக்கங்களைப் புரிந்து கொள்ள உதவுவதுடன் தமிழ் மீதும் தமிழ் மண்மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் எத்தகைய பற்றினையும் மதிப்பினையும் கொண்டிருந்தார் என்பதனை உலகறிவதற்கு சான்றுபகரும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

மேலும் இவருடைய பவள விழாவினை முன்னிட்டு 1983-12-10 ஆம் நாள் ஈழநாடு பத்திரிகையில் அவருடைய வாசகரான .செல்வநாயகி என்பவர் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பது அம்பிகைபானவர்களது எழுத்தாளுமைக்குக் கிடைத்த உயர் அங்கீகாரம் ஆகும். உயர் திரு அம்பிகைபாகன் அவர்களது அமிசங்கள் அனைத்தையும் ஈழநாட்டில் எப்போதுமே ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். அவர்களது பரிசுத்த எழுத்தால் இதுவரை பல்வகைப் பழைய வரலாறுகளை அறிந்துள்ளேன். ஈழநாடு வாசக உள்ளத்தில் கோலோச்சும் சாதுவான அவர்களுக்கு வயது எழுபத்தைந்து என்பதனை 1983-12-03 ஈழநாடு மூலமே அறிகின்றேன். அறிவுப் பொக்கிஷமான அவர்களிடமிருந்து நாம் இன்னமும் அறிய பல உண்டேதான். அதற்காக எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு நிறை சுகத்தையும் நீண்ட ஆயுளையும் நல்கிட பரிசுத்த இதயம் கொண்டு பிரார்த்திக்கின்றேன்.

அம்பிகைபாகனவர்கள் இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் பல்வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களுக்கு வாழ்த்துக்களையும், விமர்சனங்களையும், மதிப்புரைகளையும், அணிந்துரைகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார். பல்கலைப் புலவர் .சிகுலரத்தினம் அவர்களது ஐந்தாம் தரத்துக்;கான மாணவர் சூழல் வாசம் நூலுக்கான மதிப்புரை, திரு..தியாகராசா அவர்க ளால் எழுதப்பட்ட சமயங்களின் தாயனைய சிவநெறி என்னும் நூலுக்கான அணிந்துரை, திரு .சொக்கலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட நல்லை நகர் தந்த நாவலர் நூலுக்கான வாழ்த்துரை இவ்வகையில் குறிப்பிடற்குரியன.

சமயப் பணி

மல்லாகம் பழம்பதி விநாயகரையும் வண்ணை வைத்தீஸ்வரரையும் வழிபடு தெய்வமாகக் கொண்ட இவர் மிகுந்த சைவ உணவினையே உண்பவராகசமய வாழ்வு வாழ்ந்தவர். செல்லாச்சி      அம்மையார், யோகர் சுவாமிகள், மார்க்கண்டு சுவாமிகள் போன்றவர்களுடன் நெருங்கிப் பழகியவர். இத்தகைய பெரியோர்களது தொடர்பு இவரை சமயத்தின் மீதான அரும் பணிகளை ஆற்றுவதற்காக களத்தை திறந்து விட்டதெனலாம். குறிப்பாக ஆலய வழிபாடு, சொற்பொழிவுகள், புராணபடனம் என வகைப்படுத்திக் கூறமுடியும்.

தாம் அதிபராய் பணியாற்றிய யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத் தில் அம்மையப்பர் ஆலயமொன்றினை ஸ்தாபித்து வித்தியாலயத்தின் வழிபாட்டிற்காக வழங்கியவர். இதுமட்டுமன்றி மல்லாகம் ஆங்கிலக் கல்லூரியிலும் மாணவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அருகிலுள்ள பழம்பதி விநாயகராலயத்தில் வழிபாடுகளை செய்வதற்கான முயற்சிகளில் இவரும் பங்களித் திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பிகைபாகனவர்கள் மனிதன் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவேண்டும் என்னும் உயரிய வழிபாட்டுக் கருத்தோட்டத்தினைக் கொண்டவராக இருந்தமையினால் அர்த்தம் நிறைந்த சமய போதனைகளை உரிய தகுதிப்பாடுடையவர்களால் மேற்கொள்ளப்படுமானால் அவ்வளவுக்கு எமது மக்கள் ஆன்மீகத்தில் முன்னேறுவார்கள் என்ற சிந்தனையில் சைவத்தின் பெருமைகளையும் வழிபாட்டு முறைகளையும் கொண்ட சொற்பொழிவுகளை தனது பாடசாலையில் பல்வேறு பொருத்த மானவர் களைக் கொண்டு நடத்தி மாணவர்களை வழிநடத்தினார். இறைவனைப் பொருளுணர்ந்து பாடி வழிபாடாற்றும் ஆற்றலை மாணவர்களிடம் வளர்த்தார். திருவாசகம் பிறவிப் பிணிக்கு அருமருந்து என நினைத்து திருவாசகத்தில் நிறைந்த சொற்பொழிவுகளை பல்வேறு இடங்களில் நிகழ்த்தியிருக்கின்றார்.

பொதுப்பணி

1933-1985 வரையிலான அரை நூற்றாண்டுக்கு மேல் அம்பிகைபாகனவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டங்கள், கல்வி மற்றும் சைவ மாநாடுகளில் இவர் பங்குகொள்ளதாவை கிடையாது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சைவர்கள் மிகவும் பயன்பெற வாழ்ந்த அறிஞர். இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சமயரீதியாகவும் மொழி ரீதியாகவும் இடம்பெற்ற முக்கியமான விழாக்களுக்கு மூலகாரணமாக இருந்தவர் .அம்பிகைபாகன் அவர்கள். அம்பிகைபாகனாரின் பொதுச்சேவை அவர் பிறசிடென்சிக் கல்லூரியில் உயர் கல்வி கற்றுக் கொண்டிருந்த போதே ஏற்பட்டிருக்கிறது. அதாவது நேருஜி அவர்கள் இறந்தபோது நிதிசேகரித்து அவருக்கு தாம் தங்கியிருந்த        விக்டோரியா விடுதியில் சிலையெடுத்ததிலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது. என்று பண்டிதமணி, இலக்கிய கலாநிதி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் குறிப் பிட்டிருப்பது இங்கு மனங்கொள்ளவேண்டும். இவருடைய பொதுப்பணிகளில் சைவத்தமிழ்ப் பெரியோர்கள், பேரறிஞர்களுக்கு விழாவெடுத்தல், மாநாடு களில் பங்குகொள்ளுதல், மாநாடுகளை நடத்துதல், நிறுவனங்கள், சங்கங்கள், சபைகள் என்பவற்றில் பதவிவகித்துப் பணியாற்றுதல் என வகைப்படுத்திக் கொள்ள முடியும். மகாவித்வான் சி.கணேசையர், அச்சுவேலி சிவஸ்ரீ .குமாரசுவாமிக்குருக்கள் ஆகியோருக்கு வைத்தீஸ்வராவில்  முன்னின்று விழா எடுத்தார்.

1946ஆம் ஆண்டு திருவனந்தபுரம் கல்வி மாநாடு, 1949ஆம் ஆண்டு கோயம்புத்தூர் ஆதாரக் கல்வி மாநாட்டிலும், சென்னை, திருவாரூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தமிழ் விழாக்களிலும் பங்கு கொண்டிருந்தார். 1968 சென்னை, 1974 யாழ்ப்பாணம், 1980 மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து தமிழின் பெருமை தொடர்பான ஆய்வுக்குரிய விடயங்களை ஆழமாக முன்வைத்தார்.

தமிழகத்தினதும் ஈழத்தினதும் அறிஞர் பெருமக்களில் எண்ணற்றவர்களோடு தொடர்புகளைப் பேணி தனது தமிழறிவையும் அவர்களது குணாம்சங்களை யும் தன்னுள்வாங்கி தான்சார்ந்த சமூகத்தை வழிநடத்திய யாழ்ப்பாணத்து மல்லாகம் மாணிமனை தந்த ஆளுமை சங்கரப்பிள்ளை அம்பிகைபாகனது பணிகளைப்போற்றுவதுடன் மாபெரும் ஆளுமையின் பாதம் பணிவோம். யாழ்ப்பாண மண் பெற்றெடுத்த இப்பெருமகனார் 1986-01-26ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

நீங்கள் அம்பிகைபாகனின் கட்டுரைகள் மற்றும் நூல்வரிசையில்      பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்களைப் படிக்க விரும்பினால்,  பின்வரும் இணைப்புகளைப் பார்க்கவும்

 http://aavanaham.org/islandora/object/noolaham%3Aambikaipakan#

 –https://noolaham.net/project/865/86448/86448.pdf

இக்கட்டுரையினை எழுதுவதற்கு   ஆலோசனையும் ஒத்துழைப்பும் வழங்கிய பேராசிரியர்      அம்பிகைபாகன் பாலசுப்பிரமணியம், சகோதரர் பேராசிரியர் அம்பிகைபாகன் செந்தில்செல்வன்  அவர்களுக்கும் வழிப்படுத்திய யாழ்ப்பாணப்பெட்டக மதியுரைஞர் மூதவை உறுப்பினர் செல்லையா உதயச்சந்திரன் அவர்களுக்கும்    ‘அம்பிகைபாகன் ஆளுமைத் தடம்” நூலின் ஆசிரியர் முருகேசு கௌரிகாந்தன் அவர்களுக்கும் யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடத்தினரது மனமார்ந்த  நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                     மூதறிஞர் அம்பிகைபானவர்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்த                                மல்லாகம்  “மணிமனையின்“ எழில்மிகு தோற்றம்.

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள மும்மூர்த்திகள் சிலையில் ஒருவராக அம்பிகைபாகன்.

 

 

Share.

3 Comments

  1. Ambikaipakan Balasubnramaniam on

    இது எங்கள் தந்தையின் வாழ்க்கை மற்றும் அவர் செய்தித்தாள்கள், புத்தகங்கள் மற்றும் பல்வேறு மாநாடுகளில் அவரது கட்டுரைகள் மூலம் மதம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிய விரிவான பதிவு. அப்பாவைப் பற்றிய சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று, இதைச் செய்ததற்காக அருள்சந்திரனை வாழ்த்துகிறோம்.

  2. Emeritus Professor Ambikaipakan Balasubnramaniam on

    இது எங்கள் தந்தையின் வாழ்க்கை மற்றும் அவர் செய்தித்தாள்கள், புத்தகங்கள் மற்றும் பல்வேறு மாநாடுகளில் அவரது கட்டுரைகள் மூலம் மதம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிய விரிவான பதிவு. அப்பாவைப் பற்றிய சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று, இதைச் செய்ததற்காக அருள்சந்திரனை வாழ்த்துகிறோம்-எமரிட்டஸ் பேராசிரியர் பாலசுப்ரமணியம்

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!